10 – காதலின் ரீங்காரம்

👁️ 1244 Views

அத்தியாயம் – 10

“என்ன இதெல்லாம் அந்த அரசியல்வாதியோட கையாள் செல்வராஜ் ரெடி பண்ணி கொண்டு வந்து கொடுத்தாரா? என்ன… அந்தாள் தானே கொடுத்தார்?” என்று கணவனின் முகத்தில் பட்டுச் சிதறிக் கிடந்த பேப்பர்களைக் காட்டி ஆங்காரமாகக் கத்தியபடி கேட்டாள் மதுமதி.

“ஆமாம்!” என அமைதியாகப் பதிலுரைத்தான் மயூரன்.

தான் சொன்னதும் அவள் நம்பிவிடுவாள். தான் ஒருவனின் காதலை உண்மையென நம்பி ஏமாந்துவிட்டோம் எனக் கதறி அழுவாள் என்றெல்லாம் அவன் எதிர்பார்க்கவில்லை. அவளின் எதிர்வினை இப்படியாகத்தான் இருக்கும் என்று ஒரு கணிப்பு இருந்தது அவனுக்கு.

அதனால், அவள் தன் முகத்தில் ஃபைலை விட்டெறிந்த பின்னும் கூட, அவனுக்குக் கோபம் வரவில்லை.

“அந்த ஆள் கொண்டு வந்து கொடுத்ததை உண்மைன்னு நம்பி, நீயும் என்கிட்ட என் விக்ரம் என் மேல் வச்ச காதலை நம்பாமல் கேள்வி கேட்கிற. எவ்வளவு திமிர் இருக்கணும் உனக்கு?” என்று அவனைப் பார்த்து சீறினாள்.

“அதில் சொல்லப்பட்டிருக்கும் விவரங்களை எல்லாம் படிச்சுப் பார்த்தால் யாரா இருந்தாலும் நம்புவாங்க. அதுவும் ஒரு பொண்ணு அந்த விக்ரம் மேல்… உன்கிட்ட விக்ரமா நடிச்சவன் மேல் கம்பளைண்ட் கொடுத்திருக்கு. அதுவும் அந்தப் பொண்ணுகிட்ட தன்னைக் கருண்னு சொல்லியிருக்கான். அந்த ஃபைலில் இருக்கும் போட்டோவில் எல்லாம் அவன் முக ஒற்றுமையைப் பார். பொறுமையா யோசி. உனக்கே புரியும்…” என்று மயூரன் தன் அமைதியை சற்றும் சிதறவிடாமல் சொல்ல,

“முட்டாள்!” என்றாள் கடுமையாக.

“நீ முட்டாள் மாதிரி கண்மூடித்தனமா ஒரு அயோக்கியனை நம்பாமல், நான் சொல்வதைப் பொறுமையா கேள்…”

“என்ன சொல்ல போற நீ? என் விக்ரம் பொய்யானவர், அவர் ஒவ்வொரு கெட்டப்பா போட்டு ஒவ்வொரு பொண்ணா ஏமாத்தினார்னா? அதுவும் எப்படி? எப்படி? பொண்ணுங்களை எல்லாம் தப்பா பயன்படுத்தினார்? அவங்க கூட எல்லாம் வாழ்ந்து, அதை வீடியோ எடுத்து வித்தார். எத்தனை? எத்தனை குற்றச்சாட்டு என் விக்ரம் மேல்… ஹவ்வா!” என்று போலியாக ஆச்சரியப்பட்டுத் தன் வாயிலேயே கையால் அடித்துக் கொண்டாள் மதுமதி.

“என் தகப்பனை நான் ரொம்பச் சாதாரணமா எடை போட்டேன் போல. அவருக்குள்ள இப்படி ஒரு வில்லன் ஒளிஞ்சிருக்காரா? எவ்வளவு அழகாத் திட்டம் போட்டு, ஒரு நல்லவரை போலியானவர்னு சொல்லி, தவறான ஆதாரம் ரெடி பண்ணி, அதுவும் வீடியோ வரை ரெடி பண்ண தோன்றியிருக்குனா… எவ்வளவு பெரிய கிரிமினலா யோசிச்சிருக்கணும் அவர்?” என்று தனக்குத்தானே பேசியபடி அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள் மதுமதி.

“நீ தேவை இல்லாமல் உன் அப்பாவை பற்றித் தப்பா யோசிக்கிற மது…” என்று மயூரன் கண்டிப்புடன் சொல்ல,

“தப்பா? என்ன தப்பு? எல்லாம் சரியாத்தான் யோசிக்கிறேன். அந்தச் செல்வராஜ் கூடச் சேர்ந்துக்கிட்டு… போலியான ஒரு தகவலை கொண்டு வந்து உங்ககிட்ட கொடுத்திருக்காங்க. அதையும் நம்பி, நீங்க அவருக்குச் சப்போர்ட் செய்றீங்களா? இல்லை, இந்தப் போலி ஆதாரத்தை ரெடி பண்ண நீங்களும் அவங்களுக்கு உடந்தையா இருந்தீங்களா?” என்று அவனையே குற்றம்சாட்டினாள்.

“போடி, லூசு! கடைசி என்னையே குத்தம் சொல்றீயா? நீ இப்ப சரியான மனநிலையில் இல்லை. பேசாம படுத்து தூங்கு. நிதானமா இதை எல்லாம் பற்றி யோசித்துப் பார். உனக்கே‌ புரியும்…” என்று சிதறிக் கிடந்த தாள்களைச் சுட்டிக்காட்டி சொன்னான்‌.

“என்ன உன் மேல நான் பழி சொல்லக் கூடாதுன்னு என்னைத் தூங்கச் சொல்லி ஆஃப் பண்ணலாம் பார்க்கிறயா? இப்பதான் உன் மேல் எனக்கு வந்த சந்தேகம் உறுதியாகுது. நீயே அதுக்குச் சாட்சி!” என்றவளை யோசனையுடன் பார்த்தான்.‌

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீயே உன் வாயால் சொன்ன. என்னை வேற யாருக்கும் விட்டு கொடுக்க முடியாமல் தான் என் காதலைப் பற்றித் தெரிந்தும், நீ கல்யாணம் செய்ததா… அப்போ…” என்றபடி கட்டிலில் அமர்ந்திருந்தவனின் அருகில் வந்து சற்று குனிந்து அவனைக் கூர்மையுடன் பார்த்தவள், “விக்ரமுக்கு என்னை விட்டுக்கொடுக்க முடியாம… நீயும் என் அப்பன் கூடச் சேர்ந்து விக்ரமை கொல்ல ஏன் பிளான் பண்ணியிருக்கக் கூடாது?” என்று தீர்க்கமாகக் கேட்டாள்.

அயர்ந்துதான் போனான் மயூரன். தன் வார்த்தைகளை வைத்தே எப்படி எல்லாம் குதர்க்கமாக யோசிக்கிறாள் இவள்?

“உன் யோசனை எல்லாம் ரொம்பக் கிறுக்குத்தனமா இருக்கு மது…” என்று கண்டிப்புடன் சொன்னான்.

“இப்பதான் ரொம்பத் தெளிவா யோசிக்கிறேன். இதுவரை என் விக்ரமுக்கு என்ன நடந்திருக்கும்? எப்படித் திடீர்னு இறந்தார்னு தெரியாமல் கிறுக்குப் பிடிச்சது போலத்தான் இருந்தேன். இப்பதான் ஒரு தெளிவு கிடைச்சிருக்கு…” என்றவள், மீண்டும் நாற்காலியில் அமர்ந்து, எதிரே அமர்ந்திருந்தவனையே ஊடுறுவது போலப் பார்த்தாள்.

“நீயும் என் அப்பனும் பிளான் பண்ணி அந்தச் செல்வராஜோட ஆளுங்களை வச்சு விக்ரமை கொன்னுட்டு, ஆக்ஸிடென்ட்னு மாத்தியதோட மட்டும் இல்லாமல், அவரைப் பற்றி அழகா ஒரு பொய் கதையை ஜோடித்து, என் காதலே பொய்னு நம்ப வச்சு, என் மனசை மாத்த வைக்கப் பக்காவா பிளான் பண்ணியிருக்கீங்க. அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி இந்தப் பொய் கதையை எல்லாம் என்கிட்ட சொன்னால், உங்க திட்டம் நிறைவேறாதுன்னு, கல்யாணம் முடிஞ்ச பிறகு இன்னைக்கு உட்கார்ந்து இதெல்லாம் நீ சொல்றன்னா… எவ்வளவு கிரிமினலா பிளான் பண்ணியிருக்கீங்க.‌ என் அப்பனுக்கு நான் வேற ஜாதிகாரரை கல்யாணம் பண்ணிட கூடாது. உனக்கு நான் வேணும். இரண்டு பேரின் குறிக்கோளும் நிறைவேற குறுக்கே இருந்தது என்னோட விக்ரம். அதனால் அவரைக் கொன்னுட்டீங்க. பாவிகளா… கொலைக்கார பாவிகளா… நீங்களெல்லாம் நல்லா இருப்பீங்களாடா?” என்று முகம் சிவக்க ஆவேசமாகக் கத்தினாள் மதுமதி.

“மது… போதும்! உன் கற்பனையை நிறுத்து!” என்று மயூரன் குரலை உயர்த்தி அதட்ட,

“எதுடா கற்பனை? எது கற்பனை?” ஆத்திரத்துடன் எழுந்து அருகில் வந்து அவனின் சட்டையைப் பிடித்து உலுக்கிக் கேட்டவள், “நான் சொன்னது தான்டா நிஜம்! நீங்க எல்லாம் என் விக்ரமை பத்தி தப்பு தப்பா ஒரு கதை சொல்றீங்களே… அதுதான் கற்பனை. எப்படி? எப்படி? என் விக்ரம் பொண்ணுங்களை எல்லாம் தப்பா பயன்படுத்தினாரா? இப்படி ஒரு அசிங்கமான கதையை என்கிட்டவே வந்து சொல்றீயே… உனக்கெல்லாம் எவ்வளவு திமிர் இருக்கணும்?” என்றவள், கோபத்துடன் அவனின் மார்பில் கைவைத்து தள்ளிவிட்டாள்.

கட்டிலில் மல்லாந்து விழுந்த மயூரன், இவளுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று புரியாமல் தளர்ந்து எழுந்து அமர்ந்தான்.

“இங்கே பார்… பல பொண்ணுங்க வீடியோ அவன் லேப்டாப்பில் இருந்திருக்கு. அதில் உன்னோடது கூட…” மயூரன் அவளுக்குப் புரிய வைக்க முயல,

“ஏய்… நிறுத்து! நிறுத்து!” அந்த வீடே அதிர்வது போல ஆங்காரத்துடன் கத்தினாள் மதுமதி.

“என்ன என்னோட அசிங்கமான வீடியோவும் அவரோட லேப்டாப்பில் இருந்ததுன்னு கதை விடப் போறீயா?” என்று வெறிவந்தவள் போல் கேட்டாள்.

அது அவனுக்கே உறுதியாகத் தெரியாத ஒன்றாகிற்றே? அன்றைய ஜெயராமனின் பதற்றத்தை வைத்து அவளுடையதும் இருக்குமோ என்ற அவனின் சந்தேகம் தானே அது. அதிலும் வேறு காணொளிகளும் உண்மையா என அவன் முழுதாக அறியாதது. ஜெயராமன், செல்வராஜ் இருவரும் வாய் மொழியாகச் சொன்னது மட்டுமே. அவர்கள் அந்த லேப்டாப்பை‌ கொண்டு வந்து காட்டட்டுமா என்று கேட்ட போது அவனுக்கு அதைச் சோதித்துப் பார்க்க தோன்றவில்லை. அதிலும் பெண்களின் அந்தரங்க காணொளி எனும் போது அதை எப்படிக் கொண்டு வந்து காட்டுங்கள் என்று சொல்வது என்ற தயக்கமும் அவனைத் தடை செய்திருந்தது.

அதனால் காணொளி பற்றிய உண்மை என்னவென்று தெரியாமல், அவளிடம் உறுதியாக எதுவும் பேச முடியாமல் போக, தன் ஊகத்தை மட்டுமே சொன்னான்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com