12 – காதலின் ரீங்காரம்

👁️ 1378 Views

அத்தியாயம் – 12

“வாட் பேபி? அம்மா அடிச்சாளா? எதுக்கு? பேபி என்ன சேட்டை செய்தீங்க?” என்று நிதானமாகக் கேட்டான் கவியுகன்.

“டாடி… அம்மா என்னை அடிச்சா சொல்றேன். பேபியை ஏன் அடிச்ச? இனி பேபியை அடிக்கக் கூடாதுன்னு சொல்லாம… என்னைக் கேள்வி கேட்கிறீங்க?” என்று பெரிய மனுஷி போல் கேட்ட தன் ஐந்து வயதான மகளின் பேச்சில் தகப்பனுக்குச் சிரிப்பு வந்தது.

“ஆதி பேபி சேட்டை செய்யாம அம்மா அடிக்க மாட்டாள்னு அப்பாவுக்குத் தெரியுமே. அப்போ அப்பா சரியாத் தானே கேள்வி கேட்கிறேன்?” என்று காணொளியில் தெரிந்த மகளின் முகம் பார்த்துப் புருவம் உயர்த்திக் கேட்டான்.

“ம்ம்ம்… போங்க டாடி. நீங்க எப்பவும் அம்மாவுக்குத்தான் சப்போர்ட் பண்றீங்க… நான் உங்க கூட டூ…” என்று அவனின் மகள் ஆதிரா தலையைச் சிலுப்பிக் கொண்டு கோபம் கொள்ள,

“அச்சோடா… ஆதி பேபி அப்பா கூட டூ விட்டா, அப்பாவுக்கு மனசு கஷ்டமா இருக்குமே… அப்பா அம்மாகிட்ட பேபியை ஏன் அடிச்சன்னு கேட்கிறேன். நீ அம்மாகிட்ட போனை கொடுடா…” என்று தழைந்து போனான் தகப்பன்.

“எங்கிட்ட கேள்வி கேட்பிங்களா? என்ன? என்ன கேள்வி கேட்பிங்க?” என்று திரையில் தோன்றும் போதே சீறிக் கொண்டு வந்தாள் அவனின் மனைவி அனன்யா.

“அனு!” என்று கவியுகன் அழுத்தமாக அழைக்க,

“கப்போர்டில் இருந்த அவளோட ட்ரெஸ் எல்லாத்தையும் இழுத்து கீழே போட்டுட்டா. நீங்க சொன்ன கேஸ் விஷயமா நான் வெளியே போயிட்டு வந்து பார்த்தால், நம்ம பெட்ரூம் முழுக்க அவள் துணி கிடக்கு. எனக்குப் பார்க்கும் போது எப்படி இருந்தது தெரியுமா? அதான் அடிச்சேன். என்ன தப்பு?” என்று கணவனின் ஒற்றை அழைப்புக்கு அப்படியே ஒப்புவித்தாள் அனன்யா.

“ஆதிரா பேபி செய்தது தப்புதான். அவளுக்கு எடுத்து சொல்லு. இப்படி வேலை இழுத்து வச்சால் உனக்குக் கஷ்டம்னு சொல்லி அவளுக்குப் புரிய வை. அதை விட்டு கையை நீட்டாதே அனு!” என்றான் கண்டிப்புடன்.

“நீங்க எப்பவுமே அவளுக்குத்தான் சப்போர்ட் செய்வீங்க, போங்க…” என்று மகளைப் போலவே சொல்லி தலையைச் சிலுப்பிய மனைவியைப் பார்த்து அவனுக்குப் புன்னகை வந்தது.

“அப்படியே உன்னோட ஜெராக்ஸ் தான் நம்ம ஆதிரா பேபி…” என்றான் ரசனையுடன்.

“என்ன திடீர்னு என் யுகா ரொமான்டிக்கா பார்க்கிறார்?” என்று அவள் கேட்க, அவன் பதில் சொல்ல என்று அவர்களுக்குள் கணவன் மனைவி பேச்சு ஓடியது.

கவியுகனும் அனன்யாவும் விரும்பி திருமணம் செய்து, அவர்களுக்கு இப்போது பெண் குழந்தையும் இருந்தாள். விளையாட்டாகக் கவியுகனின் யுகா டிடெக்டிவ் ஏஜென்சியில் வேலைக்குச் சேர்ந்த அனன்யா இப்போது, துப்பறியும் தொழிலில் தேறியிருந்தாள்.

தற்போது கூட அவளிடம் ஒரு வழக்கை பற்றி ஒப்படைத்துவிட்டே, கரூர் வந்திருந்தான் அவன்.

“போன வேலை எந்த லெவலில் இருக்கு யுகா? எப்ப ரிட்டர்ன்?” என்று விசாரித்தாள் அனன்யா.

“இன்னும் ஒன் வீக் ஆகலாம் அனு. அப்புறம் இன்னொருத்தர் ஏதோ கேஸ் விஷயமா என்னைப் பார்க்க வர்றேன்னு சொல்லியிருக்கார். அவருக்காகத்தான் வெயிட் பண்றேன்…” என்றான்.

“என்ன இன்னொரு கேஸா? என்ன யுகா இது? நமக்குச் சென்னையிலேயே வேலை சரியா இருக்கு. இங்கே உள்ள ஒரு கேஸை பற்றி அங்க ஏதோ க்ளூ கிடைச்சி தேடி போனீங்க. இப்ப அங்க வரும் புது கேஸையும் எடுத்தால் எப்படி? அதெல்லாம் வேணாம் யுகா. போன வேலையை மட்டும் முடிச்சிட்டு வாங்க…” என்றாள் அனன்யா.

“அனு…” என்று அவன் மீண்டும் அழுத்தமாக அழைக்க,

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

“சும்மா இப்படிக் கூப்பிட்டு என் வாயை அடைக்கக் கூடாது. ஐ மிஸ் யூ யுகா…” கண்டிப்புடன் ஆரம்பித்தவள் கொஞ்சலுடன் முடிக்க, கவியுகனின் உதட்டில் மென்னகை அரும்பியது.

“ஏதோ ரொம்ப முக்கியமான கேஸா இருக்கப் போய்த்தான் என்னைப் பற்றி விசாரித்துத் தேடி வர்றாங்க. வரட்டும், பேசிப் பார்க்கிறேன். கேஸ் எப்படின்னு பார்த்துட்டு அப்புறம் முடிவு பண்ணிட்டு சொல்றேன் அனு…” என்றான்.

அப்போதும் அவள் முகத்தைச் சுருக்க, “வளருடி அனு. இன்னும் குட்டிப் பாப்பா போலக் கொஞ்சாம…” என்று கண்டிப்புடன் கொஞ்சினான். அவளோ மிஞ்சினாள்.

கொஞ்சல், சிணுங்கல் எல்லாம் அவனிடம் மட்டும்தான். வேலை என்று வந்துவிட்டால் சிரத்தையுடன் அதைச் செய்து முடிக்கும் திறன் இப்போது அவளிடம் இருந்தது.

அவர்கள் கொஞ்சி மிஞ்சிக் கொண்டிருக்கும் போதே குறுக்கே புகுந்த அவர்களின் மகள் அவன் எப்போது வருவான் எனக் கேட்க, “அப்பா சீக்கிரம் வர்றேன்டா பேபி…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு மணி ஒலிக்க, தன் மனைவி, குழந்தையிடம் விடைபெற்று, எழுந்து சென்று கதவை திறந்தான்.

“ஹலோ, நான் மயூரன்…” என்ற அறிமுகத்துடன் வந்தவனின் கையைப் பற்றிக் குலுக்கி வரவேற்றான் கவியுகன்.

உள்ளே சென்று அமர்ந்ததும் சிறிதான ஒரு அறிமுகப்படலத்தை முடித்துக் கொண்டனர்.

“சொல்லுங்க மிஸ்டர் மயூரன், நான் இங்கே இருப்பது வரை விசாரிச்சு தேடி வந்திருக்கீங்க. என்ன விஷயமா பேசணும்?” என்று கேட்ட கவியுகனிடம், சுருக்கமாகச் சில விஷயங்களைச் சொன்ன மயூரன், விக்ரம் பற்றித் தகவல் இருந்த செல்வராஜ் கொடுத்த கோப்பினை அவனிடம் கொடுத்தான்.

ஒவ்வொரு தாளாகப் புரட்டி கவனத்துடன் பார்த்தான் கவியுகன். அவனது கண்கள் அந்தப் புகைப்படங்களிலும், அதில் குறிப்பிடப்பட்டிருந்த விவரங்களிலும் நிலைத்தன. மயூரன் அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“இந்த விக்ரம்… இப்போ உயிரோட இல்லைனு சொன்னீங்க இல்லையா?” கவியுகன் நிமிர்ந்து கேட்டான்.

“ஆமாம்… ஒரு விபத்துல இறந்துட்டதா நியூஸ் பேப்பரில் வந்திருக்கு. அதையும் லாஸ்ட் பக்கத்தில் வச்சிருக்கேன் பாருங்க…” என்றான்.

அதையும் எடுத்து அதில் இருந்த செய்தியைப் படித்துவிட்டு, அதில் வெளிவந்திருந்த புகைப்படத்தையும் பார்த்தான்.

அனைத்தையும் பார்த்துவிட்டு, “இதில் சொல்லபட்டிருப்பது போலப் பார்த்தால், விக்ரம் ஆள் மாறாட்டம் செய்து பொண்ணுங்களை ஏமாத்துறவன்னு தெரியுது. ஓகே! ஆனால், நீங்க என்கிட்ட என்ன எதிர்பார்க்கிறீங்க மயூரன்? இந்த கேஸில் நான் என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?” என்று கேட்டான்.

“முதல் விஷயம் இவன் அப்படி எல்லாம் செய்யக் கூடியவனே இல்லை. அவன் ரொம்ப நல்லவன்னு என் வொய்ப் சொல்றா. ஆனால், என் மாமனார், அவன் தப்பானவன்தான்னு சொல்லி இந்த ஃபைலை கொண்டு வந்து கொடுத்தார். இரண்டு பேர் சொல்வதில் எது உண்மைன்னு எனக்குத் தெரியணும். அதோட விக்ரம் டெத்ல எனக்குச் சந்தேகமா இருக்கு. என் மனைவியும் கூடச் சந்தேகப்படுறா…” என்று மயூரன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“நீங்க சந்தேகப்படுவதில் தவறில்லை தான். ஏன்னா… விக்ரம் ஆக்சிடென்டில் செத்திருக்கச் சான்ஸ் இல்லை…” என்று கவியுகன் குறுக்கிட்டு சொல்ல,

“என்ன?” என்று அதிர்ந்தான் மயூரன்.

“நீங்க… நீங்க சொல்வது நிஜமா? எப்படிச் சொல்றீங்க?” என்று படபடவென்று கேட்டான் மயூரன்.

செய்தித்தாளை விரித்து, விபத்தின் போது விக்ரம் இருந்த நிலையை எடுத்திருந்த புகைப்படத்தைக் காட்டி, “இதெல்லாம் விபத்தால் வந்த காயம் போல் இல்லை. யாரோ அவனை அடிச்சுக் காயப்படுத்தியது போலத்தான் இருக்கு…” என்றான்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com