12 – காதலின் ரீங்காரம்

👁️ 1378 Views

அவளின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த உமா, மதுமதியிடம் நலம் விசாரித்து, அவளின் வெட்டுத் தழும்பு இருந்த கையை இரக்கமாகப் பார்த்தாள்.

“என்னென்னவோ நடந்திருச்சுல? ம்ப்ச், இப்படி எல்லாம் நடந்திருக்க வேண்டாம். ஹான், அப்புறம் ஒரு விஷயம் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன். உன் ஒன்னுவிட்ட தங்கை ஒருத்தி இருக்காளே ஓவியா… நீ ஹாஸ்பிட்டலில் இருந்தப்ப உன்னை நான் பார்க்க வந்தேனே… அப்ப என்கிட்ட வந்து அவ பேசினா. உன் லவ் பற்றி, விக்ரம் பற்றி எல்லாம் விசாரிச்சா…” என்று உமா ஆரம்பிக்க,

“ச்சு… அவளைப் பற்றியோ… அவள் அப்பனை பற்றியோ என்கிட்ட பேசாதே உமா. அவங்களைப் பற்றி எல்லாம் நினைக்கக் கூட எனக்குப் பிடிக்கலை…” என்று செல்வராஜ் மீதிருந்த வெறுப்பை அவரின் மகள் ஓவியாவின் மீதும் காட்டி எரிச்சல்பட்டாள் மதுமதி.

“சரி, விடு! ஓவியா பற்றி பேசலை. உன் மேரேஜ் லைஃப் எப்படிப் போகுது? உன் ஹஸ்பெண்ட் உன்னை எப்படிப் பார்த்துக்கிறார்? அதெப்படி மேரேஜ் முடிந்து இவ்வளவு சீக்கிரம் உன்னை வேலைக்குப் போக விட்டார்?” என்று உமா கேட்க,

“ஐயோ! அந்தாளை என் ஹஸ்பெண்ட்டுன்னு சொல்லாதே! கேட்கும் போதே கடுப்பா வருது…” என்று அதற்கும் கோபம் கொண்டாள் மதுமதி.

அவளை ஒரு மாதிரியாகப் பார்த்த உமா, “சரி… சரி… விடு! நாம வேலையைப் பார்ப்போம்…” என்று சமாளித்துவிட்டு, தன் கணினியின் பக்கம் திரும்பிக் கொண்டாள்.

தன்னுடைய கணினியை இயக்கி தன் வேலையை ஆரம்பித்த மதுமதிக்கு அவள் கேளாமலே விக்ரமின் நினைவுகள் அலைமோதின.

தான் வடிவமைத்துக் கொண்டிருந்த புது இணையதளத்தின் முகப்புப் பக்கத்தைத் தயார் செய்து கொண்டிருந்த போது, இந்த நேரம் விக்ரம் இருந்திருந்தால் இந்த இடத்தில் என்ன சொல்லியிருப்பான் என்று எண்ணம் போனது.

“இந்த பிரண்ட் பேஜ் (Front Page) நீ டிசைன் பண்ணியிருப்பது ஓகே தான் மது. ஆனா, இந்த ஹெட்டர் பகுதி பேஸ்டல் கலருக்கு மாத்தினா இன்னும் பெட்டரா ஃபீலாகும். வெப்சைட் லோகோவும் அட்ராக்டிவா தெரியும். இது என் அபிப்ராயம் தான். உனக்கு ஓகேவா பாரு. சரி வரலைனா நீ வச்சதே இருக்கட்டும்…” என்று சின்னச் சின்னத் திருத்தம் சொல்வான். அவன் சொன்ன திருத்தத்தைச் செய்துவிட்டு பார்க்கும் போது, அவள் செய்திருந்ததை விட, முகப்புப் பக்கம் இன்னும் அழகாக வந்திருக்கும்.

விக்ரமின் வேலை சார்ந்த யோசனைகள் எப்போதும் குறை சொல்வது போலவே இருக்காது. அதோடு தன்னோடு வேலை பார்ப்பவர்களின் வேலையில் குறையைக் கண்டுபிடித்தாலும், அதட்டி எல்லாம் சொல்ல மாட்டான். கேட்பவரின் மனம் நோகாமல் சாந்தமாகத்தான் எடுத்துச் சொல்வான்.

சில நேரம் வேலையில் பிரச்சினை வந்துவிட்டால் மற்றவர்கள் பதற்றத்தில் இன்னும் சொதப்புவார்கள் அல்லது, சிக்கியவர்களிடம் கத்தி விடுவார்கள். ஆனால், விக்ரமோ… “ஜஸ்ட் கூல்! இவ்வளவு பதற்றப்பட்டா நமக்குத் தெரிந்த வேலையைக் கூடத் தப்பாத்தான் செய்வோம். பதற்றப்படாம நிதானமா செய்ங்க கைஸ். இப்ப என்னாச்சு? இது சின்ன பக் (bug) தான் சரி பண்ணிடலாம். இதை விடப் பெரிய பிராப்ளம் எல்லாம் நாம சால்வ் பண்ணிருக்கோம் கைஸ். இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?” என்று அவன் பேசுவதைக் கேட்கும் போதே, அவனின் பேச்சை கேட்பவர்களின் பதற்றம் எல்லாம் அப்படியே கரைந்துவிடும்.

அதே போல் ஒரு தருணத்தில்தான் மதுமதியின் மனமும் கரைந்து அவனின் மீது காதலில் விழுந்தது.

சில நேரம் கொடுத்த வேலையைச் சரியாக முடிக்க முடியாமல் போனால், மதுமதி அதை முடித்தே தீரவேண்டும் என்று இடத்தை விட்டு கூட அசையாமல் அமர்ந்து வேலை பார்ப்பாள்.

“ஏன் மது… இவ்வளவு அலட்டிக்கிற? நமக்கு வேலை முக்கியம் தான். ஆனால், வேலை மட்டுமே முக்கியம் இல்லைடாமா. வா, ஒரு காஃபி குடிச்சிட்டு வருவோம். அப்பப்போ ரிலாக்ஸ் பண்ணிக்கலைனா… கம்ப்யூட்டர் கூடச் சேர்ந்து நம்ம மைண்டும் ‘ஹேங்’ (Hang) ஆகிடும். அப்புறம் நாம என்ன டிசைன் பண்ணினாலும் அதில் உயிரோட்டம் இருக்காது.
சிக்கலான கோடிங் கூட ஒரு வழியா நாம சரி பண்ணிடலாம். ஆனா, ஒரு டிசைன் ‘யூசர் ஃப்ரெண்ட்லியா’ (User friendly) இல்லைனா கஸ்டமருக்கு நம்ம மேல கடுப்பாயிடும். உன்னோட கிரியேட்டிவிட்டி மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. ஆனா, அந்தத் திறமைக்குத் தீனி போட உனக்குக் கொஞ்சம் ஓய்வும் வேணும். வா… ஒரு சின்னப் பிரேக் எடுத்துட்டு வந்து வேலையைப் பார்த்தா, இந்த பக் (Bug) எல்லாம் தானாவே பறந்து போயிடும்!” என்று அவன் கண் சிமிட்டிச் சிரிப்பான்.

அவன் சொன்னது போலவே, அந்த ஒரு காஃபி இடைவேளைக்குப் பிறகு வந்து பார்த்தால், மதுமதிக்குச் சிக்கலாகத் தெரிந்த அந்த பக் (Bug) மிக எளிதாகத் தீர்ந்துவிடும்.

விக்ரமுக்கு யாரையும் கடிந்து பேச தெரியாது. அவன் குரலை உயர்த்திப் பேசியதை அவள் கேட்டதே இல்லை. மென்மையாகத்தான் அனைவரிடமும் பேசுவான். அப்படிப்பட்டவன் இப்போது இல்லை என்ற எண்ணம் நெஞ்சை இறுக்கிப் பிடித்துப் பிழிந்தது.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

தொடர்ந்த அன்றைய பொழுது எல்லாம் விக்ரமின் நினைவு மதுமதியை வெகுவாகத் தாக்கியது. பார்க்கும் ஒவ்வொன்றிலும், செய்யும் செயல் அனைத்திலும், அவனின் பிரதிபலிப்பு எதிரொலித்தது. அதன் தாக்கம் அவளின் மனத்தைக் கனக்க வைத்தது. அக்கனத்தைத் தாங்க முடியாமல் அவளின் கண்கள் கலங்கிக் கொண்டே இருந்தன.

அப்படி ஒருத்தன் இல்லாமல் போனானே… அதுவும் தன்னால்… என்ற எண்ணம் அவளை ஆட்டிப் படைத்தது.

இல்லை… தன்னால் இல்லை… தன்னைப் பெற்றவரால்… என்ற எண்ணம் நேரம் செல்ல செல்ல கழுத்தை நெறிப்பது போலான ஆத்திரம் அவளை நெருக்க, அதற்கு மேல் அவளால் தாளவே முடியவில்லை.

தன்னைப் பெற்றவர் முகத்தில் கூட விழிக்கக் கூடாது என்று தனக்குள்ளேயே உருபோட்டபடி பிடிக்காத கணவனின் வீட்டில் ஒப்புக்கு ஒட்டிக் கொண்டு வைராக்கியத்தை இழுத்துப் பிடித்தவள் பிடி மெல்ல மெல்ல நழுவ ஆரம்பிக்க, அன்றைய வேலை நேரம் முடிந்ததும், நேராகச் சென்று நின்று இடம் அவளின் பெற்றவர் முன்தான்.

அவள் ஆட்டோவில் சென்று இறங்கிய நேரம் வீட்டிற்குத் தொழில் ரீதியாகத் தன்னைச் சந்திக்க வந்த ஒருவரை வழியனுப்பி விட்டு, கேட்டை மூடிவிட்டு வீட்டிற்குள் சென்று கொண்டிருந்தார் ஜெயராமன்.

ஆட்டோ சத்தம் கேட்டதும் திரும்பி பார்த்தவர், சில நொடிகளில் தன்னை நோக்கி விரைந்து வந்த மகளைப் பார்த்து “வா… என்ன நீ தனியா…” என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போதே… சட்டென்று அவரின் சட்டையைக் கொத்தாக பற்றிய மதுமதி, “ஏன்யா… ஏன் என் விக்ரமை கொன்ன? ஏன்யா கொன்ன? கொலைகார பாவி…” என்று ஆங்காரத்துடன் கேட்டபடி தந்தையைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தாள்.

சத்தம் கேட்டு வேகமாக வீட்டிற்குள்ளிருந்து ஓடி வந்த திலகா, மகள் கணவரின் சட்டையைப் பிடித்திருப்பதைப் பார்த்து, “ஏய் மது… என்னடி பண்ற? விடுடி… அப்பாவை விடு!” என்று அவளின் கையிலேயே அடித்தார்.

ஆனால், மனத்தில் தேங்கிப் போயிருந்த வெறி கலந்த ஆதங்கம், அவளின் கைகளுக்கு வலுவை கொடுத்திருக்க, அவளின் கையை அவரால் சிறிதும் அசைக்க முடியவில்லை.

ஜெயராமனுக்கோ மகள் தன்னைப் போட்டு உலுக்குவது உறைத்தாலும், உறைந்து போய்த் தான் நின்றிருந்தார்.

திலகா தான் மகளைத் திட்டி அதட்டி, அவளைப் பிடித்து வீட்டிற்குள் இழுத்துப் போனார். ஒரு மாதிரியாகக் கலங்கிப் போன முகப்பாவத்துடன் தான் ஜெயராமனும் வீட்டிற்குள் சென்றார்.

வீட்டிற்குள் சென்ற பிறகும் மதுமதி ஓயவில்லை.

“அநியாயமா ஒரு உயிரை கொன்னுட்டீங்களே… ஏன்? ஏன் இப்படிப் பண்ணீங்க? அப்படி என்னய்யா உங்களுக்கு ஜாதி வெறி? வெறி நாயை விட மோசமா என் விக்ரமை கடிச்சு குதறி கொன்னுட்டீங்களே… நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா? த்தூ…” என்று விடாமல் வசைபாடித் தன் அடிவயிற்றிலிருந்து கிளம்பிய ஆத்திரத்தைக் கக்கினாள் மதுமதி.

“ஏய், உன் அப்பாடி அவர்! அவரைப் போய் மரியாதை இல்லாம என்னவெல்லாம் பேசுற? வாயை அடக்குடி. அந்த மனுஷன் அவனை ஒன்னும் செய்திருக்க மாட்டார். அவனா போய் எங்கேயோ விபத்தில் சிக்கிச் செத்தா, அதுக்கு உன் அப்பாவைப் பழி சொல்வியா?” என்று மகளை அதட்டினார் திலகா.

“இல்லை… இல்லை… என் விக்ரம் அவரா எல்லாம் போய்ச் சாகலை. இந்த ஆள் தான் அவரை ஏதோ பண்ணிட்டு… என் விக்ரம் மோசமானவர்னு அந்த மயூரன்கிட்ட தப்பு தப்பா சொல்லியிருக்கார். அப்போ இந்த ஆள் தான் என் விக்ரமை ஏதோ பண்ணிட்டார். இவரை நான் சும்மாவே விட மாட்டேன்…” என்று அவள் ஏதேதோ கத்திக் கொண்டிருக்க, ஜெயராமன் எதுவுமே சொல்லாமல் அமைதியாக அங்கிருந்த சோஃபாவில் சென்று தளர்ந்து அமர்ந்துவிட்டார்.

அதே நேரம், ஜெயராமனையும் உடன் அழைத்துச் சென்று, செல்வராஜைச் சந்தித்து விக்ரமின் பொருட்களை வாங்கிக் கவியுகனிடம் கொடுக்கலாம் என்று நினைத்து அங்கே வருகை புரிந்த மயூரன், தன் மனைவி நடுக்கூடத்தில் நின்று கத்திக் கொண்டிருப்பதைப் பார்த்துத் திகைத்துப் போனான்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com