14 – காதலின் ரீங்காரம்

👁️ 1374 Views

“இதுக்கு மட்டும் உங்களால் உடனே பதில் சொல்ல முடியலை, இல்லையா மயூரன்? ஏன்னா உனக்கு விருப்பம் இருந்தா என்ன, இல்லைனா என்ன? எனக்கு என் விருப்பம் தான் முக்கியம்னு காட்ட என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. இதுதான் நீங்க என் மனசை யோசிக்கிறதா மயூரன்? இல்லைவே இல்லை!

என் அப்பா ஒரு வகையில் அவரோட ஆண்புத்தியை காட்டினார்னா… நீங்க ஒரு வகையில் உங்க ஆண்புத்தியைக் காட்டிட்டீங்க மயூரன். ஆணுக்கு எல்லாம் அவன் இஷ்டப்படிதான் நடக்கணும். பொண்ணு அவன் பேச்சை கேட்டு கீழ்படியணும். இந்த எண்ணம் உங்க ஆண்புத்தியில் வழி வழியா ஊறிப் போனது மயூரன். அதுக்கு நீங்களும் விதிவிலக்கில்லை.

எனக்கு விருப்பமில்லைன்னு சொன்னா அதை உங்களால் ஏத்துக்க முடியலை. எனக்கு விருப்பமில்லாத வாழ்க்கையில் நீங்களாத்தான் என்னையும் சிக்க வச்சீங்க. அந்தச் சிக்கலில் என்னால் முழு மனசா மாட்டிக்க முடியலை. நாம பிரிந்துவிடலாம்னு சொன்னால் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது. உங்க விருப்பம் பெருசு. உங்க எதிர்பார்ப்பு பெருசு. நீங்களும் ஒரு சராசரி வாழ்க்கை வாழ ஆசைப்படுறீங்க. நான் இப்ப இருக்கும் மனநிலைக்கு மட்டும் இல்லை… எப்பவுமே அது நடக்காதுங்கும் போது உங்க வாழ்க்கை ஏன் வீணாகணும்? இந்த வாழ்க்கையால் நம்ம இரண்டு பேருக்குமே நன்மை இல்லை. இதில் நீங்க வேற ஏதாவது பேசி வைக்கும் போது என் கோபத்தை எல்லாம் உங்க மேல காட்டிடுறேன்…” என்று காஃபி கொட்டி சிவந்திருந்த அவனின் தொடையைச் சுட்டிக்காட்டிவள், “இதெல்லாம் நடக்கும் போது எனக்கே ரொம்பக் கில்டியாகுது மயூரன். என்னை நானே ஒரு அரக்கி மாதிரி ஃபீல் பண்றேன். இப்ப எல்லாம் கோபம் வந்தால் நான் நானாகவே இருக்கிறதில்லை. நான் ரொம்ப மோசமானவளா மாறிட்டு இருக்கேன். என்னால் விக்ரமை மறக்கவும் முடியலை. அவர் இழப்பை ஏத்துக்கவும் முடியலை. அதனால் என் இயல்பை நான் தொலைச்சுட்டு இருக்கேன். அம்மா சொன்ன மாதிரி நான் ஒரு பைத்தியக்காரியாத்தான் மாறிட்டு இருக்கேன் போல. இந்தப் பைத்தியக்காரி உங்களுக்கு வேணாம் மயூரன். இந்தப் பைத்தியக்காரியால் உங்க வாழ்க்கை வீணாக வேண்டாம். வேற நல்ல பொண்ணா பார்த்து…”

“ஏய்… வாயை மூடுடி!” அத்துணை நேரமாக அவளைப் பேச விட்ட மயூரன், தடித்த குரலில் அதட்டினான்.

சற்று தள்ளி அமர்ந்திருந்தவளை நெருங்கி அவளின் இரண்டு தோளிலும் கையை வைத்து அவள் முகம் பார்த்தவன், “நீ பைத்தியக்காரினா நானும்தான் பைத்தியக்காரன். உன்னால் எப்படி விக்ரமை விரும்பியதை மறக்க முடியலையோ… அதே போலத்தான் உன்னை என்னால் மறக்க முடியாதுடி. அவன் உனக்கு வேணும்னு நீ எவ்வளவு போராடினயோ… அதே போராட்டம்தான் எனக்குள்ளயும். நீ அவனை இழந்துட்ட. ஆனா, நான் உன்னை இழக்க மாட்டேன். உன் காதலுக்குக் கொஞ்சமும் குறைந்தது இல்லை என்னோட காதல்! நீ சொன்ன மாதிரி விருப்பமில்லாத உன்னை நானே தான் வம்படியா என் வாழ்க்கையில் நுழைச்சுக்கிட்டேன். அதிலிருந்து உன்னை விடுவிக்கவே மாட்டேன். அது என் ஆண்புத்தித்தனம் தானா… அப்படியே வச்சுக்கோ. இனிமே பிரிஞ்சிடலாம்… டிவோர்ஸ் பண்ணிடலாம்னு ஏதாவது சொன்ன… அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்…” என்று மிரட்டினான்.

தன் இரண்டு தோள்களையும் பிடித்திருந்த அவனின் இரண்டு கைகளையும் பட்டென்று தட்டிவிட்டவள், “லூசு.. லூசு… பைத்தியக்காரா… நான் அத்தனை சொல்லியும்…” என்று அவள் மானாவாரியாகத் திட்ட,

“காதலே ஒரு பைத்தியக்காரத்தனம் தான்டி. அதில் நீ ஒரு பைத்தியக்காரி… நான் ஒரு பைத்தியக்காரன். அந்தப் பைத்தியக்காரத்தனத்தை நாம இரண்டு பேரும் சேர்ந்தே செய்யலாம்…” என்று அவன் அலட்சியமாகத் தோளை குலுக்க,

“நீயெல்லாம் திருந்தாத கேஸ்டா…” என்று கடுப்புடன் கத்திவிட்டு எழுந்து சோஃபாவில் அமர்ந்தாள்.

“நீ திருந்துற அன்னைக்கு நானும் திருந்திக்கிறேன்டி…” என்றவன் எழுந்து, சோஃபாவில் அமர்ந்திருந்தவளின் கையைப் பற்றி இழுத்தான்.

“ஏய், என்ன?” அவள் திமிர,

“இவ்வளவு நேரம் இந்தப் பைத்தியக்காரன் சும்மா கத்தினான்னு நினைச்சியா? இனி நீ கட்டிலில்தான் படுக்கணும், வா…” என்று அவளைக் கட்டிலை நோக்கி இழுத்துப் போனான்.

“வேணாம் மயூரன். என்னால் முடியாது…” என்று மதுமதி முரண்ட,

“அப்ப சொன்னதைத்தான்டி இப்பவும் சொல்றேன். நான் நினைச்சா இப்பவே உன் கூட என்னால் வாழ முடியும். ஆனா, நீயும் விரும்பி வராம எனக்கு அப்படி வாழ வேணாம். ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் என் பின்னாடி வந்ததாக நீ சொன்னது உண்மையா இருந்தா என்னை நம்பி கட்டிலில் படு…” என்று அவளைக் கட்டிலில் அமர வைத்தான்.

அவள் தயக்கத்துடன் அவன் முகம் பார்க்க, “படுடி தங்கப்பொண்ணே! நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன். நீயும் அதே போலக் கண்ட்ரோலா இருக்கணும், சரியா?” என்று கண்சிமிட்டி கேட்டான்.

அவனைச் சூடாக முறைத்துப் பார்த்தாலும், ‘இவ்வளவு நேரமாக அப்படி ஆங்காரமாக ஆடியவனா இவன் என்பது போல அவனைக் கண்டு வியந்தாள். காதல் படுத்தும் பாடு ஒருவரின் இயல்பையே மாற்றிவிடும் போல. என்னைப் போல’ என்று அவள் தனக்குள் நினைத்துக் கொள்ள,

அவனோ அவளின் இரவு சட்டையின் காலரை பற்றி இழுத்தான்.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

“என்ன மயூரன் இது…” என்று அவள் கண்டிப்புடன் அவன் கையைத் தட்டிவிட, 

“நிஜமாவே தாலியை கழட்டிட்டியா?” என்று அவளின் கழுத்தை ஆராய்ந்தபடி கேட்டான்.

“ஆமா…” என்று அவள் அலட்சியமாகச் சொல்ல,

“இல்லையே… அப்போ சோஃபாவில் நான் உன் மேல் படுத்திருந்த போது ஏதோ என் நெஞ்சில் குத்துச்சே…” என்று லஜ்ஜையில்லாமல் அவன் சொல்ல, அவளின் முகம் சூடானது.

“லூசு… பைத்தியம்… பம்பரக்கட்ட மண்டையா… ஆளையும், மூஞ்சையும் பேச்சையும் பாரு…” என்று வாய்க்கு வந்தபடி போட்டு விளாச ஆரம்பித்தாள்.

“ஏய்… நிறுத்து! நிறுத்துடி! தங்கத்தாலி குத்துச்சுன்னு சொன்னா…” என்றவன் அவளை ஒரு மார்க்கமாகப் பார்க்க, அவளோ பிடிப்பட்ட பாவனையில் திருதிருவென முழித்தாள்.

“ஹாஹா… என்ன தங்கப்பொண்ணே தாலி சென்டிமென்டா?” என்று வாய்விட்டு சிரித்தபடி, அவன் கிண்டலாகக் கேட்டாலும், அவள் தாலியைக் கழற்றவில்லை என்பது அவனுக்கு அத்துணை ஆசுவாசத்தைத் தந்தது.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை. இப்ப நினைச்சா கூட என்னால் கழட்ட முடியும்…” என்றாள் சவாலாக.

“கழட்டு… கழட்டு… பிஸ்தா படத்தில் கார்த்திக் நக்மா கழுத்தில் இரும்பு தாலி கட்டிவிடுவார். அதே போல உனக்கும் இரும்பு தாலி போட்டுட்டு சுத்தணும்னு ஆசை இருந்தால் இதைக் கழட்டிக்கோ…” என்று அலட்சியமாகச் சொல்லியபடி கட்டிலில் மறுபக்கம் சென்று படுத்தான்.

அவள் அவனை முறைத்தபடி கட்டிலில் அமர்ந்திருக்க, “உன் முட்டை கண்ணை வச்சு உருட்டி உருட்டி பார்க்காம படுத்து தூங்குடி. இல்லைனா…” என்று அவன் இழுக்க,

“இல்லைனா?”

“என் பொண்டாட்டிக்கு என் கூட ரொமான்ஸ் பண்ண ஆசை போல. அதான் ஆசையா என்னைப் பார்க்கிறாள்னு அப்படியே மேலே பாய்ந்துடுவேன்…” என்றபடி அவன் படுக்கையிலிருந்து எழ, பட்டென்று படுக்கையில் சாய்ந்து, கண்களை இறுக மூடிக் கொண்ட மதுமதி, “பக்கி பயபுள்ள… மேல பாயுறதிலேயே இருக்கான்…” என்று கடுப்புடன் முனகினாள்.

அவளின் சிறுபிள்ளைத்தனமான செய்கையிலும், புலம்பலை கேட்டும், அகமும், முகமும் மலர, உதடுகளில் விரிந்த புன்னகையைச் சிந்தியபடி மீண்டும் படுக்கையில் சாய்ந்த மயூரன், ஒரே படுக்கையில் மனைவியின் இருப்பை உணர்ந்தபடி நிம்மதியுடன் நித்திரையைத் தழுவ ஆரம்பித்தான்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com