👁️ 1374 Views
அவளின் கண்கள் கலங்க ஆரம்பிக்க, “அழுதுடாதே! என் முன்னாடி அழுதா அப்புறம் நான் என்ன செய்வேனே தெரியாது!” என்று கடுமையுடன் அதட்டினான்.
அவளின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்தன.
“ஏன் இப்படிக் கத்துறீங்க? என்னாச்சு உங்களுக்கு?” என்று பயத்துடன் கேட்டாள்.
“நான் கத்துறது உனக்குப் பயமா இருக்கா? அப்ப நீ கத்தும் போது எனக்குக் குளுகுளுன்னு இருக்குமோ?” என்று எகத்தாளமாகக் கேட்க, பேச வார்த்தைகள் கிடைக்காதது போல முழித்தாள் அவள்.
“பேசுடி! இப்ப பேசேன். டிவோர்ஸ் வேணுமா உனக்கு டிவோர்ஸ்? உனக்கும் உன் அப்பனுக்கும் கல்யாணம்னா அவ்வளவு விளையாட்டா போச்சா என்ன? நான் பொண்ணு கேட்டு வந்தப்ப இருந்து இப்ப வரை நீயும் உன் அப்பனும் என்னை முட்டாள் ஆக்கிட்டு இருக்கீங்கடி. நானும் போனா போகுதுன்னு பொறுத்து போனா… இன்னைக்கு டிவோர்ஸில் வந்து நிக்கிற. நீ நினைச்சா கல்யாணம் பண்ணிக்கிறதும், வேண்டாம்னா தூக்கி போட்டு போறதுக்கும் அதை என்ன விளையாட்டு பொம்மைனா நினைச்ச?” என்று உக்கிரத்துடன் கேட்டான்.

அவள் விவாகரத்துச் செய்து விடலாம் என்றது அவனை வெறியாக்கி இருந்தது. அதற்காகவா அவள் ஆடும் ஆட்டத்தை எல்லாம் பொறுத்துக் கொண்டு போகிறான்?
அவளின் காயம் ஆறட்டும் என்று அவன் காத்திருக்க, அவளோ அவனைக் காயப்படுத்திப் பார்ப்பதிலேயே குறியாக இருக்கிறாள். அவள் ஏற்படுத்திவிட்ட காயம், அவனை வலி தாங்காமல் கத்த வைத்திருந்தது.
தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்ளவே, அந்த இரவு நேரத்திலும் ஓடிவிட்டு வந்திருந்தான். ஆனால், அவளின் சிறு சீண்டல் அவனை வெடிக்க வைத்துவிட்டது.
“நான் உங்க நல்லதுக்காகத்தான் சொன்னேன்…” என்றாள் தயக்கத்துடன்.
“எதுடி எனக்கு நல்லது? உன்னை விட்டுப் பிரிவதுதான் நல்லதுனா எதுக்குடி நான் உன்னைக் கல்யாணம் பண்ணியிருக்கப் போறேன்?”
“அதையேதான் நானும் கேட்கிறேன்? அப்படி எதுக்குக் கல்யாணம் பண்ணனும் என்னை? என்னால் உங்க கூட வாழ முடியாதுன்னு நான் சொல்லியும் கேட்காமல் கல்யாணம் பண்ணிக்கிட்டது நீங்கதான். இப்ப வந்து ஒட்டி உரசி தொட்டுக்கிட்டு ஹனிமூன் போகணும்னு சொல்றீங்க. என்னை என்ன உங்க பொம்மைன்னு நினைச்சிங்களா? என்னைப் பத்தி என் மனசை பத்தி கொஞ்சம் கூட யோசிக்காமல்…”
“யார் நான் உன் மனசை பத்தி யோசிக்கலையா? உன் மனசை பத்தி யோசிக்காதவனா இருந்திருந்தா கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கே உன் மேல நான் பாய்ந்திருப்பேன். சோஃபாவில் படுக்கவிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருந்திருக்க மாட்டேன். ஏன் இப்ப கூட உன் மேல பாய்ந்து, மொத்தமா உன்னை என்னால் எடுத்துக்க முடியாதுனா நினைக்கிற? நான் நினைச்சா இப்பவே இந்த நிமிஷமே முழுசா, உன்னை என் பொண்டாட்டியா மாத்திக்க என்னால் முடியும். உன்னால் எவ்வளவு நேரம் போராட முடியும்? இல்லை, உன்னைக் காப்பாற்றத்தான் இங்கே ஆள் இருக்கா?” என்று கேட்டவன் ஆக்ரோஷத்துடன் அவளைச் சோஃபாவில் தள்ளி அதே வேகத்தில் அவள் மேல் கவிழ்ந்தான்.
“ஏய்… ச்சீ… ச்சீ… விடு… எழுந்து போ!” என்று அவனை அடித்து, தள்ளினாள்.
ஆனால், அவளால் அவனைச் சிறிது கூட அசைக்க முடியவில்லை. அவன் உடல் வலுவிற்கு முன் அவள் சிறு துரும்பாகத்தான் இருந்தாள்.
அவள் மேல் கவிழ்ந்து படுத்திருந்தவன் அவளை எதுவுமே செய்யவில்லை. அவளின் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அசையாமல் கிடந்தான்.
மதுமதி தான் அவனைத் தன்னிடமிருந்து விலக்க போராடிக் கொண்டிருந்தாள்.
அவளால் போராட மட்டுமே முடிய, ஒரு கட்டத்தில் தனக்கு அவனை விலக்க வலுவில்லை என்ற புரிதலில் உடைந்து கதறி அழ ஆரம்பித்தாள்.
அவளின் கதறலில் தானே அவளை விட்டு விலகி எழுந்த மயூரன், அப்படியே சோஃபாவில் சாய்ந்து தரையில் அமர்ந்தான்.

இன்னும் சோஃபாவில் படுத்திருந்தபடி கதறிக் கொண்டிருந்தாள் மதுமதி.
அவளைச் சமாதானம் செய்ய மயூரன் எந்த முயற்சியும் செய்யவில்லை. அவன் கண்கள் கனலாகத் தகித்து, இரத்தமெனச் சிவந்து போயிருந்தன. தரையை உணர்வுகளற்று வெறித்துக் கொண்டிருந்தான்.
அந்த அறையில் மதுமதியின் அழுகை சத்தமும், மயூரனின் உஷ்ணமான மூச்சு சத்தமும் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.
சில நொடிகளுக்குப் பிறகு அழுது கொண்டே சோஃபாவிலிருந்து எழுந்து அவனைப் போலவே தரையில் வந்து அமர்ந்த மதுமதி, “நீங்க கேட்டது சரிதான். நான் கழுத்தை அறுத்துக்கிட்டு செத்து போயிருக்கணுமே தவிர, உங்களுக்குக் கழுத்தை நீட்டியிருக்கக் கூடாது…” என்று கண்களைத் துடைத்துக் கொண்டே ஆத்திரம் கலந்து சீறினாள்.
“டூ லேட்!” என்று அலட்சியமாகச் சீற்றத்துடன் சிரித்தான் மயூரன்.

“எல்லாத்துக்கும் என்னைக் குத்தம் சொல்றீங்க இல்லையா மயூரன்? நீங்க மட்டும் பெரிய நியாயவாதியா என்ன? நீங்க நினைச்சிருந்தால் எல்லாத்தையும் நடத்தி காட்டியிருக்க முடியும்னு இப்ப காட்டிய உங்களால், இப்படி ஒரு சூழ்நிலை வராமலும் உங்களால் தடுக்க முடிந்திருக்கும் தானே? ஆனால், ஏன் அதை நீங்க தடுக்கலை மயூரன்? எனக்காவது என் கழுத்தில் கத்தியை வச்சு மிரட்டியாவது எப்படியாவது ஒருத்தன்கிட்ட என்னைத் தள்ளிவிடணும்னு நினைக்கிற என் பெத்தவங்க இருக்காங்க. ஆனால், உங்களுக்கு? நீங்க எல்லாத்தையும் தடுத்து நிறுத்தியிருந்தால், யார் உங்களைக் கேள்வி கேட்டுருப்பா மயூரன்? அப்புறம் ஏன் தடுத்து நிறுத்தலை?” என்று மூக்கு சிவக்க கோபத்துடன் கேட்டாள்.
“ஏன்னா நான் உன்னை விரும்பி தொலைச்சுட்டேன்டி…” என்று அவனும் பதிலுக்குக் கோபப்பட்டான்.
“நீங்க விரும்பினா மட்டும் போதுமா? எனக்கு விருப்பமிருக்க வேணாமா?” என்றவளின் கேள்விக்கு அவனிடமிருந்து உடனே பதில் வரவில்லை.
©nandhavanamnovels.com