👁️ 948 Views
செல்வராஜ் சொன்னது போல, உள்ளே ஒரு பெண் காணொளி அழைப்பில் தோன்றினாள். குழைவான குரலில் பேசினாள். அந்தக் காணொளியில் ஆது… ஆது… என்று கொஞ்சி கொஞ்சி பேசினாள். இன்னொரு பக்கமிருந்து ஒரு ஆணின் தட்டையான குரல்தான் கேட்டதே தவிர, அவனின் முகம் அந்தக் காணொளியில் இல்லை.
“உன்னை எனக்கு முழுசா பார்க்கணும் போல இருக்கு டாலி. ஆனா… எங்கே… அதுக்கு நான் இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்கணுமோ?” என்று ஏக்க பெருமூச்சு விட்ட அந்த ஆடவனின் குரல் மெல்ல மெல்ல வசிய குரல் போல் மாறியது. ஏதேதோ சில்மிஷமாய்ப் பேசினான். கொஞ்சினான், குழைந்தான், ஏங்கினான்… அந்தக் குரலுக்கு ஏற்ப அவளும் பதில் கொடுத்தாள்.
ஒரு வித மயக்க பாவனை அவளின் கண்களில் தெரிந்தது. ‘நிஜமாவே என்னை இப்ப பார்க்கணுமா ஆதுமா?’ என்று கொஞ்சலுடன் கேட்டவள், மெல்ல மெல்ல தன் உடையைக் களைய ஆரம்பித்தாள். அவன், அது… அடுத்து அது… என்று ஒவ்வொரு உடையாகச் சொல்ல, அவை எல்லாம் அவளிடமிருந்து விடுதலை பெற்றுக் கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் பார்க்க முடியாமல் பார்வையைத் திருப்பிக் கொண்டான் மயூரன்.
“போதும் கவியுகன். இதுக்கு மேல் இதைப் பார்க்க முடியாது…” என்றான் சுவரை வெறித்துக்கொண்டு.
ஆனால், கவியுகன் சில காணொளியை ஓடவிட்டே அதை நிறுத்தினான்.

சத்தம் எதுவும் கேட்காமல் இருக்கவும் தான் அவனின் பக்கம் திரும்பினான் மயூரன்.
அவனைப் பார்த்து புன்னகைத்த கவியுகன், “உண்மைத்தன்மையை ஆராயும் போது இந்த மாதிரி சங்கடங்களைத் தவிர்க்க முடியாது மயூரன்…” என்றான்.
“புரியுதுதான். ஆனாலும்… ம்ப்ச்! இதெல்லாம் உண்மையா இருக்காது. என் மாமனார் பொய் சொல்லியிருப்பார்னு நினைச்சேன். ஆனால், அப்படி இல்லை… எல்லாம் உண்மைன்னு தெரிய வரும்போது தாங்க முடியலை. அதுவும் பொண்ணுங்க அவன் பேச்சுக்கு மயங்கிதான் எல்லாம் செய்ற போல இருக்கு. காதலிச்சாலுமே அதுக்கு வரைமுறைன்னு ஒன்னு இல்லையா? அதுவும் வீடியோ காலில்… எப்படி அவங்களால் முடியுது? ச்சு…” என்று சலிப்பும், கோபமுமாகத் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான் மயூரன்.
அவனுக்குத் தண்ணீரை கொடுத்து குடிக்க வைத்த கவியுகன், “நீங்க இதையே ஏத்துக்க முடியாம தவிக்கிறீங்க. ஆனால், இதை விட மோசமான டார்க் உலகம் எல்லாம் இருக்கு மயூரன். அது எல்லாம் நம்ம கற்பனையில் கூட நினைக்க முடியாதவையா இருக்கும். ஒரு பக்கம் காதல், புனிதம், பரிசுத்தம், கண்ணியம்னு நாம இந்தப் பக்கம் பேசிட்டு இருக்கும் அதே நேரத்தில், அந்த டார்க் உலகத்தில் படு மோசமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கு மயூரன். அதுவும் இப்ப காலத்தில் ஒரு சாதாரண ஆப் மூலமே எவ்வளவு தவறுகள் நடக்குது தெரியுமா? நம்ம பக்கத்து வீட்டில் பதவிசான பாப்பா போல இருக்கும் ஒரு பொண்ணு… அந்த ஆப்பில் தன் அங்கத்தைக் காட்டி அதன் மூலமா சம்பாதிக்கும் நிகழ்வும் நடந்துட்டு இருக்கு…” என்றான்.
அவன் கொடுத்த தண்ணீரை குடித்து ஜீரணிக்க முயன்ற மயூரன் ஆமோதிப்பாகத் தலையை அசைத்து, “அதுபோல நிகழ்வுகளும் கேள்விப்பட்டேன் கவியுகன். ஆனால், இது காதல் பெயரை சொல்லி… அதுவும் ஆரம்பத்தில் நல்ல காதலர்கள் போல் பேசிக்கிட்டு… அப்புறம் இப்படி… ம்ப்ச்…” என்றான் இப்போதும் ஏற்க முடியாத பாவனையில்.
“சில விஷயங்களை நம்மால் ஏற்றுக் கொள்ளவோ ஜீரணிக்கவோ முடியாதுதான். என்ன செய்ய? சில விஷயங்களை நம்மால் தடுக்க முடிவதும் இல்லை. சரி, அதை விடுங்க! உன் வொய்ப் போட்டோ உங்ககிட்ட இருக்கா?” என்று கவியுகன் கேட்க, தன் கைப்பேசியில் தங்கள் திருமணத்தின் போது எடுத்த புகைப்படத்தைக் கவியுகனிடம் கொடுத்தான் மயூரன்.
அவன் எதற்காக மதுமதியை பார்க்க வேண்டும் எனக் கேட்கிறான் என்று புரிய, மனம் கசந்தது. அப்படி மட்டும் இருந்துவிடக் கூடாது என்று மானசீகமாக வேண்டினான்.
அவனின் மனநிலை புரிந்தது போல ஆறுதலாக அவனின் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு, மதுமதியின் புகைப்படத்தைப் பார்த்தான் கவியுகன்.
“நான் இந்த லேப்டாப்பில் உள்ள எல்லா வீடியோவும் ஓட்டிப் பார்த்துட்டேன் மயூரன். அதில் உங்க வொய்ப் வீடியோ எதுவும் இல்லை…” என்று கவியுகன் சொன்னதும் தான், மயூரனுக்கு நிம்மதியான மூச்சு வந்தது.
ஆனாலும், நெஞ்சில் சிறு பயம் எட்டிப் பார்க்க, “ஒருவேளை… என் மாமனார் அவளோடதை மட்டும் டெலிட் செய்திருந்தால்?” என்று தயக்கத்துடன் கேட்டான் மயூரன்.
கவியுகன் லேசாகப் புன்னகைத்தான்.
“மயூரன், டிஜிட்டல் உலகத்துல எதுவுமே முழுசா அழியாது. ஒரு ஃபைலை டெலிட் பண்ணுறதுங்கிறது, ஒரு புத்தகத்தோட இன்டெக்ஸ் (Index) பக்கத்தைக் கிழிச்சுப் போடுற மாதிரிதான். உள்ளே இருக்கிற பக்கங்கள் அப்படியேதான் இருக்கும். அதை மீட்க எத்தனையோ ‘டேட்டா ரிக்கவரி’ (Data Recovery) மென்பொருட்கள் இருக்கு. ஆனா, நான் அதையெல்லாம் செய்யுறதுக்கு முன்னாடி ஒரு விஷயத்தைக் கவனிச்சேன்.”
மயூரன் புருவத்தை உயர்த்திப் பார்க்க, கவியுகன் தொடர்ந்தான்.
“விக்ரமோட இந்த லேப்டாப்ல இருக்குற எல்லா வீடியோக்களுமே ‘ஸ்கிரீன் ரெக்கார்ட்’ செய்யப்பட்டவை. அதாவது, வீடியோ கால் நடக்கும்போது ஒரு தேர்ட் பார்ட்டி ஆப் மூலமா பதிவு பண்ணப்பட்டிருக்கு. அதோட எல்லா வீடியோவிலும் பெண்களின் முகம் மட்டும்தான் தெரியுது. ஆணோட குரல் கேட்குதே தவிர, அவன் முகம் எங்கேயும் பதிவாகலை. அதோட ஒவ்வொரு வீடியோ காலிலும் ஆணோட குரல் வேற வேற வாய்ஸ் மாடுலேஷனில் கேட்குது. போலியா திருமணம் செய்தபின் பெட்ரூமில் இருவருக்கும் இடையே நடக்கும் அந்தரங்கம் வீடியோ எடுக்கப்பட்டதில் கூடப் பொண்ணை மட்டுமே போகஸ் பண்ணி எடுக்கப்பட்டிருக்கு. அதாவது எல்லாமே பக்காவா அந்த ஆண் தன்னை மறைச்சுத்தான் இத்தனை வேலை பார்த்திருக்கான்…” என்றான் கவியுகன்.
“எல்லாமே பிளான் பண்ணி செய்திருக்கான். அவனோட முகம் தெரியலைனா… அப்புறம் எப்படி நாம இதை எல்லாம் செய்தது விக்ரம்னு கன்ஃபார்ம் பண்றது கவியுகன்?” என்று மயூரன் கேட்க,
“ஏதாவது ஒரு ஆதாரம் கிடைக்கலாம். தேடுவோம் மயூரன். அதோட எனக்கு ஒரு விஷயம் கன்ஃபார்ம் பண்ணுங்க. டெலிட் செய்யப்பட்ட வீடியோ எதுவும் இருக்கான்னு டேட்டா ரெக்கவரி எடுத்து செக் பண்ணியே ஆகணுமா?” என்று கவியுகன் கேட்க,
“வேண்டாம் கவியுகன்!” என்று உடனே மறுத்தான் மயூரன்.
அவனைப் புரிந்தது போல லேசாகப் புன்னகைத்தான் கவியுகன்.
“என் மது பொய் சொல்ல மாட்டாள்னு நான் நம்புறேன். அவள் அப்படி எதுவும் நடந்து கொண்டதே இல்லைன்னு உறுதியா சொல்லும் போது… அதுதான் உண்மையா இருக்கும்னு நம்புறேன்!” என்றான் உறுதியாக.
“அப்புறம் வேற என்ன நீங்க நிரூபிக்க நினைக்கிறீங்க?” என்று கவியுகன் கேட்க,
“விக்ரம் உண்மையில் நல்லவனா கெட்டவனான்னு மட்டும் தெரிந்தால் போதும்!” என்றான் மயூரன்.
“அவனோட லேப்டாப் பார்த்துமா இன்னும் உங்களுக்கு அந்தச் சந்தேகம் இருக்கு?” கவியுகன் வியப்புடன் கேட்க,
“ஆனால், அவனோட முகம் அதில் பதிவாகாத போது அவன்தான் அதைச் செய்ததுன்னு நாம உறுதியா சொல்ல முடியாது தானே கவியுகன்?” திருப்பிக் கேட்டான் மயூரன்.
“கரெக்ட்! இதெல்லாம் அவன்தான் செய்தானான்னு இப்ப உறுதியில்லை. வெளியே வேற ஒருத்தர் எடுத்த வீடியோக்களைக் கூட இதில் சேவ் பண்ணி வச்சுட்டு விக்ரம்தான் குற்றவாளின்னு கதை கட்டவும் சான்ஸ் உண்டு. சோ, எது உண்மைன்னு ஆராய்ந்தே பார்த்துடுவோம். நான் முழுசா வேலையை முடிச்சிட்டு உங்களைக் கூப்பிடுறேன் மயூரன்…” என்று சொல்லி அனுப்பி வைத்தான் கவியுகன்.
அதன்பின் இதோ ஒரு மாதம் கடந்து சென்றுவிட்டது. விஷயங்களைச் சேகரித்துக் கொண்டிருப்பதாகக் குறுஞ்செய்தி மட்டும் நடுவில் கவியுகனிடமிருந்து வந்தது.
அவன் எல்லாம் நன்றாக விசாரித்துச் சொல்லட்டும் என்று காத்திருந்தான் மயூரன்.
அந்த நேரத்தில்தான், அவனின் பெரியம்மாவும், அத்தையும் அவனை விருந்துக்கு அழைத்துக் கொண்டே இருந்தனர்.
அன்று மதுமதியை சும்மா சமாளிக்க மட்டுமே தேனிலவு செல்ல திட்டம் என்று சொல்லி வைத்திருந்ததால், அப்படி எதுவும் அவன் அழைத்துச் செல்லவில்லை. அவளும் நல்லதாகப் போயிற்று என்று இருந்து கொண்டாள்.
ஆனால் பெரியம்மாவையும், அத்தையையும் சமாளிக்க முடியாமல் மனைவியை அழைத்தான்.
“நான் ஏற்கெனவே ரொம்ப நாள் வேலைக்கு போகாம விட்டுட்டேன் மயூரன். இப்ப போய் லீவ் கேட்டால் கொடுக்க மாட்டாங்க. என்னால் வர முடியாது…” என்று விட்டாள் மதுமதி.
அவளிடம் சில முறை பேசி, அவளைச் சம்மதிக்க வைக்க ஒரு மாதத்தைக் கடந்திருந்தது. இப்போது திருச்சியில் இருக்கும் பெரியம்மா வீட்டிற்குத்தான் சென்று கொண்டிருந்தனர்.
அங்கே சென்று அவள் எப்படி நடந்து கொள்வாளோ என்ற பயம் மயூரனுக்கு இருக்கவே செய்தது. ஆனால், மதுமதி அமைதியாகவே நடந்து கொண்டாள்.
“பரவாயில்லைடா, உன் பொண்டாட்டி கல்யாணமான மறுநாளே கலாட்டா செய்தாளே… எப்படி உன் கூட வாழப் போறாளோன்னு பயந்துட்டு இருந்தேன். ஆனா, பதவிசாத்தான் இருக்கா…” என்று அவனின் பெரியம்மா அனிதா மயூரனிடம் பாராட்டாகச் சொல்ல, தலை ஆட்டி போலியாகச் சிரித்து ஆமோதித்து வைத்தான் மயூரன்.
பின்னே, மனைவியின் பதவிசு என்ன என்று அவனுக்குத்தானே தெரியும்.
‘இப்ப கூட அவள் இடுப்பில் கத்தியை சொருகி வச்சுக்கிட்டு என்னைச் சொருக காத்திருக்கா பெரியம்மா’ என்றா அவரிடம் சொல்ல முடியும்?
திருச்சியில் பெரியம்மா வீட்டில் விருந்தை நல்லபடியா முடித்துக் கொண்டு அடுத்ததாக அங்கிருந்தே பாளைங்கோட்டையில் இருக்கும் அத்தையின் வீட்டிற்குக் கிளம்பினர்.
நெடுதூர பயணத்தின் போது மனைவிக்கு அலுப்பு ஏற்படாதவண்ணம் நன்றாகவே அவளைக் கவனித்துக் கொண்டான் மயூரன்.
நடுவில் நிறுத்தி இளநீர் வாங்கித் தருவது, வெள்ளரிக்காய் வாங்கித் தருவது என்று அவன் அவளைக் கவனிக்க, “என்னை அட்ராக்ட் பண்ண ட்ரை பண்றீங்களா மிஸ்டர் மயூரன்?” கேலியாகக் கேட்டாள் மதுமதி.
“ஆமா, உன்னை அட்ராக்ட் பண்ணி நான் அண்டார்டிகாவை வாங்க போறேன் பாரு. பேசாம வாடி!” என்று வாயாடினான் மயூரன்.
பாளைங்கோட்டையில் இருந்த அத்தை வீட்டு விருந்தையும் முடிந்து விட்டு இரண்டு நாள்களுக்குப் பின் வீடு வந்து சேர்ந்தார்கள்.
அன்று மனச்சுணக்கத்தோடு கிளம்பி சென்ற தன் பெரியம்மா குடும்பத்தையும், அத்தை குடும்பத்தையும் திருப்திப்படுத்திய நிம்மதியோடு, மனைவியுடன் மல்லுக்கட்டிக்கொண்டே மயூரன் தங்கள் அன்றாட வாழ்க்கையோட்டத்தோடு ஓட ஆரம்பித்தான்.
முழுதாக மூன்று மாதங்கள் சென்றிருந்த நிலையில் மயூரனை நேரில் சந்திக்க வேண்டும் என்று அழைத்தான் கவியுகன்.
©nandhavanamnovels.com