👁️ 956 Views
அத்தியாயம் – 16
“அடியேய்! நீ இந்தக் கிறுக்குத்தனத்தை என்னைக்குத்தான்டி விடப் போற? இப்ப கதவை திறக்க போறீயா, இல்லையா?” என்றபடி மகளின் அறை கதவை விடாமல் தட்டினார் திலகா.
“உங்க எனர்ஜியை வேஸ்ட் செய்யாம போய் உங்க புருஷனுக்குச் சோறாக்கிப் போடுங்க. கொஞ்சம் உப்பை குறைச்சே போடுங்க. அதான் நல்லது. அப்பவாவது அவரோட ஜாதி திமிர் கொஞ்சமாவது குறையுதான்னு பார்ப்போம்…” எகத்தாளமாக உள்ளிருந்து சொன்னாள் மதுமதி.
“கிறுக்கி! கிறுக்கி! உன்னை எல்லாம் என்னடி செய்வது? எப்பவோ முடிஞ்சு போனதை இன்னும் பேசிட்டு இருக்க. அறிவு இருக்கா? இல்லை, அடகு வச்சிட்டியாடி? முதலில் கதவை திறடி…” என்று அதட்டினார் திலகா.
“உங்க புருஷனோட வட்டி பிசினஸில் தான் என் மூளை அடகுக்குப் போயிருக்கு. முடிஞ்சா உங்க புருஷனை எனக்குப் பதிலா வட்டி கொடுத்து என் மூளையை மீட்டுக் கொடுக்கச் சொல்லுங்க…”
“எவ்வளவு கொழுப்பெடுத்துப் பேசுறா பாருங்க. இவளை என்னங்க செய்வது? இவ எப்ப திருந்துவா?” ஆயாசமாகத் தன் அருகில் நின்றிருந்த கணவரிடம் கேட்டார் திலகா.
“என் பொண்ணாச்சே… எனக்கு இருக்கும் வீம்பில் பாதியாவது அவளுக்கு இருக்கத்தானே செய்யும். விடு, இன்னும் கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளை வந்துடுவார். அவர் வந்தால் தன்னால் வழிக்கு வந்துடுவா…” என்றார் ஜெயராமன்.
“அந்த நல்ல மனுஷனுக்கு இவளைக் கட்டி வச்சு அவர் வாழ்க்கையைத்தான் நாம நாசமாக்கிட்டோம் போலங்க. இவ செய்ற கிறுக்குத்தனம் எல்லாத்தையும் அவர் சகிச்சுக்கிட்டு வாழ்ந்துட்டு இருக்கார். அந்த மனுஷனோட நல்ல மனசுக்காகவாவது இவ உருப்படியா வாழ நினைக்கலாம். அதைவிட்டு வேண்டாத வேலையை எல்லாம் பார்த்துட்டு இருக்கா. அதுவும் இன்னைக்கு அவங்க கல்யாண நாள். இன்னைக்கும் வந்து இப்படி உட்கார்ந்திருக்கா பாருங்க. எனக்கு இவ வாழ்க்கையை நினைச்சா பயமா இருக்குங்க. இப்படி அவ தலையில் அவளே மண்ணள்ளி போட்டுக்கிறாளே…” என்று புலம்பித் தள்ளினார் திலகா.
“கல்யாண நாளாம்! கல்யாண நாள்! அர்த்தமே இல்லாத கல்யாணத்துக்கு இப்ப அந்த நாள் ஒன்னுதான் குறைச்சல்!”
அன்னை பேசியது காதில் விழ, அறைக்குள் இருந்த மதுமதி கடுப்புடன் முனகிக் கொண்டிருந்தாள்.
மயூரனுக்கும், மதுமதிக்கும் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. அன்று தான் அவர்களின் முதல் திருமண நாள்.
ஆனால், அந்நாளை கொண்டாடும் மனநிலையோ, விருப்பமோ இல்லாத மதுமதி, தன் அன்னையின் வீட்டில் வந்து அமர்ந்திருந்தாள்.
அன்னை தந்தை யாரின் புலம்பலையும் கண்டுகொள்ளாமல் தன் அறைக்குள் கட்டிலில் படுத்தபடி பீட்சாவிற்கு ஆர்டர் செய்து கொண்டிருந்தாள் அவள்.
சிறிது நேரத்தில் பீட்சா வரவும், கதவை திறந்து வந்து வாங்க சென்றாள்.
“ஏய், நான் இங்கே சாப்பாடு செய்து வச்சுருக்கேன்டி. இன்னைக்காவது அந்தச் சாப்பாட்டைச் சாப்பிடலாம்ல? இப்ப எதுக்கு நீ பீட்சா ஆர்டர் செய்த?” என்று அன்னை கேட்டது காதிலேயே விழாதது போல வெளியே சென்றாள்.
இரவு நேரமது. வீட்டின் வெளியே விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அவள் பீட்சாவை வாங்கிக் கொண்டிருந்தபோது, தன் பைக் சத்தம் எழுப்ப அங்கே வந்தான் மயூரன்.
‘இன்னைக்கும் வந்துட்டான் பம்பரக்கட்ட மண்டையன்!’ என்று கறுவியவள், அவனை முறைத்துவிட்டு, பீட்சாவை வாங்கிக் கொண்டு விறுவிறுவென உள்ளே சென்றாள்.
மயூரன் தன் பைக்கை நிறுத்திவிட்டு வரும்முன் உள்ளே சென்றிருந்தாள்.
‘இன்னைக்கும் இங்கே வந்து உட்கார்ந்துகிட்டு அழிச்சாட்டியம் செய்ய ஆரம்பிச்சிட்டா. ம்ப்ச்!’ என்று சலித்தபடி மாமனார் வீட்டிற்குள் நுழைந்தான் மயூரன்.
“வாங்க மாப்பிள்ளை… வாங்க…” என்று திலகாவும், ஜெயராமனும் தர்மசங்கடமாகத்தான் அவனை வரவேற்றனர்.
“வர்றேன் மாமா, அத்தை…” என்றவனின் விழிகள் மனைவியைத் தேடின. அதற்குள் அவளின் அறைக்குள் சென்று அடைந்து கொண்டிருந்தாள் அவள்.
“திருமணநாள் வாழ்த்துகள் மாப்பிள்ளை…” என்று இருவருமே வாழ்த்தினார்கள்.
“நன்றி அத்தை, மாமா. நான் போய் மதுவை பார்த்துட்டு வர்றேன்…” என்று சொல்லிவிட்டு அவன் நகர,
“சாயந்தரம் வேலை முடிஞ்சதுமே நேரா இங்கே வந்துட்டாள் மாப்பிள்ளை. வீட்டுக்கு கிளம்புன்னு சொல்லிப் பார்த்தோம், கேட்கலை. அதான் உங்களுக்குப் போன் போட்டோம். நீங்க வருவீங்கன்னு நான் உங்களுக்கும் சேர்த்து டின்னர் செய்திருக்கேன் மாப்பிள்ளை. அவ என்னனா பீட்சாவை வாங்கி வச்சிருக்கா. அவளையும் சாப்பிட கூப்பிட்டு வாங்களேன். இன்னைக்கு நாம எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவோம்…” என்று தயக்கத்துடன் திலகா மருமகனிடம் கோரிக்கை வைக்க,
நின்று அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டவன், “சரிங்கத்தை. நீங்க சாப்பாட்டை எடுத்து வைங்க, நான் அவளை அழைச்சுட்டு வர்றேன்…” என்று சொல்லிவிட்டு மனைவியைத் தேடிச் சென்றான்.
அவளின் அறை கதவு மூடியிருக்க, “மது, கதவை திற!” என்று கதவை தட்டினான்.

உள்ளிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை, கதவும் திறக்கப்படவில்லை.
“மது!” என்று அழுத்தமாக அழைத்தவன், மீண்டும் கதவை தட்டினான்.
“சும்மா கதவை போட்டு உடைக்காம பேசாம போயிரு. எனக்கு ஏற்கெனவே தலைவலி மண்டையைப் பொளக்குது. கதவை வேற நொட்டு நொட்டுன்னு தட்டி என் மண்டையை உடைக்காதே!” என்று உள்ளிருந்து சீற்றத்துடன் கத்தினாள் மதுமதி.
“நம்ம கல்யாண நாளை அத்தை, மாமா கூடச் சேர்ந்து கொண்டாட உனக்கு ஆசையாக இருந்தால் என்கிட்ட சொல்லியிருக்க வேண்டியது தானே மது? நாம இரண்டு பேரும் சேர்ந்தே இங்கே வந்திருக்கலாம். இப்ப வெளியே வா. மாமா, அத்தை நம்ம கூடச் சேர்ந்து சாப்பிட ஆசைப்படுறாங்க. நாம சேர்ந்து செலிபிரேட் செய்த பிறகு நீ போய் ரெஸ்ட் எடு. நானே உனக்குத் தலையை அமுக்கி விட்டு உன் தலைவலியை போக வைக்கிறேன்…” என்று நிதானமாக அழைத்தான்.
அடுத்த நொடி பட்டென்று கதவு திறக்கப்பட்டது.
“உனக்கு என்ன கொஞ்சம் கூடச் சூடு சொரணையே கிடையாதா? உன் கூட இருக்கப் பிடிக்காமல் தானே இங்கே வர்றேன். பின்னாடியே துரத்திட்டு வர்றதும் இல்லாம, உனக்கு விருந்து சாப்பாடு வேற கேட்குதோ? ஒழுங்கா இங்கிருந்து போயிரு… இல்லைனா…” என்று கதவை லேசாகத் திறந்து, தலையை மட்டும் வெளியே நீட்டி தீப்பொறியாய் வார்த்தைகளைத் தெறிக்கவிட்டாள்.
அவளின் வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கத்தில் ஒரு விநாடி கண்களை இறுக மூடித் திறந்த மயூரன், அடுத்த நொடியே உதடுகளில் புன்னகையை மலரவிட்டு, “உன் புருஷனா இருக்கும் போது சூடு சொரணை எல்லாம் பார்த்தால் முடியுமா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.
“கடுப்பை கிளப்பாம போயிடு. இன்னைக்கு என்ன ஆனாலும் சரி, உன்னை உள்ளே விட மாட்டேன்…” என்று அவள் கத்த,
அவனோ மூக்கை இழுத்து வாசம் பிடித்து, “புதுப் பெர்ஃப்யூம் யூஸ் பண்ணியிருக்கியா? ஸ்மெல் வித்தியாசமா இருக்கே? என்ன பிராண்ட்?” என்று இலகுவாகக் கேட்க,
“மானம் கெட்டவனே! போடா…” என்று கடுமையுடன் சொல்லிவிட்டு அடுத்த நொடி பட்டென்று கதவை அடைத்தாள்.
“மது… ஏய் மது… சாப்பிடலாம் வா…” என்று அவள் எதுவுமே சொல்லாதது போல் மீண்டும் கதவை தட்டினான்.
இப்போது எந்தப் பதிலுமே உள்ளிருந்து வரவில்லை. அவள்தான் பீட்சாவை மொக்கிக் கொண்டிருந்தாளே.

மூடிய கதவை பார்த்து, இடுப்பில் கைவைத்து ஆயாசமாகப் பெருமூச்சு விட்டான் மயூரன்.
அவளின் வார்த்தைகள் எல்லாம் அவனுக்கு வலிக்கவே செய்தது. ஆனால், தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தால், அவ்வார்த்தைகளால் ஏற்படும் வலி மட்டுப்பட்டு விடும் போல.
பின்னே அவள் இதை விடப் பேசியதை, நடந்து கொண்டதை எல்லாம் இந்த ஒரு வருடத்தில் அனுபவித்திருக்கானே?
மனைவியின் மனநிலை மாறட்டும் என்று மயூரன் பொறுமையாகக் காத்திருக்க, அவளின் மனநிலை மாறித்தான் போயிருந்தது. ஆனால், அவனுக்கும், அவளின் பெற்றோருக்கும் எதிராக முற்றிலும் அவளின் மனம் மாறிப் போனது.
அவர்களின் திருமணம் முடிந்த நேரத்தில் கூட அவ்வப்போது இளகிய அவளின் மனம், கடந்த சில மாதங்களாக இளக்கம் என்பதையே மறந்து பாறாங்கலாக இறுகிப் போயிருந்தது.
அன்றொரு நாள் மயூரன் வாழ்க்கையும் தன்னால் வீணாகிறதே என்று வருந்திய மதுமதி இல்லை அவள். இப்போதெல்லாம் அவனுக்காக அவள் வருந்துவதே இல்லை.
‘அவனுக்கு வேணும்! என் கூட வாழவும் முடியாம, என்னை விடவும் முடியாம இப்படி அல்லாடியே அவன் வாழ்க்கை வீணாகட்டும்’ என்று வன்மமாய் நினைக்கும் மனநிலையில்தான் தற்போது இருந்தாள்.
அதிலும் தன் கோபத்தைக் காட்டுகிறேன் என்ற பெயரில் இங்கே வந்துவிடுவாள். இது இன்று மட்டும் நடந்த நிகழ்வல்ல. மாதத்தில் இரண்டு முறையாவது இப்படி வந்து பெற்றவர்களின் வீட்டில் அமர்ந்துவிடுவாள்.
‘நீங்க கட்டி வச்ச மாப்பிள்ளை கூட நான் நல்லா வாழணும்னு நினைச்சு தானே… ஒரு உயிரை பலி கொடுத்து, என்னை ஒருத்தனுக்குக் கட்டி வச்சீங்க. அவன் கூட நான் நல்லா வாழவே மாட்டேன்…’ என்று வீம்பாகச் சொல்லி பெற்றவர்களின் வீட்டிற்கு வந்துவிடுவாள்.
முன்பு மயூரன் வந்து இழுத்துச் சென்றால் சென்றுவிடுபவள், இப்போதெல்லாம் அப்படிச் செல்வதில்லை.
“உன் வீட்டில் வச்சு என்னைப் பொணமா பார்க்கணும்னு ஆசை இருந்தா கூட்டிட்டு போயேன்…” என்று அவள் நக்கலாகக் கேட்கும் போது செயலிழந்து போவான் மயூரன்.
ஆனாலும் அவளை அப்படியே விட்டுவிட்டு செல்வதா என்ற எண்ணத்தில், “நீ என் கூட வரலைனா என்ன? நான் உன் கூட இருக்கேன்…” என்று அவனும் அங்கேயே தங்கிவிடுவான்.
“மாமனார் வீட்டில் இப்படி வந்து உட்கார்ந்திருக்க உனக்கு வெட்கமா இல்லை? மனுஷன்னா சூடு சொரணை வேணும். எனக்கே உன்னைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டு இருக்கேன். என் பெத்தவங்க வீட்டில் வந்து நீ உட்கார்ந்திருக்க…” என்று ஏக வசனத்தில் பேசுவாள்.
அவன் முகத்தில் வந்து செல்லும் நொடி நேர வலியைக் கண்டு அவளுக்குத் திருப்தியாக இருக்கும்.
தன் வலியில் அவள் சந்தோஷம் கொள்கிறாள் என்று அறிந்த மயூரன், தன் முகத்தில் இப்போது எல்லாம் தன் வலியுணர்வை காட்டிக் கொள்வதில்லை. அதுவே அவளை இன்னும் வெறியாக்கியது. அவனைக் காயப்படுத்தி விடத் துடித்தாள். ஆனால், அவளுக்குத் தோல்வியைப் பரிசாகத் தந்துகொண்டிருந்தான் மயூரன்.
ஆனால், அவனின் மனம் அவனுக்குள்ளே இரணப்பட்டுப் போயிருந்தது.
முதல் திருமண நாளான இன்றும் இப்படி இங்கே வந்து அமர்ந்து கொண்டு, தன்னை விலக்கி வைப்பவளை என்ன செய்வதன்றே அவனுக்குத் தெரியவில்லை.
©nandhavanamnovels.com