👁️ 956 Views
கடந்து சென்ற ஒரு வருடத்தில் அவர்களுக்குள் அன்போ அன்னியோன்யமோ வளர்ந்திருக்கவில்லை. அவனிடமிருந்து அவள் நாளுக்கு நாள் விலகி செல்வது தான் நிகழ்ந்து கொண்டிருந்தது. அவனும் அவளுடன் நெருங்கவே முயல்கிறான். ஆனால், அதற்கு அவள் இடமளிக்க வேண்டுமே? விருப்பமே இல்லாமல் விலகி செல்பவளை உடல்ரீதியாக மட்டும் நெருங்க அவனுக்கு விருப்பமிருக்கவில்லை. அப்படி வலுக்கட்டாயமான தாம்பத்தியத்தை அவன் விரும்பவும் இல்லை.
இவளை என்ன சொல்லி மாற்றுவது என்று புரியாத மனநிலையில் மயூரன் அங்கேயே நின்றிருந்த போது, “என்ன மாப்பிள்ளை வரலைன்னு சொல்லிட்டாளா?” என்று கேட்டபடி அங்கே வந்தார் திலகா.
அவன் மௌனமாகத் தலையை அசைக்க, “இவளை…” என்று பல்லை கடித்தவர், மகளின் அறை கதவை தட்ட சென்றார்.
“வேணாம் அத்தை, விடுங்க! பீட்சா வாங்கியிருக்காள் தானே? அதைச் சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கட்டும். தலை வேற வலிக்குதுன்னு சொல்றா. இப்ப போய்க் கூப்பிட்டா இன்னும்தான் டென்ஷனாவா…” என்று சொல்லி அவரைத் தடுத்துவிட்டான்.
“நீங்களும், அவ அப்பாவும் இப்படி அவளை அவள் போக்கில் விடுவதால்தான் ரொம்ப ஆட்டம் காட்டுறா. கன்னத்திலேயே இரண்டு இழுப்பு இழுத்து சொல்ற பேச்சை கேட்டு நடடின்னு சொன்னால்தான் வழிக்கு வருவா மாப்பிள்ளை. இன்னும் எவ்வளவு நாள்தான் இவள் செய்ற இந்த முட்டாள்தனத்தை எல்லாம் பொறுத்துக்கிட்டு போவீங்க?” என்று திலகா ஆதங்கமாகக் கேட்க,
லேசாகச் சிரித்தான் மயூரன்.
“என்ன மாப்பிள்ளை சிரிக்கிறீங்க?”
“அவளை அடிச்சு அடிபணிய வைக்க முடியும்னு நம்புறீங்களா அத்தை? இப்ப வீம்புக்காக இப்படி வந்து உட்கார்ந்திருக்கா. ஆனா, நாம வேற மாதிரி அவளை அடக்க நினைச்சா, அவள் எடுக்கும் முடிவே வேற மாதிரி இருக்கும் அத்தை. இப்ப நம்ம கண்ணு முன்னாடியாவது இருக்காளேன்னு சந்தோஷப்படுங்க. வாங்க, நாம சாப்பிடலாம்…” என்று அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.
இரவு உணவு நேரம் அமைதியாகச் சென்றது.
மூவரும் உண்ணும் போதும் சரி, உண்டு முடித்த பின்னும் கூடச் சரி, மதுமதி தன் அறை கதவை திறக்கவே இல்லை.
ஜெயராமன் தான் அடிக்கடி மருமகன் முகத்தைச் சங்கடத்துடன் பார்த்தார்.
அவரின் பார்வையைக் கண்டுவிட்டு, மாமியாரை சுட்டிக்காட்டி கண்களால் மாமனாரை அடக்கினான் மயூரன்.
உணவை உண்டு முடித்த பின் திலகா ஒதுங்க வைக்க, “நான் ரத்தினத்துக்குப் போன் பண்ணி பெப்பியை கவனிச்சுக்கச் சொல்லிட்டு வர்றேன்…” என்று இருவரிடமும் பொதுவாகச் சொல்லிவிட்டு, அலைபேசியுடன் வீட்டின் வெளியே சென்றான்.
அதிலேயே அவன் இரவு அங்கேதான் தங்க போகிறான் என அவர்களுக்குப் புரிந்தது.
அதில் அவர்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், மகளுடன் அவன் மன ஒற்றுமையுடன் மகிழ்ந்து வாழ்ந்தால் தானே அவர்களால் முழுமையாக மகிழ முடியும்?
மகளோ மருமகனை அறைக்குள் கூட விடாமல் இருக்க, அவர்களால் மகிழத்தான் முடியவில்லை.
“நான் காலையில் வந்துடுவேன் ரத்தினம். பெப்பிக்கு இப்ப சாப்பாடு மட்டும் கொடுத்துடுங்க…” என்று வீட்டின் பக்கவாட்டில் இருந்த பூச்செடிகள் இருந்த பக்கம் நின்று பேசிக் கொண்டிருந்த மருமகனை நோக்கி தயக்கத்துடன் நடந்து வந்தார் ஜெயராமன்.
ரத்தினத்திடம் பேசி முடித்துவிட்டு, அவரைக் கேள்வியுடன் பார்த்தான் மயூரன்.
“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே நீங்க பொறுமையா போவீங்க மாப்பிள்ளை? அதுவும் தப்பே செய்யாத உங்களுக்கு ஏன் இந்தத் தண்டனை? என் பொண்ணு செய்வதெல்லாம் கொஞ்சம் கூடச் சரியே இல்லை மாப்பிள்ளை. இனி நான் அவளை இப்படியே விடப் போறதில்லை. அவகிட்ட எல்லா உண்மையையும் சொல்ல போறேன். இனி என்னைத் தடுக்காதீங்க மாப்பிள்ளை…”
தயக்கத்துடன் ஆரம்பித்தவர், ஆவேசமாகக் குரலை நிறுத்தினார்.
“போதும் நிறுத்துங்க மாமா! உண்மையை எல்லாம் சொல்லி அவளைக் குற்றவுணர்ச்சிக்கு தள்ளி சாகடிக்க போறீங்களா? அதுதான் உங்க நோக்கமா? நீங்க ஒருத்தனை கொன்னது போதாதா?” என்று வெடுக்கென்று கேட்டான்.
“மாப்பிள்ளை…” என்று சங்கடமும் தவிப்புமாக அழைத்தார் ஜெயராமன். சற்றுமுன் அவரிடம் இருந்த ஆவேசம் அப்படியே வடிந்து வற்றிப் போனது.

“உங்களைக் குத்திக் காட்டணும் என்பது என் நோக்கம் இல்லை மாமா. நீங்க ஒரு முறை அவசரப்பட்டதே போதும்! திரும்ப அவசரப்பட்டு உள்ள நிலைமையும் கெடுத்துடாதீங்க…” என்றான் மயூரன்.
“இன்னும் எத்தனை நாளைக்கு மாப்பிள்ளை? என் பொண்ணு இப்படி செய்யும் போது எவ்வளவு நாள் நான் பொறுமையா இருக்கணும்?” என்று ஆதங்கமாக கேட்டார்.
“பொறுமையா இருந்துதான் ஆகணும் மாமா. அதுதான் அவளுக்கும் நல்லது! நமக்கும் நல்லது!” என்று உறுதியுடன் சொல்லிய மயூரன் அங்கிருந்து சென்றான்.
அவனை வேதனையுடன் பார்த்து நின்ற ஜெயராமன், ‘தான் இன்னும் நிதானமாக இருந்திருக்க வேண்டுமோ? அவசரப்பட்டிருக்கக் கூடாதோ?’ என்று கடந்த ஒரு வருடத்தில் பல முறை தனக்குள் சொல்லிக் கொண்டது போல இன்றும் வேதனையுடன் சொல்லிக் கொண்டார்.
மகள் வாழ்க்கை மட்டும் இல்லாது, மருமகன் வாழ்க்கையும் இப்படி வீணாகிறதே என்று அவரின் மனம் தவிக்க, அப்படியே தளர்ந்து போனார் மனிதர்.
வீட்டிற்குள் சென்ற மயூரன், மனைவியின் அறை கதவை தட்டினான். அவள் தன்னுடன் தன் வீட்டிற்கு வரவில்லை என்றால், நானும் இங்கேயே இருப்பேன் என்று பிடிவாதம் பிடித்து, அவளின் அறையில் வந்து அவனும் தங்கிக் கொள்வான். அப்போது எல்லாம் இங்கே வந்தும் பின்னால் துரத்திக் கொண்டு வந்து விடுகிறான் என்ற கடுப்பில் இரண்டாவது நாளே அவனின் வீடு வந்துவிடுவாள்.
அவளுக்குப் பெரிதாக எல்லாம் பழிவாங்க தெரியவில்லையா? இல்லை, அவளுக்குள் ஒளிந்திருக்கும் மென்மையானவள், இந்தச் சிறிய பழிவாங்கும் படலத்திலேயே திருப்திப்பட்டுக் கொள்ளுமோ என்னவோ, ‘நான் புருஷனுடன் வாழாமல் வந்துவிட்டேன்’ என்று காட்டவே பிறந்த வீடு வருபவள், கணவனும் பின்னாலேயே வந்துவிடுவதில் எரிச்சலடைந்து கிளம்பிச் சென்றுவிடுவாள்.
அவன் அப்படி வரவில்லை என்றால், அவள் அங்கேயே இருந்துவிடுவாள் என்பதாலேயே மாமியார் வீட்டில் தங்குவதற்கு மயூரன் சற்றும் யோசிப்பதில்லை.
பெற்றவர்கள் வீட்டிற்கு வந்தாலும், மதுமதி அங்கே சாப்பாடு, தண்ணீர் என்று எதையும் எடுத்துக் கொள்வதில்லை. வரும் போதே தண்ணீர் பாட்டில் முதற்கொண்டு வாங்கி வருவாள். சாப்பாடும் தன் பணத்தில்தான் ஆர்டர் போட்டு வாங்கி உண்பாள்.
இன்றும் வாங்கிச் சாப்பிட்டு முடித்தவள், மயூரன் வந்து கதவை தட்டிய போது வந்து திறக்கவே இல்லை.
“மது, தூங்கிட்டியா? கதவை திற!” என்று மயூரன் தட்ட, உள்ளிருந்து அவள் ஏதோ சொல்வது போலக் கேட்டது. ஆனால், அது முனகல் ஒலியாக இருக்க, மயூரனுக்குப் புரியவில்லை.
“என்ன சொல்ற மது? கதவை திறந்து விடு முதலில்!” என்று கேட்டான்.
மீண்டும் முனகல் ஒலி மட்டுமே கேட்டது.
‘தலை ரொம்ப வலிக்குது போல… அதான் எழுந்து வராம ஏதோ சொல்றா…’ எனத் தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன், இப்போது என்ன செய்வது என்று யோசித்தான்.
அதற்குள் அங்கே வந்த திலகாவும் மகளின் அறை கதவை தட்டி திறக்க சொன்னார்.
ஆனால், அவள் திறக்காமல் போக, “நான் வேற ரூமில் தங்கிக்கிறேன் அத்தை…” என்றான்.
“மன்னிச்சிருங்க மாப்பிள்ளை. இந்தப் பொண்ணு இப்படிச் செய்றாளே. இவளை என்ன செய்வது?” என்று திலகா புலம்ப,
“விடுங்கத்தை! நேரமாச்சு, நான் எங்கே தங்கிக்கலாம்னு மட்டும் சொல்லிட்டு நீங்க தூங்க போங்க…” என்றான்.
அவரும் அவனுக்கு ஒரு அறையை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு செல்ல, அங்கே சென்று படுக்கையில் விழுந்தவனுக்கு உறக்கமே வரவில்லை.
ஒரு வருடத்திற்கு முன் இதே நாளில் நடந்த திருமணமும், இன்று வரையிலான மனைவியின் செய்கையும் அவனின் மனத்தில் நிழற்படமாக ஓட, அவனால் இமைகளைக் கூட மூட முடியவில்லை.
அதிலும் இப்போது அவள் இப்படி மாறிப் போனதற்குக் காரணம் நினைவில் வர, அவனால் பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.
முதல் மூன்று மாதங்கள் அவளை அவனால் நன்றாகவே சமாளிக்க முடிந்தது. சொல்ல போனால், அவனுக்காகவும் அவள் யோசித்ததால் அது அவனுக்கு இலகுவாகவும் இருந்தது.
ஆனால் இப்போதோ… அவனை மீறி செல்ல அத்தனை வழிகளையும் தேடிக் கொண்டிருந்தாள் அவள். அதற்குக் காரணத்தை நினைத்துப் பார்த்தவனுக்குப் பெருமூச்சு வந்தது.
இவன் விக்ரம் பற்றிக் கவியுகனை விசாரித்துச் சொல்ல சொல்லிய மூன்று மாதங்களுக்குப் பிறகு, மயூரனை அழைத்த கவியுகன் தான் சேகரித்த ரிப்போர்டை அவனிடம் ஒப்படைத்து சொன்ன தகவல்கள் மயூரனை மொத்தமாகப் புரட்டிப் போட்டிருந்தது.
“நான் ஆரம்பத்திலேயே சந்தேகப்பட்டது சரிதான் மயூரன். விக்ரம் இறந்தது ஆக்சிடென்டில் இல்லை. அது ஒரு கொலை. அதைச் செய்தது உங்க மாமனார் ஜெயராமன்!” என்று கவியுகன் சொல்ல, அதிர்ந்துதான் போனான் மயூரன்.
அவனிடம் பொறுமையாக பேசி சில ஆதாரங்களை கொடுத்த கவியுகன், “இன்னும் சில விஷயங்கள் தெரியணும்னா… உங்க மாமனார்கிட்ட நீங்களே பேசிப் பாருங்க. உண்மை என்னன்னு உங்களுக்கே புரியும்…” என்று சொல்லி அனுப்பி வைத்தான்.
மயூரனும் தன் மாமனாரிடம் வந்து கேள்வி கேட்டான்.
“ஏன் மாமா… ஏன் விக்ரமை கொன்னீங்க?” என்று கேட்க, அது விழக்கூடாதவளின் காதில் விழுந்திருந்தது.
அன்று பிறந்த வீட்டில் இருந்த தனது படிப்பு சார்ந்த ஒரு சான்றிதழை எடுக்க வந்திருந்த மதுமதியின் காதில், கணவனின் கேள்வி விழ, முதலில் அதிர்ந்து திகைத்து நின்றவள், அடுத்த நொடி ஆவேசமாகச் சென்று தந்தையைப் பிடித்து உலுக்கிவிட்டாள்.
“அப்ப நான் சந்தேகப்பட்டது சரிதான் இல்லையா? நீங்க தானே என் விக்ரமை கொன்னீங்க? சொல்லுங்க…. நீங்கதானே கொன்னீங்க?” என்று ஆத்திரத்துடன் கேட்டாள்.
தன் சட்டையை பிடித்திருந்த மகளின் கையை சட்டென்று தட்டிவிட்ட ஜெயராமனின் முகமும் கோபத்தில் சிவந்து போனது.
“ஆமாம்… நான்தான்! நான்தான் அந்த ராஸ்கலை கொன்னேன். அதுக்கு என்ன இப்ப? அவன் எல்லாம் உயிரோடவே இருக்க கூடாது! அதான் கொன்னேன்…” மருமகனுக்கு உண்மை தெரிந்த அதிர்ச்சியில் இருந்த ஜெயராமன், மகளும் கேட்டுவிட்டாள் என்றதும் தன்னை மீறி சொல்லியிருந்தார்.
“மாமா…” என்றழைத்து அவரை நிதானப்படுத்த முயன்றான் மயூரன். அதுவும் மதுமதியின் பார்வையில் தப்பாகப் போனது.
“என்ன? இன்னும் என்ன மறைக்க பார்க்கிறீங்க நீங்க இரண்டு பேரும்? அப்ப நான் நினைச்சது போல நீங்க இரண்டு பேரும் கூட்டு சேர்ந்துட்டு தான் விக்ரமை கொன்னுருக்கீங்க… கொலைக்கார பாவிகளா…” என்று கதறிய மதுமதியை அதன்பின் அவர்களால் சமாதானப்படுத்தவே முடியவில்லை.
விக்ரம் இறப்பிற்கு தந்தை தான் காரணமாக இருப்பாரோ என ஏதோ ஒரு ஊகம் மட்டுமே அவள் செய்திருந்தாள். அன்று தந்தையின் வாயிலாகவே கேட்ட பிறகு, அவளின் மனநிலை சுத்தமாக மாறிப் போனது. அவளின் மாறிய அந்த மனநிலையில் இப்போது வரை மாற்றம் நிகழவில்லை.
அவளின் இந்த மனநிலையால் பாதிக்கப்படுவது அவளைச் சுற்றியுள்ளவர்கள் மட்டும் இல்லாது, அவளுமே என்பதை உணராமல் போனாள் மதுமதி.
©nandhavanamnovels.com