18 – காதலின் ரீங்காரம்

👁️ 1208 Views

அத்தியாயம் – 18

அன்று மயூரன் பைக் ஷோரூமில் இருந்து வீடு வந்தபோது வீடே இருளில் மூழ்கி இருந்தது.

படுக்கையறையிலும் வழக்கமாக எரியும் விடிவிளக்கும் எரியாமல் இருக்க, அறையில் மனைவி இல்லையோ? அவளின் தந்தை வீட்டிற்குச் சென்று விட்டாளோ என்று யோசித்தபடி அறையின் விளக்கை போட்டான்.

“ஏய்… லைட்டை ஆப் பண்ணு… கண்ணு கூசுது…” என்று படுக்கையில் படுத்திருந்த மதுமதி சொல்ல,

“இன்னும் தூங்கலையா நீ?” என்று கேட்டபடியே அதிக வெளிச்சம் உள்ள விளக்கை அணைத்துவிட்டு, கண்ணை உறுத்தாத மிதமான வெளிச்சம் வரும் விளக்கை போட்டான்.

அதையும் அணைக்கச் சொன்னாள் கட்டிலில் புரண்டு கொண்டிருந்த மதுமதி.

“இது எப்பவும் போடுற நைட் லைட் தானே… அதுவும் வேணாமா?”

“வேண்டாம். கண்ணு வலிக்குது…”

“சரி போடலை, விடு…” என்றவன், தன் கைப்பேசியை எடுத்து உயிர்ப்பித்து அந்த வெளிச்சத்தில் அலமாரி பக்கம் நகர்ந்தான்.

“ஏய்… உன்னை லைட்டை ஆப் பண்ண சொன்னேன் தானே?” என்று மதுமதியின் அதட்டும் குரல் கேட்க,

“நல்ல மரியாதை… என்னைக்குத்தான் எனக்கு மரியாதை கொடுத்து பழகுவியோ போ. நான் டிரெஸ் மாத்தணும் மது. இருட்டில் ஒன்னும் தெரியலைடி. ட்ரெஸ் மாத்திட்டு அமத்திடுறேன்…”

“புருஷனுக்கு எல்லாம் மரியாதை கொடுக்க முடியாது. லைட்டும் போட கூடாது…”

“புருஷனா?” எனத் தன் அடர் புருவங்களை உயர்த்தி வியந்துதான் கேட்டான் மயூரன்.

அவள்தான் அவனைப் புருஷன் என்று எல்லாம் சொல்லிக் கொள்வதே இல்லையே… இன்று என்ன புதிதாக என்று தோன்றினாலும் கூட, அவளே அப்படிச் சொல்லவும் அவனுக்கு உள்ளுக்குள் பூரித்துத்தான் போனது.

“நீ புருஷன் தானே? அப்புறம் என்னடா கேள்வி?” என்று மதுமதி கேட்க,

“அதுசரி… இன்னைக்கு உனக்கு என்னவோ ஆச்சு போல. நமக்குக் கல்யாணமாகி ஒன்னே கால் வருஷம் ஆனப் பிறகாவது என்னைப் புருஷனா ஏத்துக்கிட்டதுக்கு நன்றிடி பொண்டாட்டி…” என்று சிறு புன்னகையுடன் சொல்லிக் கொண்டே இருட்டில் அலமாரியை நோக்கி மெல்ல நகர்ந்தான்.

கண்கள் அந்த இருட்டுக்கு மெல்ல பழக, அலமாரியை திறந்து, எப்போதும் இருக்கும் அடுக்கில் இருந்து தன் இரவு உடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குச் சென்று மாற்றிவிட்டு வந்து படுக்கையில் விழுந்தான்.

உடனே அந்த வாசனை அவன் மூக்கை துளைத்தது.

“தலைவலி தைலம் தேய்ச்சிருக்கியா? தலைவலிக்குதா? அதான் லைட்டை போட வேண்டாம்னு சொன்னியா?” என்று கேட்டான்.

“ஆமாம்…” என்ற குரல் அவனுக்கு வெகு அருகில் கேட்டது.

அந்தக் கட்டில் நான்கு பேர் படுக்கும் அளவில் பெரியதாக இருந்தாலும் கூட அதில் படுக்கவே மதுமதி ஆர்ப்பாட்டம் செய்வாள். மயூரன் வழக்கம் போல, அதட்டி மிரட்டிதான் அதில் அவளைப் படுக்க வைப்பான். அப்படியே படுத்தாலும் கட்டிலின் நுனியில் படுத்துக் கொள்வாள். இருவருக்கும் இடையே இரண்டு ஆட்கள் படுக்கலாம்போல இடைவெளி இருக்கும்.

அவள் அந்த ஓரத்தில் படுத்திருந்தால் சத்தம் இப்படி அருகில் கேட்காது என்பதால், கையை நீட்டி பார்த்தான். அவனின் கை அவளின் மேனியை தொட்டது. அவள் இவ்வளவு அருகில் வந்து படுத்திருப்பது அவனுக்கு வியப்பாக இருந்தது.

அதிலும் அவன் கை அவளின் மீது பட்டிருக்க, அவளோ அவன் கையைத் தட்டி விடாமல், விலகி செல்லாமல், அவனைத் திட்டாமல் இருந்தது வேற வித்தியாசமாக இருந்தது.

அவளிடமிருந்து ஒருவித முனகல் ஒலி கேட்க, வலியில் அவள் தன்னை உணரவில்லையோ என்று நினைத்தவன், அவளின் புறம் திரும்பி படுத்து, “தலை ரொம்ப வலிக்குதா மது?” என்று கேட்டான்.

“ம்ம்… தலை வெடிக்கிற மாதிரி வலிக்குது. தாங்கவே முடியலை…” என்று அவள் லேசாக அழுவது போல வேறு சொல்ல, பதறி போய் அவளை நோக்கி இன்னும் நெருங்கிப் படுத்த மயூரன், கையை மெல்ல நகர்த்தி, அவளின் தலையில் வைத்தவன், “திடீர்னு ஏன் உனக்கு இப்படி வலிக்குது? மாத்திரை எதுவும் போடுறீயா?” என்று கேட்டுக் கொண்டே அவளின் தலையைப் பிடித்துவிட்டான்.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

மதுமதி இப்போதும் அவனைத் தடுக்கவோ, ‘இதுதான் சாக்குன்னு பக்கத்தில் வர்றீயா?’ என்று குதிக்கவோ இல்லை. சொல்ல போனால், அவனின் கை மீது தன் கையையும் வைத்து இன்னும் அழுத்த வைத்தாள்.

அதிலேயே அவளுக்கு வலி தாங்க முடியவில்லை போல என்று நினைத்தவன், மசாஜ் செய்வது போல நன்றாகப் பிடித்துவிட்டான்.

“ம்ம்… ம்ம்…” என்று மெல்ல முனகினாள் மதுமதி.

“ரொம்ப வலிக்குதாடி தங்கப்பொண்ணே?” என்று அவன் கேட்டதற்கும் ம்ம் என்ற அவளின் முனகல் மட்டுமே பதிலாக வந்தது.

“காய்ச்சல் மாத்திரை இருக்கு. அதை ஒன்னை போட்டு பார்க்கிறீயா?” என்று கேட்டான்.

“எனக்கு அதெல்லாம் கேட்காது. தைலம் தேய்ச்சாத்தான் கேட்கும்…” என்றாள்.

“தைலம்தான் ஏற்கெனவே தேய்ச்சிருக்கப் போலயே…”

“இன்னும் தேய்க்கணும்…” என்றவள், ஏதோ செய்தது அவளின் கை அசைவில் இருந்து அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

“தைலம் தேய்க்கிறயா? கொடு, நான் தேய்ச்சு விடுறேன்…” என்றான்.

“வேணா… நானே…”

“கொடுடி மது. நான் நல்லா அழுத்தி தேய்ச்சு விடுறேன்…” என்று அவளின் கையைப் பற்றித் தைலத்தை வாங்கினான்.

அது ஏதோ பாட்டில் போல இருந்தது.

வாசனை திரவியம் போல் மணமும் வந்தது. குப்பிப் போல் இருந்த அந்தப் பாட்டிலை திறந்த மயூரன் திரவமாக இருந்த அந்தத் தைலத்தைத் தன் ஒரு விரலில் வடிய விட்டான்.

“இதென்ன ஏதோ எண்ணை போல இருக்கு மது?” என்று கேட்டான்.

“அது அப்படித்தான் இருக்கும். நீ தேய்த்துவிடு…” என்றாள்.

அவளே கேட்கிறாளே என்று ஆச்சரியப்படவெல்லாம் அவள் அவகாசமும் கொடுக்கவில்லை. இருட்டில் அவனின் கையைத் தேடி பற்றித் தன் நெற்றியில் வைத்து தேய்க்க சொன்னாள்.

அவனும் தேய்த்து விட, “ம்ம்… ம்ம்…” என்று மீண்டும் முனகினாள்.

‘பாவம் ரொம்ப வலி போல’ என நினைத்துக் கொண்டே அவளின் நெற்றியில் தைலத்தைத் தேய்த்துவிட்டு நன்றாக மசாஜ் செய்து விடவும் ஆரம்பித்தான்.

“உனக்கு அடிக்கடி இப்படித் தலைவலி வருமா?”

“ம்ம்… இல்லை… எப்பவாவது தான் வரும். ஆனா வந்தா தலையே வெடிக்கிறது போல வலிக்கும்…” என்றாள் முனகலாக.

“இந்தத் தலைவலிக்காக டாக்டரை‌‌ பார்த்தியா?”

“இல்லை…”

“என்ன நீ… தாங்க முடியாமல் வலிக்கும்னு சொல்ற. டாக்டரை ஏன் பார்க்காம இருந்த? என்கிட்ட சொல்லியிருந்தா நான்‌ கூட்டிட்டுப் போயிருப்பேன் தானே? ஏன் சொல்ல…” என்று அவன் கடிந்து கொண்டிருக்கும் போதே அவனின் பேச்சு நின்று போனது. ,

கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த மதுமதியோ, இப்போது அவனை நோக்கி மிக மிக நெருங்கி அல்லவா வந்திருந்தாள்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com