22 – காதலின் ரீங்காரம்

👁️ 1332 Views

அத்தியாயம் – 22

“வாவ்! தங்கமா ஜொலிக்கிறடி தங்கப்பொண்ணே!”

ஏழு மாத கர்ப்பத்தைத் தாங்கி, அலங்கார தேவதையாக அமர்ந்திருந்த மனைவியைப் பூரிப்புடன் பார்த்து ரசித்தான் மயூரன்.

அவனின் முகம்தான் பூரிப்பில் மின்னியதே தவிர, அவனின் மணவாட்டியோ கடுகடுப்பை முகத்தில் பிரதிபலித்து எரிச்சலுடன் அவனைப் பார்த்தாள்.

“என்னாச்சாம் என் முயல்குட்டிக்கு? மூஞ்சி இஞ்சி தின்ன குரங்கு போல இருக்கு?” என்று கேலியாகக் கேட்டபடி கண்ணாடியின் முன் நின்றிருந்த மனைவியின் பின்னாலிருந்து அணைத்து அவளின் தோளில் நாடியை குற்றி வைத்துப் பிம்பத்தில் பிரதிபலித்தவளின் அழகு முகத்தைப் பார்த்தான் மயூரன்.

“இதோ பார்… போய்டு அந்தப் பக்கம். இருக்கிற கடுப்புக்கு…” என்று உஷ்ணத்துடன் சீறியவள், தோளை குலுக்கி அவனைத் தள்ளி விட முயன்றாள்.

அவளை விட்டு சிறிதும் அகலாதவனோ, “என்னடி தங்கப்பொண்ணே… எதுக்கு இப்ப கோபம்?” என்று பரிவுடன் கேட்டான்.

“ஏன் சொன்னால் மட்டும் உனக்குப் புரியவா போகுது?” என்று எரிச்சலுடன் கேட்டாள்.

“நீ சொல்லு… புரியுதா இல்லையா பார்ப்போம்…”

“இப்ப இதெல்லாம் தேவையா?” என்று பட்டுப்புடைவை கட்டி, தலை முடியைப் பின்னி பூ வைத்து, தங்க ஆபரணங்கள் அணிந்திருந்த தன்னைச் சுட்டிக்காட்டி கேட்டாள் மதுமதி.

“பின்ன இதெல்லாம் போடாம எப்படி வளைகாப்பு நடத்துவதாம், ம்ம்?” என்று கேட்டான்.

“வளைகாப்பே தேவையில்லைன்னு சொன்னேன். யார் என் பேச்சை கேட்டீங்க? அது மட்டுமா… என் மகளுக்கு வளைகாப்புன்னு என் அப்பன் ஒரு ஊரையே கூப்பிட்டுருக்கார். என்ன நினைச்சு அவர் இதெல்லாம் பண்ணிட்டு இருக்கார்? அதுவும் இதுக்கு அந்தச் செல்வராஜ்‌ வேற வர்றாராம். அந்த ஆள் எதுக்கு இங்கே வர்றார்? ஏன் ஒரு கொலை பண்ணி அதை மறைச்சது பத்தாதாமா?” என்று கோபமாகக் கேட்டாள் மதுமதி.

“நீ இப்ப எதுக்கு இதெல்லாம் பேசிட்டு இருக்க?” என்று மயூரன் சலிப்பாகக் கேட்க,

“என்னை வச்சு நீங்களெல்லாம் இப்படிக் கூத்துப் பண்ணும் போது எனக்குக் கோபம் கோபமா வருது. ஒருத்தனை கொன்னுட்டுக் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம உங்களால் எல்லாம் எப்படித்தான் நிம்மதியா இருக்க முடியுது?”

“என்னடி என்னையும் லிஸ்டில் சேர்த்துட்ட? எனக்கும் விக்ரம் விஷயத்திலும் எந்தச் சம்பந்தமும் இல்லைன்னு நான் நிறைய முறை உனக்குச் சொல்லிட்டேன். அப்படி இருந்தும் ஒவ்வொரு முறையும் ஆரம்பிக்கிற…” என்று மயூரனும் எரிச்சல்பட்டான்.

“அன்னைக்கு நீ தானே விக்ரமை நீங்கதானே கொன்னீங்கன்னு என் அப்பன்கிட்ட கேட்டுட்டு இருந்த. அது எப்படி உனக்குத் தெரியும்? அப்ப நீயும் உடந்தை தானே?”

“அம்மாடி! ஆத்தாடி ஆத்தா! திரும்ப முதலிலிருந்து ஆரம்பிக்கிறாளே. முடிஞ்சு போனதை பத்தி பேசாம இன்னைக்கு நாளை மட்டும் எஞ்சாய் செய்டி தங்கப் பொண்ணே. இன்னைக்கு அலங்காரத்தில் நீ எவ்வளவு அழகா இருக்கத் தெரியுமா? அதுவும் ரொம்ப நாளைக்குப் பிறகு நான் கட்டிய தாலியோட உன்னைப் பார்க்கும் போதே அப்படியே அள்ளிக்கணும் போல இருக்கடி…” என்றான் ரசனையுடன்.

அதற்கும் எரிச்சலுடன் முகத்தைச் சுளித்தாள் மதுமதி.

கடந்து வந்த மாதங்களில் அவளின் மனம் அமைதியடைவதற்குப் பதில் இன்னும் தான் உக்கிரமாக மாறிக் கொண்டிருந்தாள் மதுமதி.

ஒரு உயிரை கொல்லக் கூடாது என்று உருவான குழந்தையை அழிக்க நினைக்கவில்லை என்றாலும், வயிறு வளர, வளர தன்னால் ஒருவனின் உயிர் சென்றுவிட்டதே… அதற்குக் காரணமான தந்தையையும், அதை மறைக்க உதவி செய்த செல்வராஜையும், எல்லாம் தெரிந்தும் அமைதியாக இருந்த கணவனையும் அவளால் ஒன்றும் செய்ய முடியாமல் போனதே என்ற கோபமும் அவளுள் வளர்ந்து கொண்டுதான் இருந்தது.

அதிலும் அப்படி அவர்களை எதையும் செய்ய முடியாமல் போனதற்கு மயூரனின் குழந்தையைத் தான் சுமந்து கொண்டிருப்பதும் காரணம் என்ற எண்ணம் அவளுள் வலுவாக இடம் பெற, அதனால் இன்னும்தான் மனவுளைச்சலுக்கு ஆளானாள் மதுமதி. அதன் வெளிப்பாடு அவ்வப்போது அவளிடமிருந்து வெளிப்படும்.

அதிலும் இன்று தனக்கு வளைக்காப்பு வேண்டாம் என்று சொன்னதை யாரும் பொருட்படுத்தாமல் ஏற்பாடு செய்த கோபமும் சேர்ந்து கொள்ள, அவளின் மனம் உஷ்ணமாய்த் தகித்துக் கொண்டிருந்தது.

அன்று காலையிலேயே மகளுக்கு அலங்காரம் செய்ய வந்துவிட்ட திலகாவோ மகள் கழுத்தில் தாலி இல்லாததைப் பார்த்து, “இன்னைக்காவது அந்தத் தாலியை எடுத்து போடுடி…” என்று மகளைத் திட்டியிருந்தார்.

அவள் கேட்காமல் போக, மருமகனை அழைத்துச் சாமியறையின் முன் இருவரையும் நிற்க வைத்து, மீண்டும் மகளின் கழுத்தில் தாலியை கட்ட வைத்திருந்தார் திலகா.‌

அந்தக் கோபம் வேறு அவளுக்கு உச்சி வரை ஏறியிருந்தது.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

அதிலும் வளைகாப்பு நிகழ்வை அவளின் தந்தை தடபுடலாக நடத்த, தான் விரும்பியவனைக் கொன்று, தந்தை பார்த்த மாப்பிள்ளைக்குத் தன்னைக் கட்டி வைத்து, இப்பொழுது அவர் நினைத்ததைச் சாதித்துக் கொண்டார் என்ற ஆற்றாமை அவளை வெடிக்க வைத்திருந்தது. அதனால் அன்று மீண்டும் பழையதை எல்லாம் கிளறி பார்த்துத் தகிப்பின் உச்சியில் இருந்தாள் மதுமதி.

அதனால் அன்றும் கணவன் சீண்டலாகப் பேசவும் வெடித்துவிட்டாள்.

தாலியுடன் இருந்த மனைவியைப்‌ பார்த்து அவள் அழகாக இருப்பதாகச் சொல்லி சிலாகித்து, “என்ன சிரிப்பு மட்டும் தான் மிஸ்ஸிங். சிரிச்சா இன்னும் அழகா இருப்ப. கொஞ்சம் சிரியேன்…” என்றான் கெஞ்சலாக.

“என் சிரிப்பை தான் மொத்தமா பறிச்சிட்டீங்களே… அப்புறம் என்ன சிரியேன். போயிடுங்க அந்தப் பக்கம். எனக்கு வரும் ஆத்திரத்துக்கு அப்படியே உங்க கழுத்தை நெறுச்சுடுவேன்…” என்று மதுமதி பல்லை கடித்துச் சொல்ல,

“சரி, அதையாவது செய்! அப்படியாவது உன் கை என் மேல் படட்டும்…” என்றான் ஆடவன்.

தன்னையும் மீறி எப்படியோ தாம்பத்தியம் நிகழ்ந்துவிட்டது இனி அப்படி நடந்து விடக் கூடாது என்று அவள் மிகக் கவனமாக அல்லவா இருந்தாள். அவன்தான் அவளைத் தொட்டு பேசுவானே தவிர, அவள் தவறியும் அவனைத் தொடுவதில்லை. அந்த ஏக்கத்தை அப்படியே பிரதிபலித்தான் மயூரன்.

“அப்படிக் கூட என் கை உங்க மேல் படாது. ரொம்பக் கனவு காணாதீங்க. உங்க இஷ்டத்துக்கு எல்லாம் நடக்குதுன்னு தானே நீங்களும் உங்க மாமியார், மாமனார் கூடச் சேர்ந்து ஆடிட்டு இருக்கீங்க? உங்க ஆட்டம் எல்லாம் எத்தனை நாளைக்கு? என்‌ வாழ்க்கையை, நான் விரும்பியவரை அழிச்ச உங்களை எல்லாம் சும்மா விடமாட்டேன். உங்களுக்கு எல்லாம் ஒரு பாடம் கத்துக்கொடுக்கிறேனா இல்லையான்னு பாருங்க…” என்று மதுமதி ஆத்திரத்துடன் சொல்ல,

“என்ன பாடம் கத்துக் கொடுக்கப் போற செல்லம்? காதல் பாடமா? எனக்குச் சொல்லிக் கொடேன். யாரோ வீணா போனவனுக்கு‌ கொடுத்த காதலை எனக்குக் கொஞ்சம் கொடுத்துப் பாரேன். நீ‌ என்னை வெறுத்து ஒதுக்கும்‌ போதே நான் உன் மேல் பித்துப்‌ பிடிச்சுப்‌ போய்ச் சுத்துறேன். நீ மட்டும் என்னை‌க் கொஞ்சமே‌ கொஞ்சம் காதலிக்க ஆரம்பிச்சிட்டால், மாமா உன்‌ காலையே நம்ம வீட்டு பெப்பி நாய் குட்டி‌ மாதிரி சுத்தி‌ வருவேன்டி தங்கப் பொண்ணு…” என்றான் சற்றும் அலட்டிக் கொள்ளாமல்.

“காதலா? ச்சீ, உன்னையா? என் காதல் என் விக்ரமுக்கு மட்டும்தான். நீங்க எல்லாம் சேர்ந்து‌ அவனைக் கொன்னாலும் அவன் என் மனசில் இன்னும் வாழ்ந்துட்டு தான் இருக்கான். அவன் உடலைத்தான் உங்களால் அழிக்க முடியும். என் மனசில் வாழும் விக்ரமை உங்களால் அழிக்கவே முடியாது. நான் வாழும் காலம் முழுவதும் என் விக்ரமும் வாழ்வான்…” என்று மதுமதி சூடாகச் சொல்ல,

“அடடே! என்னே ஒரு‌ காதல்! தெய்வீக காதல்! ஆனால், பார்! உன் காதலுக்கு அவன் கொஞ்சம் கூடத் தகுதியே இல்லாதவன். அதை நானும், உன் அப்பாவும் உனக்குப் பலமுறை சொல்லிட்டோம். ஆனால், நீ புரிஞ்சிக்காம இன்னும் முட்டாளா இருக்கயே… உன்னைப்‌ பார்த்தால் எனக்குப் பாவமா இருக்கு தங்கப் பொண்ணு. ச்சு…” என்று உச்சு கொட்டி பரிதாபப்பட்டான்.

“யாருக்கு தகுதி இல்லை? என் விக்ரமுக்கா? இப்படிச் சொல்ற உங்களுக்குத்தான் அந்தத் தகுதி கொஞ்சம் கூட இல்லை. நான் விக்ரமை‌ காதலிக்கிறேன்னு தெரிந்தும், அவனை என் அப்பாவும், நீங்களும், அந்த அரசியல்வாதியோட கையாள் செல்வராஜும் கூட்டு சேர்ந்து என் விக்ரமை கொன்னுட்டீங்க‌. நீங்க எல்லாம் ஜாதி வெறி பிடிச்ச‌ மிருகங்கள். உங்களுக்கு எல்லாம் காதலை பத்தி என்னடா‌ தெரியும்? ஜாதி வெறிபிடிச்ச நாய்ங்களா…. த்தூ…” என்று குரலை உயர்த்தி மதுமதி ஆவேசமாகக் கத்த,

“ஐயோ! தங்கப் பொண்ணு… எதுக்கு இப்படி மூச்சை பிடிச்சிட்டு கத்துற? சவுண்டை குறை…” என மென்மையாகக் கடிந்து கொண்டான்.

“என்னைப்‌ பார்த்தால் உங்களுக்குக் கேலியா இருக்கா? நீங்க எல்லாம் மனுஷன் தானா? நான் விக்ரமை காதலிப்பது உங்களுக்குத் தெரியும் தானே? அப்புறமும் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் ஏன் என்னை‌ கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? எங்கப்பா என்னை உங்களுக்கு விக்க எவ்வளவுக்கு விலை‌ பேசினார்?” என்று மதுமதி கேட்க,

“அப்படியே அடிச்சேனா தெரியும்… என்னடி பேசிட்டு இருக்க? முட்டாள்! வடிகட்டின‌ முட்டாள்! உன்னை எல்லாம் திருத்தவே‌ முடியாதுடி. நமக்குக் கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் ஆகுது. இன்னும் பழசையே பிடிச்சு தொங்கிட்டு இருக்க. உனக்கு எத்தனை முறை தான் நானும் பொறுமையா எடுத்துச் சொல்வது? அப்படியும் திரும்ப முதலிலிருந்து ஆரம்பிச்சா என்னடி அர்த்தம்?

அதுவும் அந்த‌ விக்ரம் உன்கிட்ட‌ நல்லவன் வேஷம் போட்டு ஏமாத்தியது‌ கூடத் தெரியாமல் முட்டாளா இருந்துட்டு, இன்னும் அப்படியே இருப்பேன்னு சொல்ற வடிகட்டின முட்டாள். நாங்க சொல்வதை நீ எந்தக் காலத்திலும் நம்ப மாட்டினா… நஷ்டம் உனக்குத்தான்டி.‌ என்னை நம்பலைனா கூட‌ போகுது. உன் அப்பாவை‌ நம்புடி‌‌. பிறந்ததிலிருந்து அவரைப் பார்த்து வளர்ந்தவ‌ தானே நீ! அவர் உனக்கு நல்லதுதான் நினைப்பார்னு ஏன்டி உனக்குத் தோன மாட்டிங்குது?” என்று அவன் ஆதங்கமாகக் கேட்க,

“அவர் எனக்கு நல்லது நினைச்ச லட்சணத்தைத் தான் நான் பார்த்தேனே. அவரை நான் நம்பியதால்தான் நான் காதலிச்ச விஷயத்தை அவர்கிட்ட சொன்னேன். ஆனா அவர் கொஞ்சமாவா ஆடினார்?

அதைவிட என் விக்ரமை கொன்ன மனுஷனையா நம்பச் சொல்றீங்க? அதோட விட்டாரா அந்த மனுஷன்… நான் வேண்டாம் வேண்டாம்னு சொல்ல சொல்ல உங்களுக்கு என்னைக் கட்டி வச்சார். அதனால் தானே நீங்க அவருக்கு ஜால்ரா அடிச்சிட்டு இருக்கீங்க. உங்களுக்குத்தான் அவரை‌ தலையில் தூக்கி வச்சு ஆட வேண்டிய அவசியம் இருக்கு. எனக்கு அதெல்லாம் இல்லை…” என்று ஆத்திரத்துடன் கத்திய மதுமதி அதற்கு மேல் அங்கே நிற்காமல் விறுவிறுவென்று அறையை விட்டு வெளியே சென்றாள்.

வெளியே செல்வராஜின் மகள் ஓவியா நின்றிருந்தாள்.

செல்வராஜின் மகள் என்ற ஒரு தகுதியே ஓவியாவின் மீது மதுமதிக்குக் கோபம் வர காரணமாக அமைய, அவளை ஏற‌ இறங்க பார்த்தவள், “நீ எங்க இங்கே வந்த? உன் கொலைகார அப்பனும் வந்திருக்கானா? அப்படி வந்திருந்தால் அப்படியே வெளியே ஓடிப் போயிட‌ சொல்லு. இல்லைனா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது…” என்று ஆத்திரத்துடன் வார்த்தைகளைத் துப்பிவிட்டு அவளைத் தாண்டி சென்றாள் மதுமதி.

“இன்னும் யாரை‌ கடிச்சு குதறிட்டு இருக்க நீ?” என்று கேட்டபடி அறையிலிருந்து வெளியே வந்த மயூரன், அங்கே நின்றிருந்த ஓவியாவை பார்த்து, “நீங்க செல்வராஜ் மாமா பொண்ணு தானே? வாங்க… என்ன இங்க நின்னுட்டீங்க?” என்று‌ வீட்டினராக வரவேற்றான்.

“பெரியம்மா அக்காவை கூப்பிட்டு வர சொன்னாங்க அதான் அக்காவை‌ கூப்பிட‌ வந்தேன்…” என்று ஓவியா சொல்ல,

“மது உங்ககிட்டதான் கோபமா கத்திட்டு‌ போனாளா? அவளுக்காக நான் ஸாரி கேட்டுக்கிறேன்ங்க…” என்றான் தன்மையாக.‌

“அக்கா தானே… விடுங்க.‌..‌” என்று சொல்லிவிட்டு சென்ற ஓவியாவின் கண்கள் கலங்கியிருந்தன.

அதை அவனுக்குக் காட்டாமல் மறைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com