👁️ 1332 Views
மறுநாள் காலையில் மயூரன் தனது பைக் ஷோரூமுக்கு சென்ற சிறிது நேரத்திலேயே அவனை யாரோ பார்க்க வந்திருப்பதாக ஒரு ஊழியர் வந்து சொல்ல, அனுமதி கொடுத்தான் மயூரன்.
“ஹாய், நான் யுகேந்திரன்…” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபடி வந்தவனை யோசனையுடன் வரவேற்றான் மயூரன்.
சில நேரம் உயர்ரகப் பைக் வாங்க, அதன் சலுகை விலை பேச என்று மயூரனை யாராவது தனியாகச் சந்தித்துப் பேச வருவதுண்டு.
வந்தவனை அப்படி நினைத்துதான் வரவேற்றான் மயூரன்.
“நோ… நோ… நான் பைக் வாங்க வரலை. பர்ஷனலா உங்களைப் பார்க்க வந்தேன் மிஸ்டர் மயூரன்…” என்று யுகேந்திரன் சொல்ல, அடர் புருவங்கள் சுருங்க யோசனையுடன் பார்த்தான் மயூரன்.
“பர்ஷனலாகவா? நீங்க யாருன்னு கூட எனக்குத் தெரியாது. என்கிட்ட பர்ஷனலா பேச என்ன இருக்கு?” என்று கவனத்துடன் கேட்டான் மயூரன்.
“ஆனால், நீங்க யாருன்னு எனக்கு நல்லாவே தெரியுமே! உங்களை மட்டும் இல்லை, உங்க மனைவி மதுமதி பற்றி, அவங்க இப்ப செவன்த் மன்த் பிரக்ணன்ட். நேத்து தான் அவங்களுக்கு வளைகாப்பு நடந்தது. இப்ப அம்மா வீட்டில் இருக்காங்க. அவங்க அப்பா ஜெயராமன், அம்மா திலகா…” என்று யுகேந்திரன் சொல்லிக் கொண்டே போக மயூரனின் கண்கள் கூர்மை பெற்றன.
யார் இவன்? தங்கள் குடும்பத்தை பற்றி அறிந்தவன்? என்ற குழப்பமும் சிந்தனையும் மயூரனுக்கு வந்தது.
“இது மட்டும் இல்லை, இன்னும் கூடத் தெரியும். உங்க மனைவி மதுமதி விக்ரம்னு ஒருத்தனை லவ் பண்ணினாங்க. அவனை அடிச்சு தூக்கி பரலோகம் அனுப்பிட்டு, நீங்க மதுமதியை அபேஸ் பண்ணிட்டீங்க…” என்று அந்த யுகேந்திரன் முடிக்கும்முன், விக்ரம் பற்றி அறிந்தவன் என்றால் ஒருவேளை அவன் சம்பந்தமான ஆளோ என்று சந்தேகம் கொண்டு, வேறு எதுவும் யோசிக்காமல் ஆவேசமாக எழுந்து வந்த மயூரன், அவனின் சட்டையைப் பிடித்திருந்தான்.
“அட! நீங்க ஜாலி டைப்னு ஓவியா சொன்னாள். நீங்க என்ன என்னை விடச் சூடான டைப்பா இருக்கீங்க? கூல் பாஸ்…” என்று அவனைத் தடுத்து நிறுத்தியபடி யுகேந்திரன் சொல்ல, ஓவியாவின் பெயரை கேட்டதும் நெரித்த புருவங்களுடன் நிதானத்துக்கு வந்த மயூரன், வந்தவனை யார் எனத் தீர விசாரித்தான்.
தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட யுகேந்திரன், தானும் ஓவியாவும் காதலிப்பதாகவும், மதுமதி ஓவியாவின் தந்தை செல்வராஜும் விக்ரம் இறப்புக்கு காரணம் என்று சொன்னதால், தந்தையால் தன் உயிருக்கும் ஆபத்து வருமோ எனப் பயந்து அவள் தன்னைப் பிரிய முடிவெடுத்ததும், அதனால் அவர்களுக்குள் நேர்ந்த பிரிவையும் சொன்னான் யுகேந்திரன்.
அவன் சொன்னதைக் கேட்டு மலைத்துப் போனான் மயூரன். மதுமதி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் இருந்த போது அவளைப் பார்க்க வந்த ஓவியாவிடம், விக்ரம் பற்றிச் சொல்லி அவனை அடித்து விரட்ட தந்தைக்கு உதவி செய்தது செல்வராஜ் தான் என்று மதுமதி கத்திய போதுதானே மயூரனுக்கே உண்மை தெரிய வந்தது.
அவன் இந்தப் பக்கம் மதுமதியோடு வாழ்க்கையில் போராடிய அதே நேரத்தில் அந்தப் பக்கம் மதுமதி சொன்னதைக் கேட்டு ஓவியா அவளின் வாழ்க்கையில் சிக்கலை இழுத்து வைத்திருக்கிறாளே என நினைத்து வருந்தினான் மயூரன்.
“அக்காவும் தங்கையும் தவறா புரிஞ்சிக்கிறதில் மட்டும் ஒற்றுமையா இருக்காங்க…” என்று வேதனையுடன் முணுமுணுத்துக் கொண்டான் மயூரன்.
“அப்போ உங்க வொய்ப் சொன்னது தவறான செய்தியா மயூரன்?” என்று கவனித்துவிட்டுக் கூர்மையாகக் கேட்டான் யுகேந்திரன்.
அதில் சமாளித்துக் கொண்ட மயூரன், “என் வொய்ப் தான் கோபத்தில் ஏதோ சொன்னாள்னா ஓவியா தீர விசாரிச்சிருக்க வேணாமா யுகேந்திரன்?” என்று கேட்டான்.
“உங்க வொய்போட பிரண்ட் கிட்டயும் ஓவியா விசாரிச்சுருக்கா. அவங்களும் அதையே சொல்லியிருக்காங்க. இரண்டு வருஷம் முன்ன உங்க வொய்ப் கோபத்தில் சொன்னாங்க, ஓகே… ஆனா நேத்து உங்க வொய்ப் வளைகாப்புக்கு வந்த இடத்திலும் ஓவியாகிட்ட உன் கொலைகார அப்பன்னு சொல்லியிருக்காங்க. இதுக்கென்ன அர்த்தம்?” என்று யுகேந்திரன் கேட்க,
மனைவி நேற்று இருந்த மனநிலையில் எதையும் யோசித்து நிதானமாகப் பேசவில்லை என்பதை அவனுக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பது என்று மயூரனுக்குப் புரியவில்லை.
“இப்ப நீங்க என்கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கிறீங்க யுகேந்திரன்?” என்று மயூரன் யோசனையுடன் கேட்க,
“எனக்கு உண்மை தெரிந்தாகணும் மயூரன். உங்க மனைவியை நான் இதுவரை பார்த்தது கூடக் கிடையாது. ஆனால், அவங்களால் என்னோட ஓவியாவை மொத்த இழக்க இருந்தேன். எப்படியோ போராடி இப்ப இரண்டு வருஷம் பிறகு அவளைச் சமாதானம் செய்திருக்கேன்.
ஆனாலும் அவளுக்கு இன்னும் அவள் அப்பா பற்றிக் கவலை இருக்கு. அவர் உண்மையிலேயே ஒருத்தனை கொன்னாரா இல்லையான்னு தெரியாம குழம்பி போயிருக்கா. எங்க குழப்பத்துக்கு எல்லாம் தெளிவு வேணும் மயூரன். உங்களுக்கு விக்ரம் பற்றி ஏதோ தெரிந்திருக்கு. அப்ப அவனைக் கொன்னது யார்? ஓவியாவோட அப்பாவும் இதில் சம்பந்தப்பட்டிருக்காரா?” என்று கேட்டான் யுகேந்திரன்.
அவன் என்னதான் ஓவியாவை காதலிப்பவனாக இருந்தாலும், இப்படித் திடீரென வந்து கேட்கும் போது எப்படிச் சொல்வது என்று நினைத்த மயூரன் அவனிடம் எதுவும் சொல்ல மறுத்துவிட்டான்.
“என்ன மயூரன் இது? உங்க வாழ்க்கையோட சம்பந்தமே இல்லாத எங்க வாழ்க்கையும் உங்க மனைவியால் பாதிக்கப்பட்டிருக்கு. அப்ப நீங்க உண்மையைச் சொல்லித்தான் ஆகணும்…” என்று வலியுறுத்தினான் யுகேந்திரன்.
ஆனால், விக்ரம் பற்றிச் சொன்னால் தன் மனைவியின் விஷயங்களையும் சொல்ல வேண்டுமே என்று யோசித்த மயூரன், உண்மையைச் சொல்ல மறுத்தான்.
“நான் இவ்வளவு சொல்லியும் நீங்க இப்படிச் சொன்னால் எப்படி மயூரன்?” என்று யுகேந்திரன் ஆதங்கமாகக் கேட்க,
“என் மனைவியோட பர்ஷனலை பற்றிப் பேச எனக்கு விரும்பமில்லையே மிஸ்டர் யுகேந்திரன்…” என்று கையை விரித்தான் மயூரன்.
ஆனால், யுகேந்திரன் விடவில்லை. “உங்க பர்ஷனலை தவிர்த்து மீதி எங்களுக்குத் தெரிய வேண்டியதை மட்டும் சொல்லுங்க…” என்று தொடர்ந்து கேட்டான்.
அப்படியே என்றாலும் அன்று தான் பார்த்த ஒருவனிடம் எதையும் சொல்ல மயூரன் விரும்பவில்லை. அதிலும் மனைவியின் அந்தரங்க விஷயமும் அடங்கியிருக்க, ஒன்றை சொல்ல ஆரம்பித்தால், ஒன்றை தொட்டு ஒன்று அனைத்தும் பிணைந்திருக்கும் நிலையில் அவ்விஷயத்தைப் பேச விருப்பமற்று மயூரன் உறுதியாக மறுப்பு தெரிவித்து அவனைக் கிளம்பச் சொன்னான்.
யுகேந்திரன் பிடிவாதம் பிடிக்க, மயூரனும் தன் பிடிவாதத்தில் உறுதியாக இருந்தான்.
அதனால், வேறு வழியில்லாமல் அப்போது கிளம்பிவிட்டாலும் யுகேந்திரன் அத்தோடு சும்மா விடவில்லை. அடுத்தடுத்த நாள்களும் மயூரனை காண வந்தான். இதென்ன பெரிய தலைவலியாக இருக்கிறது என்று மயூரன் அலுத்துக் கொண்டிருந்த நிலையில், இன்னொரு நாள் யுகேந்திரனுடன் ஓவியாவும் வந்தாள்.
அவளும் அவளின் தந்தையைப் பற்றி மதுமதி சொன்னது உண்மையா என்று அறிய கண்ணீருடன் கெஞ்சிக் கேட்க, தன் மனைவியால் அவள் விட்ட கண்ணீர் மயூரனை அசைத்துப் பார்த்தது.
அதனால் அவளின் தந்தை சார்ந்த விஷயத்தை மட்டும் சொல்ல முடிவெடுத்த மயூரன், அவர்களைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பேசினான்.
மதுமதிக்கு தன் பெற்றவரின் முன் ஒரே வீட்டில் இருக்கவே முடியவில்லை. அதிலும் அவள் வயிற்றைத் தள்ளிக் கொண்டு நடக்கும் போது ஜெயராமன் பரிவும் பாசமுமாகப் பார்த்து வைக்க, அது அவளின் கோபத்தை அதிகரித்ததே தவிர நிம்மதியையோ அமைதியோ அவளுக்குத் தரவில்லை.
இரண்டு மூன்று நாள்களில் வந்து அழைத்துக் கொள்வதாகச் சொன்ன மயூரனும் வராமல் போக, அன்று தானே கணவனின் வீட்டிற்குக் கிளம்பிவிட்டாள்.
மனைவி வந்து கொண்டிருப்பதை அறியாமல், யுகேந்திரன், ஓவியாவிடம் பேசிக் கொண்டிருந்தான் மயூரன்.
விக்ரம் பற்றிய உண்மைகள் தான் அறிந்ததை அவர்களிடம் சொன்ன மயூரன், மனைவி சம்பந்தப்பட்டதை முழுமையாகச் சொல்லாமல் நிறுத்த, விக்ரம் எப்படிப்பட்டவன் என்பதை அவன் சொன்னதை வைத்தே யுகேந்திரன் ஊகித்துவிட்டான்.
“தன் பொண்ணோட ‘அந்த’ மாதிரி வீடியோவை பார்த்தபிறகும் எப்படி ஒரு அப்பாவால் பொறுமையா இருக்க முடியும்? அதான் அவரே விக்ரமை கொன்னுட்டார்னு நினைக்கிறேன்…” என்று யுகேந்திரன் தன் ஊகத்தை அருகில் இருந்த ஓவியாவிடம் சொல்லிக் கொண்டிருந்ததை வீட்டின் வெளியே நின்றிருந்த மதுமதி கேட்டுவிட்டிருந்தாள்.
யுகேந்திரன், ஓவியா பகுதி சுருக்கமாத்தான் சொல்லியிருக்கேன் மக்களே. இவங்க கதை (உதிரா நேசம்) படிக்காதவங்களுக்கும் புரியுற போலத்தான் சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன். மயூரன், மதுமதி முன் பாதியில் பேசும் சீன் அந்தக் கதையில் வந்ததுதான். இந்த எபிக்கு ஏற்ப கொஞ்சம் எடிட் செய்திருக்கேன்.
என்னடா மது திரும்ப அப்படியே பேசுறாள்னு தோனலாம். ஆனால், அவள் மனநிலை அப்படித்தான் இருக்கு. அதோட அந்தக் கதையில் சொன்னதை இந்தக் கதையில் சரி செய்யணும் இல்லையா…. சோ… இதில் கொஞ்சம் ஆட் பண்ணிருக்கேன்.
இதுக்கு மேல யுகேந்திரன், ஓவியா பகுதி எழுதினா அந்தக் கதையில் வந்த மூனு எபிசோடையும் ரிப்பீட் பண்ற போல இருக்கும். அப்படி ரிப்பீட் பண்ண விருப்பம் இல்லாம சுருக்கமா சொல்லிட்டேன். படிக்காதவங்களுக்கு புரியுதா மக்களே? குழப்பம் எதுவும் இருந்தால் சொல்லுங்க. அடுத்த எபியில் கிளியர் பண்ணிடுறேன்.
©nandhavanamnovels.com