👁️ 1617 Views
அத்தியாயம் – 25
அன்று யுகேந்திரன், ஓவியாவிற்கு நிச்சயதார்த்தம் நடப்பதாக இருந்தது.
ஜெயராமனை போலவே ஜாதிப்பற்று மிக்கச் செல்வராஜூவின் மகள் ஓவியா வேற்று ஜாதிக்காரனை காதலிப்பதாக வந்து சொன்ன போது, முதலில் ஏற்றுக்கொள்ளத் தயங்கவே செய்தார் அவர்.
ஆனால், மகள் தன் காதலில் உறுதியாக இருக்க, அதோடு காதலித்துக் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மதுமதியையும் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு, ஜாதிப்பற்றைத் தூக்கி பிடித்துக் கொண்டு முன் போல் பிடிவாதம் பிடிக்க முடியவில்லை.
காதலனையும் மறக்க முடியாமல், கணவனுடனும் ஒன்றி வாழ முடியாமல் மதுமதி பட்டுக்கொண்டிருக்கும் இரண வேதனையைத் தன் மகளுக்கும் கொடுக்க அவர் தயாராக இல்லை.
ஆனாலும், விக்ரம் போல் ஒருவேளை மகள் காதலித்தவனும் தவறானவனாக இருந்தால் என்ன செய்வது என்று நினைத்தவர், யுகேந்திரனை பற்றி நுணுக்கமாகத் தீர விசாரித்தார். அவனைப் பற்றி நல்லவிதமாகவே அவருக்குத் தகவல் வந்து சேர, ஜாதிப்பற்றை ஒதுக்கி வைத்துவிட்டு மகளின் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டியிருந்தார் செல்வராஜ்.
அதன்பின் அவர்களின் திருமண ஏற்பாடும் விரைவில் நடக்க, மறுநாள் திருமணம், முதல் நாள் நிச்சயம் என்று விசேஷம் இருக்க, அதற்குக் கிளம்புவதற்கு முன் மனைவியைப் பார்க்க மாமியாரின் வீட்டிற்கு வந்தான் மயூரன்.
அன்று மதுமதி இனி தன்னைப் பார்க்க வர வேண்டாம் என்று சொன்ன பிறகும், அவன் தன் வழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அதே நேரம் அவளின் பேச்சிற்கு அவன் எந்த எதிர்வினையும் கூடக் காட்டவில்லை.
அவள் பேச பேச அவளின் முகத்தையே அழுத்தமாகப் பார்த்திருந்த மயூரன், அவளிடம் எதுவும் பேசாமல் விருட்டென்று கிளம்பிச் சென்றுவிட்டான்.
மறுநாளே வழக்கம் போல் மனைவியைப் பார்க்க வந்து நின்றான்.
அவனைப் பார்த்து தயக்கத்துடன் மதுமதி முகத்தைச் சுருக்க, அதற்காக எல்லாம் அவன் அலட்டிக் கொள்ளவே இல்லை.
ஓய்வாகப் படுத்திருக்கும் மனைவியின் வயிற்றைப் பார்த்து தன் மகவுடன் பேசுவான். அவனின் பேச்சை கேட்டு பிள்ளை துள்ளும் போது தொட்டு உணர்ந்து உவகைக் கொள்வான்.
“ஹெல்தியா பத்திரமா இரு பேபி. அம்மாவையும் கவனமா பார்த்துக்கோ. அப்பா நாளைக்கு வர்றேன்…” என்று பிள்ளையிடம் மட்டும் பேசிவிட்டுக் கிளம்பிவிடுவான்.
தான் பேசியதற்குக் கணவன் எதுவும் சொல்லவில்லையே என அவன் காணாத நேரம் மதுமதி அவனின் முகத்தையே பார்ப்பாள். அவள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்திருந்தும் அவளைக் கண்டு கொள்ளாமல் பிள்ளையிடம் மட்டும் பேசிவிட்டு செல்வான்.
அப்படியே நாள்கள் தொடர்ந்து மதுமதிக்குத் தற்போது ஒன்பதாவது மாதம் ஆகியிருந்தது.
அவளுக்கு எப்போது வேண்டுமானாலும் பிரசவவலி வரலாம் என்பதால் ஓவியாவின் திருமண நிகழ்விற்குக் கூடச் செல்லாமல் மகளுடனேயே இருந்தார் திலகா.
ஜெயராமன் மட்டும் சென்றுவிட்டு வந்தார்.
மயூரன் மனைவியைப் பார்க்க வரும்போது அன்று மிகவும் சோர்வுடன் இருந்தாள் மதுமதி.
“என்னாச்சுடா குட்டி இன்னைக்கு உங்கம்மாவுக்கு? ஏன் எப்படியோ இருக்கா?” என்று பிள்ளையிடம் கேட்டான்.
பிள்ளை அவளின் வயிற்றில் முட்டி மோத, “ஷ்ஷ் ஆஆ!” என்று லேசாக முனகினாள் மதுமதி.
பட்டென்று மனைவியின் முகம் பார்த்தவன் அவளின் முகத்தில் வலி தெரிவதை கண்டு பதற்றமானான்.
“என்ன மது, வலிக்குதா?” எனக் கேட்க, மறுப்பாகத் தலையை அசைத்தவள் முகம் இப்போது இயல்பாக இருந்தது.
ஆனாலும், அவளின் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தவன், “அப்புறம் ஏன் உன் முகம் கொஞ்ச நேரத்துக்கு முன்ன எப்படியோ இருந்தது?” என்று கேட்டான்.
“அது… பேபி மூவ் ஆகும் போது ஒரு மாதிரியா… அதான்…” என முனகினாள் மதுமதி.
அதைச் சொல்ல கூடத் தயங்குபவளை என்ன செய்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை.
நடந்தது தெரிந்த பின் அவளின் கோபத்தோடு அவளின் இயல்பே தொலைந்து போயிருந்தது.
அவள் பழையபடி கோபம் கொண்டிருந்தால் கூட மகிழ்ந்திருப்பான்.
அவளின் இந்தத் தயக்கம், தடுமாற்றம், திணறல் எதுவும் அவனுக்குப் பிடிக்கவில்லை.
அதிலும் அவனின் முகம் பார்க்க கூடத் தயங்கும் அந்தத் தயக்கம், அவளின் குற்றவுணர்வை அப்பட்டமாக வெளிச்சமிட்டு காட்ட, ‘அது வேண்டாம்’ என்று சொல்ல நினைத்தாலும் அவனால் சொல்ல முடியவில்லை.
அதைச் சொன்னால், அவள் இப்படி இருக்கும் காரணத்தையும் பேச வேண்டும் என்பதால், அதைத் தள்ளிப் போட்டான்.
வேறு எதுவும் பேசாமல், அவன் கிளம்ப, “ஒரு… ஒரு நிமிஷம்…” என்று அவனை நிறுத்தினாள் மதுமதி.
“என்ன மது?” என்று அவன் நின்று கேட்க,
“அது… அது… ஓவியாகிட்ட நான் ஸாரி கேட்டதா சொல்லிடுங்க. நான்… நான்… தப்பா இருந்துகிட்டு, அவளோட அப்பாவை போய்க் குறை சொல்லி… ம்ப்ச்… என்னால் அவளும், அவள் லவ்வரும் கூடக் கஷ்டப்பட்டுட்டாங்க. நான் செய்த தப்புகளோட எண்ணிக்கை கூடிட்டே போகுது. அவளை நேரில் பார்த்தே நான் மன்னிப்பு கேட்டிருக்கணும். ஆனா…” என்றவள் ஏதோ யோசித்தது போல் நிறுத்தி பின் தொடர்ந்தாள்.
“நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் இனியும் அமையுமான்னு தெரியலை. அதான் இப்ப… ப்ளீஸ்… நான் ஸாரி கேட்டதை மட்டும் அவளிடம் சொல்லிடுங்க…” என்றாள் கெஞ்சலாக முகத்தை வைத்து.
அவளின் முகத்தையே தீர்க்கமாகப் பார்த்தவன், “கண்டிப்பா சொல்ல மாட்டேன்…” என்றான் அழுத்தமாக.
அவள் அதிர்ந்து அவனின் கண்ணைப் பார்க்க, “ஓவியாவை நீ ஹர்ட் பண்ணிட்டதா நினைச்சா… நீயே நேரடியாகத்தான் ஓவியாவை பேஸ் பண்ணியாகணும். அதைவிட்டு, இந்தத் தூது விடுற வேலை எல்லாம் வேண்டாம். உன்னோட தூதை நான் சொல்லவும் மாட்டேன்…” என்று தீர்மானமாகச் சொன்னவன் விருட்டென்று அந்த அறையை விட்டு வெளியேறினான்.
வெளியே இருந்த மாமியாரிடம் வந்தவன், “மது ரொம்ப டயர்டா தெரியுறா அத்தை. அவளைக் கொஞ்சம் கவனமா கவனிச்சுக்கோங்க. நான் ஓவியாவோட எங்கேஜ்மெண்ட்க்கு போயிட்டு வந்துடுறேன்…” என்றான்.
“நான் பார்த்துக்கிறேன் மாப்பிள்ளை. நீங்க போயிட்டு வாங்க…” என்றார் திலகா.
அப்போது ஜெயராமன் விசேஷத்திற்குச் சென்றுவிட்டு வந்துவிட, அவரிடமும் சொன்னான் மயூரன்.
“மதுவுக்கு டெலிவரி டேட் நெருங்கிடுச்சுன்னு தான் விசேஷத்தில் ரொம்ப நேரம் இருக்காம சீக்கிரம் கிளம்பி வந்துட்டேன் மாப்பிள்ளை. நான் வீட்டில் தான் இருப்பேன். நீங்க போயிட்டு வாங்க…” எனச் சொல்லி அவனை அனுப்பி வைத்தார் ஜெயராமன்.
மாமனார் வீட்டில் இருக்கும் தைரியத்துடனே கிளம்பினான் மயூரன்.
மண்டபத்தில் மேடையில் ஜோடியாக நின்றிருந்த யுகேந்திரன் ஓவியாவை மயூரன் வாழ்த்த சென்றபோது, மதுமதி வரவில்லையா என இருவரும் விசாரித்தனர்.
“மதுவுக்கு அலைய முடியலைன்னு சொல்லிட்டாள். அதான் வரலை…” என்று மட்டும் சொல்லி வைத்தான் மயூரன்.
அவர்கள் தன்னைப் பார்த்துச் சென்ற பின் மதுமதிக்கு உண்மை எல்லாம் தெரிந்துவிட்டது என்பதை மயூரன் அவர்களிடம் சொல்லவில்லை.
மதுமதி மருத்துவமனையில் இருந்த போது கூட, அவளின் நிலையைத் தற்போது செல்வராஜிடமும் அவரின் குடும்பத்தாரிடமும் சொல்ல வேண்டாம் என மயூரன் மாமனாரிடம் சொல்லி வைத்திருந்தான்.
மதுமதியின் மூலம் தெரிந்தோ தெரியாமலோ ஓவியாவும், யுகேந்திரனும் பாதிக்கப்பட்டு மீண்டிருக்க, இப்போது அவர்கள் வந்து சென்றதாலேயே மதுமதிக்கு உண்மை தெரிந்து அவள் உடல்நிலை சீர்கெடும் நிலை வந்துவிட்டது எனத் தெரிந்தால் அவர்களுக்கும் அது மன வருத்தத்தைத் தரலாம். தன் மனைவியால் அவர்கள் துன்பப்பட்டவரை போதும். இனிமேலும் அவளால் அவர்களுக்கு ஒரு வருந்தம் வந்தது என்ற நிலை இருக்கக் கூடாது என்றே மறைத்திருந்தான்.
இப்போதும் யுகேந்திரன் ஓவியாவிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல் தன் வாழ்த்தை அவர்களுக்கு மனதார தெரிந்துவிட்டு உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
அன்று நேராக மாமனாரின் வீடுதான் சென்றான்.
முன்போல் அவன் மாமனாரின் வீட்டில் தங்குவதில்லை. தான் தங்குவதன் மூலம் மனைவியின் உடல்நிலையில் சீர்கேடு வருவதை அவன் விரும்பவில்லை. அதனால் அவளை வம்பிழுக்காமல் அவளைப் பார்த்துவிட்டு மட்டும் கிளம்பிவிடுவான்.
இன்று அவனால் அப்படிக் கிளம்ப முடியவில்லை. இன்று தெரிந்த மனைவியின் சோர்ந்த முகம் அவனை அங்கே மீண்டும் இழுத்து வந்திருந்தது.
©nandhavanamnovels.com