👁️ 1617 Views
அவனுக்குக் கதவை திறந்து விட்ட திலகா, “வாங்க மாப்பிள்ளை… விசேஷம் நல்லபடியா முடிஞ்சதா? சாப்பிட்டீங்களா?” என்று விசாரித்தபடி வரவேற்றார்.
“எல்லாம் நல்லபடியா ஆச்சு அத்தை. மது எப்படியோ இருந்ததால் இன்னைக்கு அவள் கூடவே இருக்கலாம்னு வந்தேன்…” என்றான்.
“தாராளமா இருங்க மாப்பிள்ளை. நானும் அவரும் கூட அதான் நினைச்சோம். அவள் இருக்கிற நிலையைப் பார்த்தால் எப்ப வேணுமானாலும் வலி வரலாம்னு தோனுது. அதான் உங்க மாமா மகள் பக்கத்திலேயே போய் உட்கார்ந்திருக்கார்…” என்றார் திலகா.
“சரிங்கத்தை. நான் போய்ப் பார்க்கிறேன்…” என்று சொல்லிவிட்டு, மதுமதியின் அறைக்கு வந்தான் மயூரன்.
அங்கே மதுமதி தன் தந்தையிடம் ஏதோ பேசிக் கொண்டிருப்பதைக் கண்டுவிட்டு வாசலிலேயே நின்றுவிட்டான்.
“என் மேல் அசிங்கத்தை வச்சுக்கிட்டு நான் உங்களைப் போய் ஜாதி வெறி பிடிச்சவர், கொலைகாரன்னு சொன்னது ரொம்பவே தப்புப்பா. நா…ன்… எவ்வளவு பெரிய அசிங்கத்தைப் பண்ணியிருக்கேன். ஆனா… ஆனா… அதைச் சொல்லி குத்திக் காட்டாம, நான் இத்தனை நாள் செய்த கிறுக்குத்தனத்தை எல்லாம் பொறுத்துக்கிட்டு… எனக்காக விட்டுக் கொடுத்து போயிருக்கீங்க. நீங்க… நீங்க நல்ல அப்பா தான் ப்பா. நான்தான் ஒரு நல்ல மகளா இல்லை. நீங்க சொன்ன மாதிரி, நான் உங்களுக்கு மகளா பிறக்காமலே இருந்திருக்கலாம்…” குரல் கமற சொன்னவள், “உங்களுக்கு மகளா பிறந்து தீராத வேதனையைக் கொடுத்த என்னை முடிந்தால் மன்னிச்சிடுங்கப்பா…” என்று கண்ணீருடன் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தாள்.

“என்னமா இது, எதுக்கு நீ இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க? நீ எந்தத் தப்பும் செய்யலை. உனக்கே தெரியாம சில விஷயங்கள் நடந்துருச்சு. அது புரியாம முட்டாள்தனம் பண்ணிட்டு இருக்கியேன்னு தான் அப்பா அன்னைக்குக் கோபத்தில் ஏதோ சொல்லிட்டேன். அதைப் பெருசா எடுத்துக்காதேமா. இந்த நேரத்தில் எதையாவது யோசிச்சு மனசை குழப்பிக்காதே…” என்று ஜெயராமன் சமாதானம் செய்ய,
“இல்லைப்பா… நீங்க சொன்ன மாதிரி நான் முட்டாள்தான். என்னோட முட்டாள்தனத்தால் உங்களுக்கு அவமானத்தைத் தேடி தந்துட்டேன். நீங்க என்னை நல்லாத்தான் வளர்த்தீங்க. நான்தான் வழிமாறிப் போயிட்டேன். ஆனா, என் வயித்தில் இருக்கும் இந்தப் பிள்ளையை அப்படி வழிமாறி போக விடாமல் நல்லா பார்த்துக்கோங்கப்பா…” என்று அவள் கெஞ்சலுடன் கேட்க,
“என்னடா மதுமா… ஏதேதோ பேசிட்டு இருக்க?” என்று ஜெயராமன் மகளை மென்மையாகக் கடிந்து கொள்ள, அதற்கும் ஏதோ சொல்ல போனாள் மதுமதி.
லேசாகத் தொண்டையைச் செருமிய மயூரன் தன் இருப்பைக் காட்ட, தந்தையும் மகளும் அப்போதுதான் அவனைக் கவனித்தனர்.
“வாங்க மாப்பிள்ளை…” என்று ஜெயராமன் நாற்காலியிலிருந்து எழ, “என்ன மாமா, அப்பாவும் பொண்ணும் ஏதோ தீவிர டிஸ்கஷன் போலிருக்கே?” என்று இயல்பாகக் கேட்டபடி உள்ளே வந்தான்.
“ரொம்ப நாளுக்குப் பிறகு என் பொண்ணு என் முகத்தைப் பார்த்து பேசுறாளேன்னு சந்தோஷப்பட்டா… அவள் பழசை எல்லாம் மனசில் போட்டு உருட்டிட்டு ஏதேதோ உளறிட்டு இருக்காள் மாப்பிள்ளை. தேவை இல்லாததை எல்லாம் நினைக்க வேண்டாம்னு நீங்க கொஞ்சம் அவளுக்கு எடுத்து சொல்லுங்க மாப்பிள்ளை…” என்றார் மாமனார்.
“நான் பார்த்துக்கிறேன் மாமா. நீங்க போய்ப் படுத்து தூங்குங்க…” என்று அவரை அனுப்பி வைத்தவன், கதவை அடைத்துவிட்டு வந்தான்.
அவன் தன்னை எதுவும் சொல்வானோ என்று மதுமதி பார்க்க, மயூரனோ அவளிடம் எதுவும் பேசவில்லை. அலமாரியில் இருந்த அவனின் மாற்றுடை ஒன்றை எடுத்து, அங்கேயே மாற்றிக் கொண்டவன், ஓய்வறைக்குச் சென்றுவிட்டு படுக்கைக்கு வந்து அவளின் அருகில் சற்று இடைவெளி ஒரு சாய்த்து படுத்தவன், அவளின் வயிற்றைப் பார்த்து தன் குழந்தையிடம் பேச ஆரம்பித்தான்.
“ஹாய்டா குட்டி. இன்னைக்கு அப்பா உங்க கூடவே தூங்க வந்துட்டேன். உங்களுக்கு ஹேப்பியா?” என்று பிள்ளையிடம் கேட்க, எப்போதும் உடனே அவளின் வயிற்றில் உதைத்துப் பதில் சொல்லும் பிள்ளையோ இன்று அசைவு இல்லாமல் இருந்தது.
“என்னடா குட்டி பதில் சொல்ல மாட்டிங்கிறீங்க. அப்பா வந்தது உங்களுக்குப் பிடிக்கலையா?” என்று அவன் கேட்க. சில நொடிகளுக்குப் பின் அவளின் அடி வயிற்றில் லேசான அசைவு தெரிந்தது.
“என்னடா பேபி, தூங்கிட்டு இருந்தீங்களா? அப்பாதான் எழுப்பி விட்டுட்டேனா?” என்ற கேள்விக்கும் லேசான அசைவே தெரிந்தது. யோசனையுடன் மனைவியின் வயிற்றையும், அவளின் முகத்தையும் பார்த்தான்.
அவள் கண்களை மூடி அமைதியாகப் படுத்திருக்க, மீண்டும் குழந்தையிடம் பேச ஆரம்பித்தான்.
சிறிது நேரம் பேசிவிட்டு, அவன் உறங்க ஆரம்பிக்க, அடுத்த நொடி விழிகளைத் திறந்து கணவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மதுமதி.
அதை மயூரன் உணரவே இல்லை. நள்ளிரவிற்கு மேல் ஏதோ சத்தம் கேட்பது உணர்ந்து பட்டென்று விழித்துப் பார்த்தான் மயூரன்.
கட்டிலில் அமர்ந்து, ஹ்ம்ம்… ஹ்ம்ம் என்று அழுத்தி முனகிக் கொண்டிருந்த மனைவியைக் கண்டவன், வேகமாகப் படுக்கையில் எழுந்து அமர்ந்து, “மது… என்ன? என்னாச்சு?” என்று கேட்டுக் கொண்டே அவளின் தோளில் கை வைத்து தன் பக்கம் திருப்பினான்.
கண்களிலிருந்து கண்ணீர் வெளியேறி அவளின் கழுத்து வரை இறங்கியிருக்க, முகமெல்லாம் முத்து முத்தாக வியர்வை துளிகள் துளிர்த்து நின்றிருந்தன. அவளின் கீழ் உதட்டை பற்களால் அழுந்த கடித்திருந்ததில் இரத்தமே கசிய ஆரம்பித்திருந்தது.
“மது, என்ன வலிக்குதா?” என்று மயூரன் பதறி கேட்க, மேலும் கீழும் தலையை அசைத்தாள்.
“எவ்வளவு நேரமா வலிக்குது? என்னை ஏன் எழுப்பலை நீ?” என்று பரபரப்பாகக் கேட்டுக் கொண்டே கட்டிலை விட்டு இறங்கியவன் காலில் ஈரம் உணர்ந்து குனிந்து பார்த்தான். அவளின் காலிருந்து நீர் வெளியேறி தரையைத் தொட்டிருக்க, அதைக் கண்டவன் அதிர்ந்து போனான்.
பதற்றத்தில் அவனின் உடலே கிடுகிடுவென ஆட ஆரம்பித்தது.
“ஆஆ… ஆஆ…” என்று மதுமதி வலியில் முனக, இது துரிதமாகச் செயல்படும் நேரம் என்ற உணர்ந்தவன், படபடவென்று வெளியே ஓடி மாமியார் மாமனாரை அழைத்து வந்தான்.
“மது… என்னடி வலி வந்துருச்சா? அய்யோ! என்னடி பனிக்குடம் உடைஞ்சிருச்சு போலவே… மாப்பிள்ளை சீக்கிரம் காரை எடுங்க. உடனே ஹாஸ்பிடல் போகணும்…” எனத் திலகா துரிதப்படுத்த, மயூரன் வேகமாகச் செயல்பட ஆரம்பித்தான்.
சிறிது நேரத்தில் மதுமதியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.
“என்ன இது, இவ்வளவு லேட்டா அழைச்சுட்டு வந்திருக்கீங்க? ” என்று மருத்துவமனையில் அவளைச் சேர்த்ததும், பரிசோதித்துப் பார்த்த மருத்துவர் கடிந்து கொண்டார்.
என்ன சொல்வது என்று அறியாத மயூரனின் முகம் இறுகியது. வலி வந்து ரொம்ப நேரம் ஆகியும் மனைவி தன்னை எழுப்பவில்லை என்ற கோபம் வந்தது.
அத்துணை வலியிலும் அவள் தன்னைத் தேடவில்லை என்பதிலேயே அவளின் முடிவில் எவ்வளவு உறுதியாக இருக்கிறாள் என்பதை அவனுக்குப் புரிய வைக்க, “டாக்டர், என் வொய்ப்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்…” என்றான்.
“என்ன விளையாடுறீங்களா மிஸ்டர்? அவங்க இப்ப பேசும் நிலையிலா இருக்காங்க? அவங்க பிபி லெவல் ஸ்டேபிளா இல்லை. இந்த நிலையில் நார்மல் டெலிவரி ஆவது கூடக் கிரிட்டிகல்தான். சிசேரியன் பண்ணிடலாமான்னு யோசிச்சுட்டு இருக்கோம். இப்ப நீங்க அவங்களைப் பார்க்க முடியாது…” என்று மருத்துவர் மறுக்க,
“நீங்க சொல்வதெல்லாம் புரியுது டாக்டர். நீங்க அவளுக்காகத்தான் சொல்றீங்க. நானும் அவளுக்காகத்தான் சொல்றேன். இப்ப நான் அவள்கிட்ட பேசியே ஆகணும் டாக்டர். ஒரு ஃபைவ் மினிட்ஸ் மட்டும் டைம் கொடுங்க போதும். ப்ளீஸ்…” என்று மயூரன் கெஞ்ச, சலிப்பாக அவனைப் பார்த்து தலையை அசைத்தவர் மதுமதியை பார்க்க அனுமதி கொடுத்தார்.
©nandhavanamnovels.com