👁️ 1078 Views
அவனைக் கண்கள் கலங்க திரும்பி பார்த்த மதுமதி, அவன் கொடுத்த தைரியத்தில் தொண்டையைச் செருமி கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“ஸா… ஸாரி ஓவியா…” என்றாள் திணறியபடி.
“அக்கா?”
“எல்லாத்துக்கும் ஸாரி…” என்றாள் மீண்டும்.
“என்னக்கா நீங்க? என்னாச்சு உங்களுக்கு?” என்று ஓவியா கேட்க,
“நான் செய்த முட்டாள்தனத்தால் உனக்கு எவ்வளவு சிக்கல் வந்ததுன்னு எனக்கும் தெரியும் ஓவியா. அதுக்குக் காரணமா இருந்த என்னை முடிந்தால் மன்னிச்சுடு…” என்றாள்.
என்ன பேசுவது என்று அறியாமல் திணறிய ஓவியா, “அக்கா, அதெல்லாம் ஒன்னுமில்லை, எங்க விஷயத்தில் நான்தான் யோசிக்காமல் அவசரப்பட்டுட்டேன். அது என்னோட தப்புதான். அதுக்கு நீங்க வருத்தப்பட வேண்டாம்…” என்று தன்மையாகச் சொன்னாள்.
“என்னைச் சுத்தி இருக்கிற எல்லாருமே பெருந்தன்மையோட இருக்கீங்க. நான்தான்…” என்று மதுமதி தொண்டை கமற சொல்ல,
“உங்க இடத்தில் நான் இருந்திருந்தாலும் அப்படித்தான்கா பிகேவ் பண்ணியிருப்பேன். அதில் உங்க தப்பு எதுவும் இல்லை. இப்ப நீங்க என்கிட்ட நல்லா பேசுறதே எனக்கு ரொம்பச் சந்தோஷம். ஆமா, குட்டி எப்படி இருக்காள்னு கேட்டேன். நீங்க பதிலே சொல்லலை…” என்று பேச்சை மாற்றினாள்.
“அவளும் நானும் நல்லாருக்கோம். நீ எப்படி இருக்க? உன் வீட்டுக்காரர் எப்படி இருக்கார்? நான் அவர்கிட்ட ஸாரி கேட்கணுமே…” என்றாள்.
“நாங்க நல்லாருக்கோம்கா. அதெல்லாம் தேவையில்லைக்கா…” ஓவியா மறுக்க,
“இல்லை, அவர் பக்கத்தில் இருந்தால் போனை கொடு. நான் பேசிக்கிறேன்…” எனப் பிடிவாதத்துடன் சொன்னாள் மதுமதி.
“இங்கேதான் இருக்கார்கா. பேசுங்க…” என்று யுகேந்திரனிடம் அலைபேசியைக் கொடுத்துவிட்டாள் ஓவியா.
“ஹலோ…” என்று யுகேந்திரன் சொல்ல, அவனிடம் பேச தயக்கமாக இருந்தாலும், “ஸாரிங்க…” என்றாள் மதுமதி.
“அட! அதை விடுங்க! உங்க தங்கச்சி கொஞ்சம் அவசரக்காரி. அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? அதோட, இதெல்லாம் நம்ம வாழ்க்கையில் நடக்கணும்னு இருந்திருக்கு. அதை நீங்களோ… உங்க தங்கச்சியோ நினைச்சிருந்தால் கூடத் தடுத்திருக்க முடியாதுதான். நடந்ததை விட்டுடுங்க…” என்றான் யுகேந்திரன்.
அவர்களின் பெருந்தன்மையில் கலங்கி, நெகிழ்ந்து மதுமதி உணர்ச்சிவசப்பட, “நாம எதுக்குக் கால் செய்தோமோ அந்த விஷயத்தைப் பேசு மது…” என்றான் மயூரன்.
அதில் சுதாரித்து, மகளின் பெயர் வைக்கும் நிகழ்வுக்கு அவர்கள் இருவரையும் அழைத்தாள் மதுமதி, கூடவே மயூரனும் அழைப்பு விடுத்தான். கண்டிப்பாக வந்துவிடுவதாகச் சொல்லி அழைப்பை அப்போது வைத்துவிட்டாலும், அதன் பின் மயூரனுக்குத் தனியாக யுகேந்திரனும் ஓவியாவும் அழைத்து, மதுமதியின் இந்த மாற்றத்தை குறித்து விசாரித்தனர்.
‘மதுமதியிடம் உண்மையைச் சொல்ல வேண்டிய சூழ்நிலை வந்தது. அதனால் சொல்லிவிட்டோம். இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை’ என்று மட்டும் அவர்களிடம் தெரிந்தான் மயூரன்.
எப்படி? ஏன்? எதனால்? மதுமதியின் எதிர்வினை! என எதையும் விளக்கமாகப் பகிர்ந்து கொள்ளவில்லை அவன்.
அவர்களுக்கு இவ்வளவு தெரிந்தால் போதும் என்று அதை மட்டும் சொல்லிவிட்டு அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தான் மயூரன்.
இடையில் குழந்தையைப் பார்க்க வீட்டிற்கு வந்த செல்வராஜிடம் மன்னிப்பு கேட்டாள் மதுமதி.
“விடுமா… நீயும் என் பொண்ணு போலத்தான்! பொண்ணு அப்பா மேல் உரிமையோட கோபப்படலாம்…” என்று சொல்லி அவளைச் சமாதானம் செய்துவிட்டு சென்றார் அவர்.
“போதும் மது! சும்மா எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டுட்டே இருக்காதே! நடந்ததை எல்லாம் விட்டு வெளியே வா! இனி உன்கிட்ட இருந்து பழைய பேச்சு எதுவும் வரக் கூடாது. இப்ப இருந்து நாம புதுசா வாழ்க்கையைத் துவங்குறோம். அதை மட்டும் நினை!” என்று கண்டிப்புடன் சொல்லவிட்டான் மயூரன்.
சம்மதமாகத் தலையை அசைத்தாள் மதுமதி.
“இப்படி எல்லாத்துக்கும் பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டாதேடி தங்கப் பொண்ணே! பழைய மாதிரி சுறுசுறுப்பா சூடா என்கிட்ட பேசு…” என்றான் மயூரன்.
“இப்பதான் பழைய மாதிரி இருக்காதேன்னு சொன்னீங்க?” என்று மதுமதி கேட்க,
“நான் சொன்ன பழையது வேற… இந்தப் பழையது வேற…” என்று மயூரன் மிடுக்காகச் சொல்ல,
“இல்லை, அந்த மதுமதியா நான் இருக்க வேணாம். அது நானே இல்லை! எனக்குள் புகுந்த சாத்தான் அது! அந்தச் சாத்தானை இனி எனக்குள்ள தப்பித் தவறியும் கூடக் கொண்டு வர நான் விரும்பலை. என்னை விட்டு அப்பால் போன அந்தச் சாத்தான் போனதாகவே இருக்கட்டும்…” என்று உறுதியாகச் சொன்னாள் மதுமதி.
“என்னடி பொசுக்குன்னு நீ இவ்வளவு நல்லவளா மாறிட்டா நான் பாவம் இல்லையா? அப்புறம் எப்படி உன்னைச் சீண்டி நான் வம்பிழுப்பது?” என்று பாவமாகக் கேட்டான்.
“உங்களை யார் சீண்ட வேண்டாம்னு சொன்னது? சீண்டுங்க… வம்பிழுங்க… ஆனா… நான் இனி பழையபடி மாற மாட்டேன்…” என்றாள் அவனின் மனைவி.
“ஏறினா ஒரேயடியா ஏறிக்க வேண்டியது. இறங்கினா மொத்தமா இறங்க வேண்டியது. அநியாயம்டி தங்கப்பொண்ணே இது. அதுவும் இப்ப எல்லாம் என்னை நீ ரொம்ப மரியாதையா வேற பேசுற. யார்கிட்டயோ பேசுற மாதிரி இருக்கு எனக்கு. முன்ன போல நீ ஒருமையிலாவது என்னைப் பேசேன்…” என்றவனைப் பார்த்து லேசாகச் சிரித்தாள் மதுமதி.
“எல்லாரும் மரியாதை கொடுன்னு சொல்வாங்க. நீங்க என்ன ஒருமையில் பேச சொல்றீங்க?” என்று அலுத்துக் கொண்டாள்.
“அதுதான்டி நமக்குள் நெருக்கத்தை அதிகரிக்கும். அதுவும் நீ என்னை மயூரான்னு கூப்பிடுவ பார்… அப்படியே என் உடம்பு சிலிர்த்துக்கும். இப்ப அதையும் மிஸ் பண்றேன்…” என்றான்.
“எனக்கு நிஜமாவே இப்ப அப்படி எல்லாம் பேச தோனலைங்க…” என்று மதுமதி பாவமாகச் சொல்ல,
“எப்ப தோனும்?” என்று உடனே கேட்டான்.
“இப்படிக் கேட்டால்?” என்று விழித்தாள் மதுமதி.
“ம்க்கும்… இப்ப பொழைச்சு போ. ஆனா, கூடிய சீக்கிரமே உன்னை ‘மயூரா’ன்னு கூப்பிட வைக்கிறேன்…” என்று சவால் விட்டான்.
தகப்பனின் சவாலில் தானும் கலந்து கொள்வது போல வீறிட்டு அழுதாள் அவனின் மகள்.
“ச்சோ! ச்சோ! என்னடா பேபி… எழுந்துட்டீங்களா?” என்று கேட்டபடி வேகமாகச் சென்று மகளைத் தூக்கினான் மயூரன்.
முகத்தில் கனிவு பொங்க, மகளைக் கொஞ்சிக் கொண்டிருந்தவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மதுமதி.
‘இவனால் மட்டும் எப்படித் தன் மீது இத்துணைக் காதலை காட்ட முடிகிறது? அதிலும் எல்லா உண்மைகளும் தெரிந்தும், சிறிதும் அவளின் மீது கோபம் கொள்ளாமல், அவளை வெறுக்காமல், அவளின் வெறுப்பையும் கோபத்தையும் தாங்கிக் கொண்டு, அந்த நிலையிலும் ‘நீதான்டி தப்பு செய்த’ என்று அவளை அவன் குற்றம் சாட்டவே இல்லை. இப்படி ஒரு காதலை தன் மீது அவன் வைக்கத் தான் அவனுக்கு என்ன செய்தோம்? ஒன்றுமே இல்லையே!’ என்றெல்லாம் அவளின் மனத்தில் ஓடிக் கொண்டிருந்தது.
‘அதிலும் பிரசவத்தில் எப்படியாவது இறந்துவிட வேண்டும். அல்லது தானே முடிவை தேடிக் கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருந்தவளை பேசியே மீட்டுக் கொண்டு வந்துவிட்டானே. ஒருவேளை தான் இல்லாமல் போயிருந்தால் இவன் என்னவாகியிருப்பான்?’ என்றும் தோன்றியது.
‘நிச்சயமாக உருக்குலைந்து போயிருப்பான்’ என்று அவளுக்கே தெரியவும் செய்தது.
“ஹேய் மது… மது… என்ன யோசனை?” என்று மகளைச் சமாதானம் செய்துகொண்டே மனைவியை அழைத்தான் மயூரன்.
தன் யோசனையிலிருந்து சட்டென்று வெளியே வந்த மதுமதி, மகளை வாங்கிச் சமாதானம் செய்ய ஆரம்பித்தாள்.
அவளின் முகத்தில் தெரிந்த சிறு வித்தியாசத்தையும் கண்டுகொண்டவன், “என்ன மது?” என்று கேட்க,
“ஸாரி…” என்றாள்.
“இது எதுக்கு?”
“உங்களைப் பற்றி யோசிக்காமல் தப்பான முடிவெடுக்க நினைச்சதுக்கு…”
“அதுக்காக உன் மேல் எனக்கு இன்னும் கோபம் இருக்குத்தான். அதுக்குத் தண்டனையா எனக்கு ஸாரி எல்லாம் வேண்டாம்…” என்று முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு சொன்னான்.
“வேற என்ன வேணும்?” என்று மதுமதி கேட்க,
வேகமாகத் தன் முகத்தை அவளின் புறம் நீட்டினான்.
சட்டென்று தானாகப் பின்னடைந்தவள், “என்ன இது?” என்று கேட்டாள்.
“கிஸ் பண்ணு!” என்று தன் கன்னத்தைக் காட்டினான்.
மதுமதி தயக்கமாக அவனைப் பார்க்க, “ம்ம்… நிஜமாவே என்கிட்ட ஸாரி கேட்கிற எண்ணம் இருந்தால், இந்த மாதிரி கேட்டால்தான் ஏற்றுக்கொள்ளப்படும்!” என்று அவளிடம் வம்பு செய்தான்.
மதுமதி அப்போதும் தயங்க, “அப்ப நீ சும்மா ஒப்புக்கு ஸாரி கேட்டுருக்க? அப்படித்தானே?” என்று முகத்தைச் சுருக்கி கேட்டான்.
பட்டென்று வேகமாக அவனின் கன்னத்தில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள் மதுமதி.

ஆச்சரியமாக அவனின் விழிகள் விரிந்தன.
கூடவே, “ச்சே, நீ கிஸ் பண்ணதை நான் ஃபீலே பண்ணலை. எனக்கு இதெல்லாம் போதாது…” என்று அவளைச் சீண்டினான்.
“போதும்! போதும்! போங்க… உங்க பொண்ணு அவளைக் கவனிக்கச் சொல்லி என்னைக் கூப்பிடுறா…” என்று கட்டிலில் அமர்ந்து முதுகை காட்டியபடி அமர்ந்துகொண்டாள் மதுமதி.
மயூரனின் முகம் மலர்ந்து விகசித்தது.
அந்தப் பக்கம் திரும்பி அமர்ந்திருந்த மதுமதியின் இதழ்களும் கூட மிதமான புன்னகையில் மிளர்ந்தன.
©nandhavanamnovels.com