👁️ 591 Views
“நீங்களும் ட்ரெஸ் மாத்துங்க. நான் பாப்பாவுக்கு மாத்திவிடுறேன்…” என்றாள்.
“குட்டிக்கு நான் மாத்தி விடுறேன். நீ தலை பின்னி, பூ வச்சு, நகை எல்லாம் போட்டு வா…” என்றவன் குழந்தைக்குத் தானேதான் உடையை மாற்றி விட்டான். அவன் பொறுமையும் நிதானமுமாகக் குழந்தை அழாமல் பார்த்துக் கொண்டு உடையை மாட்டிவிடுவதை, தான் கிளம்பிக் கொண்டே கவனித்தாள் மதுமதி.
அவனின் பொறுமையைப் பற்றித் தனியாகச் சொல்லவா வேண்டும்? ஆங்காரமாய்க் கத்திக் கொண்டிருந்த தன்னையே பொறுமையாகக் கையாண்டவன் ஆகிற்றே! என்ற எண்ணம் அவளுள் ஓடிக் கொண்டிருந்தது.
மகளைத் தானே தயார் செய்துவிட்டு ரசித்துப் பார்த்தவன், “நீங்களும் உங்க அம்மா போலவே அழகுடி குட்டிப்பொண்ணே!” என்று மகளையும் கொஞ்சி அவளின் நெற்றியிலும் முத்தமிட்டான்.
தான் தயாரானதும் குழந்தையை வாங்கிக் கொண்டு, அவனைக் கிளம்பச் சொன்னாள் மதுமதி.
தானும் உடையை மாற்றிக் கொண்டவன், கண்ணாடியின் முன் நின்று தன் உடலை அப்படியும் இப்படியுமாகப் பார்த்துவிட்டு, “நானும் அழகாத்தான் இருக்கேன். ஆனால், என் நெத்தியில் முத்தம் கொடுத்து, அழகா இருக்க மயூரான்னு சொல்ல ஆள் இல்லையே… ம்ம்ம்…” என்று ஏக்கப் பெருமூச்சு விட்டவன், மனைவியை ஓரக்கண்ணால் பார்த்தான்.
அவளோ குழந்தையை மடியில் படுக்க வைத்து அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பாவனையைக் காட்டினாள்.
“நீ கொடுத்து வச்சது அவ்வளவுதான்டா மயூரா…” என்று புலம்பிக்கொண்டே மனைவியின் அருகில் வந்தவன், அவளின் தலையை இடிப்பது போலக் குனிந்து, “நீயாவது அப்பா நெத்தியில் முத்தம் கொடுடா குட்டிம்மா…” என்று தானே குழந்தையின் உதட்டில் தன் நெற்றி உரசுவது போலக் காட்டி விட்டு நிமிர்ந்தான்.
அவன் முழுதாக நிமிரும் முன், அவனின் சட்டையைப் பற்றி நிறுத்திய மதுமதி, அவனின் நெற்றியில் தன் உதடுகளைப் பதித்துவிட்டு, “நீங்களும் அழகா இருக்கீங்க…” என்றாள் கண்களைத் தழைத்துக்கொண்டே.
“வாவ்! அசத்துறயேடி தங்கப்பொண்ணே! தேங்க்ஸ்டி!” என்றவன், “அப்படியே அந்த மயூராவையும் சொல்லியிருக்கலாம் தானே?” என்று ஏமாற்றத்துடன் கேட்டான்.
“உங்க லிஸ்ட் பெருசாகிட்டே போகுது…” என்று மதுமதி போலியாகச் சலித்துக்கொள்ள,
“அடிப்பாவி! நான் இன்னும் லிஸ்ட் போட ஆரம்பிக்கவே இல்லைடி…” என்று அவன் அதிர,
“நேரமாச்சு… எல்லாரும் நம்மைத் தேடுவாங்க. வெளியே போகலாம்…” அவன் சொன்னது காதில் விழாத பாவனையில் எழுந்து குழந்தையுடன் வெளியே செல்ல ஆரம்பித்தாள்.
“எஸ்கேப் ஆகுறதுலேயே குறியா இருக்கா. இன்னும் எவ்வளவு நாளைக்குன்னு பார்ப்போம்…” என்ற மயூரனுக்கும் அவளின் இந்தளவு மாற்றமே பெரிதெனத் தெரியும். அவனை இனியும் தவிக்க விடக்கூடாது என்றே, மனைவி முயன்று தன்னை இயல்பாகக் காட்டிக்கொள்கிறாள் என்றும் புரிந்தது.
அவன் சொன்னதால், பழைய விஷயங்களைப் பற்றிப் பேசாமல் இருக்கிறாளே தவிர, அதன் பாதிப்பும், தாழ்வுமனப்பான்மையும் இன்னும் அவளை விட்டு முழுதாக அகலவில்லை என அவனுக்குப் புரியத்தான் செய்தது. அவளுள் இன்னும் ஒருவித குற்ற குறுகுறுப்பு இருப்பதை உணர்ந்தே இருந்தான்.
ஆனால், அதற்காக அவளை அப்படியே விட்டுவிட்டால், அவன் மயூரன் இல்லையே?
அவள் வெறிவந்தது போல, இயல்பை மீறி நடந்து கொண்டிருந்த போதே அவளைச் சமாளித்தவனால், இப்போது அவளைச் சமாளிக்க முடியாதா என்ன?
ஒன்று போல நிறத்தில் தயாராகி வந்த மகள், மருமகன், பெயர்த்தி மூவரையும் கண்டு ஜெயராமனும் திலகாவும் பூரித்துப் போயினர்.
மகளை இப்படிக் குடும்பமாகப் பார்க்கத்தானே ஆசைப்பட்டார்கள்.
சற்று நேரத்தில் விழா ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஓவியாவும், யுகேந்திரனும் வந்தனர்.

“வா ஓவியா, வாங்க…” என இருவரையும் வரவேற்ற மதுமதி ஓவியாவின் கையை அமைதியாகப் பிடித்துக் கொண்டாள் மதுமதி.
மீண்டும் மன்னிப்பு கேட்க வேண்டாம் என்று மயூரன் சொல்லியிருந்தான். ஆனாலும், தன் மன்னிப்பை தன் கைப்பிடியில் தங்கைக்குக் கடத்தினாள் மதுமதி.
ஓவியாவும் புரிந்து கொண்ட பாவனையில் சிரித்துத் தமக்கையிடம் சகஜமாகவே பேசினாள்.
குழந்தையைத் தூக்கி கொஞ்சினாள்.
“பாப்பா அழகா இருக்காள்ல யுகேன்?” என்று ஆசையாகக் கணவனிடம் சொன்னாள்.
“ஆமா, க்யூட்டா இருக்கா…” என்ற யுகேந்திரனும் குழந்தையை ஆசையாகப் பார்த்தான்.
“நம்ம வெட்டிங் அன்னைக்குத்தான் பாப்பா பிறந்திருக்கா. என்னவொரு ஒற்றுமை பாருங்க…” என்று சொல்லி மகிழ்ந்தாள் ஓவியா.
“ஆமா, அதனால்தான் உங்க கல்யாணத்துக்கு எங்களால் வர முடியாம போயிருச்சு. நீங்க சீக்கிரம் ஒரு குழந்தையைப் பெத்து பெயர் வைக்கும் பங்கஷன் வச்சுடுங்க. நாங்க குடும்பமா வந்து சிறப்பிச்சுடுறோம்…” என்றான் மயூரன்.
“ஆஹா… நல்ல ஐடியாவா இருக்கே இது. என்ன ஓவியமே… உனக்கு ஓகேவா?” என யுகேந்திரன் மனைவியிடம் சீண்டலுடன் கேட்க, அவளோ கணவனைச் செல்லமாக முறைத்துக் கொண்டே சிரித்தாள்.
திருமணமாகி ஒரு மாதமே ஆகியிருப்பதால், ஓவியாவும் யுகேந்திரனும் அவ்வப்போது ரகசியமாகச் சீண்டலுடன் பேசிக்கொண்டனர்.
கணவனின் சீண்டலுக்கு வெட்கப்படும் ஓவியா, அதைப் பிறருக்குத் தெரியாமல் மறைக்க அரும்பாடு பட்டுக்கொண்டிருந்தாள்.
மனைவியின் வெட்கத்தை, குறும்புடன் ரசித்துக் கொண்டிருந்தான் யுகேந்திரன்.
அவர்களைக் கண்ட மதுமதி, இப்படித்தானே தன் கணவனும் தன்னிடம் எதிர்பார்த்திருப்பான் என்ற எண்ணம் அவளுள் ஓடியது. அந்த யோசனையுடன் கணவனைப் பார்த்தாள்.
“ஓய் மது… என்ன?” அவளின் பார்வையில் கண்ட வித்தியாசத்தை உணர்ந்து மயூரன் கேட்க, மறுப்பாகத் தலையை அசைத்துவிட்டாள்.
என்னவென்று தெரியவில்லை என்றாலும், தன் மனைவி தன்னைக் கவனித்துப் பார்ப்பதே மயூரனுக்குச் சந்தோஷத்தை தந்தது.
“என்ன மயூரன் புதுசா இப்ப எல்லாம் உங்களைச் சுத்தி ஒரு ஒளி வட்டம் தெரியுதே!” என்று மயூரனை கேலி செய்தான் யுகேந்திரன்.
“அட! அதெல்லாம் அப்படித்தான் யுகேந்திரன்…” என்று முகம் மலர சிரித்தான் மயூரன்.
விசேஷத்திற்கு மயூரனின் பெரியம்மா, அத்தை குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தனர்.
மயூரனின் பெரியம்மாவுக்கும், அத்தைக்கும் அவனை அப்படி மகிழ்ச்சியாகப் பார்த்து மனம் நிறைந்தது.
அனைவரும் கூடிய சபையில் அலங்கரிக்கப்பட்டிருந்த தொட்டிலில் படுத்திருந்தாள் மயூரன் மதுமதியின் மகள்.
“பிள்ளைக்கு என்ன பெயர் வைக்கப் போறீங்க மாப்பிள்ளை?” என ஜெயராமன் கேட்க, அவன் மனைவியைப் பார்த்தான்.
அவளைப் பெயர் தேர்ந்தெடுக்கச் சொன்னவன், அவள் பெயரை சொல்ல முயன்ற போது விழா அன்றே தெரிந்து கொள்வதாகச் சொல்லியிருந்தான்.
“பெயரை பேபி காதில் சொல்லு மது…” என்று அவளையே வைக்கச் சொன்னான்.
“நாம இரண்டு பேரும் சேர்ந்து சொல்வோம்…” என்ற மதுமதி, அவனின் காதில் பிள்ளைக்குத் தான் தேர்ந்தெடுத்த பெயரை சொன்னான்.
கேட்டவன் மெச்சுதலாக மனைவியைப் பார்த்தான்.
“உங்களுக்கு ஓகே தானே?”
“டபுள் ஓகே!” என்றான்.
பின் இருவரும் இணைந்து தங்கள் மகளின் காதில், “அற்புதா! அற்புதா! அற்புதா!” என்று மூன்று முறை சொல்லி பெயரை அறிவித்தனர் மயூரனும் மதுமதியும்.

அனைவரும் கையைத் தட்டி பெயர் நன்றாக இருப்பதாகப் பாராட்டினார்கள்.
பெயர் வைத்து முடித்ததும் விருந்து நடைபெற்றது.
தங்கள் மகளை ஆசீர்வதிக்க வந்தவர்களை நிறைவாகக் கவனித்தான் மயூரன்.
திருமணத்தின் போது எதுவுமே மகிழும் படி அமையவில்லை. ஆனால் இப்போது, உள்ளத்தின் நிறைவு முகத்தில் பிரதிபலிக்க உற்சாகமாய் அனைத்தையும் ஓடி ஓடி செய்தான்.
“உங்களை இப்படிப் பார்க்கவே ஹேப்பியா இருக்கு மயூரன். சென்னைக்கு எங்க வீட்டுக்கு உங்க வொய்ப் குழந்தையை எல்லாம் கூட்டிட்டு கண்டிப்பா வரணும்…” என்றான் யுகேந்திரன்.
“ஆமா மாமா. அக்காவையும் பாப்பாயையும் கூட்டிட்டு ஒரு வாரத்துக்காவது எங்க வீட்டில் வந்து தங்கணும். என்ன மதுக்கா வருவீங்க தானே?” என்று ஓவியா கேட்க,
“கண்டிப்பா வர்றோம்…” என்றனர் மயூரனும் மதுமதியும்.
அற்புதாவை தூக்கி வைத்து சிறிது நேரம் கொஞ்சி விட்டு, மகிழ்ச்சியுடன் யுகேந்திரனும் ஓவியாவும் விடைபெற்று கிளம்பினர்.
©nandhavanamnovels.com