👁️ 1519 Views
“ஒரு நிமிஷம், உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்…” என்ற மஞ்சரியின் அழைப்பு, அவனின் கால்களின் அசைவை நிறுத்தி அங்கே இருந்தே திரும்பி பார்க்க வைத்தது.
“இப்பதான் பேசுறதுக்கு ஒன்னும் இல்லைன்னு சொன்ன?” என்று லேசான உஷ்ணத்துடன் வந்த கேள்வி, “காரணம் எதுவும் இல்லாம என்னை நிறுத்தி வச்சு பேசாதே! இப்படி ஏதோ திருட்டுத்தனம் செய்றது போல என்னைப் பார்க்கவும் வராதே!” என்ற கண்டிப்பான உத்தரவில் முடிந்தது.
“திருட்டுத்தனமா?” என்று அதிர்ந்து கேட்டவள், “நாம இரண்டு பேரும் ஹஸ்பெண்ட், வொய்ப்ங்க…” என்றாள் அழுத்தமாக.
“அதுக்கு?” என்று அவன் சாதாரணமாகக் கேட்க,
யாரோ போல இப்படிக் கேட்டால் அவள் என்ன சொல்வது? அவனது அந்த ‘அதுக்கு?’ என்ற கேள்வி, அவர்களுக்குள் இருந்த அத்தனை உரிமைகளையும் ஒரே நொடியில் எரித்துச் சாம்பலாக்கியது போல இருந்தது.
இப்படிப் பேசுபவனிடம் அதற்கு மேல் எதுவும் பேச பிடிக்கவில்லைதான். ஆனால், பேசியே ஆக வேண்டிய கட்டாயம் அவளைப் போட்டு அழுத்தியது.
“இப்படித் திருட்டுத்தனமா உங்களைப் பார்த்து பேசணும்னு எனக்கும் ஆசை இல்லைங்க. நீங்க நம்ம ரூமில் இருந்திருந்தால் அங்கேயே பேசியிருப்பேன். ஆனால், அதை நீங்க என் ரூமா மட்டும் மாத்திட்டு ஓடி ஒளியும் போது, இப்படி உங்களைத் திருட்டுத்தனமா பார்ப்பதை தவிர எனக்கும் வேற வழி தெரியலை. அதான் இங்கே வந்தேன்…” என்றவள், திருட்டுத்தனம் என்பதை மட்டும் அழுத்தி அழுத்திச் சொல்ல, தன் வார்த்தையால் காயப்பட்டுவிட்டாள் என்று அவனுக்குப் புரிந்தது.
அதற்காக அவன் எந்தச் சமாதானமும் சொல்லவில்லை.
“யார் ஓடி ஒளிஞ்சா? வீட்டுக்குள் ஒரே புழுக்கமா இருந்தது. அதான் இங்கே வந்தேன். சரி, என்ன பேசணும்? சட்டுன்னு சொல்லு…” என்றவன் அங்கிருந்த சுற்றுச் சுவர் திட்டில் பாயை வைத்துவிட்டு, அப்படியே கீழே குனிந்து தங்கள் வீட்டு வாசலில் ஆட்கள் நடமாட்டம் தெரிகிறதா என்று பார்த்தான்.

‘தினமுமா புழுக்கம்?’ என்று தன் மனத்தில் நினைத்துக் கொண்டவளுக்கு, அவனின் செய்கை, அவனின் மனத்தில்தான் புழுக்கம் என்பதை எடுத்துரைத்தது. அது அவளுக்கு வலிக்கவும் வைத்தது.
அவளின் மனநிலை புரியாமல் குனிந்து எதையோ கவனித்தவன், “அப்பா எழுந்துட்டது போல இருக்கு. அவர் ரூம் ஜன்னல் வழியா பேச்சுச் சத்தம் கேட்குது. நீ கீழே போய் வேலையைப் பார். நாம அப்புறம் பேசுவோம்…” என்றவன் விறுவிறுவென அவளுக்கு முன் கீழே இறங்கி சென்றிருந்தான்.
இப்படி அவன் அவசரமாக ஓடியது அவளுக்குள் பெரும் உறுத்தலாய் இருந்து குடைந்தது. ஆனால் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்காமல், அவளும் இறங்கி கீழே சென்றாள்.
கணவன் சொன்னது சரியே என்பதுபோல, அவள் கீழே சென்ற போது குணாளனின் அறை கதவு லேசாகத் திறந்திருந்தது. அதன் வழியே விளக்கு வெளிச்சம் தெரிய, பெரியவர்கள் ஏதோ பேசிக்கொள்வதும் கேட்டது.
மஞ்சரி சமையலறை நோக்கி செல்ல, “எழுந்துட்டியா மஞ்சரி?” என்றபடி கதவை நன்றாகத் திறந்து அவளை நோக்கி வந்தார் வனஜா.
நின்று திரும்பி, “ஆமாங்கத்தை…” என்றாள் மஞ்சரி.
“நீ இன்னும் எழுந்திருக்க மாட்டயோன்னு நினைச்சேன். நீ சீக்கிரம் எழுந்ததும் நல்லதா போச்சு. உன் மாமாவுக்கு என்னவோ தொண்டை கரகரன்னு இருக்காம். லேசா இரும்பவும் செய்றார். அவருக்குக் குடிக்கக் கொஞ்சம் சுடுதண்ணீ போடு மஞ்சரி…” என்றார் வனஜா.
“சரிங்கத்தை…” என்று சொல்லிவிட்டு அவள் சமையலறை பக்கம் திரும்ப, “அப்படியே மிளகு, திப்பிலி எல்லாம் தட்டி போட்டுக் கசாயம் வை!” என்று தொடர்ந்து மாமியாரிடமிருந்து உத்தரவு வர, அதன் பின்னான அவளின் பொழுதுகள் வீட்டு வேலையில் சென்றன.
வழக்கமான வீட்டு வேலைகளுடன், மாமனாருக்கு சளி பிடிக்கப் போகிறது என்று, ‘கசாயம் வை! சூப் வை!’ என்று மாமியார் அடுத்தடுத்து வேலை சொல்லிக் கொண்டே இருக்க, அவளால் அதன்பின் கணவனுடன் பேச கூட நேரம் இல்லாமல் போனது.
இன்னும் ஒரு வாரத்திற்குச் சுப முகூர்த்தம் எதுவும் இல்லை என்றாலும், மற்ற நாள்களும் வழக்கம் போலக் காலையில் உணவை முடித்துக் கொண்டு கிளம்பிச் சென்றுவிடுவான் சசிதரன்.
பாஸ்கரன் பிளாஸ்டிக் நாற்காலிகள், சாப்பாட்டு மேஜை, பஃபே முறையிலான விருந்துக்குத் தேவையான பாத்திரங்கள், ஹாமியானா பந்தல் போடுவற்கு தேவையான பொருட்கள் என்று விசேஷங்களுக்குத் தேவையான பொருட்களை வாடகை விடும் கடையும் நடத்திக் கொண்டிருந்தான். மொத்தமாக ஈவன்ட் பார்த்துக் கொடுப்பதுடன், இந்த மாதிரியான உதிரி வேலைகளும் பார்ப்பதால், வேறு சில விசேஷங்களுக்கு மற்றும் இறப்பு நடந்த வீட்டிற்கு என அந்தப் பொருட்களை வாடகைக்கு எடுப்பார்கள் என்பதால், சசிதரனுக்கும் வேலை இருந்து கொண்டே தான் இருக்கும்.
அவன் வேலை என்று ஒரு பக்கம் ஓட, மஞ்சரி வீட்டு வேலைகளுடன் மல்லுக்கட்ட என்று சென்ற நிலையில் மூன்று நாள்களுக்குப் பிறகு, உறக்கம் வந்தாலும் உறங்காமல் தங்கள் அறையில் காத்திருந்தாள் மஞ்சரி.
அன்று ஒரு வீட்டிலேயே நடந்த நிச்சயத்தார்த்த நிகழ்வுக்குச் சென்ற வாடகை பொருட்களைக் கடைக்குக் கொண்டு வந்து சேர்ப்பித்துவிட்டு நேரம் சென்றுதான் வீடு வந்தான் சசிதரன்.
அறைக்குள் நுழைந்தவன் பார்வை வழக்கம் போலக் கட்டில் பக்கம் செல்ல, அங்கே தூங்காமல் படுக்கையில் அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்து ஒரு கணம் திடுக்கிட்டுத்தான் போனான்.
“என்ன? ஏன் இப்படி உட்கார்ந்திருக்க?” என்று கேட்டபடி அறையின் விளக்கை போட்டான் சசிதரன்.
“உங்ககிட்ட பேசத்தான். நீங்க எப்ப வர்றீங்க… எப்ப கிளம்பி போவீங்கனே தெரியமாட்டேங்குது. அன்னைக்கு மாதிரி தனியா வந்து உங்களைப் பார்த்தால் திருட்டுத்தனம்னு சொல்வீங்க. அப்புறம் எப்பத்தான் உங்ககிட்ட நான் பேசுவது? அதான் தூங்காம உட்கார்ந்திருக்கேன்…” என்றாள் மஞ்சரி.
“அப்படி என்ன என்கிட்ட அவசரமா பேசியே ஆகணும்? பாப்பாவுக்கு உடம்பு நல்லாருக்குத் தானே? அவளுக்கு எதுவும் செய்தா?” என்று கேட்டுக் கொண்டே கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த மகளின் அருகில் வந்து நெற்றியில் தொட்டுப் பார்த்தான் சசிதரன்.
“அவ மேல் உங்களுக்கு ரொம்பத்தான் அக்கறை…” என்று மஞ்சரியின் குரல் இடக்காக வர, தன் கையைப் பின்னால் இழுத்துக் கொண்டவன், மனைவியைக் கேள்வியாகப் பார்த்தான்.
அவள் தன் முகத்தைத் திருப்பிக் கொள்ள, “என்ன பேச்சு எல்லாம் ஒரு மாதிரி இருக்கு?” என்று நிமிர்ந்து நின்று, மனைவியைப் பார்த்து அழுத்தமாகக் கேட்டான்.
அவள் பதில் சொல்லாமல் போக, “பதில் சொல்லு! பேசுவதையும் பேசிட்டு இப்படி மூஞ்சை திருப்பினா என்ன அர்த்தம்?” என்று கேட்டதற்கும், அவள் பதிலுரைக்கவில்லை.
“பேசு மஞ்சரி, அப்படி என்ன அவள் மேல் எனக்கு அக்கறை இல்லாம போச்சுன்னு சொல்ற? அவளுக்காகவும், உனக்காகவும்தானே நான் இப்படி நேரம் காலம் பார்க்காமல் ஓடிட்டு இருக்கேன். அப்புறம் இப்படிப் பேசினால் என்ன அர்த்தம்?” என்று சற்று குரலை உயர்த்திக் கோபமாகக் கேட்டான்.

அவனின் சத்தத்தில் உறங்கிக் கொண்டிருந்த தியா சிணுங்க, மகளைத் தட்டிக் கொடுத்து மீண்டும் உறங்க வைத்த மஞ்சரி, அவள் நன்றாக உறங்கியதும், “நீங்க எங்களுக்காக அப்படி ஒன்னும் ஓடத் தேவை இல்லை. இனி எனக்கும், என் பொண்ணுக்கும் தேவையானதை எல்லாம் நானே பார்த்துக்கிறேன். அதுக்கு நான் வேலைக்குப் போகலாம்னு இருக்கேன். நாளைக்கு மாமா, அத்தைகிட்ட அதைப் பற்றிப் பேச போறேன். அதுக்கு முன்ன உங்களுக்கு விஷயம் தெரிஞ்சிருக்கணும்னு தான் இப்ப பேசிட்டு இருக்கேன்…” என்றாள் மஞ்சரி.
மனைவி சொன்னதை நம்ப முடியாமல் அதிர்ந்து பார்த்த சசிதரன் அடுத்த நொடி, அவனின் மாநிறம் சிவக்க, மூக்கு விடைக்க, அவளைப் பார்த்து, “ஏய்… என்னடி பேசுற நீ?” என்று ஆத்திரத்துடன் அதட்டினான்.
©nandhavanamnovels.com