4 – காதலின் ரீங்காரம்

👁️ 2084 Views

அவனின் கண்களையே உறுத்துப் பார்த்தார் பிரேமா.

அவரின் ஆராய்ச்சி புரிந்து அவன் தன் முறுவலை இன்னும் மலரவிட, “என்கிட்ட எதையும் மறைக்கிறயாடா மயூரா? எதுவா இருந்தாலும் சொல்லு…” என்றார்.

“அத்தை… அத்தை… உங்ககிட்ட நான் என்ன மறைக்கப் போறேன்? எனக்குப் பிடிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணியிருக்கேன். அதை என் பிரேமா அத்தையும், அனிதா பெரியம்மாவும் குடும்பத்தோட வந்து நல்லபடியா நடத்திக் கொடுத்துட்டாங்க. நான் இப்ப எவ்வளவு ஹேப்பியா இருக்கேன் தெரியுமா?” என்று சிரிப்புடன் அவரின் தோளில் கைவைத்து இயல்பாகப் பேசினான்.

“உன் சந்தோஷம் உதட்டில் தான் தெரியுது. உன் கண்ணை எட்டவே இல்லையேடா?” என்று அப்போதும் நம்பாமல் கேட்டார்.

“அட அத்தை! இதென்ன என் கண்ணைப் பார்த்து ஜோசியம் சொல்றீங்களா? நேத்து நைட் எல்லாம் கல்யாணக் கனவு கண்டுட்டு நான் சரியா உறங்கவே இல்லை. காலையில் அக்னி குண்டத்துக்கு முன்ன உட்கார்ந்து கண் எரிச்சல் வேற இருக்கு. அதனால் கண்ணில் நீங்க இப்ப எதையாவது தேடினா உறக்கம் தான் தெரியும். கண்ணு சொக்குது அத்தை. கொஞ்ச நேரம் படுத்து எழுந்துக்கணும்.‌ நீங்களும் போய்ப் படுங்க…” என்றான்.‌

“அதெல்லாம் சரிதான். ஆனா அந்தப் பொண்ணு… அதான் உன் பொண்டாட்டி முகமே சரியில்லையேடா. இன்னைக்குக் கல்யாண மேடையிலும் கடுப்பா நின்னுட்டு இருந்த மாதிரி இருந்தது. அவங்கம்மா வந்து பேசியதை பார்த்தேன். நான் வந்து என்ன ஏதுன்னு கேட்கலாம்னு நினைச்சா… தோதுப்படலை. உன் அப்பா அம்மா இல்லாம இந்தக் கல்யாணத்தை நடத்துறோம். எந்தக்‌ குறையும் வந்துட கூடாதுன்னு வந்தவங்களைக் கவனிக்கவே எனக்கும் அனிதா அண்ணிக்கும் நேரம் சரியா இருந்தது.

இப்பவும் நேரா அவகிட்டயே என்ன ஏதுன்னு கேட்போம்னு நினைச்சேன். ஆனா, உன் அம்மா இருந்து கேட்டா அது வேற. நான் கேட்டா… அந்தப் பொண்ணு எதுவும் தப்பா நினைச்சுடுமோன்னு தோனுச்சு. நம்ம உறவு காலத்துக்கும் நிலைக்கணும்னு எனக்கு ஆசை இருக்குடா மயூரா. நான் ஏதாவது கேட்டு உன் பொண்டாட்டிக்கு என்னைப் பிடிக்காம போனா, அப்புறம் நம்ம உறவுக்குத் தடவை வந்துடுமோன்னு அமைதியா வந்துட்டேன். எதுவும் பிரச்சினைனா அத்தைகிட்ட மறைக்காம சொல்லுடா. நான் சம்பந்தி வீட்டில் உன் மாமாவை விட்டு பேசிப் பார்க்கிறேன்…” என்றார் கவலையாக.

“அச்சோடா! என் அத்தையாரே… ஏன் நீங்களா ஏதேதோ நினைச்சு கலங்குறீங்க? ரொம்ப நேரம் மேடையில் நிக்க வச்சா கடுப்பாகாதா? எனக்கே கால் வலி தாங்காம எப்படா உட்காருவோம்னு இருந்தது. மதுவுக்கும் கால் வலிக்குது, எப்ப உட்கார்வோம்னு தான் கேட்டுட்டு இருந்தா. மது வீட்டு பக்கமும், நம்ம பக்கமும் அத்தனை பேர் வந்திருக்கும் போது எப்படி உட்கார்ந்திருக்க முடியும்னு தான் அவளை என் சப்போர்டில் நான் நிக்க வச்சிருந்தேனே? அதைப் பார்க்கலையா நீங்க?” என்று கண்களைச் சிமிட்டி குறும்பாகக் கேட்டான்.

அவனின் தோளில் லேசாக அடித்தவர், “அதான் கல்யாணத்துக்கு வந்திருந்த அத்தனை பேரும் அதையே கேலி பண்ணி பேசிட்டு இருந்தாங்களே… நான் மட்டும் பார்க்காம இருப்பேனா?” என்று சிறு புன்னகையுடன் கேட்டார்.

“அப்புறமும் உங்களுக்கு என்ன டவுட்டாம்?” விளையாட்டாகவே கேட்டான்.

“என்னவோ தெரியலை. ஏதோ மனசுக்குள்ள சின்ன உறுத்தல்…”

“உங்களுக்கு எந்த உறுத்தலும் வேணாம் அத்தை. எல்லாம் நல்லபடியாகப் போகுது. மதுவும் சம்மதம் சொல்லித்தானே இந்தக் கல்யாணம் நடந்தது. அப்புறமும் கண்டதை ஏன் யோசிக்கிறீங்க? நீங்க கவலையே பட வேணாம். என் அப்பாவையும், அம்மாவையும் போல நாங்க நல்ல ஹஸ்பெண்ட் அன்ட் ஒய்ஃப்பா நல்லாவே வாழ்வோம்…” என்று அவன் சொல்லும் போது அவனுக்குள்ளிருந்து ஒரு அழுத்தம் வந்திருந்தது.

“உன் அப்பா அம்மா வாழ்ந்தவரை அன்னியோன்யமான தம்பதியாத்தான் வாழ்ந்தாங்க. ஆனா அவங்க ஆயுள் அல்பாய்சா போயிடுச்சு. ஆனா நீயும் உன் பொண்டாட்டியும் நிறைய வருஷத்துக்கு ரொம்ப நல்லா வாழணும்டா கண்ணா…” என்று அவனின் கன்னத்தில் மெல்ல தட்டிவிட்டு சென்றார் பிரேமா.

அவர் அங்கிருந்து சென்றதும், ‘உஃப்!’ என்று பெரிதாக மூச்சை இழுத்து விட்டான் மயூரன்.

‘வாழ்வோம் அத்தை! கண்டிப்பா வாழ்ந்து காட்டுவோம்!’ எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே அறைக்குள் சென்று படுக்கையில் விழுந்தான்.

ஏதேதோ எண்ணங்கள் அவனுக்குள் ஓடி விடாமல் சடுகுடு ஆட, முயன்று அதை ஒதுக்கி வைத்தவன், நிஜமாகவே அனலாய் எரிந்த கண்களுக்குச் சற்று ஓய்வு கொடுத்தான்.

மாலைப்பொழுது உறவினர்கள் எல்லாம் இருந்ததால் அவனுக்கு அவர்களுடன் நேரம் சென்றது. மதுமதியை தன் அருகிலேயே அமர வைத்துக் கொண்டான். யாராவது பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்ததால் அவளாலும் அங்கிருந்து நகர முடியவில்லை. தன் எரிச்சலை கோபத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முடியாமல் பற்களைக் கடித்துப்‌ பொறுத்துக் கொண்டிருந்தாள்.

இரவு உணவு உண்டபின் மயூரனின் அறைக்கு மதுமதியை அனுப்பி வைத்தனர்.‌

“வெல்கம் தங்கப்பொண்ணு…” ஆர்ப்பாட்டமாய் வரவேற்றவனை வெறுப்பாய் பார்த்தாள் மதுமதி.

மற்றவர்கள் முன் அவ்வளவு நேரம் அடக்கி வந்திருந்த எரிச்சல், கோபம், ஆத்திரம் எல்லாம் மேலெழும்பி அவளின் முகத்தில் அப்படியே பிரதிபலித்தது.

“தங்கப்பொண்ணா? என்னை அப்படிக் கூப்பிடாதே! நான் மதுமதி! ஒழுங்கா பெயர் சொல்லி கூப்பிடு…” என்றாள் அதட்டலாக.‌

“ஆஹா! ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள வந்ததுமே என் ஒய்ஃப் எனக்குப் போட்ட ஃபர்ஸ்ட் ஆர்டர்! ஆனா, பாரேன் தங்கப் பொண்ணு… அதை நிறைவேத்த முடியாத பாவியாகிப்‌ போனேனே நான். எனக்கு உன்னைத் தங்கப்பொண்ணுன்னு கூப்பிடத்தானே பிடிச்சிருக்கு…” என்றான்.

“ஆனா எனக்கு நீ என்னை அப்படிக் கூப்பிடுவதும் பிடிக்கலை. உன்னையும் பிடிக்கலை… பிடிக்கலை… பிடிக்கலை… உன்னை எனக்குப் பிடிக்கவே இல்லை‌…” என்று சட்டென்று குரலை உயர்த்தி ஆங்காரமாகக் கத்தினாள் மதுமதி.

​”ஷப்பா!” என்று நிதானமாகக் காதை விரலால் குடைந்துவிட்டுக் கொண்ட மயூரன், தன் புத்தம் புது மனைவியை நிதானமாகப் பார்த்தான்.

மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க அவனை உக்கிரமாய் முறைத்துக் கொண்டிருந்தாள் மதுமதி.

​”ஏசி பத்தலையோ… பலமா அனலடிக்குது…” என்று கையால் முகத்தில் விசிறிக் கொண்டே, மேஜை மீதிருந்த ஏசியின் ரிமோட்டை எடுத்து இன்னும் சற்று அளவைக் குறைத்து வைத்தான்.

​அவன் தன்னைச் சீண்டுவதாகத் தோன்ற, அவளின் பார்வையில் உஷ்ணம் கூடியது.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

பார்வையாலேயே அவனைச் சுட்டெரித்தாள். ஆனால், அவளின் பார்வை வீச்சு எதிரில் இருந்தவனைச் சிறிதும் அசைக்கவில்லை.

​நெற்றியில் அடம் பிடித்து விழுந்த தன் அடர்ந்த சுருள் கேசத்தை ஒதுக்கிவிட்டு, அவளைத் துளைப்பது போலப் பார்த்தான்.

அவனது கூர்மையான வில்லென வளைந்த அடர்ந்த புருவங்கள், அவன் நெற்றியைச் சுருக்கியதில் ஒன்றோடு ஒன்று தொட்டுக்கொண்டன.

அவனின் பார்வை அவளை அழுத்தமாகத் துளைக்க, அந்தப் பார்வையின் வீச்சைத் தாங்க முடியாமல் தலையைச் சிலுப்பிக்கொண்டு திருப்பினாள் மதுமதி.

“இப்ப எதுக்கு இவ்வளவு ஹைப்பர் ஆகுற? நான் உன் பக்கத்தில் தானே நிக்கிறேன் தங்கப்பொண்ணு. பொறுமையாத்தான் பேசேன்…” என்று கேட்டபடி அவளின் அருகில் எட்டு வைத்து நிதானமாக வந்த மயூரன், அவளின் நாடியில் கைவைத்துத் திருப்பித் தன் முகம் பார்க்க வைத்தான்.

தன்னைத் தொட்ட அவனின் கையை அவள் தட்டிவிட முயல, இன்னொரு கரம் கொண்டு அவளின் முயற்சியைத் தடுத்தவன், “தங்கப் பொண்ணுக்கு ஏன் இவ்வளவு கோபம், ம்ம்? கோபப்படும் நேரமா இது?” என்றான். அவனின் பார்வை படுக்கையைத் தொட்டு மீண்டது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த அறை, அந்த இரவுக்கான முக்கியத்துவத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

​ஆனால், அதைப் புரிந்து கொள்ள வேண்டியவளுக்கோ கோபமும், ஆத்திரமும், ஆவேசமும் மட்டுமே மிஞ்சியது.

அன்று காலையில் தான் மணம் முடித்த மணப்பெண் போன்ற படபடப்போ எதிர்பார்ப்போ இல்லாமல், தன்னை அக்னியாய்ச் சுட்டெரிப்பவளை நிதானமாகவே கையாண்டான் மயூரன்.

​அவளுக்கு இருந்த ஆத்திரத்தில் அவனின் அடர்ந்த சுருள் கேசத்தைப் பிடித்து உலுக்கி மாவாட்ட வேண்டும் போல் இருந்தது.

தன்னைப் பிடித்திருந்தவன் கையை வெடுக்கென்று தட்டிவிட்டுப் பின்னால் விலகி நின்றவள், “உனக்குக் கொஞ்சம் கூட வெட்கமா இல்ல? உன்னைப் பிடிக்கலைன்னு உன் மூஞ்சிக்கு நேரா சொல்றேன்… கொஞ்சம் கூடச் சூடு சொரணை இல்லாம பெட்டை ஜாடை காட்டி கூப்பிட்டுட்டு இருக்க! ச்சை…” என்று அருவருப்பாகச் சொன்னாள்.

​தொடர்ந்து, “உன்கிட்டயும் வேற என்ன எதிர்பார்க்க முடியும்? என் மனசுல வேற ஒருத்தன் தான் இருக்கான்னு தெரிஞ்சும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டவன் தானே நீ!” என்றாள் பற்களைக் கடித்தபடி.

​“இருக்கான்னு பிரஸண்ட் டென்ஸ்ல சொல்றியே தங்கப்பொண்ணு? அவன்தான் பாஸ்ட் டென்ஸ் ஆகிட்டானே… அப்புறம் ஏன் எனக்கு வெட்கம், சூடு, சொரணை எல்லாம் வரப் போகுது?” என்று கேட்டவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்தாள்.

​“என்னோட விக்ரம் செத்துட்டா அவன் பாஸ்ட் டென்ஸ் ஆகிடுவானா? அவன் இன்னும் என் மனசுல வாழ்ந்துட்டு தான் இருக்கான். அவனுக்கு மட்டும் தான் என் மனசுல எப்பவும் இடமிருக்கும். அந்த இடத்தைப் பிடிக்க உன்னால் முடியாது!” என்றாள் சவாலாக.

​“அப்படியா சொல்ற? அதையும் தான் பார்த்துடுவோம் தங்கப் பொண்ணு…” என்றான் மயூரன்.

அவனின் உதடுகளோரம் ஒளிந்து கொண்டிருந்த குறும்புப் புன்னகையைப் பார்த்தவளுக்கு இன்னும் வெறியானது.

​“என்னைத் தங்கப்பொண்ணுன்னு சொல்லாதே! கேட்கும் போதே நாராசமா இருக்கு…”

​“சரி தங்கப்பொண்ணு…” என்றான் இப்போது நன்றாகவே தன் புன்னகையைக் காட்டி.

​“அப்படியே உன்னைக் கடிச்சு கொதறிடுவேன்…” பற்களைக் கடித்துக் கொண்டு அவனைக் கடிப்பது போலக் கோபமாக அருகில் வந்தாள்.

​“காத்திருக்கேன் தங்கப்பொண்ணு. உன் விருப்பம் போல எங்க வேணுமானாலும் கடிச்சுக்கோ…” என்று இரண்டு கைகளையும் விரித்து, தலையை அசைத்து புன்னகையுடன் அவளை வரவேற்றான் மயூரன்.

“ச்சை! என்ன மனுஷன் நீ? உன்கிட்ட எத்தனை முறை சொன்னேன். இந்தக் கல்யாணத்தை நிறுத்து. என் விக்ரம் செத்த ஈரம் கூட இன்னும் காயலை. என்னைப் பெத்தவர்தான் அவனைக் கொன்னு இப்படி என்னைத் தவிக்க விட்டதோட உனக்கு என்னைக் கல்யாணம் பண்ணி வச்சே தீருவேன்னு பிடிவாதமா இருக்கார். எனக்கு என் விக்ரமை மறக்க முடியாது. என்னால் யாரையும் கல்யாணம் பண்ண முடியாது. அதனால் இந்தக் கல்யாணத்தை நிறுத்துன்னு நான் உன்கிட்ட சொன்னேனா இல்லையா?” என்று குரலை உயர்த்திக் கேட்டாள்.

“சொன்ன தான்…” என்று ஒப்புக் கொண்டான் மயூரன்.

“அப்புறம் ஏன் நீ கல்யாணத்தை நிறுத்தலை?”

“ஏன்னா… நம்ம கல்யாண வேலையை எல்லாம் எங்க பக்கம் பார்க்க ஆரம்பிச்சிட்டோம். திடீர்னு வந்து அதை எல்லாம் நிறுத்தச் சொன்னால் எப்படி? எனக்குக் கல்யாணத்தை நிறுத்த வேண்டிய எந்த அவசியமும் இல்லை. ஆனால், உனக்குத்தானே அந்த அவசியம் இருந்தது. நீ நிறுத்தியிருக்க வேண்டியது தானே? நீ செய்ய வேண்டியதை என்னைச் செய்யச் சொன்னா எப்படி?” என்று பொறுமையாகக் கேட்டான்.

அவனின் பொறுமையே அவளை நிதானம் இழக்க வைத்தது. அவளின் முகத்தில் துளிர்த்த ஆக்ரோஷத்தை அமைதியாகப் பார்த்தான் மயூரன்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com