4 – காதலின் ரீங்காரம்

👁️ 2084 Views

அவளின் அதீத மனவுளைச்சலின் விளைவால் தான் இப்படிக்‌ கத்திக் கொண்டிருக்கிறாள் என அவனுக்குப் புரிந்தது. அவள் மனத்தில் உள்ளதெல்லாம் வெளியே வரட்டும் என்றே அமைதியாக அவளைக் கையாண்டான்.

தன் எதிர்வினை கூட அவளைப் ஆத்திரப்படுத்துகிறது என்று அவனுக்குப் புரிந்தாலும், அவன் தன் பொறுமையைக் கைவிடவில்லை.

“என்னால் செய்ய முடியலைனு தானே உன்கிட்ட கேட்டேன். அப்புறமும்…” என்று‌ கோபமும் சலிப்புமாய்த் தலையை அசைத்தவள், “என் விக்ரம் எனக்குக் கிடைக்கணும்னு நான் சாகத் துணிந்தது தெரிந்த பிறகு நீயே கல்யாணத்தை நிறுத்திட்டு போயிருக்கணும். அப்பவும் அதை நீ செய்யலை. அதுக்கு அப்புறமும் என் விக்ரமை என் அப்பாவே கொன்னுட்டார்னு தெரிஞ்சும், அந்தக் கொலைக்காரரோட பொண்ணைக் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லாம மாப்பிள்ளையாகத் தயாராகி வந்து நின்னு, இப்ப என்னைக் கல்யாணமும் பண்ணிக்கிட்ட. உனக்கு நிஜமாவே கொஞ்சம் கூட உறுத்தலையா? எப்படி உன்னால் இதை எல்லாம் சாதாரணமா எடுத்துக்க முடியுது?” என்று ஆதங்கமாகக் கேட்டாள்.

“ஏன்னா… எனக்கு உன்னைப் பிடிச்சிருக்குத் தங்கப்பொண்ணு…” என்று மிருதுவான குரலில் சொன்னான் மயூரன்.

“எதே?” அவள் அதிர்ந்து கேட்க,

“யெஸ், எனக்கு உன்னைப் பிடிக்கும் தங்கப் பொண்ணு!”

“எனக்கு இன்னொருத்தரைத்‌தான் பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சுமா?” என்று நம்ப முடியாமல் கேட்டாள்.

“இப்பவும் சொல்றேன். அந்த இன்னொருத்தர் இப்ப இல்லை. அப்படி இருக்கும் போது நான் ஏன் அதுக்காக யோசிச்சு அலட்டிக்கணும்?” என்று அவன் சாதாரணமாகக் கேட்க,

“ச்சீ… கொஞ்சம் கூட இரக்கம் இல்லாம இப்படிச் சொல்றீயே…” என்று மதுமதி முகத்தைச் சுளிக்க,

“ஒருத்தர் இந்த உலகத்தை விட்டு போனதை நினைச்சு இரக்கம், அனுதாபம் எல்லாம் இருக்கு. ஆனால் அதுக்காக இல்லாம‌ போனவனையே நினைச்சுக்கிட்டு… இருக்கிற‌ நம்ம வாழ்க்கை ஏன் தடைபடணும்? நீயே சொல்லு?” என்று‌ கேட்டவனை அவள் கடுமையாக முறைத்துப் பார்க்க, “அட, பதில் சொல்லு தங்கப் பொண்ணு…” என்றான்.

முகத்தை அருவருப்பாகச் சுளித்தவள், “என்னைப் பெத்தவர்தான் ஈவு இரக்கமில்லாத அரக்கன்னு நினைச்சேன். ஆனா, நீயும் ஒரு அரக்கன்னு இப்பதான் எனக்குப் புரியுது. என் விக்ரம் தவிர எல்லா ஆம்பளைங்களும் ரொம்ப ரொம்ப மோசமானவங்க…” என்று வெறுப்புடன் சொன்னாள்.

“சரி, அப்படியே வச்சுக்கோ. இப்ப என்னை அரக்கன்னு கண்டுப்பிடிச்சிருக்க. அடுத்து நான் யாருன்னு தினம் தினம் ஒவ்வொன்னா என் கூட இருந்து கண்டுபிடி. நமக்குக் காலம் நீண்டு கிடக்கு. ஒவ்வொன்னா பொறுமையா கண்டுபிடிக்கலாம் தங்கப் பொண்ணு. இப்ப போய் ரெஸ்ட் எடு…” என்று கட்டிலை காட்டினான் மயூரன்.

அலங்கரிக்கப்பட்ட கட்டிலையும் அவனையும் கோபமாகப் பார்த்தவள், தளர்ந்து அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்துவிட்டாள்.‌ அவளுக்கே உடலும், உள்ளமும் ஓய்ந்து அயர்வாக இருந்தது.

அவளை ஒரு பார்வை பார்த்தானே தவிரக் கட்டிலுக்குச் செல்ல சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. அலமாரியைத் திறந்து மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குச் சென்றான்.

அவன் திரும்பி வந்ததும் தன்னிச்சையாக அவனைப் பார்த்தவள் அவன் நின்ற கோலத்தைப் பார்த்து அதிர்ந்தாள்.

அதுவரை அணிந்திருந்த பட்டு வேஷ்டி சட்டையை மாற்றிவிட்டு கையில்லாத பனியனும், முழுங்காலை கூடத் தொடாத ஷார்ட்ஸும் அணிந்தபடி அங்கிருந்த கண்ணாடியை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

“ஐய்ய, என்ன இப்படி நிக்க?” என்று முகத்தைச் சுளித்து மதுமதி கத்த,

“ஏன்? என்னாச்சு?” குனிந்து தன்னையே பார்த்துக் கொண்டான்.

“இதென்ன சின்னப் பசங்க போலக் குட்டி டவுசர்? போய் வேற மாத்து…” என்றாள் சிடுசிடுப்பாய்.

“ஏன், இதுக்கென்ன? இதான் என்னோட நைட் ட்ரெஸ். இப்படி இருந்தால் தான் என்னால் ரிலாக்ஸா தூங்க முடியும்.‌..” என்றான்.

“நானும் இங்கே இருக்கேன்‌. என் முன்னாடி இப்படி நிற்பியா நீ?” என்று கடுகடுத்தாள்.

“உன் முன்னாடி இது கூட இல்லாம நிக்கிறதுக்கு எனக்கு இப்ப ரைட்ஸ் இருக்கு தங்கப்பொண்ணு…” என்று உதட்டைக் கடித்து அவன் மயக்கும் குரலில் குறும்பாய் கூற,

“ச்சீ… என்ன பேசுற நீ?” அருவருப்பை அவள் அப்பட்டமாக முகத்தில் காட்ட,

“பேசுறதுக்கு என்ன? செய்யவே ரைட்ஸ் இருக்கு…” என்றபடி அவளை நோக்கி அவன் வர, சோஃபாவிலிருந்து பட்டென்று பதறி எழுந்த மதுமதி, அங்கே ஓரமாக இருந்த தன் பையிலிருந்து மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் ஓடிவிட்டாள்.

சென்றவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் உதடுகளில் அவ்வளவு நேரமாக உறைந்து போயிருந்த புன்னகை இப்போது சுத்தமாகத் துடைத்தெடுக்கப்பட்டது.

அவனின் கை தன்னைப்போல் தன் மார்பை வருடி விட்டுக் கொண்டது.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

அவளின் முன் சாதாரணமாக இருப்பது போல அவன் பேசினாலும், அவனுக்குள் பெரும் போராட்டமே நடந்து கொண்டிருந்ததை மதுமதி அறியவில்லை.

பேன்ட், சட்டை மாடலில் இருந்த ஒரு இரவு உடையை அணிந்து வந்த மதுமதி மீண்டும் சோஃபாவில் அடைக்கலமானாள்.

“போய்க் கட்டிலில் படு தங்கப் பொண்ணு…” என்றான்.

“இல்லை, எனக்கு இதுவே வசதியா இருக்கு…”

“இன்னைக்கு நம்ம ஃப்ர்ஸ்ட் நைட். அது நினைவிருக்கா உனக்கு?” என்றான் சீண்டலாக.

“நான் ஒன்னும் உன்கூட ஃப்ர்ஸ்ட் நைட் கொண்டாட உன்னைக் கல்யாணம் பண்ணிட்டு வரலை…” என்றாள் கோபமாக.

“பின்ன, வேற எதுக்கு வந்திருக்க?” அவன் வியப்பு போல் கேட்க,

“ஆங்! உன்னையும் எங்கப்பனையும் பழிவாங்க…” என்று உதட்டை வளைத்து குரூர புன்னகையுடன் அவள் சொல்ல, அவனின் பார்வை கூர்மையுடன் அவளைத் துளைத்தது.

அவள் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சோஃபாவில் சாய்ந்து படுத்துவிட்டாள்.‌

காலையிலிருந்து அவளுக்கு இருந்த அதீத அழுத்தத்தின் விளைவாகச் சிறிது நேரத்திலேயே உறங்கிவிட்டாள்.

அதுவரை‌ அவளை விட்டுத் தள்ளியிருந்த மயூரன் அவள் உறங்கியதை அறிந்ததும், ஒரு நாற்காலியை அவளின் தலைமாட்டருகில் எடுத்து போட்டு அமர்ந்தவன், அவளின் முகத்தையே பார்த்தவண்ணம், பட்டும் படாமல் அவளின் தலையை மென்மையுடன் வருட ஆரம்பித்தான்.‌

அவள் தாம்தூம் என்று காலையிலிருந்து குதித்ததை எல்லாம் அவன் தவறாகவே எடுக்கவில்லை.

சொல்ல போனால், அவளைச் சீண்டிவிட்டு அவளைத் தன்னைத்தான் அதிகம் நினைக்க வைத்திருந்தான்.

விக்ரம், விக்ரம் என்று அவள் சொல்லியிருந்தாலும், அவனுக்குப் பதிலடி கொடுப்பதில் தான் அவளின் கவனம் அதிகம் இருந்தது.

அவ்வாறு அவளையே அறியாமல் அவளின் கவனத்தைத் தன்னில் கொண்டு வந்திருந்தான் அவன். அன்றைய நாள் அவளுக்கு முக்கியத்துவம் இல்லாததாக இருக்கலாம். ஆனால், அவனுக்கு?

அந்த நாளை முடிந்தவரை அவர்களின் நாளாகவே மாற்றியிருந்தான் அவன். அதைக் கூட மதுமதி உணரவில்லை. அன்றைய இரவை கூட அவன் நினைத்திருந்தால் அவர்களுடையதாக மாற்ற முயன்றிருக்க முடியும்.

ஆனால், அப்படி ஒரு எண்ணம் அவனுக்கு எழவே இல்லை.

அவளின் பெற்றோர் தான் அவளின் மனம் பற்றிக் கவலைப்படாமல் ஏதேதோ செய்து வைத்தார்கள் என்றால், தானாவது அவளுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று நினைத்தான்.

அவனுடனான திருமணமே அவளுக்கு அழுத்தம் தான் என்றாலும், அவளின் முந்தைய நிலையை விட இது அவளுக்கு அவ்வளவு அழுத்தம் இருக்காது என்றுதான் அவன் நினைத்தான்.

ஏனெனில் விக்ரம் இறந்துவிட்டான், அதற்குத் தந்தையே காரணம் என்று அறிந்த நிமிடத்திலிருந்து ஜடமாக மாறியிருந்தாள் மதுமதி.

அவளின் அந்த நிலையை மாற்றியதே மயூரனுடன் அவளுக்கு நெருங்கி வந்த திருமணம் தான்.

இதோ இன்று திருமணம் முடிந்துவிட்டது. ஆனால், அதற்கு முன் அவள் மட்டுமல்ல, மயூரனும் கூட அதீத மனவுளைச்சலில் தான் இருந்தான் என்பதை அவள் அறியமாட்டாள்.

அதுமட்டுமின்றி விக்ரம் இறந்துவிட்டான் என்பதை அறிந்துபின்னும், தன் முடிவை சிறிதும் மாற்றிக் கொள்ளாமல், நிறுத்திய திருமணம் நிறுத்தியதாகவே இருக்கட்டும் என்று மயூரன் அவளின் தந்தையிடம் சொன்னதையும் அவள் அறியமாட்டாள்.

அன்றைய நாளை நினைத்தபடி பால்கனியில் நின்று உணர்வுகளற்று நிலவைவே வெறித்துக் கொண்டிருந்தான் மயூரன்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com