6 – காதலின் ரீங்காரம்

👁️ 1845 Views

அதன்பின் தான் இதோ நான்கு நாள்களைக் கடந்துவிட்டன. அதற்குப் பின் மதுமதி இப்போது எப்படி இருக்கிறாள் என அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், அவனின் சிந்தனை எல்லாம் அவளைச் சுற்றித்தான் வந்தது.

ஷோரூமில் அமர்ந்து அவன் அவளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது, அவனின் அறை கதவு தட்டப்பட்டது.‌

தன் சிந்தை கலைந்து, வந்தவர்களை உள்ளே அழைத்தான். ஷோரூம் மேனேஜருடன் ஒரு முதியவர் நின்றிருந்தார்.

“சார், இவர் உங்களைப் பார்க்கணும்னு சொன்னார்…” என்று மேனேஜர் சொல்ல, “எனக்குத் தெரிந்தவர் தான். நான் பேசிக்கிறேன். நீங்க போங்க…” என மேனேஜரை அனுப்பி வைத்தவன், “வாங்க மாமா… என்ன இவ்வளவு தூரம்? எப்பவும் வீட்டுப் பக்கம்தான் வருவீங்க. இப்ப ஷோரூமுக்கு தேடி வந்திருக்கீங்க. எதுவும் முக்கியமான விஷயமா?” என்று கேட்டபடி வரவேற்றான்.

“இந்தப் பக்கமா போனேன்பா மயூரா. அப்படியே உன்னைப் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்…” என்று சொல்லியபடி உள்ளே வந்தார் அரங்கநாதன்.

மயூரனின் தந்தையின் நண்பர் தான் அரங்கநாதன். அவனின் தந்தை இப்போது இல்லை என்றாலும், நண்பனின் மகனை மறந்துவிடாமல் அவ்வப்போது அவனைப் பார்த்து பேசுவார்.

சிறிது நேரம் பொதுவான பேச்சில் நேரம் செல்ல, “அப்புறம் மயூரா, உன்னோட கல்யாண வேலை எல்லாம் எப்படிப் போகுது?” என்று விசாரித்தார்.

அவனால் உடனே பதில் சொல்ல முடியாத தடுமாற்றம். இன்னும் அவன் பக்கம் யாரிடமும் அவன் திருமணத்தை நிறுத்தியதை சொல்லவில்லை‌. மதுமதியின் துக்கத்தில் தானும் பங்கு கொள்பவன் போலான மனநிலையில் தான் அவன் இருந்தான். அதனால் திருமணம் நின்றதை மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்பதை மறந்து போனான்.

“அது வந்து மாமா… கல்யாணம்…” என்று மயூரன் சொல்ல வர,

“எதுவும் பிரச்சினைனா தயங்காம சொல்லு மயூரா. உன் அப்பன் இல்லைனா என்ன… உனக்காகப் பேச நாங்க இல்லையா? எதுவா இருந்தாலும் உனக்கு நாங்க இருக்கோம். பொண்ணு வீட்டில் பேசிப் பார்க்கலாம்…” என்றார் அரங்கநாதன்.‌

அவர் சொன்னது புரியவில்லை அவனுக்கு. ஒருவேளை ஜெயராமன் வழியாகத் திருமணம் நின்ற தகவல் கசிந்து வந்திருக்கிறாரா? என நினைத்தான்.

அப்படியே இருந்தாலும், எனக்காகப் பேசப் போவதாக ஏன் சொல்கிறார்? எனப் புரியாமல் குழம்பிப் போனான்.

“என்ன மாமா, என்ன பிரச்சினை? அப்படி எதுவும் இல்லையே?” என்று சமாளிப்பாகச் சொல்லி வைத்தான்.

“அப்புறம் ஏன் ஜெயராமன் கமுக்கமா பொண்ணுக்கு வேற இடத்தில் மாப்பிள்ளை தேடுறார் மயூரா?” என்று அவர் கேட்டதும் திடுக்கிட்டு போனான்‌.

“என்ன மாமா சொல்றீங்க? வேற மாப்பிள்ளை தேடுறாரா? நிஜமா?” என அதிர்ந்து கேட்டான்.

“உனக்கே அப்ப விஷயம் தெரியாதா? நீதான் எங்கிட்ட சொல்ல சங்கடப்படுறன்னு நினைச்சேன். அப்ப விஷயம் அப்படி இல்லையா?” என்று அவனைத் திருப்பிக் கேட்டார் அவர்.

“முதலில் நீங்க என்ன கேள்விப்பட்டீங்கன்னு சொல்லுங்க மாமா…”

“ஜெயராமன் வேற மாப்பிள்ளை தேடிட்டு இருப்பதா என் காதுக்கு விஷயம் வந்துச்சு மயூரா. அதுவும் காதோட காது வச்ச மாதிரி தேடிட்டு இருக்காராம். உனக்கு நிச்சயம் பண்ணி வச்ச பொண்ணாச்சே… இன்னும் கொஞ்ச நாளில் கல்யாணத் தேதியை வச்சுக்கிட்டு ஜெயராமன் ஏன் இப்படிப் பண்றார்னு புரியாம தான் உன்னைப் பார்த்து கேட்டு போகலாம்னு வந்தேன்…” என்றார்.

அவர் சொன்னதை இன்னும் அவனால் நம்பவே முடியவில்லை. தான் திருமணத்தை நிறுத்தச் சொன்னதும், உடனே வேறு மாப்பிள்ளை தேட ஆரம்பித்துவிட்டாரா? என அவனுக்குக் கோபம் பொங்கியது.

‘அப்ப வேற என்ன செய்யணும்னு சொல்ற? அதான் நீ அந்தப் பொண்ணை வேணாம்னு சொல்லிட்டியே… அப்புறம் அந்தப் பொண்ணுக்கு அவங்கப்பா வேற யாரையோ மாப்பிள்ளையா பார்த்தா என்ன?’ என அவனின் மனமே இடிந்துரைத்தது.

‘இப்போது திருமணம் வேண்டாம்னு தான் சொன்னேன்‌. அந்தப் பொண்ணு எனக்கு வேணாம்னு நான் சொல்லலையே…’ என்று தன் மனத்திற்குப் பதில் சொன்னான்.

‘அப்ப மதுமதி வேணும்னு இன்னுமா உனக்கு எண்ணம் இருக்கு?’ என்று மனத்தில் கேள்விக்கு அவனால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.‌

அதற்குள் அவனின் எதிரே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அரங்கநாதனிடம் ஏதோ சமாளிப்பாகப் பேசி அனுப்பி வைத்தவன், தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.

மனதுக்கும் அவனுக்கும் நடந்த வாக்குவாதத்தில் முட்டி மோதியவனுக்கு முடிவாக மதுமதி இல்லாத வாழ்வை அவனால் நினைத்துப் பார்க்க முடியவில்லை என்பதே பதிலாகக் கிடைத்தது.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

‘அவளின் மனம் தேறவே திருமணத்தை நிறுத்தினேனே தவிர, அவளை இன்னொருவனுக்கு விட்டுக் கொடுக்க அல்ல’ என்ற முடிவுக்கு வந்தான்.

அந்த நேரத்தில் சரியாக மதுமதியிடமிருந்து அவனுக்கு அழைப்பு வர, அவள் பெயர் ஒளிர்ந்த கைப்பேசி திரையை வியந்து பார்த்தான்.

அவளின் எண் அவனிடம் இருந்தாலும், எங்கே திருமணத்திற்கு முன்பே தன் மனத்தில் இருப்பதை அவளிடம் உளறி வைத்து விடுவோமோ என்ற எண்ணத்தில் அவன் அவளிடம் பேச நினைக்கவே இல்லை. அதன்பின் பேச வேண்டிய அவசியமே இல்லாமல் போனது.

இப்போது அவளே அழைக்க, அவள் உணர்வுக்குத் திரும்பிவிட்டாள் என்ற நிம்மதியுடன் அழைப்பை ஏற்றான்.

“ஹலோ..‌. நான்… நான்..‌. மதுமதி…” எனத் தயங்கித் தயங்கிதான் பேச்சை துவங்கினாள் அவள்.

“தெரியுமே… சொல்லுங்க..‌. எப்படி இருக்கீங்க?” என்று சாதாரணமாக நலம் விசாரித்தான் அந்த நல்லவன்.

அப்படி ஜடமாக இருந்தவள் இப்போது இப்படிப் பேச ஆரம்பித்திருப்பதில் அவனின் மனமெல்லாம் ஒரு பரவசம்!

“ம்ம்… அது… உங்ககிட்ட கொஞ்சம் பேசணுமே…”

“பேசுங்க…”

“உங்களுக்கு… உங்களுக்கு விஷயம் தெரியுமான்னு தெரியலை… வி…க்ரம்..‌. என்னோட விக்…ரம்…” என்று தேம்பியபடி தடுமாறினாள்.

“ஸாரிங்க, உங்கப்பா சொன்னார்…” என்று வருத்தம் தெரிவித்தான்.

“தெரிஞ்சும்… தெரிஞ்சுமா?” என்று அவள் இப்போது தீவிரமாகக் கேட்க,

“என்னங்க கேட்கிறீங்க? தெரிஞ்சுமான்னா?” அவள் என்ன கேட்க வருகிறாள் எனப் புரியவில்லை அவனுக்கு.

“என் விக்ரம் செத்துட்டார். அந்த விஷயம் தெரிஞ்சதும், நல்லதா போச்சுன்னு கொஞ்சம் கூடக் கூச்சம் இல்லாம குறிச்ச தேதியில் உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்க ஏற்பாடு செய்துட்டு இருக்கீங்க, அப்படித்தானே?” குற்றச்சாட்டினாள் அவள்.

“கல்யாணத்துக்கு நான் ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேனா?” என அவன் அதிர்வுடன் கேட்க,

“பின்ன, எங்கப்பா அப்படித்தான் சொல்லிட்டு இருக்கார்‌.‌ எப்படிங்க எப்படிங்க உங்களால் இதுக்குச் சம்மதிக்க முடிந்தது? என் மனசு இப்ப எவ்வளவு துடிச்சுப் போய் இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா? என் விக்ரமுக்கு என்ன நடந்துச்சுன்னே தெரியலை. திடீர்னு ஆக்ஸிடென்டில் செத்துட்டதா சொல்றாங்க.

அதுக்கே எங்கப்பா மேல எனக்குச் சந்தேகமாத்தான் இருக்கு. என்னோட விக்ரம் செத்து அந்த ஈரம் கூடக் காயலை. அதுக்குள்ள எனக்குக் கல்யாணம்‌னு சொல்றாங்க. இல்லைங்க, என்னால் முடியாது. உங்களை மட்டும் இல்லை. என்னால் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. என் விக்ரம் செத்துட்டாலும், இன்னும் என் மனசில் வாழ்ந்துட்டு தான் இருக்கார். அவரோட நினைவுகளே எனக்குப் போதும். இந்தக் கல்யாணத்தை நீங்களே நிறுத்திட்டா நல்லது!” என்றாள் மதுமதி.

“அதை ஏங்க என்கிட்ட சொல்றீங்க? உங்கப்பாகிட்ட சொல்லி நீங்களே நிறுத்த வேண்டியது தானே?” எனக் கேட்டான்.

“நான் சொன்னேன். அவர் கேட்கலை. செத்துடுவேன்னு மிரட்டி கூடப் பார்த்தேன். உனக்கு முன்னாடி நாங்க செத்துடுவோம்னு அவர் பதிலுக்கு மிரட்டுறார். எனக்கு நல்லதுதான் செய்றாராம். அதனால் அவர்‌ பேச்சை கேட்டு நான் கல்யாணம் பண்ணிக்கணுமாம். எனக்கு எது நல்லதுன்னு அவருக்கு என்ன தெரியும்? என் விக்ரம் இல்லாத வாழ்வு எனக்கு வெறும் உயிரில்லா பிண்டம் தான்…” என்று அவள் மனம் கசந்து கலக்கத்துடன் சொல்ல,

அப்பெண்ணின் அந்த உயரிய காதலை பெற்ற விக்ரம் மேல் மயூரனுக்குப் பொறாமை கூட வந்தது.

இப்படிப்பட்ட ஆழ்ந்த அவளின் காதலை தன் ஏமாற்றுக்குப் பயன்படுத்தியிருக்கிறானே அக்கயவன் என்று அவனின் மீது கோபமும் வந்தது.

அவளின் அக்காதல் தனக்குக் கிடைக்காதா என்ற ஏக்கமும் கூட எழுந்தது.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com