👁️ 1845 Views
“ப்ளீஸ், எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்துங்க. நான்… என்னால் உங்களுக்குக் கண்டிப்பா நல்ல மனைவியா இருக்க முடியாது. ஒருத்தரை மனசில் சுமந்துக்கிட்டு இன்னொருத்தர் கூடப் பொய்யா வாழும் வாழ்க்கையை எனக்குக் கொடுத்துடாதீங்க. உங்க வாழ்க்கையை நீங்களே கெடுத்துக்காதீங்க…” என்று அவள் கெஞ்சலாகக் கேட்க, அவன் மனம் உடைந்தது.

தனக்குப் பிடித்த பெண் அவளை விட்டுவிடச் சொல்கிறாள். அவள் அப்படிக் கேட்கும் போது விட்டுவிடலாம் என்றுதான் அவனுக்குத் தோன்றியது.
ஆனால், அப்படி விட்டுவிட்டால், அவள் சொன்னது போல அவனும் தானே உயிரில்லா பிண்டமாகிப் போவான்.
தன்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லும் பெண்ணைத் தான் பிடித்து வைக்க நினைக்கிறோமே என்ற குற்றவுணர்வு அவன் நெஞ்சத்தை அறுத்தது.
“இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுவீங்க தானே?” என்று அவள் எதிர்பார்ப்புடன் கேட்ட போது, அவனால் பதில் சொல்லவே முடியவில்லை.
தொண்டையைச் செருமிக் கொண்டவன், “என்ன செய்வதுன்னு பார்க்கிறேன்ங்க…” என்று பட்டென்று தொடர்பை துண்டித்துவிட்டான்.
அவளிடம் அப்படிச் சொன்னவன், நேராகச் சென்று பார்த்ததென்னவோ ஜெயராமனைத்தான்.

என்ன செய்து கொண்டிருக்கிறார் அந்த ஜெயராமன்? நான் திருமணத்தை நிறுத்தியதை மகளிடம் சொல்லாமல் திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது என்று அவளிடம் சொல்லிவிட்டு, அந்தப் பக்கம் இரகசியமாக வேறு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார். அவரின் மகளின் முன் தன்னை இக்கட்டான நிலையில் நிறுத்திவிட்டாரே… என்ற கோபத்துடன்தான் அவரைக் காணச் சென்றான்.
அவரோ, “தப்பா எடுத்துக்காதீங்க தம்பி. இந்தப் பொண்ணு அப்படிப் பித்துப் பிடித்தது போல இருப்பதைப் பார்த்துட்டு திலகா என்கிட்ட புலம்பினா. அப்ப அவளுக்குக் கல்யாணம் பண்ணி வச்சா ஒருவேளை இந்தப் பித்துத் தெளியுமோன்னு சொல்லிட்டு இருந்தேன். கல்யாணம்னு கேட்டதும் அந்தப் பொண்ணுக்கு எங்க இருந்து தான் அத்தனை ஆவேசம் வந்ததோ… எனக்குக் கல்யாணமே வேணாம்னு ஆடி தீர்த்துட்டா. சிலையா உட்கார்ந்திருந்த பொண்ணு எழுந்து வந்ததுக்குச் சந்தோஷப்படுவதா? இல்லை, கல்யாணம்னு சொன்னாலே இப்படிக் குதிக்கிறாளேன்னு வருத்தப்படுவதான்னே தெரியலை.
ஆனா, இப்பதான் தெளிஞ்சு வந்திருக்கா. இப்ப போய்க் கல்யாணம் நின்னுருச்சுன்னு சொன்னா, நல்லதா போச்சுன்னு திரும்பப் பித்துப் பிடிச்ச மாதிரி உட்கார்ந்திடுவாளோன்னு பயம். அதான் விஷயத்தை இன்னும் அவளிடம் சொல்லாம வச்சிருக்கேன்.
அதோட நான் அன்னைக்கு உங்ககிட்ட சொன்ன காரணம் இன்னும் அப்படியே தான் இருக்குங்க தம்பி. என் பொண்ணு அந்த ஏமாத்துக்காரனை மறந்து வெளியே வரணும்னா… அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் சரின்னு எனக்குத் தோனுது. நீங்கதான் கல்யாணத்தை நிறுத்த சொல்லிட்டீங்க. அதனால்தான் நான் அதே முகூர்த்தத்துல அவளுக்கு வேற பையனை பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு முடிவு பண்ணினேன். பையன் முடிவானதும் தான் எங்க பொண்ணுக்கிட்ட மாப்பிள்ளை மாறும் விஷயத்தைச் சொல்லலாம்னு இருந்தேன்…” என்றார் அவர்.
அவர் இப்படி அவசரப்படுவது அவனுக்கு எரிச்சலை தந்தது.
அதே நேரத்தில் தான் மறுத்தாலும் ஜெயராமன் வேறு யாருக்காவது மகளைத் திருமணம் முடித்து வைப்பதில் உறுதியாக இருக்கும் போது, அவளை அப்படி யாருக்கோ விட்டுக் கொடுப்பதா என்றும் தோன்றி அவன் மனத்தை அலைக்கழித்தது.
என்ன முடிவெடுப்பது என்று அவனுக்குமே அந்த நொடி தடுமாற்றமாகத்தான் இருந்தது.
மதுமதியின் கெஞ்சல் ஒருபுறம், ஜெயராமனின் பிடிவாதம் மறுபுறம், இருவருக்குமிடையே மாட்டிக் கொண்டு விழி பிதுங்கினான்.
அப்படி யாரோ ஒருவரை மதுமதி திருமணம் செய்து கொள்ளும் நிலை உண்டு எனில் அந்த யாரோ தானாகவே இருந்தால் என்ன? என்ற அவனின் சுயநல காதல் தலைவிரித்தாடியது.
அதன்விளைவு, தானே மதுமதியை திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி, ஜெயராமனிடம் சம்மதித்துவிட்டான் மயூரன்.
அதோடு மதுமதி அப்போது இருந்த மனநிலையில் விக்ரம் பற்றிய உண்மையை ஜெயராமன் மகளிடம் சொல்லாமல் விட்டிருக்க, அவனையும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
மதுமதியின் மனநிலையிலிருந்து அவளை மீட்பதாக நினைத்துக் கொண்டு அவளின் பெற்றோர் எடுத்த முடிவில் மயூரனும் உட்பட்டுப் போனான். அதன் பலன் அவளின் வெறுப்புக்கும் உள்ளாகிவிட்டான் அவன்.
தன் பெற்றோரும் தன் பேச்சை கேட்கவில்லை, மயூரனும் திருமணத்தை நிறுத்தவில்லை. அப்போது தன் மனம் பற்றி யாருக்குமே கவலை இல்லையா? என்ற கோபம் மதுமதியை ஆட்டிப்படைக்க ஆரம்பிக்க, அவர்களை ஆட்டிப்படைக்க வேண்டும் என்று ஆத்திரத்துடன் திருமண வாழ்விற்குள் நுழைந்திருந்தாள் அவள்.
©nandhavanamnovels.com