7 – காதலின் ரீங்காரம்

👁️ 1604 Views

காலையில் மதுமதி உறக்கம் கலைந்து கண் விழிக்கும் போது, குளித்து வேறு உடைக்கு மாறியிருந்தான் மயூரன்.

அவள் விழித்ததைக் கண்டு இன்முகத்துடன் அவளின் அருகில் வந்தான். அவனுக்குள் பல போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தாலும், அதை மனைவியின் முன் காட்டக் கூடாது என்ற வைராக்கியத்தை முதல் நாள் முதலே அமுல்படுத்த ஆரம்பித்திருந்தான்.

அவனைக் கண்டுகொள்ளாமல் சோஃபாவிலிருந்து எழுந்து நின்ற மதுமதி, களைந்திருந்த தலைமுடியை இழுத்து சுருட்டிக் கொண்டையிட்டுக் கொண்டாள்.

அவளின் அலட்சிய பாவனையில் அவனின் முகம் இன்னும் சீண்டலுடன் மலர்ந்தது. அவள் வீசும் ஒவ்வொரு வெறுப்புப் பார்வையும் அவனது நெஞ்சில் ஈட்டியாய்ப் பாய்ந்தாலும், அதை ஒரு புன்னகையோடு எதிர்கொள்ளத் தயாரானான் மயூரன். அவள் கட்டியிருக்கும் அந்தப் பகை என்னும் அரணை உடைக்க, தான் ஒரு ஆயுதமாக மாறக்கூடாது, அவளது காயங்களை ஆற்றும் மருந்தாகவே இருக்க வேண்டும் என்பதில் அவன் தெளிவாக இருந்தான்.

அவளோடு சேர்ந்து அவனும் சோககீதம் வாசித்தால், அவள் அதிலிருந்து மீளாமலே ஆழ்ந்துவிடுவாளோ என்ற பயம் அவனை அவளின் முகம் பார்க்கும் போதெல்லாம் ஒரு குறும்புக்காரனாக மாறச் சொன்னது. அலட்சியம் எனும் போர்வையைப் போர்த்திக்கொண்டு, ஒரு கள்ளப்புன்னகையுடன் அவளை வம்புக்கு இழுக்கத் தூண்டியது! அவளது அழுகையை விட ஆத்திரமே அவளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என நம்பினான்.

அவளைக் கோபப்படுத்தியாவது அந்தச் சோகக் கடலிலிருந்து வெளியே இழுக்கத் தூண்டியது. அதனால்தான், நெஞ்சுக்குள் ரணம் இருந்தாலும், உதட்டில் சீண்டலுடன் கூடிய சிரிப்பைத் தத்தெடுத்திருந்தான்.

இதோ இப்போதும் அவளைச் சீண்டி வம்பிழுக்க ஆரம்பித்தான்.

“பரவாயில்லையே!” என்று வியந்தவனை, வினவலோடு அவன் முகம் பார்த்தாள் மதுமதி.

“பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டவ, நைட் முழுவதும் தூங்காம நான் எதுவும் செய்திருவேனோன்னு பயந்து முழிச்சிருப்பன்னு நினைச்சேன். ஆனால், கும்பகர்ணனுக்குத் தங்கச்சி போல அப்படி ஒரு தூக்கம்! என் மேல் கொஞ்சம் கூடப் பயம் இல்லையா உனக்கு?” என்று ஆச்சரியமாகக் கேட்டான்.

“ஆமா, நீ பெரிய இவன்! உன்னைப் பார்த்து நான் ஏன் பயப்படணும்?” என வினவியவளின் குரலில் மாபெரும் அலட்சியம்!

“ஓஹோ! அப்ப என்னைப் பார்த்து பயமில்லை உனக்கு?” என்று தன் வழக்கமான பாணியில் அடர்ந்த புருவத்தை வியப்போடு மேலேற்றி கீழறக்கியபடி கேட்டவன், அவளை நோக்கி நெருங்கி வந்தான்.

அவளோ அசையாமல், தன்னை நோக்கி வருபவனைக் கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி சவாலாகப் பார்த்தாள்.

அவளின் அந்தப் பார்வை அவனுக்குச் சுவாரசியத்தைத் தந்தது. உதட்டோரம் அரும்பிய மெல்லிய குறுநகையுடன் அவளை நெருங்கினான்.

“முதல் இரவுதான் நடக்கணும்னு கட்டாயம் இல்லை. முதல் விடியல் கூட நடக்கலாம். விடியல் பொழுது! அழகான புத்தம் புதிய மனைவி! அடாவடி காட்டும் அவள் தோரணை! எல்லாத்தையும் பார்க்கும் போது, அப்படியே…” என்று சீண்டியவன், அவளை அணைக்கப் போவது போல இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு அருகில் வர, அவனைத் தடை செய்தது ஒரு புத்தம் புதிய பளபளக்கும் கத்தி!

தனக்கும் அவளுக்குமிடையே மின்னலெனப் பாய்ந்து வந்த அந்தக் கத்தியையும், அவளையும் மாறி மாறிப் பார்த்தான் மயூரன்.

“ஹான்! எங்கே இப்ப சொல்லு… என்னவோ சொன்னியே? முதல் விடியல்… மவனே… கிட்ட வந்து பாருடா… உனக்கு இதுதான் கடைசி விடியலா இருக்கும்!” என்ற மதுமதியின் குரலில் இப்போது அலட்சியத்திற்குப் பதிலாக ஆக்ரோஷம் இருந்தது.

அவனது உதட்டோரம் அதுவரை பதுங்கி அரும்பியிருந்த அந்த மெல்லிய புன்முறுவல், இப்போது தன்னிச்சையாகப் பறந்து விரிந்து அவனது இதழ்களை முழுமையாக ஆக்கிரமித்தது.

“இதோடா! இதை உன் நைட் ட்ரெஸ்க்குள்ள ஒளிச்சு வச்சுக்கிட்டுத்தான் அந்தக் கும்பகர்ணி தூக்கமா? குட்! குட்! என் பொண்டாட்டியை என்னவோ நினைச்சேன். ஆனால், அவள் தைரியசாலி தான்…” என்று மெச்சி கொண்டான்.

“நான் வேண்டாம்னு சொன்னதைக் காது கொடுத்துக் கேட்காம, என்னை ஒரு அயோக்கிய ராஸ்கல் கல்யாணம் பண்ணியிருக்கான். அவன்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்திக்கணும்னா இதெல்லாம் அவசியம் தானே?” என்று கத்தியை அவனின் முகத்துக்கு நேராக ஆட்டி ஆட்டி குத்த போவது போல் கேட்டாள்.

“அம்மாடியோவ்! உன் அவசியம் பார்த்து எனக்கு அப்படியே புல்லரிச்சுப் போச்சுடி தங்கப் பொண்ணே…” என்று உடலை குலுக்கி சிலிர்த்தவனின் கை சட்டென்று நீண்டு சிறு வித்தை காட்டிய அடுத்த நொடி அந்தக் கத்தி அவனின் கைகளில் இருந்தது.

“ஆங்!” என அதிர்ந்து அவனையும், அவனின் கையில் இருந்த கத்தியையும் பார்ப்பது இப்போது அவளின் முறையானது.

எப்படி அவனின் கைக்குக் கத்தி சென்றது? என்ன செய்தான் இப்போது? என்று அவளுக்குப் புரியவில்லை. இதற்கும் கத்தியை வலுவாகத்தான் பிடித்திருந்தாள். அப்படியிருந்தும்…

“உனக்குப் பிடிக்காத உன் புருஷன் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கினவன்டி தங்கப் பெண்ணே! ஸ்கூல் லைஃபில் உருப்படியா கத்துக்கிட்டதே அது ஒன்னு தான். எங்க அதுக்குத் தேவையே ஏற்படாதோன்னு நினைச்சேன். ஆனா பாரேன்… லைஃப் லாங் தேவைப்படும்டா மடையா… உனக்கு வரும் பொண்டாட்டி காட்டப் போற வித்தையை எல்லாம் சமாளிக்க உதவும்னு தான் உன்னை அப்பவே அதைக் கத்துக்க வச்சிருக்கேன்னு காட்(God) கண்ணு முன்னாடி வந்து சொல்லிட்டுப் போறார்…” என்றபடி அவளைப் போலவே அவளின் முகத்திற்கு நேராகக் கத்தியை ஆட்டி காட்டி சொன்னான்.

கருவிழிகளை உருட்டி அவனைக் கடுப்பாகப் பார்த்தவள், அவனின் கையிலிருந்த கத்தியைப் பறிக்க முயன்றாள்.

சில நொடிகள் அவளின் கைகளுக்குக் கத்தி சிக்க விடாமல் இப்படியும் அப்படியுமாக அசைத்து ஆட்டம் காட்டியவன், அந்தப் பட்டன் மாடல் மடக்கும் கத்தியை மடக்கி அவளின் வலது கையைப் பிடித்து விரித்து உள்ளங்கையில் வைத்தான்.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

“பத்திரமா வச்சுக்கோ… உன் புருஷனை பதம் பார்க்க என்னைக்காவது தேவைப்படும்!” என்று அவளின் விரல்களைத் தானே மடக்கியும் விட்டான்.

அவள் விரல்களை விரித்துக் கத்தியை குறுகுறுப்பாய் பார்க்க, “அப்புறமா குத்தி குத்தி விளையாடுவியாம். இப்ப போய்க் குளிச்சிட்டு வா…” என்றான் கிண்டலாக.

புசுபுசுவென மூச்சு விட்டு அவனை அவள் பார்க்க, அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்வை தன் கழுத்துக்குக் கீழ் செல்வதை உணர்ந்து சட்டென்று பக்கவாட்டில் திரும்பிக் கொண்டவள், “ஏய்… என்ன? என்ன பார்வை அது? அப்படியே கண்ணு முழியைத் தோண்டிடுவேன்…” என்றாள் ஆத்திரமாக.

அவளின் தோளை தொட்டு தன் பக்கம் திரும்பியவன், “நான் இதைப் பார்த்தேன்…” எனக் கண்களால் அவளின் கழுத்தில் தொங்கிய தாலியை சுட்டிக்காட்டினான்.

அவளின் கழுத்தில் அப்போது தாலி மட்டுமே இருந்தது!

“ஏன் இதுக்கென்ன?” என்றவாறு தன் தோளில் இருந்த அவனின் கையைத் தட்டிவிட்டாள்.

“நீ இருக்கிற கோபத்துக்கு எங்க கழற்றி வீசிடுவோன்னு நினைச்சேன். ஆனா, அத்தனை நகையையும் கழற்றிட்டு, இதை மட்டும் விட்டு வச்சிருக்கியேன்னு ஆச்சரியமா பார்த்தேன்…” என்றவனை நக்கலாகப் பார்த்தாள்.

அவளின் அந்தப் பாவனையே அதுவும் ஏதோ காரணமாகத்தான் என்பதை அவனுக்குப் புரிய வைக்கப் போதுமானதாக இருந்தது.

“இதை நான் ஆசைப்பட்டுப் போட்டு சுத்துறேன்னு நினைச்சியா? அதுதான் இல்ல. இதுக்கு ஒரு காரணம் இருக்கு. கூடிய சீக்கிரம் நீயே தெரிஞ்சுப்ப…” என்றாள் அலட்சியமாக.

“அப்படி என்ன காரணமோ?” சலித்துக் கொண்டாலும், அதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், “சரி, அதை மெதுவா தெரிஞ்சிக்கிறேன். இப்ப உன் அப்பா வீட்டுக்கு மறுவீடு போக எல்லோரும் ரெடியாகிட்டு இருக்காங்க. நீயும் ரெடியாகிட்டா கிளம்பிடலாம்…” என்று சொல்லிக் கொண்டே அலமாரியைத் திறந்து ஒரு கவரை எடுத்தான்.

“இதில் நான் உனக்காக வாங்கிய சேலை இருக்கு…” என்று சொல்லிக்கொண்டே அவளின் புறம் திரும்பியவன், ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த மனைவியை ஆராய்ந்தபடி பார்த்தான்.

‘மறுவீடா?’ தனக்குள் சொல்லிக்கொண்டே மர்மமான புன்னகையை உதடுகளில் தவழவிட்டாள் மதுமதி.

அவளின் அந்தப் புன்னகை உறுத்த, ‘அப்படி என்ன நினைத்திருப்பாள்?’ என்று அவளைக் கூர்ந்து கவனித்தான் மயூரன்.

சிந்தனையிலிருந்து கலைந்தவள், அவன் தன்னைக் கவனிப்பதை கண்டு, “என்ன?” என்றாள் வெடுக்கென்று.

“மூளைக்கு ஓவர் டோஸ் கொடுக்குற போல?” என்று நக்கலாகக் கேட்டான்.

“நான் என்னவோ கொடுக்கிறேன், உனக்கென்ன?” என்றாள் கடுப்பாய்.

“உன் மூளைக்கு என்னவோ கொடு. ஆனா, எனக்கு அந்த மரியாதை… மரியாதைன்னு ஒன்னு இருக்கே. அதைக் கொடுக்கிற வழியைப் பாரு. நம்ம ரூமுக்குள்ள கொடுக்கலைனாலும் பரவாயில்லை. ஆனால், மத்தவங்க முன்ன…”

“கொடுக்கலைனா?” குறுக்கே புகுந்து சீறினாள்.

தன்‌ தோளை‌ லேசாகக் குலுக்கியவன், “உன் அம்மாவிலிருந்து அடுத்த வீட்டு ஆயா வரை உன் காது தீயுற அளவுக்கு அட்வைஸ் மழை பொழிவாங்க. அதை வாங்கிக்கணுமா வேணாமான்னு நீயே முடிவு பண்ணிக்கோ…” என்றான் அலட்சியமாக.

அவள் ஏதோ பதில் சொல்ல வர, அவன் இடைமறித்தான்.

“என்னோட அப்பா, அம்மா உயிரோட இல்லை. அவங்க இருந்திருந்தா… வீட்டுக்கு வந்திருக்கும் சொந்தக்காரங்களை அவங்க கவனிச்சுப்பாங்கன்னு நான் எவ்வளவு நேரம் வேணுமானாலும் ரூமில் இருக்கலாம். ஆனா, இப்ப அவங்க இல்லாத இடத்தையும் நான்தான் நிரப்பணும். நம்ம கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லாம் இன்னைக்கு நைட்டுக்குள்ள கிளம்பிடுவாங்க. நீ உன்னோட டாம்(Tom) ஆட்டத்தை நாளையிலிருந்து ஆட ஆரம்பி. உன்னோட ஜெர்ரி பயந்து ஓடாம நின்னு சமாளிப்பான். சரியா தங்கப் பொண்ணே?” என்று குழந்தைக்குச் சொல்வது போலச் சொல்லிவிட்டு, அவளின் கையில் சேலை இருந்த பையைக் கொடுத்தான்.

“ஓஹோ ! நாளைக்குத்தான் ஆடணுமா என்னோட ஆட்டத்தை?” என்று நக்கல் கலந்த இளக்காரப் புன்னகையுடன் கேட்டாள். அவன் தோளை மட்டும் குலுக்கிவிட்டு வெளியே சென்றான்.

அவளின் அந்தப் புன்னகைக்கான பிரதிபலிப்பை மறுநாள் அல்ல, அன்றே அறிந்து கொண்டான் மயூரன்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com