9 – காதலின் ரீங்காரம்

👁️ 1471 Views

தன் அந்த வலியை அவளுக்குக் காட்டாமல் மறைக்க, அவளின் பெட்டியில் இருந்த மீதி துணிகளையும், அவளின் கையில் இருந்த துணிகளையும் வாங்கி மீண்டும் அவன் அலமாரியில் வைக்க ஆரம்பித்தான்.

“நான்தான் வேணாம்னு சொல்றேனே… காதில் வாங்காமல் என்ன பண்ற? என்னால் உன்கூட ஒரே ரூமில் எல்லாம் இருக்க முடியாது. எனக்கு நீ இருக்கும் இடத்தில் இருக்கப் பிடிக்கலை…” என்றாள் கோபமாக.

“உனக்குப் பிடிக்கலைனாலும் வேற சாய்ஸே இல்லை. நீ என் கூட இதே ரூமில் தான் இருந்தாகணும்…” கண்டிப்புடன் உரைத்தான்.

“நான் உன்னைப் பிடிக்கலை பிடிக்கலைன்னு எத்தனை முறை சொல்றேன். அப்படி இருந்தும் உனக்கு இப்படிப் பேச வெட்கமா இல்லையா?”

“பொண்டாட்டிகிட்ட வெட்கப்பட்டா சம்சாரி ஆக முடியாதுடி தங்கப்பெண்ணே…” இயல்பு நிலைக்குத் திரும்பியவன் விளையாட்டு போலச் சொல்ல,

“ஒரு மஞ்ச கயிறை கட்டிட்டா பொண்டாட்டி உரிமை வந்துடுமா? இப்படி டீ போட்டு பேசுறது… தங்கப்பெண்ணே சொல்வதை எல்லாம் முதலில் நிறுத்து!”

“வெறும் கயிற்றில் மட்டும் முழு உரிமை கிடைச்சுடாது தான். ஆனா, நீ இங்க உட்கார்ந்திருக்கியே… அது இதை எல்லாம் விட அதிக உரிமையை உன்கிட்ட எனக்குக் கொடுக்குது…” என்றான் தன் நெஞ்சத்தைச் சுட்டிக்காட்டி.

தன்னைக் காதலும் கனிவுமாய்ப் பார்த்த அவனின் கண்களையும், அவன் சுட்டிக்காட்டிய மார்பையும் மாறி மாறி பார்த்தவள், “நீ… நீங்க… என்னை… என்னை லவ் பண்றீங்களா?” என்று அதிர்வாய் கேட்டாள்.

“அதுவே உனக்கு இப்ப தான் புரிஞ்சதா? முட்டாள்!” என்று செல்லமாகத் திட்டினான்.

“எதே? முட்டாளா? நீதான்டா முட்டாள்! உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா? நான் வேற ஒருத்தரை லவ் பண்றேன்னு தெரிந்தும்…”

“அது எனக்குத் தெரிவதற்கு முன்னாடியே நீ இங்கே வந்துட்டடி, மண்டு…” என்று அவன் கடிந்து கொள்ள,

அவளுக்கோ வாயடைத்துப் போன உணர்வு.

என்ன சொல்கிறான்? அப்படியானால் இவன் தன்னை முன்பே விரும்பினானா? எப்போதிருந்தது? அதுவும் அவளுக்குக் கூடத் தெரியாமல்.

“நீ… நீங்க… எங்கப்பா பார்த்த மாப்பிள்ளை தானே? அவர் தானே உங்க சம்பந்தத்தைக் கொண்டு வந்தது?” என்று கேட்டாள். அவள் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தாள். விக்ரமை மனத்தில் நினைத்துக் கொண்டிருந்ததால், மாப்பிள்ளை வீடு என்று பெற்றவர்கள் ஆரம்பிக்கவுமே மயூரனை பற்றி எந்த விவரமும் கேட்டுக் கொள்ளாமல் தவிர்த்தவள், தன் காதல் விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்து, அப்படியே பிரச்சினை வளர்ந்திருந்தது.

அவளின் உடைகளை எல்லாம் தானே எடுத்து வைத்துவிட்டு, அந்தச் சூட்கேஸை மூடி ஓரமாக வைத்தவன், கட்டிலில் அமர்ந்து, தன் அருகே தட்டிக் காட்டி, “உட்கார், உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…” என்றான்.

அவனைப் பார்த்து உதட்டை சுளித்துக் காட்டிவிட்டு, கண்ணாடியின் முன் இருந்த நாற்காலியை எடுத்து போட்டுக் கொண்டு அதில் அமர்ந்தாள்.

“தெளிவு தான்!” என்றவனின் உதடுகள் புன்னகையில் விரிந்தன.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

“பேச்சை மாத்தாம விஷயத்துக்கு வாங்க…” என்றாள் கண்டிப்புடன்.

அவளுக்குக் கோபம் வந்துவிட்டால் அவனை ஒருமையில் அழைப்பதையும், அது சற்றுத் தணிந்ததும் பன்மையில் அழைப்பதையும் கவனிக்கவே செய்தான்.

“இதை நான் நம்ம கல்யாணம் முடிந்ததும் பர்ஸ்ட் நைட்ல தான் உன்கிட்ட உன் கையைப் பிடிச்சுக்கிட்டே… உன் கண்ணைப் பார்த்துக்கிட்டே சொல்லணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்…” என்றவனின் உதடுகளில் ஒரு விரக்தி புன்னகை அரும்பி, கூம்பியது. அது மட்டுமா ஆசைப்பட்டான்? அதன்பின் எத்தனை எத்தனையோ எண்ணிலடங்கா ஆசைகள் அவனுள் இருந்தனவே! ஆனால், இப்போதோ?

தனக்குள் எழும்பிய ஏக்க பெருமூச்சை அவளுக்குக் காட்டாமல் மறைத்துக் கொண்டான் மயூரன்.

அவள் என்ன பாவனைக் காட்டுவது என்று அறியாதவள் போல லேசாக நெளிந்தாள்.

தன்னைத் தானே சமாளித்துக் கொண்டவன், “ஓகே, இப்பவும் நீ என் கண் எதிரே தான் இருக்க. என்ன நமக்குள் இப்ப இருக்கும் நிலைமை தான் வேற. இதுவும் ஒருநாள் கண்டிப்பா மாறும்னு நம்புறேன்…” என்று தீவிரமாகச் சொன்னவனுக்கு அவள் ஏதோ பதில் சொல்ல வர, கையைக் காட்டி தடுத்தான்.

“நெகட்டிவா எதுவும் சொல்லாதே! இது போல் சின்னச் சின்ன நம்பிக்கையைப் பிடிச்சுக்கிட்டுதான் எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிறேன். அதைக் கெடுக்காதே! நானும் மனுஷன்தான்! எனக்கும் வலிக்கும்! வலிக்குது! ரொம்பவே… ரொம்ப ரொம்பவே வலிக்குது! இதைக் கேட்டதும் உனக்குக் குளுகுளுன்னு இருக்கும். சந்தோஷப்பட்டுக்கோ… என் வலியில் உனக்குச் சந்தோஷம் கிடைக்குதுனா… உன்னோட அந்தச் சந்தோஷத்தை கூட ரசிக்கும் ரசிகன்தான் நான்!” என்றான் கர்வமாய்.

தன்னையும் மீறி அவனை வியந்து பார்த்த மதுமதி, சட்டென்று சுதாரித்துக் கொண்டு, “அப்ப நீங்க அப்பா பார்த்த மாப்பிள்ளை இல்லையா?” என்று யோசனையுடன் கேட்டாள்.

“இல்லை… உன்னை உங்க அப்பா வழி சொந்தக்காரர் வீட்டு விசேஷத்துக்கு வந்திருந்த போது பார்த்து, பிடிச்சு போய் நானே தான் எங்க அத்தை பெரியம்மாவை எல்லாம் கூட்டிட்டு வந்து பொண்ணு கேட்டேன். நீயும் அன்னைக்குச் சம்மதம் சொன்ன. அன்னைக்கு நான் எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா? அப்பவே உன்கிட்ட ஓடிவந்து என் மனசை சொல்ல ஆசையா இருந்தது. ஆனா…”

“அப்பவே நீங்க சொல்லியிருந்தா… எங்கப்பா விக்ரமை கொன்னுடுவேன்னு மிரட்டியதை பத்தி எல்லாம் கவலைப்படாம நான் உண்மையைச் சொல்ல வாய்ப்புக் கிடைச்சிருக்கலாம். நிலைமை வேற மாதிரி ஆகியிருந்திருக்கலாம்…” என்றாள் விரக்தியாக.

“ஆனா, எது நடக்கணும்னு நம்ம தலையில் எழுதியிருக்கோ அதுதான் நடக்கும் மது. உனக்கு ஏற்கெனவே ஒருத்தனை பிடிச்சிருக்கும். அவனுக்காக நீ சாகுறளவுங்கு கூடப் போவ. அது மூலமா எனக்கு உண்மை தெரிய வந்து நிலைமை மாறிப்போகும்னு நான் நினைச்சேனா என்ன? ஆனா எல்லாம் நடந்துச்சு….”

“அப்ப என் விக்ரம் செத்து போகணும்னு எழுதியிருக்குன்னு சொல்றீங்களா?” கோபமும் ஆதங்கமுமாகக் கேட்டவள், “அது விதி இல்லை. என் அப்பன் செய்த சதி! என்னால் அதை ஆக்ஸிடென்ட்னு நம்ப முடியலை‌…” என்றாள் குரலை உயர்த்தி.

“சரி… சரி… அமைதியாகு! அதைப் பற்றி நாம பேசுவோம். அதுக்கு முன்ன என்னைப் பற்றித் தெரிஞ்சுக்கோ. விக்ரம் செத்த பிறகு நல்லதா போச்சுன்னு நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதா நீ நினைக்கிற. ஆனா விக்ரம் செத்த பிறகும் நான் கல்யாணத்தை நடத்த வேணாம்னு தான் சொன்னேன்…” என்றவனை அவள் நம்பாமல் பார்க்க, அதன்பின் அவளின் தந்தை அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்தது, அவளை இழக்க விருப்பமில்லாமல் அவளைத் தான் திருமணம் செய்யச் சம்மதம் சொன்னது என எல்லாவற்றையும் சொன்னவன், “இப்ப நம்ம கல்யாணம் நடக்காம போயிருந்தா நீ எப்படியும் வேற ஒருத்தனை… ம்ப்ச்… அந்த மாதிரி என்னால் நினைச்சு கூடப் பார்க்க முடியலை. உன்னை என்னால் அப்படி அடுத்தவனுக்கு விட்டு கொடுக்க முடியாமத்தான் உன் இழப்பின் காயம் ஆறும் முன்பே இந்தக் கல்யாணம். உன் வீட்டில் நீ இருந்திருந்தாலும் உன் காயம் ஆற உன் அப்பா கண்டிப்பா உனக்கு டைம் கொடுத்திருக்க மாட்டார்…”

“அப்ப என்னைக் கல்யாணம் பண்ணி எங்கப்பாகிட்ட இருந்து காப்பாற்றிட்டு வந்ததா நினைக்கிறீங்களா? அதுக்குத்தான் இந்த விளக்கமா?” என்று எரிச்சலுடன் கேட்டாள்.

“பழிவாங்குறேன் அது இதுன்னு ஏதேதோ உன் மூளை யோசிக்கிது. அது உன் மனநிலைக்கு நல்லதில்லை மது. ஏன்னா, அது நீயே இல்லை.‌ உனக்குள்ள ஒரு அழகான மனசு இருக்கு. அந்த மனசை அழுக்காக்கிக்காதேன்னு தான் சொல்றேன். காலையில் நான் லேசா குரலை உயர்த்தியதுக்கே நடுங்கி கலங்கிட்ட. அந்தளவு உன் மனசு ரொம்ப ரொம்பவே மென்மையானது மது. நீ அப்படியே இளகின மனசாவே இருன்னு சொல்லலை. ஆனா சின்னச் சின்னச் சந்தோஷங்களைக் கூடத் தொலைச்சு, உன் மனசை இரும்பாக்கிக்காதேன்னு சொல்லதான் இப்ப பேசிட்டு இருக்கேன். உனக்கு என்ன இப்ப அவகாசம் வேணும்? உன் காயம் ஆறணும். அதுக்கு இந்தக் கல்யாண பந்தம் வேணாம்னு நினைக்கிற. ஓகே, உன் காயம் ஆறும் வரை நாம ஒரு நல்ல ப்ரெண்ஸா மட்டும் இருக்கலாம்…”

“போதும் நிறுத்துறீங்களா?” சட்டென்று கத்தினாள் மதுமதி.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com