👁️ 1471 Views
இப்போது என்ன என்று அவன் பார்க்க, “என் காயம் ஆறியதும் அப்படியே நாம கணவன் மனைவியா டூயட் பாடலாம்னு உங்களுக்கு நினைப்பா? அப்படி ஒரு நினைப்பு இருந்தால் அதை அழிச்சுடுங்க. அப்படி ஒரு நாள் வரவே வராது. இந்த ஜென்மத்தில் என்னால் என் விக்ரமை மறக்கவே முடியாது. அப்புறம் எதுக்கு இந்தக் கல்யாணத்தைத் தடுத்து நிறுத்தாம போனேன்னு நினைப்பீங்க. அது என் தப்பு இல்லை. என்னோட பிளான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறதோ அதுக்குப் பிறகு உங்களைப் பழி வாங்குவதோ கிடையாது. என்னோட திட்டத்தில் நீங்க இல்லவே இல்லை. ஆனா, நீங்களா வந்து தலையைக் கொடுத்துட்டீங்க…”
“திட்டமா? என்ன திட்டம்?”
“எங்கப்பா தான் அவரோட ஜாதி வெறிக்கு என் விக்ரமை கொன்னுட்டு அதை ஆக்ஸிடென்டுன்னு மாத்திட்டாரோன்னு சந்தேகமா இருக்கு. அதுதான் உண்மையா இருக்கும். ஏன்னா, அந்த மனுஷன் நான் கையை அறுத்துட்டு கிடந்தப்ப கூட உங்க கூட என் கல்யாணத்தை நடத்தி வைக்கதான் துடிச்சார். அப்படியிருக்கிறப்ப…”
“ஆனா அதுக்குப் பிறகு என்ன நடந்ததுன்னு உனக்குத் தெரியாது மது…” என்றவன் தான் திருமணத்தை நிறுத்தியது, அவளின் தந்தையும் மனம் மாறி விக்ரமை தேடிச் சென்றதை சொல்ல…
“என்ன, நீங்க கல்யாணத்தை நிறுத்தினீங்களா?” என்று நம்பாமல் கேட்டாள்.
“ஆமாம்…”
“நம்ப முடியலையே? கொஞ்ச நேரத்துக்கு முன்ன கூட என்னை வேற ஒருத்தனுக்கு விட்டு கொடுக்க முடியாதுன்னு சொன்னீங்க?”
“அது உண்மைதான். ஆனா… அப்ப விக்ரம் இருந்தான். நீயும் அவன் நினைப்பில்…” என்று தோளை குலுக்கினான்.
“அப்ப என் அப்பா விக்ரமை தேடிப் போனது நிஜமா?” என்று யோசனையில் நெற்றியை சுருக்கியபடி கேட்டாள்.
“ஆமாம், அது மட்டும் இல்லை… இன்னொரு உண்மையும் உங்கிட்ட சொல்லணும். அதுக்கு முன்னாடி உன்னோட திட்டம்னு ஏதோ சொன்னியே? என்ன திட்டம் அது? உன் திட்டத்தில் நான் எப்படிக் குறுக்கே வந்தேன்?” என்று கேட்டான்.
“அதான் சொன்னேனே… என் அப்பா தான் விக்ரமை எதுவும் செய்துட்டாரோன்னு எனக்குச் சந்தேகம். இப்ப நீங்க விக்ரமை தேடி என் அப்பா போனார்னு சொன்னதை வச்சு என் சந்தேகம் உறுதியாகுது…” என்று பல்லைக் கடித்தபடி சொன்னவள், “நான் அப்படி என்ன பெரிய தப்புப் பண்ணிட்டேன்? காதலிச்சது அவ்வளவு பெரிய தப்பா? அதுக்கு எத்தனை ஆட்டம்? அதுவும் என் விக்ரமை கொன்னுடுவேன்னு சொல்லி மிரட்டி மிரட்டியே ஒவ்வொரு முறையும் உங்க முன்னாடி என்னை நிக்க வச்சார். நீங்க பொண்ணு பார்க்க வந்த போதும், நிச்சயத்தின் போதும் நான் வெளியே சொல்லவும் முடியாம, உங்க பக்கத்தில் நிக்கவும் முடியாம எவ்வளவு துடிச்சுப் போனேன் தெரியுமா? அதுதான் எப்படியாவது கல்யாணத்தை நிறுத்தணும்னு போராடினேன். அதுக்கு எனக்குக் கிடைச்ச பரிசு… என் விக்ரம் என் அப்பாவால் அடிச்சு விரட்டப்பட்டது தான். அதான் சாகத் துணிஞ்சேன். அதுக்குப் பிறகும் அவர் மனம் இரங்கலை. ஆனால், நீங்க அவர் மாறிட்டார்னு சொல்றீங்க.
என் போன் இருந்தால் தானே நான் விக்ரம் கூடப் பேச நினைக்கிறேன்னு அதை உடைச்சவர் அவர்! அப்போ… விக்ரம் உயிரோட இருந்ததால்தான் நான் அவரைக் கல்யாணம் பண்ண நினைக்கிறேன்னு நினைச்சு, அவரைக் கொன்னுட்டு ஆக்ஸிடென்ட்னு கதை கட்டிவிட்டுருக்கார். அப்படிப்பட்டவரை சும்மா விடலாமா? நான் விக்ரமை கல்யாணம் பண்ண கூடாதுன்னு தானே அவரை என்னைப் பெத்தவர் கொன்னார்? அப்ப அவரோட மகளுக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம்னு ஒரு நிகழ்வே நடக்கக் கூடாதுன்னு நினைச்சேன். அதுதான் என்னோட திட்டம். கல்யாணம் பண்ணாம என் விக்ரமோட நினைவில் என் அப்பா முன்னாடியே நான் வாழணும். நான் ஏன் இப்படி இருக்கேன்னு எல்லாரும் அவரைக் கேள்வி கேட்கணும். அதுக்குப் பதில் சொல்ல முடியாம அவர் திணறணும். அவரோட ஒரே ஒரு பொண்ணு முதிர்கன்னியா வீட்டில் உட்கார்ந்திருக்கும் போது ஒவ்வொரு நாளும் அவருக்கு வலிக்கும் தானே? அந்த வலியை அவருக்கு நான் கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனால், அதைக் கெடுத்தது நீங்கதான்!” தந்தையைப் பற்றி ஆத்திரத்துடன் பேசிக் கொண்டிருந்தவள், இப்போது அவனை உக்கிரமாய்ப் பார்த்தாள்.

“நான்தான் சொன்னேனே… நான் வேண்டாம்னு சொன்னதும், வேற மாப்பிள்ளையை உங்கப்பா தேட ஆரம்பிச்சிட்டார்னு. அவர் எப்படியாவது உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருப்பார். நீயே இவ்வளவு திட்டம் போட்டு யோசிக்கும் போது உன்னைப் பெத்தவர் அதுக்கு மேல யோசிக்க மாட்டாரா என்ன?”
“அவர் பொண்ணு நான், அவரை விட இரண்டு மடங்கு யோசிக்க மாட்டேனா? அவர் வேற மாப்பிள்ளையைக் கொண்டு வந்து நின்னா… அவனை ஓட ஓட விரட்டியிருப்பேன்…”
“அப்ப என்னை ஏன் நீ அப்படி விரட்டலை?” என்று புருவத்தை உயர்த்திக் கேட்டான்.
“உங்களை இந்தக் கல்யாணத்தை நிறுத்த சொன்னேனா இல்லையா?” என்று கோபமாகக் கேட்டவள், “நீங்க நிறுத்தலை. வேற ஒருத்தனா இருந்தா நான் வேற ஒருத்தரை காதலிச்சு அவருக்காகச் சாகப் போனதுக்காகவே ஓடிப் போயிருப்பான். ஆனா. நீங்க என்ன பண்ணீங்க? எல்லாம் தெரிந்தும் என்னைக் கல்யாணம் பண்ணியே தீருவேன்னு நின்னீங்க. இதில் என்னைப் பெத்தவங்க வேற, அதையே காரணமா சொல்லி, பாரு… உன் காதலை எல்லாம் பெருசா நினைக்காம, உன்னைக் கல்யாணம் பண்ண ஒருத்தர் தயாரா இருக்கார். அவரைக் கல்யாணம் பண்ணிட்டு வாழுன்னு கட்டாயப்படுத்துறாங்க. நீங்களே பின்வாங்கியிருந்தால், என் திட்டப்படி எல்லாம் நடந்திருக்கும். நீங்க என்னோட மனசை பத்தி கூடக் கவலைப்படாம என்னைக் கல்யாணம் பண்ண துடிச்சது தான் எனக்கு வெறியை தந்துச்சு. நீயும் ஏன்யா இப்படிப் பண்றன்னு உன் மேல் கோபம். என் திட்டத்துக்குக் குறுக்க வந்து எல்லாத்தையும் கெடுக்கிறன்னு ஆத்திரம். என்னைக் கல்யாணம் பண்ண கட்டாயப்படுத்துற உன்னையும் சும்மா விடக் கூடாதுன்னுதான் கல்யாணம் நடக்கட்டும்னு விட்டேன்.
அதுக்குப் பிறகு மறுநாளே… உன் கூட வாழாம என் வீட்டில் போய் நீ கட்டிய தாலியோட நான் வாழாவெட்டியா உட்கார்ந்துட்டா… உன்னையும், என் அப்பனையும் சேர்த்தே பழிவாங்கிடலாம்னு நினைச்சேன். ஆனா, இப்பவும் என் திட்டத்தை எல்லாம் தவிடுபொடியாக்கி என்னை இங்கே இழுத்துட்டு வந்துட்ட. ஒரே வீட்டில் இருந்தால் நான் மனசு மாறுவேனு கனவு காணாதே! அது எப்பவும் நடக்காது! இன்னைக்கு நீ என்னை இங்கே பிடிச்சு வச்சுக்கிட்டதால் எப்பவும் இங்கேயே இருந்துடுவேன்னு நினைக்காதே! நான் இங்கேயே இருந்தால் நல்லதா போச்சுன்னு என் அப்பன் சந்தோஷமா இருந்திடுவார். அந்தச் சந்தோஷத்தை அவருக்கு நான் கொடுக்க மாட்டேன். இங்கேயே இருக்க வைக்க நீ என்னைக் கட்டாயப்படுத்தினால் உன்னையும் சும்மா விடமாட்டேன்… ” என்று அவள் கண்களை உருட்டி, சபதம் போடுவது போலச் சொல்ல,
“ஓ, மங்கம்மா சபதம் போல… இது மதுமதி சபதமா?” அவன் போலி வியப்புடன் கேட்க,
“என்ன நக்கலா?” சீறினாள் அவள்.
“ச்சே… ச்சே… நக்கல் இல்லை. உன் கோபமும் தப்பில்லை. உன்னை விரும்ப ஆரம்பிச்சதால் தான் உன்னை விட முடியாம நீயே மறுத்தும் நான் உன்னைக் கல்யாணம் பண்ணியிருக்கேன். அப்ப உன் கோபத்தையும் நான் தாங்கிக்கத்தான் வேணும். உன் மேல் வச்ச என்னோட காதல் எனக்கு எவ்வளவு முக்கியமோ… அதே போல நீ விக்ரம் மேல் வச்ச உன்னோட காதல் உனக்கு உயர்ந்ததா தெரிவதிலும் தப்பில்லை. ஆனால், நீ உண்மையா விக்ரமை லவ் செய்த, சரி. அதே போல் விக்ரமும் உன்னை உண்மையாத்தான் லவ் பண்ணினான்னு உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.
“என்ன உன்னோட நான் வாழ மாட்டேன்னு சொன்னதும், எங்க காதலையே சந்தேகப்படுறீயா?” உஷ்ணமாய்க் கேட்டாள்.
“உன் காதல் மேல் எனக்குச் சந்தேகமே இல்லை. ஆனால் விக்ரம்…”
“அவரும் என்னை உண்மையாத்தான் லவ் பண்ணினார்…” என்று அவள் உறுதியாகச் சொல்ல, மறுப்பாகத் தலையை அசைத்தான்.
“ஏய்…” என்று கத்தி அவள் ஏதோ சொல்ல வர, அவளைக் கையைக் காட்டி நிறுத்தியவன், கட்டிலிலிருந்து எழுந்து, அலமாரியை திறந்து, அன்று செல்வராஜ் கொடுத்த விக்ரம் பற்றிய விவரம் இருந்த கோப்பினை அவளிடம் கொடுத்தான்.
“என்னது இது?”
“பிரிச்சுப் பார்!” என்று அவன் சொன்னதும், தயக்கத்துடன் அதை வாங்கிப் பார்த்தாள்.
அதில் இருந்த பக்கங்களையும், விவரங்களையும் பார்த்து முதலில் குழம்பினாள்.
அவளின் குழப்பத்தைத் தெளிவாக்குவது போல், மயூரன் விக்ரமின் உண்மை முகம் என்ன? இங்கிருந்து சென்றவன் அஜயாக மாறியது… அதற்கு முன்னும் ஆள் மாறாட்டம் செய்தது. அதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அவனின் மீது வழக்கு கொடுத்திருப்பது… அவன் பெண்களை எதற்காகப் பயன்படுத்தினான்… என அனைத்தையும் சொல்லிக்கொண்டே வர,
“நோ… இல்லை… நீ பொய் சொல்ற… நான் நம்ப மாட்டேன்! என் விக்ரம் அப்படிக் கிடையாது. கிடையவே கிடையாது…” என்று வீறிட்டு கத்தியபடி, தன் கையில் இருந்த கோப்பினை தூக்கி மயூரனின் முகத்தின் மீதே விட்டெறிந்தாள் மதுமதி.
