Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
Interesting....I guess idhu namma Nithya mariappanநந்தவனம் நாவல்கள் தளம் நடத்தும் ரிலே போட்டிக்கு உங்களை எல்லாம் வரவேற்பதில் மகிழ்ச்சி நண்பர்களே!
25 எழுத்தாளர்கள் இணைந்து எழுதும் இந்த க்ரைம் தொடர்கதையின் பதிவு திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் காலை 9 மணிக்கு நந்தவனம் தளத்தில் நேரம் தவறாமல் பதியப்படும்.
இந்த ரிலே கதையைப் படிக்கும் வாசகர்களுக்குத்தான் போட்டி!
போட்டியின் விதிமுறைகள்!
கதையின் பதிவு போட்டதும் படித்துவிட்டு, யார் அந்த அத்தியாயத்தை எழுதியது என்று நீங்கள் யூகிக்கும் ஆசிரியரின் பெயரை ஒவ்வொரு அத்தியாயத்தின் கீழும் தளத்தில் உங்கள் பதிலை சொல்ல வேண்டும்.
தளத்தில் சொல்பவர்களின் பதில்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதனால், தளத்தில் ரிஜிஸ்டர் செய்து உங்கள் பதிலை சொல்லுங்கள்.
(பேஸ்புக்கில் சொல்லும் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது)
தளத்தில் நீங்கள் எத்தனை பதில்கள் சரியாக சொல்கிறீர்கள் எனக் கணக்கெடுக்கப்படும்.
நீங்கள் கண்டுபிடிக்கும் ஒரு ஆசிரியரின் பெயரைத்தான் சொல்லவேண்டும். இவர் அல்லது அவர் என்று இரண்டு மூன்று பதில்களை ஒரே நேரத்தில் சொல்லக்கூடாது
அத்தியாயத்தின் கீழ் நிறைய பேர் அந்த ஆசிரியரின் சரியான பெயர் சொன்னால், அதில் முதலாவதாக சொன்ன வாசகர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
அதிகமான சரியான அத்தியாயம் எழுதிய ஆசிரியர்களைக் கண்டுபிடிக்கும் 3 வாசகர்களுக்குப் பரிசு வழங்கப்படும்.
முதல் பரிசு ரூபாய் 1000 + ஒரு புத்தகம்
இரண்டாம் பரிசு ரூபாய் 700 + ஒரு புத்தகம்
மூன்றாம் பரிசு ரூபாய் 500 + ஒரு புத்தகம்
இதுதவிர, சிறப்பு பரிசாக இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆளுக்கு தலா ஒரு புத்தகம் பரிசாக வழங்கப்படும்.
வெளிநாடுகளில் வாழும் வாசகர்கள் சரியான பதில் சொல்லி போட்டியில் கலந்துகொண்டால், அவர்களுக்குப் புத்தகம் அனுப்புவது சாத்தியமா எனத் தெரியவில்லை (விசாரிக்கிறோம்). ஒருவேளை அவர்களுக்குப் புத்தகம் அனுப்ப முடியாத சூழ்நிலை வந்தால், அதற்குப் பதிலாக ஒரு புத்தகத்திற்கு ஈடான பணம் பரிசாக வழங்கப்படும்.
அதனால் அனைத்து வாசகர்களும் தயங்காமல் போட்டியில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
என்ன நண்பர்களே... போட்டியில் கலந்துகொண்டு அத்தியாயம் எழுதிய எழுத்தாளரின் பெயரை கண்டுபிடிக்க நீங்கள் தயாரா?
உங்களுக்கான முதல் அத்தியாயம் இதோ...
அத்தியாயம் – 1
சென்னை புறநகர்ப்பகுதி.
சனிக்கிழமை மாலை. நேரம் ஏழரையை நெருங்க இன்னும் சில நிமிடங்கள் இருந்தன.
இருண்டு கிடந்த வானம் எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யப் போகும் அறிகுறியைக் காட்ட, வானத்து நிலவு அச்சுறுத்தும் இருட்டைக் கண்டு பயந்து மேகத்துள் ஒளிவதும், பின் எட்டிப் பார்ப்பதுமாய் இருந்தது.
அங்கொன்றும், இங்கொன்றுமாய் தள்ளித் தள்ளி அமைந்திருந்த அந்தக் குடியிருப்புப் பகுதி நள்ளிரவு போல் கருத்துக் கிடக்க, ஒன்றிரண்டு தெருவிளக்குகள் மட்டும் சோகையாய் அழுது வடிந்து ஒளி வீசிக் கொண்டிருந்தது. எங்கேயோ தூரத்தில் ரயில் ஒன்று தடதடத்து சைரனுடன் கடந்து செல்ல, நாய் ஒன்று ஊளையிடும் சத்தம் சற்றுத் தொலைவில் கேட்டது.
அங்கிருந்த வீடுகளில், அனைவரும் மழையை எதிர்பார்த்துக் குளிருக்கு இதமாய் வீட்டினுள் முடங்கி இருந்தனர். சில வீடுகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒலித்துக் கொண்டிருக்க, ஒரு வீட்டில் ஓடிக் கொண்டிருந்த சீரியலில், பெண்மணி ஒருவர் ஒப்பாரி வைத்துக் கதறி அழுவது வெளியிலும் நாராசமாய் ஒலித்தது.
வெறிச்சிட்டிருந்த வீதிகளில் பைக் ஒன்று ஹெட்லைட் இல்லாமல் மெதுவாக வந்து ஒதுக்கமாய், இருட்டாய் இருந்த இடத்தில் தனது இயக்கத்தை நிறுத்தி மௌனமானது. சிறிது நேரம் கழித்து அந்த வண்டியிலிருந்து கறுப்பாய் இறங்கிய உருவம் ஒன்று சுற்றிலும் பார்வையை ஓட்டி நிதானமாய் நடந்தது. மெல்ல மழை தூறலிடத் தொடங்கி இருக்க வெளியே ஆள் நடமாட்டமின்றி வீதி எங்கும் வெறிச்சிட்டுக் கிடந்தது.
வானிலிருந்த வெண்ணிலவு அந்த உருவத்தை யாரென்று பார்க்க முயல, அதுவோ தலை முதல் கால் வரை கருப்பு கோட் அணிந்து, முகத்துக்கும் மாஸ்க் அணிந்திருந்தது. அடையாளம் கண்டு பிடிக்க முடியாத சோகத்தில் நிலவு மீண்டும் மேகத்தில் மறைந்தது.
நிதானமாய் நடந்த அந்தக் கருப்பு உருவம் இரண்டு தெரு தள்ளி, தொலைக்காட்சி அலறிக் கொண்டிருந்த வீட்டு முன் நின்று, ஒரு நொடி சுற்றிலும் கவனித்து காலிங் பெல்லை அலற விடக் கதவு திறந்தது.
சரியாய் ஒரு மணி நேரத்துக்குப் பின், வீட்டிலிருந்து வெளியே வந்த கருப்பு உருவத்தின் இதழில் ஒரு குரூரப் புன்னகை உறைந்திருந்தது.
நடந்து முடிந்த அசம்பாவிதத்துக்கு ஒரே சாட்சியான வெண்ணிலவு, அதிர்ச்சியில் இமைக்க மறந்து அந்த உருவத்தை வெறித்துக் கொண்டிருக்க, நிலவை நோக்கி ஒரு வெற்றிப் புன்னகை சிந்திய உருவம் சாவதானமாய் நடக்கத் தொடங்க மழை சடசடவென்று கொட்டத் தொடங்கியது.
இரண்டு தெரு தள்ளி நிறுத்தியிருந்த தனது வாகனத்தை நெருங்கிய கருப்பு உருவம், சில நிமிடங்களில் அந்த ஏரியாவை விட்டு வெளியேறி இருக்க, நிலவு அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.
*******
காலை ஒன்பது மணி.
கட்டிலில் குப்புறப்படுத்து நல்ல உறக்கத்தில் இருந்தவனை அலைபேசியின் அலறல் உணர்த்திவிட, கண்ணைத் திறக்காமலே கையை நீட்டி எடுத்துக் காதுக்குக் கொடுத்தான்.
“ஹல்லோ!” உறக்கம் கலையாமல் ஒலித்த ஹலோவில் எதிர்ப்புறம் சிரித்தது.
“என்ன யங் மேன், ஊருக்குப் போயிட்டு வந்து நல்ல தூக்கமா?” அவரது குரலில் முழுவதுமாய் உறக்கத்தைத் தொலைத்தவன் சட்டென்று எழுந்து அமர்ந்து அட்டென்ஷனுக்கு வந்தான்.
“குட்மார்னிங் சார்!”
“ம்ம்… என்ன மேன், பொண்ணு ஓகே ஆயிருச்சா? எப்பக் கல்யாணம்?”
“எஸ் சார், இன்னும் சிக்ஸ் மந்த்ஸ்ல சார்!”
“ஓ குட்! கங்க்ராட்ஸ் மை டியர் பாய்… பொண்ணு என்ன பண்ணுது? ஊருல போயி பொண்ணு பிடிச்சிருக்க, சொந்தமா?”
“இல்ல சார், பொண்ணோட அப்பாவும், என் அப்பாவும் சின்ன வயசுல இருந்து பிரண்ட்ஸ். நடுவுல கொஞ்சம் குடும்பம், குழந்தைகள்னு விட்டுப்போன பிரண்ட்ஷிப், வேற ஒரு பிரண்டு வீட்டுக் கல்யாணத்துல மீட் பண்ணவும், மறுபடியும் மலர்ந்திருக்கு. அப்படியே பேசிப் பேசி எங்க கல்யாணத்தை முடிவு பண்ணற அளவுக்கு வந்திருச்சு.”
“ஓ! பொண்ணு என்ன பண்ணுறா, பேர் கூட நைனிகா தான சொன்ன?”
“ம்ம், ஆமா சார். என் அத்தையோட பேரன்ட்ஸ் இங்க சென்னைல தான் இருக்காங்க. சோ, நைனிகா இங்க அவ தாத்தா, பாட்டி வீட்டுல இருந்துதான் காலேஜ் முடிச்சா… நல்ல ஜாப்க்கு டிரை பண்ணிட்டு இருக்கா. இப்போதைக்கு அவங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற, ‘குட்வில் டியூஷன் சென்டர்’ல டீச்சரா வொர்க் பண்ணிட்டு இருக்கா…”
“ம்ம்… பேச்சுலரா ஹாயா சுத்திட்டு இருந்த, இனி அதெல்லாம் முடியாது. சரி, எப்ப டியூட்டில ஜாயின் பண்ணற?”
“டுடே சார்… ரெடியாகி ஆபீஸ் வந்துட்டே இருக்கேன்.” பேசிக் கொண்டே எழுந்தவன் பாத்ரூமுக்குள் நுழைந்திருந்தான்.
“ஓகே, வா… நேர்ல பேசிக்கலாம்.” சொன்னவர் அழைப்பைத் துண்டித்து விட்டு நிமிர அவருக்கு முன்னில் மேஜை மீது பளபளப்பாய் அமர்ந்திருந்த பெயர்ப்பலகை ‘ஜார்ஜ் செபாஸ்டியன், கமிஷனர்’ என்றது.
மேஜை மீது விரித்திருந்த ஃபைலில் இருந்த புகைப்படத்தைச் சிறு கண் சுருக்கலுடன் நோட்டமிட்டவர், அவருக்கு முன்னில் நின்றிருந்த இன்ஸ்பெக்டர் திலீப் பிரபாகரனிடம் கேள்வியாய் நிமிர்ந்தார்.
“திலீப், இந்த இரட்டைக் கொலை நடந்து ஒரு வாரம் ஆச்சு. கேஸ்ல என்ன புராக்ரஸ் இருக்கு? காஸ் ஆஃப் டெத் என்னன்னு கண்டு பிடிச்சிட்டீங்களா?”
“சார், திருட்டுக்காக இந்தக் கொலை நடந்திருக்க தான் அதிகம் வாய்ப்பு இருக்கு. பெட் ரூம்ல எல்லாப் பொருளும் கலைஞ்சு கிடந்தது. அலமாரி திறந்து பொருளெல்லாம் சிதறிக் கிடந்துச்சு. வெளிநாட்டுல இருந்து வந்த அவங்க பையனுக்கு இதைப் பத்தின சரியான விவரம் தெரியல. நார்மலா லாக்கர்ல தான் நகை எல்லாம் வைக்கிற வழக்கம் இருக்குன்னு சொல்லுறார். இவங்க தனியா இருக்கறதை நல்லாத் தெரிஞ்ச யாரோதான் இந்தச் செயல்ல இறங்கி இருக்கணும்னு தோணுது சார்…”
“ம்ம்… ரொம்பக் கொடூரமா கொலை பண்ணிருக்கானே, போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் என்ன சொல்லுது?”
அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போதே திலீபின் அலைபேசி சிணுங்க, “எக்ஸ்கியூஸ் மீ சார்…” என்றவர் அழைப்பைக் காதுக்குக் கொடுத்தார். அடுத்த நிமிடம் அவரது முகம் அதிர்ச்சிக்குப் போனது.
“வ்வாட்? எப்போ?”
“ஓகே, நீங்க ஸ்பாட்டுக்குப் போங்க. நான் வந்திடறேன்.” திலீபின் வார்த்தைகளைச் செவி மடுத்த கமிஷனர் ஜார்ஜ் செபாஸ்டியன் கேள்வியாய் ஏறிட,
“சார், எஸ் ஐ சிவராம்தான் கால் பண்ணார். இந்த இரட்டைக் கொலை போலவே அடுத்து ஒரு இரட்டைக் கொலையும் நடந்திருக்கு சார்…” என்றவரின் பதற்றத்தில் கமிஷனரின் முகம் அதிர்ச்சிக்குப் போக, இதழ்கள் “வ்வாட்?” என்றது திடுக்கிடலாய்.
சரியாய் அந்த நேரத்தில் கமிஷனரின் அறைக்கதவைத் திறந்து, “மே ஐ கம் இன் சார்…” எனப் பர்மிஷன் கேட்டு நின்றவனைக் கண்டதும் அவரது முகம் மலர,
“ஹேய்! வா பிரதாப்…” என்றவர், சற்றே ரிலாக்ஸாய் இருக்கையில் அமர்ந்து அவனை ஏறிட்டார்.
உள்ளே வந்தவன், “சார்…” என்று கமிஷனருக்கு சல்யூட் வைத்துத் தளர,
காக்கி யூனிபார்முக்கு என்றே கச்சிதமாய் அளவெடுத்த உருவம் போல் கம்பீரமாய் அவர் முன் நின்றிருந்தான் பிரதாப் சக்கரவர்த்தி.
அசிஸ்டன்ட் கமிஷனர் பிரதாப் சக்கரவர்த்தியைக் கண்டதும், இன்ஸ்பெக்டர் திலீப் அட்டென்ஷனுக்கு வந்து ஒரு சல்யூட்டைக் கொடுக்க, கமிஷனர் பிரதாப்பிடம் நிமிர்ந்தவர் சுருக்கமாய் விஷயத்தைச் சொல்ல, அவனது புருவங்கள் அழகாய் மேலேறி முடிச்சிட்டுக் கொண்டன.
“என்ன, லாஸ்ட் வீக் நடந்தது போலவே ரெண்டாவது கொலையா?”
“பிரதாப்! நீ உடனே திலீப் கூட ஸ்பாட்டுக்குக் கிளம்பு. போற வழியில லாஸ்ட்வீக் நடந்த மர்டர் கேஸ் ஹிஸ்டரியை ஸ்டடி பண்ணிக்க. இந்த நிமிஷத்துல இருந்து இந்தக் கேஸ்க்கு நீ சார்ஜ் எடுத்துக்க. திலீப், நீங்க பிரதாப்க்கு வேண்டிய ஹெல்ப் பண்ணுங்க. எனக்கு உடனே கேஸ் பத்தின டீடைல்ஸ் வரணும்.” என அதிகாரத்துடன் சொல்லி முடிக்க, இருவரும் அவருக்கு சல்யூட் வைத்துக் கிளம்பினர்.
பிரதாப் சக்கரவர்த்தி என்றாலே, கமிஷனர் ஜார்ஜ்க்கு எப்போதும் சற்று ஸ்பெஷல்தான். ஐபிஎஸ் முடித்து அசிஸ்டன்ட் கமிஷனராய் பொறுப்பேற்றது முதல் காவல் துறையில் அவனது ஈடுபாடும், பங்களிப்பும் மிக அதிகம். அவனிடம் ஒரு கேஸை ஒப்படைத்து விட்டால், அதற்குத் தீர்வு நிச்சயம் என்பதை இதுவரை அவன் கண்டுபிடித்துக் குளோஸ் செய்த கேஸ் ஃபைல்கள் உறுதி கூறின.
சரியாய் ஒரு மணி நேரப் பயணத்தில் இருவரும் அந்தப் புறநகர்ப் பகுதியை அடைய, அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்துக் கொண்டிருந்த வீடுகளுக்கு மத்தியில், ஒரு வீட்டின் முன் மக்கள் முகத்தில் அப்பிய கவலையுடனும், அதிர்ச்சியுடனும் கூடியிருக்க, காவல் துறையினர் அவர்களைக் கட்டுப்படுத்தி ஓரமாய் நிற்க வைத்தனர்.
சுற்றுப்புறத்தைத் தனது கருப்புக் கண்ணாடி அணிந்த லேசர் கண்ணால் ஊடுருவிக் கொண்டே போலீஸ் ஜீப்பிலிருந்து இறங்கினான் பிரதாப்.
அவர்களைக் கண்டதும் முன்னமே அங்கு போலீஸாருடன் வந்திருந்த சப் இன்ஸ்பெக்டர் சிவராம் அருகே ஓடி வந்தார்.
“சார்…” என சல்யூட் வைத்துத் தளர்ந்தவரிடம் தலையாட்டிக் கொண்டே,
“பாரன்ஸிக் பீப்பிள்க்கு சொல்லியாச்சா? பப்ளிக் எதுவும் டிஸ்டர்ப் பண்ணிடலயே?” எனக் கேட்டபடி குழுமியிருந்த கூட்டத்தைக் கடந்து கண்ணிலிருந்த கருப்புக் கண்ணாடியைக் கழற்றி பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டே அந்த வீட்டுக்குள் நுழைந்தான்.
மூன்று படுக்கையறைகள் கொண்ட சற்றே விசாலமான வீடு அது. மேலே மாடியில் ஒரு வீட்டை வாடகைக்குக் கொடுத்திருந்தனர்.
‘கிரைம் சீன், டு நாட் கிராஸ்’ எனப் போலீஸாரால் டேப் ஒட்டப்பட்டிருந்த இடத்தில் நுழையவும், குப்பென்று அடித்த இரத்த வாடையில் அனிச்சையாய் முகம் சுருங்க, அங்குப் பார்வையைப் பதித்தவன் விழிகள் அதிர்ச்சியில் சுருங்கியது.
கசாப்புக் கடைக்குள் நுழைந்தது போல், அந்த அறை முழுவதும் அங்கங்கே இரத்தம் தெறித்திருக்க, ஈக்கள் கூட்டமாய் மொய்த்துக் கொண்டிருந்தன. இரத்தத்தின் வாடை இம்சையாய் மூக்கில் நுழைந்து வயிற்றைப் பிரட்டியது. கர்ச்சீப்பால் மூக்கைப் பொத்திக் கொண்டவன், அந்த இரத்தத்துக்குத் சொந்தமான சடலங்களில் பார்வையைப் பதித்தான்.
மத்திய வயது கடந்த பெண்மணி ஒருவர், நாற்காலியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருக்க, உதிரம் இழந்து வெளிறிப் போய் அங்கங்கே ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்க, அவரை அளந்தவன் இதழ்கள், ‘வெரி க்ரூயல்!’ என முணுமுணுத்தன.
நாற்காலியோடு சேர்த்துக் கட்டப்பட்ட ஒரு கையிலிருந்த மணிக்கட்டில் முக்கிய நரம்பு முறிக்கப்பட்டிருக்க, அதிலிருந்து கீழே கொட்டிய இரத்தம் சிறு குளமாய் நாற்காலிக்குக் கீழே தேங்கி ஈக்களின் உறைவிடமாயிருந்தது.
மேலே நிலைத்து உறைந்து போன விழிகளில் பெரும் அச்சம் இன்னும் மிச்சமிருந்தது. அவரது வாயில் செல்லோ டேப் ஒட்டப்பட்டு அதன் மீதே, சாக்கு தைக்கும் பெரிய ஊசியால் வாய் முழுதும் தைக்கப்பட்டிருக்க, வாயிலிருந்தும் அங்கங்கே வழிந்த உதிரத்தில் அப்பெண்மணியின் முகமே நீர் வைத்து, வீங்கி விகாரமாய் மாறியிருந்தது. இவையெல்லாம் உயிருடன் இருக்கும்போதே செய்யப்பட்டிருக்க வேண்டும் எனத் தோன்ற யோசனையுடன் பார்த்து நின்றான் பிரதாப்.
அதைத் தாண்டிப் பார்வையை நகர்த்த, சற்றுத் தள்ளி இன்னொரு நாற்காலியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருந்த அவரது கணவனின் சடலத்தைக் கண்டதும் கண்களைச் சுருக்கினான் பிரதாப்.
அவரது கண்கள் இருந்த இடத்தில் இரண்டு துளைகள் இருக்க, கண்ணிலிருந்து வழிந்த உதிரம், அங்கங்கே சுற்றிலும் தெறித்திருந்தது. டிரில்லிங் மெஷின் போன்ற சாதனத்தால் கண்கள் துளையிடப் பட்டிருக்க வேண்டும் எனப் புரிந்தது.
அவரது வாயும் செல்லோ டேப்பால் ஒட்டப்பட்டிருக்க, கண்ணிலிருந்து வழிந்த உதிரம் கீழே வழிந்து அவர் அணிந்திருந்த வெள்ளை உள் பனியனைச் சிவப்பாக்கி இருந்தது. அவர் கையிலும் மணிக்கட்டு முறிக்கப்பட்டு நாற்காலிக்குக் கீழே உதிரம் சிறுகுளமாய் தேங்கி இருக்க ஈக்கள் அதை முற்றுகை இட்டிருந்தன.
அறையைச் சுற்றிலும் பார்வையை ஓட்டினான் பிரதாப்.
அலமாரி, மேஜை எல்லாம் திறந்து கலைந்து கிடக்க, அறை முழுவதுமே சாதனங்கள் சிதறிக் கிடந்தது.
சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தில் பெரியமுள், சின்னமுள் இரண்டும் இனி நகர மாட்டோம் என்று 7.30 ல் ஸ்டிரைக் செய்து நின்றிருந்தன.
“இவங்களைப் பத்தி விசாரிச்சிங்களா? இவங்க மட்டும் தான் வீட்டுல இருக்காங்களா?” திலீபிடம் கேட்டான்.
“எஸ் சார், இவர் போன மாசம் தான் கவர்மென்ட் சர்வீஸ்ல இருந்து ரிட்டயர் ஆகிருக்கார். ஒரே பொண்ணு, பெங்களூர்ல இருக்காங்க. இந்த ஏரியாவுக்கு இவங்க வீடு கட்டி வந்து ஏழு வருஷம் ஆச்சு. எல்லாரு கிட்டயும் நல்லாப் பேசிப் பழகற டைப்னு சொன்னாங்க.”
“ம்ம், பொண்ணுக்கு இன்ஃபார்ம் பண்ணியாச்சா?”
“எஸ் சார், வந்திட்டு இருக்காங்க?”
“ம்ம்…” என்றவன் அந்த வீட்டின் ஒவ்வொரு இடத்தையும் இன்ச் இன்ச்சாய் ஏதாவது தடயம் கிடைக்கிறதா எனப் பார்வையால் அலசிக் கொண்டே, “திலீப், திருட வந்தவன் இத்தனை குரூயலா கொலை பண்ண வேண்டிய அவசியம் என்ன? அதுவும் ஒரு வாரத்துக்கு முன்னாடி நடந்த கொலையும் இதே போல நடந்திருக்குன்னா, இது திருட்டுக்காக நடந்த கொலை போலத் தெரியலயே.” யோசனையுடன் மோவாயைத் தேய்த்துக் கொண்டே கேட்க,
“எனக்கும் அதான் குழப்பமா இருக்கு சார்…” என்றான் திலீப்.
“பாரன்ஸிக் பீப்பிள் வந்துட்டாங்க சார்…” சிவராம் அவர்களிடம் வந்து சொல்ல,
“ம்ம்” எனத் தலையாட்டியவன் பார்வை இன்னும் கூர்மையாய் சுற்றிலும் வலம் வர, கட்டிலுக்குக் கீழே குனிந்து பார்த்தவனின் பார்வைக்குக் கிடைத்த அந்தப் பொருள் வித்தியாசமாய் தோன்ற அதை எடுத்துப் பத்திரப் படுத்தியவன் பாரென்சிக் ஆள்களிடம் சென்றான்.
“ரொம்பவே வெல் பிளான்டு மர்டராத் தெரியுது. எதையும் மிஸ் பண்ணாம எல்லா சாம்பிளும் எடுத்துக்கங்க. கைரேகை, புட்பிரிண்ட்ஸ் எதையும் விட்டுடாம ஏதாவது தடயம் கிடைக்குதான்னு பாருங்க.” என்றவன் அவர்களுக்கு வழிவிட்டு விலகி நிற்க,
“எஸ் சார்…” எனக் கையில் கிளவுஸும், அவர்களின் உபகரணங்களுடனும் உள்ளே நுழைந்தது ஐந்து பேரைக் கொண்டிருந்த பாரன்சிக் டீம்.
“திலீப், யாரு முதல்ல கிரைம் சீனைப் பார்த்தது?”
“சிவா, அவரை அழைச்சிட்டு வா…” என எஸ் ஐ சிவராமிடம் கூறிய திலீப்,
“சார், பெயின்ட் கான்ட்ராக்டர் சாய்ராம்னு ஒருத்தர்தான் முதல்ல பார்த்திருக்கார். மேல மாடில பெயின்டிங் வொர்க் நடந்திட்டு இருக்கு.”
“ஓ! மேல யாரு இருக்காங்க?” என்றவனின் பார்வை மேலே மாடியை நோட்டமிட,
“அந்த வீடு இப்பக் காலியா தான் இருக்கு சார். கொஞ்சம் சின்னச் சின்ன மராமத்து வேலை முடிச்சு இப்ப பெயின்டிங் நடந்திட்டு இருக்கு.” தீபக் சொல்லும்போதே அந்த பெயின்ட் கான்ட்ராக்டர் சாய்ராம் வந்தான்.
முகத்திலேயே வடநாட்டுச் சாயல் தெரிய கண்களில் நிறைந்த கலவரத்துடன், அவன் முன்னில் பணிவுடன் நின்று, “நமஸ்கார் சார்…” என்றவனைத் தனது லேசர் கண்களால் துளைத்தான் பிரதாப்.
“உன் பேரென்ன? எவ்ளோ நாளா இங்க பெயின்டிங் வொர்க் நடக்குது?”
“சா..ப், நா..நான் சாய்ராம் சாப், ரெண்டு வாரமா மேல வீட்டுல பெயின்டிங் வேலை நடக்குது சாப்… டெய்லி காலைல 6 மணிக்கு என்னோட ஆளுங்க 5 பேரு இங்க பெயின்ட் பண்ண வந்திரும் சார். சாயந்திரம் 6 வரைக்கும் வேலை செய்திட்டுக் கிளம்பிருவாங்க. நான் காலைல இங்க வந்து பார்த்திட்டுச் செய்ய வேண்டிய வேலையைச் சொல்லிட்டு, வேற ஒரு சைட்டுல நடக்குற வேலையைப் பார்க்கப் போயிருவேன் சாப்…”
அவனது முகத்தை ஆழ்ந்து நோக்கிக் கொண்டே, “ம்ம், நேத்து பெயின்டிங் பண்ண யார் வந்திருந்தா?” என்றான் பிரதாப்.
“நேத்து ஃபுல்லா மழை விட்டுவிட்டுப் பெய்திட்டு இருந்ததால யாரும் வேலைக்கு வரல சாப்… சனிக்கிழமை சம்பள நாள். யாருக்கும் சம்பளம் கொடுக்கல. அதான் இந்த வாரக் கூலிப் பணத்தை வாங்க காலைல 9 மணிக்கு வந்தேன் சாப். காலிங்பெல் அடிச்சும் திறக்கல. முன் வாசல் கதவு லேசா திறந்திருந்துச்சு. டீவி ஓடிட்டு இருக்க சவுண்டு கேட்டுச்சு. அதான், உள்ள வந்து பார்த்தேன் சார்… பா..பார்த்தப்ப தான்… இ..இவங்க இ..இப்படி…” என்றவன் கண்களில் வழியும் அச்சத்துடன் நிறுத்த சிவாவை ஏறிட்டான் பிரதாப்.
“ம்ம்…” என்றதும் அந்த சாய்ராமைத் தனியே அழைத்துச் சென்ற சிவா, அவனைப் பற்றிய விபரங்களை எல்லாம் வாங்கிக் கொண்டு,
“எப்ப விசாரணைக்குக் கூப்பிட்டாலும் ஸ்டேஷன் வரணும்.” எனச் சொல்ல திகில் மாறாத முகத்துடனே தலையாட்டினான் சாய்ராம்.
பிரதாப், திலீப்பை அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்று பார்வையிட, இரண்டு படுக்கையறை கொண்ட அந்த வீட்டில் பெயின்ட் சம்மந்தப்பட்ட பொருள்கள் தவிர வேறெதுவும் இருக்கவில்லை.
அங்கிருந்தே சுற்றிலும் இருந்த வீடுகளை நோக்கினான். ஒவ்வொரு வீடும் சற்றுத் தள்ளித் தள்ளி இருக்க, கீழே வந்து வீட்டுக் காம்பவுண்டுக்கு வெளியே பார்வையிட்டான்.
வீட்டு மராமத்துப் பணிக்காய் வாங்கிய மணலும், செங்கல்லும் மிச்சமிருக்க, மணலில் புதைந்திருந்த ஒரு இரும்புப் பலகை பிரதாப்பின் கண்ணில் பட்டது. குனிந்து அதை எடுக்க, ‘வீடு வாடகைக்கு’ என எழுதியதில் வீடு என்பதில் பெயின்ட் கொட்டி அழிந்து போயிருந்தது. அதை ஓரமாய்ப் போட்டுவிட்டு, வேறு எதுவும் கிடைக்காததால், மீண்டும் வீட்டுக்குள் வந்தவன் ஃபாரன்ஸிக் டீம் ஹெட் சாரங்கனிடம் வந்தான்.
“சாரங்கன், கொலை எந்த டைம்ல நடந்திருக்கும்?” என்றான்.
“அப்ராக்ஸ் சொல்லணும்னா, நேத்து ஈவனிங் 7.30 ல இருந்து 9.30 மணிக்குள்ள நடந்திருக்கணும் சார். ஒவ்வொரு இரத்தத் துளியும் ஒவ்வொரு மாதிரி உறைஞ்சிருக்குறது பார்த்தா, கொஞ்ச கொஞ்சமாதான் ஒவ்வொரு பார்ட்லயும் பிளட் வெளியேறி இருக்கு.”
“ம்ம், என்ன வெப்பன்ஸ்னு தெரியுதா?” ஆல்ரெடி மனத்தில் ஊகித்திருந்தாலும் மீண்டும் உறுதி செய்யக் கேட்டான்.
“சார், கொலையாளி ரெண்டு பேரையும் நாற்காலியோட சேர்த்துக் கட்டிப் போட்டுட்டு, வாயையும் டேப் ஒட்டிருக்கான். அப்புறம் அவங்க கையில வெயினைக் கட் செய்து பிளட் லாஸ் ஆகி, அவங்க மயங்கறதுக்கு முன்னாடி ஆணோட கண்ணுல டிரில்லிங் மெஷின் யூஸ் பண்ணித் துளை போட்டிருக்கான். லேடி வாயையும் உணர்வோட இருக்கும்போதே ஊசியால தச்சிருக்கணும்.
ரொம்ப குரூயலா, ரசிச்சு இதெல்லாம் பண்ணிருக்க போலத் தெரியுது.”
“ம்ம்…”
“ஐ திங்க், இது சாதாரண மைண்ட்செட் உள்ள ஒருத்தன் செய்த கொலையா தெரியல. ஒரு சைக்கோவால தான் இப்படில்லாம் க்ரூயலா கொலை பண்ண முடியும்.”
“ம்ம்… ஓகே சாரங்கன், நீங்க சீக்கிரமே உங்க டெஸ்ட்டிங் முடிச்சு ரிப்போர்ட்டை அனுப்புங்க.” என்ற பிரதாப்,
“சிவா, பாடியை போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பிடுங்க. திலீப், கிளம்பலாம்.” என்றவன் ஜீப்பை நோக்கி நடக்க திலீப் தொடர்ந்தான்.
“திலீப், லாஸ்ட் வீக் கொலை நடந்த ஸ்பாட்டுக்குப் போகலாம்.” எனக் கூற, தலையாட்டிய திலீப் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து ஜீப்பை எடுக்க, பிரதாப் விழிகளைக் கவ்வியிருந்த கருப்புக் கண்ணாடி வழியே, அந்த வீட்டைக் கருப்புப் பார்வையுடன் நோக்கியபடியே கடந்தான்.
மனத்தில் இதுவரை கண்ட காட்சிகளைக் கோர்வையாய் ரீவைன்ட் செய்து ஓட்டிக் கொண்டிருந்தவன் கைகள், போன வாரம் இதே போல் நடந்த மர்டர் கேஸ் பைலின் உள்ளே இருந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டைத் திறக்க கண்கள் வாசிக்கத் தொடங்கியது.
உதிரம் உறையும்…
Welcome to Nandhavanam Novels, your ultimate destination for exploring the rich and vivid creations in Tamil. Our mission is to celebrate and promote story writing, showcasing a diverse array of novels that reflect the culture, traditions, and contemporary issues of the society.
Started in 2019 by Ezhilanbu, We curate a wide selection of works, from classics to emerging voices, ensuring that every reader finds something that resonates with them. Whether you’re a lifelong fan of Tamil stories or a newcomer eager to discover its beauty, we strive to provide an engaging and enriching experience.
Explore the captivating realm of Tamil novels with us, where every story unfolds a new adventure and each page reveals a hidden gem. Enjoy your reading journey.