மாதா மாதம் வீட்டு வாடகையைக் கலிவரதனிடம் பணமாகக் கொடுப்பது மாதேஷின் வழக்கம். அந்த மாதம் சில காரணங்களால் இரண்டு நாட்கள் தாமதமாகியிருக்க, அன்று கொடுத்துவிட வேண்டும் எனக் கலிவரதன் வீட்டிற்கு வெளியே நின்று கதவை தட்டினான். ஆனால், கதவு திறந்துகொண்டது.
அங்கிள் என்று அழைக்கப்போனவன் அங்கே கூடத்தில் இருந்த தொலைக்காட்சியில் தெரிந்த காட்சியில் அப்படியே சிலையாக நின்றுவிட்டான்.
தொலைக்காட்சியில், படுக்கையறையில் அமர்ந்து, குழந்தைக்கு அமுதூட்டிக்கொண்டிருந்த அவனின் மனைவி கீதா அல்லவா இருந்தாள். அதுவும், அவள் அன்று உடுத்தியிருந்த உடை.
“நீங்க வாடகை கொடுத்துட்டு வாங்க மாதேஷ். பாப்பா தூக்கத்துக்குச் சிணுங்க ஆரம்பிச்சிட்டாள். அவளைத் தூங்க வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சற்றுமுன் படுக்கையறைக்கு அவள் சென்றதை பார்த்துவிட்டுதானே வந்தான். அதன்பின்னான காட்சி… வீட்டு ஓனரின் தொலைக்காட்சியில் நேரடியாக! அவன் தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது.
அவனைப் பார்த்துவிட்ட கலிவரதன் வேகமாகத் தொலைக்காட்சியை அணைத்தார்.
“என்ன… என்ன இது… என் கீதுமா… இங்க இப்படி… எப்படி?” விரைந்து அவரின் அருகில் சென்று மாதேஷ் துடித்துப்போய்க் கேட்டான். அவனின் நாடி நரம்புகளெல்லாம் துடித்தன.
தன் அதிர்ச்சியிருந்து அவன் வெளியே வரும்முன்னே…
“எல்லாம் பார்த்துட்ட போல. இனி மறைக்க ஒன்னுமில்லை மாதேஷ். லைவ் ஷோ பார்க்கிறயா?” என்று கிண்டலாகக் கேட்ட கலிவரதன், மீண்டும் தொலைக்காட்சியைப் போட, அதில் தங்கள் ரூமில் வேறுயாருமில்லையே என்ற நினைவில், கீதா குழந்தைக்கு அமுதூட்டிவிட்டு, உள்ளாடையைச் சரி செய்து கொண்டிருந்தது இங்கே தெரிந்தது.
“ஐயோ! கீதா!” மாதேஷ் துடித்துக் கத்தியபடி அங்கேயிருந்த தண்ணீர் ஜாடியை தூக்கி தொலைகாட்சியின் மீது விட்டெறிய அது கீறல் விட்டு அணைந்து போனது.
“அடடே! உனக்குக் கோபம் எல்லாம் வருமா மாதேஷ்? இப்பதான் உன்னை இப்படி ஒரு கோபத்தோட பார்க்கிறேன். பொண்டாட்டியோட மானத்துக்கு ஒன்னுனா புள்ளைப்பூச்சி புருஷன் கூடப் புயலாவான்னு இப்பதான் புரியுது மாதேஷ். ஆனா பாரு நீ இந்த டீவியை உடைச்சுட்டா மட்டும் போதுமா?” என்று வக்கிர சிரிப்புடன் கேட்டார் கலிவரதன்.
ஆத்திரம் பொங்க அவரின் சட்டையைப் பிடித்த மாதேஷ், “யோவ்! என் வீட்டுப் பெட்ரூமில் நடப்பது இங்கே எப்படி? என் கீதுமா…” அதற்குமேல் கேட்க முடியாமல் திணறினான் அந்த அப்பாவி கணவன்.
அவனின் கையை விலக்கியக் கலிவரதன் “இதுமட்டும் இல்லை மாதேஷ், இன்னும் இருக்கு பார்க்கிறயா?” கேலியாகக் கேட்டபடி அவரின் கைப்பேசியில் இருந்த சில காட்சிகளைக் காட்டினார். அது அவர்களின் அப்பட்டமான அந்தரங்கம்.
“ஆஆ…” அதிர்ச்சி தாங்காமல் அலறிக் கத்தினான்.
“கத்தாதே மாதேஷ்! வெளியே விஷயம் தெரிந்தால் உனக்குத்தான் அவமானம்.” அலட்டிக்கொள்ளாமல் சொன்ன கலிவரதன், “அப்புறம் பல நாள் உங்க வீட்டில் ராணி ராஜியம் போல” என்று கண்சிமிட்டி கலிவரதன் கேட்க, முகத்திலேயே அடித்துக்கொண்டு அழுதான்.
அவனுக்கு அந்த நொடி அதிர்ச்சியில் என்ன மாதிரியான எதிர்வினை காட்டுவது என்றே தெரியவில்லை.
“உன் பொண்டாட்டி கீதா ரொம்ப அழகு மாதேஷ். அவள் அப்பப்ப மார்டன் ட்ரெஸ் போடுவதைப் பார்த்திருக்கேன். ஆனால், அவளுக்கு அதெல்லாம் நல்லாவே இல்லை. அதுவும் பேண்ட், ஷர்ட் சுத்தமா பிடிக்கலை. அவள் சேலை கட்டி, பூ வைத்து அலங்கரித்து அழகா நளினமா நடந்து நைட் உன் பக்கத்தில் வருவாளே… அப்படியே அவள் என் பக்கத்தில் வருவதுபோல் இருக்கும் மாதேஷ்!” என்று கலிவரதன் இளித்துக்கொண்டே கூற, அவரை அடிக்கப் பாய்ந்தான் மாதேஷ்.
அவனிடமிருந்து லாவகமாக விலகி அவனைப் பிடித்துத் தள்ளிவிட்ட கலிவரதன், “நீ எல்லாம் அவளுக்கு மேட்சே இல்லை மாதேஷ். அதுவும் உன்னை விட உன் பொண்டாட்டி கொஞ்சம் வளர்த்தி. அவளுக்குக் கொஞ்சமும் பொறுத்தமில்லாத உன்னைப் போய்க் கட்டிக்கிட்டு… ம்ப்ச், தப்பு பண்ணிட்டாள். அதில் எனக்கு ரொம்பக் குறை மாதேஷ்…” என்ற கலிவரதன், இன்னும் என்னென்னவோ பேசினார்.
மாதேஷை காதலித்தபோது கீதா அவனைப் பார்க்க அங்கே வரும்போதே கலிவரதனுக்கு அவளின் மீது ஒரு கண்ணாம்.
அதனால் மாதேஷுக்குத் திருமணம் நடந்தபோது, வீட்டிற்கு வெள்ளை அடிக்க அவரே முன் வந்தாராம். “என் வீட்டில் பேச்சுலரா தங்கியிருந்த உனக்காக இது கூடச் செய்ய மாட்டேனா மாதேஷ்? நீ வேலைக்குப் போயிட்டு வா. நான் பார்த்துக்கிறேன்.” என்றார்.
அப்போதே அவனின் படுக்கையறையில் ரகசிய கேமிராவை அவர்கள் கண்டுபிடிக்க முடியாதவாறு வைத்துவிட்டாராம். அவன் திருமணம் முடிந்து கீதாவுடன் வாழ ஆரம்பித்த நாளிலிருந்து, அவர்களின் ஒவ்வொரு தருணத்தையும் இவர் இங்கேயிருந்து பார்த்துக்கொண்டிருந்தாராம். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்.
கேட்டவனுக்கு, காணொளியை பார்த்தவனுக்கு எப்படி இருக்கும்? இப்படி ஒன்று வீட்டில் இருக்கலாமோ என்ற சந்தேகம் வந்தால்தானே கேமிரா இருந்ததை தேடி அறிந்திருப்பான். கலிவரதனின் பெரிய மனிதத் தோரணை, நல்லவன் என்ற முகத்தை மட்டும் வெளிப்படையாகக் காட்டியதை எல்லாம் நம்பி ஏமாந்தல்லவா போனான். இப்படி அடிமுட்டாளாக இருந்திருக்கிறோமே என்று நினைத்த மாதேஷ் அவ்விடத்திலேயே உயிரோடு மடிந்து போனான்.
“ஏன்… ஏன் இப்படிச் செய்தீங்க? உங்களைப் போய் எவ்வளவு நல்லவருன்னு நினைச்சேன். நீங்க போய்…” என்று மாதேஷ் கதறிக்கொண்டிருந்தபோது,
“யாருங்க அது சும்மா கத்திட்டே இருப்பது? பிரஷர் கூடிப்போச்சுன்னு கொஞ்ச நேரம் கண்ணசந்தேன். தூங்க முடியாமல் ஒரே சத்தம்…” சிடுசிடுவெனக் கேட்டவாறு நிதானமாக எழுந்து வந்த பொன்னி, தொலைக்காட்சி உடைந்திருப்பதைப் பார்த்து, “ஐயோ! ஐயோ! என் டிவியை எந்தப் பாவிப்பய உடைச்சான்? நாடகம் பார்க்க முடியாதே!” நெஞ்சில் அடித்துக்கொண்டு கத்தினார்.
“இந்தப் பாவிதான்! இவனும், இவன் பொண்டாட்டியும் செய்த லீலைகளை நான் பார்த்துட்டேனாம். போட்டு உடைச்சுட்டான்.” கலிவரதன் சாதாரணமாகச் சொல்ல,
“பகலிலுமா?” என்று பொன்னியும் இலகுவாகக் கேட்க, அவரை அதிர்ச்சியாய் பார்த்தான் மாதேஷ்.
அவர்கள் பேசிக்கொள்வதைப் பார்த்தால் பொன்னிக்கும் எல்லாம் தெரியும் என்பதை எடுத்துரைப்பதாய்!
“இதெல்லாம் எதுக்குன்னு கேட்டியே மாதேஷ். இதோ இவளுக்கு ஒன்னும் முடியாது. வயசாகிப் போச்சுன்னு என்னைப் பக்கத்திலேயே விட மாட்டா. நான் இன்னும் புதுமாப்பிள்ளைதான். எனக்கு ஆசை அதிகம். அவளால் ஈடுகொடுக்க முடியலைன்னு எப்படியும் போன்னு என்னை விட்டுட்டா. அப்பப்ப நான் வெளியே பார்த்துக்கிறதுதான். ஆனா, அது மட்டும் எனக்குப் போதலை. குடும்பப் பெண்கள் மேல கை வச்சால், எனக்கு ஊருக்குள் இருக்கும் நல்ல பெயர் கெட்டுப் போகுமே. ஆனால், அதுக்காக என் ஆசையையும் அடக்கணுமா என்ன? அதான் ஒரு கிளுகிளுப்பா வீட்டிலேயே லைவ் ஷோ பார்த்து…” என்று வக்கிரமாய்க் கண்ணைச் சிமிட்டினார்.
“மத்த வீடியோ எல்லாம் அவ்வளவு நல்லாயில்லை மாதேஷ். எல்லாம் செயற்கையா நடிக்கிறாங்க. இதுனா இயற்கையா… புருஷனும், பொண்டாட்டியும் அப்படியே…” என்று கண்கள் சொருக கலிவரதன் காட்டிய முகப்பாவனை அருவருப்பாய்!
“உன்னைச் சும்மா விட மாட்டேன்டா… உன்னைச் சும்மா விடமாட்டேன்” என்று கோபமாகக் கலிவரதனின் சட்டையைப் பிடித்தான் மாதேஷ்!
“உன்னால் என்னை என்ன செய்ய முடியும் மாதேஷ்? என் மயிரை கூடப் புடுங்க முடியாது. என்னோட பவர் என்னன்னு உனக்குத் தெரியுமா? எனக்குப் பெரிய பெரிய அரசியல்வாதிகள் கூடத் தெரியும். நீ மூச்சுக் கூட விட முடியாமல் பண்ணிடுவேன்!” கலிவரதன் கடுமையாக மிரட்ட, மாதேஷ் அதிர்ந்து நின்றான்.
“நான் நினைச்சா இந்த வீடியோவை இப்பவே நெட்ல சுத்தவிடுவேன். எனக்குத் தெரிந்த பெரிய பெரிய ஆளுங்களுக்குக் காட்டி, சொளையா காசு பார்ப்பேன். நீ கற்பனை செய்ய முடியாத இடத்தில் கூட இந்த வீடியோவை சுத்த விட என்னால் முடியும். உன் பொண்டாட்டியை கேட்கலையே… அதுவரை சந்தோஷப்பட்டுக்கோ. நீ ஓவரா துள்ளினா அதுவும் கேட்பேன்!” மிரட்டலும் வக்கிரமுமாகக் கலிவரதன் எச்சரிக்க, மாதேஷூக்கு கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.
ஆனாலும் அவனால் முடிந்தளவு மிரட்ட முயன்றான். ‘போலீஸூக்கு போவேன்’ என்றால் ‘அங்கேயும் எனக்கு ஆட்களைத் தெரியும். அவர்களும் வீடியோவை பார்ப்பார்கள்’ என்றார்.
வேறு யாரிடமாவது சொன்னால், “அவனுக்குத்தான் அவமானம்” என்றார். “வீட்டை விட்டு போவேன்” என்றால், “நீ கிளம்பிய மறுநொடி அத்தனையும் நெட்டில் சுழற்சியில் சுத்தும்” என்றார்.
“உன் பொண்டாட்டிகிட்ட சொன்னா… அவள் நாண்டுக்கிட்டு செத்துடுவா மாதேஷ்” என்றார்.
இப்படி ஒரு விஷயம் என்று அவன் மூச்சு விட்டால் கூட, விபரீதம் பயங்கரமாய் இருக்கும் என்று எச்சரித்தார்.
மான அவமானத்துக்கு அஞ்சிய சாதாரண மனிதனாய் உருகுலைந்து போனான் மாதேஷ். அவனின் அந்தப் பயத்தைத் தன் ஆயுதமாகப் பயன்படுத்தினார் கலிவரதன். தன் குட்டு வெளிப்பட்டுவிட்டது. அவன் வாயை அடைக்க வேண்டுமென்றால், மிரட்டல்தான் சரி என்ற கலிவரதனின் சூழ்ச்சியில் வீழ்ந்து போனான் மாதேஷ்.
அதன்பின்தான் வீட்டில் அவனின் நடவடிக்கைகள் மாறின. தன்னுடைய இயலாமையைக் கோபமாய் அவனின் மனைவியிடம் வெளிப்படுத்த ஆரம்பித்தான். ஆனால், அதற்கும் அவனுக்கு வலித்தது. ஒன்றுமறியாத அவளைப் போய்த் தான் கொடுமை படுத்துவதாய் உணர்ந்தான்.
இப்படி ஒரு இக்கட்டிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று அவனுக்குப் புரியவே இல்லை. ஏதேதோ யோசித்தான். எந்த வழியும் கிடைக்கவில்லை. அவனுக்குக் கிடைத்த கடைசி வழி குடும்பத்துடன் இறந்து போவதுதான்.
இதோ, அவனின் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது.
அவன் திக்கி திணறி உயிருக்கு போராடியபடி உரைத்தவைகளைக் கேட்டுத் துடித்துப் போனாள் கீதா.
“ஸா…ரி… கீ…துமா… என்…னால் அவ…னோ..ட… போரா…ட மு…டியலை. நீ… நீ.. போயி…டு...” என்ற மாதேஷின் உயிர்நாடி மெல்ல அடங்கிப் போனது.
****
மயான அமைதி நிலவியது அவ்வறையில்!
ஆரவி கண்களைச் சிமிட்டி திரும்பிக்கொண்டாள்.
தலையைக் குனிந்து அமர்ந்திருந்த கீதாஞ்சலியின் உதடுகள் முணுமுணுத்தன.
“போயிட்டாங்க… என்னை விட்டுப் போயிட்டாங்க… மொத்தமா… காத்தா கரைஞ்சு…” அழுகையுடன் சொன்னதையே சொன்னாள் கீதாஞ்சலி.
சில மணித்துளிகள் அவளை அழவிட்டு, “ஸாரி பார் யுவர் லாஸ் கீதாஞ்சலி!” என மனிதாபிமானத்தைக் காட்டிய பிரதாப், “அதனால்தான் கலிவரதனை கத்திரிக்கோலால் பலமுறை குத்தி, கண்ணில் ஆசிட்டை ஊத்தி கொன்னியா?” எனக் கேட்டான்.
“யெஸ்! யெஸ்! எங்க அந்தரங்கத்தை அணுஅணுவா ரசித்தவனைச் சும்மா விடலாமா? என் உயிரானவங்களை இழந்து சில நாட்கள் இரவு பகல் புரியாம பித்துப் பிடித்ததுபோல் இருந்தேன். சில நாட்கள் மயக்கத்தில் இருந்தேன். மனோகர் அண்ணாதான் என்னை ஹாஸ்பிடலில் சேர்த்து பார்த்துக்கிட்டாங்க. என் மாதேஷ், என் நிலா பாப்பாவுக்குச் செய்ய வேண்டியதை எல்லாம் மனோகர் அண்ணாதான் செய்தாங்க.
என் உடல் தேறியதும், என்னை வேறொரு வாடகை வீட்டில் தங்க வச்சாங்க. தனிமையில் ஒவ்வொரு நாளும் அந்தக் கலிவரதனை ஏதாவது செய்யணும்னு எனக்குள் வெறியேறிப்போய் இருந்தது.
ஒரு ஆறு மாசம் கடந்தப்ப ஒரு நாளை தேர்ந்தெடுத்தேன். அந்தப் பொன்னி அன்னைக்கு ஒரு டெத்துன்னு எங்கயோ போயிட்டா. அதுதான் அவ புருஷனை டெத்தாக்க சரியான நேரம்னு திட்டம் போட்டு போனேன். அந்த ஏரியா எனக்கு அத்துப்படி! மத்த போர்ஷனில் இருப்பவங்களும் எப்ப வீட்டில் இருப்பாங்க. எப்ப வெளியே போவாங்கனு எனக்குத் தெரியும். அதையே யூஸ் பண்ணி சரியான நேரமா அந்த நாய் வீட்டுக்குப் போனேன். அதுவும் அவனுக்குப் பிடிக்காத பேண்ட் ஷர்ட் ட்ரெஸில், இன்னும் என்னை வளர்த்தியா காட்ட ஹீல்ஸ் எல்லாம் போட்டு, தலைமுடியை கிராப் வெட்டி, ஒரு ஆம்பளை போலப் போனேன்.
“என்னைப் பார்த்துட்டு முதலில் அவனுக்கு அடையாளமே தெரியலை. அப்புறம் நான்னு தெரிந்ததும் பல்லை இளிச்சிட்டு, “கீதா, நீயா? வாமா… என்னமா இப்படி நடந்திருச்சு? நானும் பொன்னியும் அன்னைக்குன்னு பார்த்து சொந்தக்காரங்க கல்யாணத்துக்குப் போயிட்டோம். திரும்பி வந்தா இப்படி நியூஸ் காதில் விழுது. துடிச்சுப் போயிட்டோம். நீயும் மயக்கத்திலேயே ஹாஸ்பிட்டலில் கிடந்த. வருத்தம் தெரிவிக்கக் கூட என்னால் முடியாம போச்சேமா. இந்த மாதேஷ் பய ஏன் இப்படிப் பண்ணான்? மனோகர்கிட்ட கேட்டதுக்கு ஏதோ கடன் பிரச்சினைன்னு எங்ககிட்டயும், அக்கப்பக்கத்திலும் சொன்னான். அதுக்காக இப்படி ஒரு முடிவு எடுப்பாங்களா? என்கிட்ட உதவி கேட்டுருந்தால், நான் உதவி பண்ணிருப்பேனே”ன்னு எனக்கு விஷயமே தெரியாது நினைச்சிட்டுப் பேசினான்.
“எப்படி நானும் என் புருஷனும் ஒன்னா இருந்த வீடியோவை நெட்டில் விட்டு, அந்த மாமா வேலைக்குச் சன்மானமா கிடைத்த பணத்தை வைத்து, எங்களுக்கு உதவி செய்திருப்பியோன்னு நக்கலா நான் கேட்டதும், அவன் முகத்தில் ஈ ஆடலை. அதுவும் கொஞ்ச நேரம்தான் அப்புறம், வக்கிரமா என்னைப் பார்த்து,
“உனக்கு எல்லாம் தெரியுமா? நல்லதா போச்சு. இப்பவும் உங்க வீடியோ என்கிட்ட பத்திரமா இருக்கு. அதை இப்ப கூட என்னால் நெட்டில் விட முடியும். அப்படி நான் செய்யாம இருக்கணும்னா…” சொல்லி இளிச்சுட்டே என் பக்கத்தில் வந்தான். அவனிடம் நைட்ரெஸ் ஆக்ஸைடை யூஸ் பண்ணேன். அவன் சத்தம் வெளியே கேட்காம இருக்க, டீவி சத்தத்தைக் கூட்டி வச்சேன். அவன் அரைகுறை உணர்வா இருக்கும்போது என்னோட வெறி தீரும் மட்டும் அவனைக் குத்தினேன். அவன் கண்ணை ஆசிட் ஊத்தி குருடாக்கினேன். அவன் துடிதுடிச்சு சாவதை ரசிச்சுப் பார்த்தேன். என் மாதேஷும், நிலா பாப்பாவும் என்னைப் பார்த்துச் சந்தோஷமா சிரிச்சாங்க பிரதாப்” என்று கண்களை மூடி இரசித்துச் சொன்னவளின் இதழோரமும் புன்னகை!
“அவன் வீட்டில் இருந்த எங்க வீடியோவை எல்லாம் தேடி எடுத்து அழிச்சேன். அதோட என்னோட வேலை முடியலை. அவள் புருஷனை பத்தி தெரிஞ்ச பிறகும் அவனுக்கு உடந்தையா இருந்த பொன்னியை மட்டும் சும்மா விடலாமா? அவளுக்கும் ஏதாவது தண்டனை கொடுக்கணுமே. எதையும் குறையா விடக்கூடாதே. அவள் புருஷன் செத்ததும் காலியா இருந்த இன்னொரு போர்ஷனில் இருக்காள்னு தெரிந்தது. துக்கம் விசாரிக்கிற மாதிரி பிளான் பண்ணி போகணும்னு போனேன். என் நைட்ரெஸ் செல்லத்தை அவளுக்குக் கொடுத்து மிரட்டி அவளையே அவள் கையை அறுத்துக்கிட்டு தற்கொலை செய்ய வைச்சேன். என்னை விட்டுடுன்னு அரைகுறை மயக்கத்திலும் என்கிட்ட கதறினா. அவளோட கதறல் எனக்கு இன்பமா இருந்தது பிரதாப்.”
“பொன்னிக்கு மட்டும் ஏன் அப்படி?”
“ஆக்சுவலா.. அவள் புருஷனை மாதிரி துடிக்கத் துடிக்க அவளைச் சாகடிக்கணும்னு தான் நினைச்சிருந்தேன். அவள் வாயைத் தைக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. அந்த வாய்தானே என் நிலா பாப்பாவை குட்டிச் சாத்தான்னு சொல்லுச்சு. அவள் புருஷன் தப்புச் செய்தபோது அந்த வாய்தானே தட்டிக் கேட்கலை? அந்த நாறவாய்க்குத் தண்டனை கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனால், நான் நினைச்சபடி செய்ய முடியலை.
ஏற்கெனவே போலீஸ் கலிவரதன் கேஸை விசாரிச்சுட்டு இருந்தாங்க. மனோகர் அண்ணாகிட்ட விசாரணை செய்திருக்காங்க. என்னையும் கூட விசாரிக்கணும்னு போலீஸ் பேசிக்கிட்டதா அண்ணா மூலமா கேள்விப்பட்டேன். அப்படியே போலீஸ் வந்து என்னை விசாரிச்சாலும், நானும், அண்ணாவும் பேசி வச்ச மாதிரி கடன் தொல்லையால்தான் மாதேஷ் தற்கொலை முடிவை எடுத்தார். அங்க இருந்தால் எனக்கு அவங்க நினைவு வருதுன்னு வீட்டை காலி செய்தேன்னு சொல்ல ரெடியா இருந்தேன். என்னை வந்து அவங்க விசாரித்தபோது அதைத்தான் நானும் சொன்னேன்.”
“நீயும், மனோகரும் பேசி வச்சா? அப்ப மனோகருக்கு கலிவரதன் பற்றிய உண்மை தெரியுமா?” என்று பிரதாப் கேட்க,
“தெரியும். அன்னைக்கு நான் ஆம்புலன்ஸுக்கு மட்டும் போன் பண்ணலை. மனோகர் அண்ணாவுக்கும் போன் பண்ணேன். அப்ப வெளியே எங்கயோ போயிருந்தவர் மாதேஷ் உண்மை சொன்னபோது வந்து கேட்டுட்டார்.”
“அப்ப கலிவரதனை நீ கொன்ன விஷயம்?”
“அவன் செத்தபிறகுதான் அண்ணா வந்து கேட்டார், சொன்னேன். நீ செய்தது தப்புன்னு சொன்னார், கண்டிச்சார். அவரிடம் பொன்னியையும் கொலை செய்யப் போறேன்னு சொன்னால் கண்டிப்பா விடமாட்டார். அதோட போலீஸை அதுக்கு மேல சமாளிக்க முடியாதோன்னு பயந்தார். அதான் பொன்னியை எப்படி எல்லாம் கொல்லணும்னு ஆசைப்பட்டேனோ அதை எல்லாம் அடக்கிக்கிட்டு, அவளே தற்கொலை செய்ததுபோலச் செய்தேன். அவ உயிரை அவளை வச்சே எடுக்க வைப்பதிலும் ஒருவித தனி ருசி இருக்குது பிரதாப்” என்று லயித்துக் கூறினாள் கீதாஞ்சலி.
அவள் எவ்வளவு கொடூரமானவளாக மாறியிருக்கிறாள் என்பதைக் கண்கூடாக அவளின் பாவனையில் கண்டான் பிரதாப்.
“பொன்னி செத்ததும், அண்ணா என்னைப் பார்த்து ரொம்பப் பயந்தார். என்னை டாக்டர் ரகோத்தமனிடம் அழைச்சிட்டு போய் ட்ரீட்மென்ட் எடுக்க வைத்தார். அதில் எனக்குச் சரியாயிடுச்சுன்னுதான் டாக்டரும், அண்ணாவும் நம்பினாங்க. என் மனநிலையை மாத்த அவங்க ட்யூசன் சென்டருக்கு என்னை வேலைக்கு வரச்சொன்னாங்க. நான் கல்யாணத்தின் போது பார்த்துட்டு இருந்த வேலையை நிலா பாப்பாவுக்காக விட்டிருந்தேன். அதோட படிச்ச படிப்புக்கு சம்பந்தம் இல்லாம நான் எப்படிப் பிள்ளைகளுக்குப் பாடம் எடுப்பதுன்னு தயங்கினேன். ட்யூசன் தானே… நீ நல்லா படிக்கிற பொண்ணு. உன்னால் முடியும்னு அண்ணா நம்பிக்கை கொடுத்தார். அதோட, அங்கிருக்கும் குழந்தைகளைப் பார்த்தால் என் மனநிலைக்கு மாற்றம் வரும்னு சொன்னார். ‘கீதா’ அடையாளம் வேணாம். இனி நீ ‘அஞ்சலி’யா மட்டும் இரு. அப்பதான் கலிவரதன், பொன்னி கேஸில் மாட்டாமல் இருக்க நல்லதுன்னு சொன்னார். நானும் என்னோட அடையாளத்தை மாத்திக்கிட்டு அஞ்சலியா வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். நல்ல டீச்சரா இருந்தேன்.”
“ஆனாலும், என்னைச் சுற்றி நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டபோது என்னால் என்னையே கண்ட்ரோல் செய்ய முடியலை. என் வேட்டையை ஆரம்பித்தேன். கலிவரதனையும் பொன்னியையும் எப்படி எல்லாம் கொல்லணும்னு நினைச்சேனோ அதை எல்லாம், மத்தவங்க மூலமா நிறைவேத்திக்கிட்டேன். முக்கியமா வாயை தைப்பதை…” என்று அவள் நிறுத்த,
“நீ படிச்ச பிஎஸ்சி சர்ஜிக்கல் அசிஸ்டன்ட்ஸ் படிப்பு தான் நீ நேர்த்தியா வாயை தைக்கப் பழகிய காரணம், அப்படித்தானே கீதாஞ்சலி?” என்று கேட்டான். அவள் பிடிப்பட்டதுமே அவளின் படிப்பு விவரங்கள், முன்பு என்ன வேலை பார்த்தாள் என்பதை எல்லாம் திலீப் தகவலறிந்து வந்து சொல்லியிருந்தான்.
“யெஸ், அதோட ஒவ்வொன்னா… நேர்த்தியா தடயம் இல்லாம, மாட்டிக்காம என்னென்ன செய்யலாம்னு கத்துக்கிட்டு உங்க போலீஸ் டிப்பார்மெண்டாலேயே என்னை நெருங்க முடியாததுபோல என் அடையாளத்தை மாத்திக்கிட்டுக் கனக்கச்சிதமா கொலைகளைச் செய்தேன்” என்றாள்.
“உன்னைக் கிட்டத்தட்ட நாங்களே நெருங்கிட்டோம் கீதாஞ்சலி. மனோகர் தான் நடுவில் புகுந்து எங்களைக் குழப்பிவிட்டான்” என்று கோபத்துடன் சொன்னான் பிரதாப்.
“அது நான் மாட்டிக்கக் கூடாதுன்னு அண்ணா அப்படிச் செய்துட்டார். அவரோட மாமியார் மாமனாரை கொன்னுட்டு நான் எஸ்கேப் ஆகும்போது நைனி மட்டும் என்னைப் பார்க்கலை, அண்ணாவும் பார்த்துட்டார். அதனால்தான் அவர் நிதானமாய் இருந்தார். தனியா வந்து என்கிட்ட சத்தம் போட்டார். அப்புறம் என்னைத் தப்பிக்க வைக்க, என் வீட்டில் இருந்த நான் கொலை செய்யப் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் அவர் டியூஷன் சென்டருக்கு மாத்தினார். நான் தடுத்தும் அவர் கேட்கலை. எனக்குப் பதிலா அவர் போலீஸில் மாட்டினால் நான் திருந்திடுவேன்னு அவர் நினைச்சார். நானே நிறுத்திடுறேன்ணா. இனி யாரையும் கொல்ல மாட்டேன்னு நான் சொன்னதை அவர் நம்பலை.
எனக்கு நல்லது செய்வதா நினைச்சு, என்கிட்ட சொல்லாமலே அவர் அந்த முடிவெடுத்துட்டார். அவர் மேல உங்க கவனம் எல்லாம் திரும்பணும்னுதான் இரண்டு நாட்கள் தலைமறைவா இருந்தார். அவரின் முடிவை மாத்த நினைச்சேன். நான் செய்த கொலைகளுக்காக அவர் மாட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. அவரைக் காண்டாக்ட் பண்ண முயற்சி செய்தேன். ஆனால் என்கிட்டயும் அவர் பேச மறுத்தார். எப்படி அவரை மாட்டவிடாமல் தப்பிக்க வைக்கிறதுன்னு நான் யோசிச்சுக்கிட்டு இருக்கும்போதே, நீங்க அவரைப் பிடிச்சிட்டீங்க.” என்றாள் வருத்தமாக.
“எனக்கு ஒரு சந்தேகம் கீதாஞ்சலி. கலிவரதன் எடுத்த அந்த வீடியோவை அவர் மட்டும்தான் பார்த்தாரா? இல்ல, அவரோட சங்கத்து ஆளுங்களும் பார்த்தாங்களா?” என்று பிரதாப் கேட்க,
“சங்கத்து ஆளுங்களா? அவங்க யாரு?” என்று புதிதாகக் கேட்பதுபோல் கேட்டாள்.
“என்ன தெரியாததுபோலக் கேட்கிற? கலிவரதன், செல்வநாயகம், மதனகோபால், ரகுராம் எல்லாரும் பழைய ஒரு சங்கத்தில் அங்கத்தினர்”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. இது எனக்கே புதுத் தகவல். நான் அவங்களை எதுக்காகக் கொன்னேன்னு ஏற்கெனவே சொல்லிட்டேன் பிரதாப். ஒருவேளை எனக்கே தெரியாமல் அவங்க எங்க வீடியோவை பார்த்திருந்தால், அவங்களை நான் கொன்னதும், கொன்ன விதமும் சரிதானே பிரதாப்?” என்று கொடூர புன்னகையுடன் கேட்டாள்.
“ரகுராம் வீட்டில் அந்தக் கேமமைல் டீ தூள் எப்படி வந்தது கீதாஞ்சலி? அதை உனக்கு நைனி தானே கொடுத்தாள்? அவளை மாட்ட வைக்க அதை வச்சு பிளான் செய்தியா?”
“ரகுராம், வத்சலா கூட நல்லா பழக ட்ரை செய்தபோது, வயசாச்சே சரியா தூக்கம் வராம இருந்தால், இந்த டீயை போட்டு குடிங்கன்னு பாசமா கொடுத்து பேசிட்டு வருவேன். அன்னைக்கு நான் அவங்க வீட்டுக்குப் போனபோது அந்த டீயை போட்டு குடிச்சிட்டு, இப்ப எல்லாம் இதைக் குடிச்சதும் நல்லா தூக்கம் வருதுன்னு சிரிச்சிட்டே சொன்னவங்களை… மொத்தமா தூங்க வச்சேன். அன்னைக்குன்னு பார்த்து நைனி அவளேதான் குறுக்கே வந்தாள்” என்று தோளை குலுக்கி அலட்சியம் காட்டினாள் கீதாஞ்சலி.
மேலும் அவளிடம் கேட்க வேண்டியதை எல்லாம் கேட்டு வாக்குமூலம் வாங்கினான். அனைத்தும் ரெக்கார்ட் ஆகியிருக்க, விசாரணை முடிந்ததும் எழுந்தான் பிரதாப்.
“என்னோட பிரேஸ்லெட் எங்கே பிரதாப்? அது எங்கிட்ட கொடுத்துடு. என் உயிரானவங்க ஞாபகார்த்தமா என்னிடம் இருந்தது அது. என் நிலாவோட டாலரை வேற அதில் கோர்த்திருந்தேன். பொன்னியை கொன்னபோது அதில் பாதி உடைந்தபோதே என் மனசும் உடைந்தது. இப்ப மொத்தமா உங்கிட்ட தொலைச்சுட்டு நிக்கிறேன். அது எனக்கு வேணும் பிரதாப். அது இதோ… இங்கே இருந்தால்தான்… இங்கே… இயல்பா துடிக்கும் பிரதாப்” முதலில் தன் மணிக்கட்டையும், அடுத்ததாகத் தன் இதயத்தையும் சுட்டிக்காட்டிய கீதாஞ்சலியின் விழிகள் இறைஞ்சின.
“அதுவும் ஒரு ஆதாரம் கீதாஞ்சலி.” என்ற பிரதாப் மறுப்பாகத் தலையசைத்தபடி வெளியே நடக்க ஆரம்பிக்க, திலீப்பும், ஆரவியும் பின்னால் செல்ல,
“பிரதாப்… ஏசிபி சார்…” கீதாஞ்சலியின் கெஞ்சல் குரலும் அவனைப் பின் தொடர்ந்தது.
“சார், ஒரு சந்தேகம்… சைக்கோ கில்லர்ஸ் ஏதாவது ஒரு காரணத்துக்காக ஒரே பேர்ட்டனை ஃபாலோ பண்ணுவாங்க. ஆனால், கீதாஞ்சலி அவங்களைக் கொன்ன காரணங்களும், கொலை செய்த விதமும் வேறுபடுதே” வெளியே வந்ததும் திலீப் சொல்ல,
“கீதாஞ்சலிக்கு இருக்கும் சைகோபதி பிரச்சினைதான் அதுக்குக் காரணம் திலீப். சின்னச் சின்ன வேறுபாடுகள் இருந்தாலும், அதன் முடிச்சு அனைத்தும் கீதாஞ்சலி அவள் வாழ்க்கையில் சந்தித்தவைகளோடு ஒத்துப்போகுது. அவளை ட்ரிக்கர் செய்ய அதில் ஏதாவது ஒரு காரணமே போதும்.” என்றான் பிரதாப்.
“உண்மைதான் சார். செல்வநாயகத்திடம் வசுமதியிடம் சந்திரா அனுபவித்தது கலிவரதன் மூலம் ஏற்பட்ட அனுபவத்தை ஞாபகபடுத்தி இருக்கும்.
மதனகோபால் விஷயத்தில் கேமிரா, அப்புறம் வாடகைக்கு இருந்தவங்களை விரட்டிவிட்டது.
தனபால், தண்டபாணி விஷயத்தில் பாதிப்படைந்த பிள்ளைகளைத் தன்னோட இறந்த குழந்தையோட இணைத்து பார்த்திருப்பாள்.
மனோகரோட மாமியார் மாமனாரை கொல்ல, அவளுக்கு அவ்வளவு உதவிகள் செய்தவனின் வாழ்க்கை கெட அவர்கள் காரணமாக இருந்ததே போதும்.” என்றான் திலீப்.
“கரெக்ட் திலீப்!” என்ற பிரதாப்பின் முகத்தில் ஒரு தொடர் கொலை வழக்கு முடிவுக்கு வந்த நிம்மதி நிலவியது!