Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
747
Reaction score
4,463
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 10

ஆத்மநல்லூர் மாதவப்பெருமாள் கோவிலிற்குச் சென்றிருந்தாள் தாமரை.

அங்குக் கொடியேற்றத்துடன் திருவிழா நிகழ்வுகள் நடந்தவாறு இருக்க, அக்கோவிலின் உள்ளே இருந்த அலுவலக அறையில் அமர்ந்து கோப்புகளைப் பார்வையிட்டிருந்தாள்.

எந்தெந்த கோவில்கள் எல்லாம் அவளின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன என்ற பட்டியலை அந்தக் கோப்பினுள் வாசித்தவாறு வந்தவள், அதிலிருந்த பிரகலாதப் பெருமாள் கோவில் என்ற பெயரைப் பார்த்ததும், 'இது சோலைவனத்துல இருக்கக் கோவில் தானே. அந்தச் செந்தாமரை அம்மாவோட பையன் பூசாரியா இருக்கிற கோவில்னு சொன்னாங்களே! அந்தக் கோவிலும் எனக்குக் கீழே தான் வருதா?' என்றெண்ணியவளாய் வாசித்துக் கொண்டிருந்தவள் அதிலிருந்த ஆத்மநல்லூர் அழகிய மாதவப் பெருமாள் கோவில் பற்றிய விவரங்களை வாசிக்கலானாள்.

'இந்தக் கோவில் சிவலிங்கத்தைத் தானே திருடி திரும்பக் கொண்டு வந்து வச்சிருக்கிறதா சொன்னாங்க' என்று யோசித்தவளாய் இக்கோவில் சார்ந்த நீதிமன்ற வழக்குகள் பற்றி வாசித்துக் கொண்டிருந்தவள் மேலும் இக்கோவிலில் எத்தனை சாமி விக்கிரகங்கள் இருக்கின்றன, என்னென்ன ஆபரணங்கள் இருக்கின்றன போன்ற பட்டியல்களுடன் இருந்த முழு விபரங்களையும் வாசித்தவாறு இருந்த வேளையில் வெளியே ஏதோ பெரிய வாக்குவாதம் நடப்பதைப் போன்ற சத்தத்தைக் கேட்டு வெளியே வந்து பார்த்தவளுக்கு இன்ப அதிர்ச்சி.

'கண்ணா' என்று அவளையும் மீறி அவளிதழ்கள் முணுமுணுத்தன.

ஆம் மாதவனைப் பார்த்து தான் இன்பமாய் அதிர்ந்திருந்தாள்.

அவனைப் பார்த்ததும் அவளையுமறியாது உள்ளுக்குள்ளே மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாய் இன்பப்பிரவாகம் ஓட, முகத்திலும் அவ்வுணர்வுகள் பிரதிபலித்தன.

அவனைப் பார்த்ததும் காலைப் பேருந்து பயணத்தில் கனவில் கண்ட காட்சிகள் மனத்திற்குள் படமாய் விரிய முகத்தில் தானாக ஒட்டிக் கொண்டது நாணம்.

அவனை நிமிர்ந்து பார்க்கும் திராணி இல்லாது கண்களைச் சுழற்றியவளாய் சுற்றியிருந்தவர்களைப் பார்த்தவாறு நாணத்தை மறைத்துக் கண்களில் பொய் கோபத்தைக் கொண்டு வந்தவளாய், "இங்கே என்ன செய்றீங்க கண்ணா?" என்று அவள் கேட்டதில் தான் அவள் அங்கு வந்து நிற்பதையே பார்த்தான் மாதவன்.

அவளின் கண்ணா என்ற அழைப்பில் உடலில் புல்லரித்தது அவனுக்கு. கோதை என ஆர்ப்பரித்தது அவன் ஆன்மா.

ஆயினும் அதனை ஒத்தி வைத்தவனாய் மூளையின் கட்டளைக்கு அடிபணிந்து, 'இவ ஏன் என்னைக் கண்ணானு கூப்பிடுறா' என்று எண்ணியவனாய் அவளைப் பார்த்தவனுக்கு அவளிடம் ஏதோ மாறுதல் இருப்பதைப் போன்று தோன்றியது.

'தன்னைக் கண்டு நாணுகிறாளோ' ஆன்மா உரைத்திட, மேலும் அதிகமாய் மனத்திற்கு மிகவும் நெருக்கமானவளாய் அவளை உணர்ந்தான் அவன்.

தன்னை நிலைப்படுத்தியவனாய், "பணக்காரங்களுக்குத் தான் சாமி அருள் புரிவாரா தாமரை மேடம். சாமியைக் கிட்டப் போய்ப் பார்க்கனும்னா ஐநூறு ரூபாய் டிக்கெட் எடுத்தா போதும். அதுக்கும் மேல லட்சம் லட்சமா சம்பாதிக்கிற பணக்காரங்களா இருந்தா போதும்‌. அப்படித் தானே! அந்தக் காலத்துல ஜாதியை வச்சி மனுஷங்களைப் பிரிச்சி சாமிக்கிட்ட விடாம தடுத்தாங்க. இப்ப பணத்தை வச்சி மனுஷங்களைப் பிரிச்சி சாமிக்கிட்ட விடாம தடுக்கிறாங்க" என்று கோபத்துடன் பேசினான்.

"யாரு எப்டி பிரிச்சி வச்சாலும் சாமி யாரை அவருக்குப் பக்கத்துல வச்சிக்கனும்னு நினைக்கிறாரோ அவங்களால தான் அவரை மனதார உணர்ந்து நெருங்க முடியும் கண்ணா. கர்ப்பகிரகத்துல பார்க்கிறதை விட நம்ம மனசுக்குள்ள பார்க்கனும்! பார்க்க முடியனும். அந்த அருளை இறைவன் யாருக்கு கொடுக்கிறாரோ அவங்க தான் உண்மையாவே சாமிக்கிட்ட இருக்கிறவங்க" என்றவள் சொல்லிய பதிலில் அங்கிருந்த அர்ச்சகர் முதல் தர்மகர்த்தா வரை அனைவருமே அவளை வியப்புடன் பார்த்திருக்க,

'சாமி மேல நம்பிக்கை இல்லைனு சொன்னவளா இதைச் சொல்றது' என்ற ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்திருந்தான் மாதவன்.

"இது கவர்மெண்ட் ரூல்ஸ் கண்ணா. இவங்க என்ன செய்வாங்க. எதுக்கு இவங்ககிட்ட சண்டைப் போட்டுட்டு இருக்கீங்க? உங்களுக்குக் கோபம் வந்தா கோர்ட்ல கேஸ் போடுங்க. இங்கே பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை" என்றவளாய் மனத்திற்குள், 'காட்டான்! காட்டான்! எப்ப பார்த்தாலும் யார்கிட்டயாவது சண்டை போடுறதையே வேலையா வச்சிருக்காரு" என்று முனகியவாறு அங்கிருந்து அகன்றாள்.

அவனுடன் வாக்குவாதம் செய்திருந்த அனைவரும் இவளின் பேச்சிலேயே அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றிருக்க, அவளின் பின்னேயே சென்றிருந்தான் இவன்.

தனது அலுவலக அறையின் வாசலில் நின்று அவனைத் திரும்பிப் பார்த்தவளாய், "இதான் உங்களுக்குப் பெங்களூரா கண்ணா?" புருவத்தை உயர்த்தியவாறு கேள்வியுடன் கேட்டாள்.

அசட்டுச்சிரிப்பு சிரித்தவனாய், "இந்த ஊருக்குத் தான் வரப் போறேன்னு உன்கிட்ட சொல்லிருந்தா, நீ என்னைச் சென்னைலயே திட்டித் தீர்த்திருக்க மாட்ட" என்று கேட்டான்.

அவனது ஒருமை விளிப்பைக் கவனித்தும் கவனியாதது போல் கடந்திருந்தாள். மறைமுகமாய் அதனை அங்கீகரித்திருந்தாள்.

அவனின் கேள்வியில், "திட்டிறது மட்டுமில்ல விரட்டி அடிச்சிருப்பேன்" என்றவளாய் அறையினுள்ளே சென்றவள், பாவமாய் வாசலில் நின்றிருந்தவனைப் பார்த்து, "உள்ளே வாங்க" என்றாள்.

அவன் உள்ளே வந்ததும் நாற்காலியில் அமரச் சொன்னவளாய், "ஏன் கண்ணா என் பின்னாடியே வரீங்க?" சற்று அலுப்புடனே கேட்டிருந்தாள்.

அத்தனை உரிமையாய் தொடர்ந்து வந்த அவளின் கண்ணா என்ற அழைப்பு அவனைத் திக்குமுக்காடச் செய்த அதே சமயம், 'என்னாச்சு இவளுக்கு' என்று யோசிக்கவும் வைத்தது‌.

"உன்னைப் பத்திரமா பார்த்துப்பேன்னு உங்கம்மாக்குச் சத்தியம் செஞ்சி கொடுத்திருக்கேன் தாமரை" என்றவன் கூறிய பதிலில் சட்டெனச் சுணங்கிப் போனது அவள் முகம்.

'உனக்காகத் தான் கோதைனு ஒரு வார்த்தை சொன்னா தான் என்னவாம்' என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்டவளோ தலையை உலுக்கியவளாய், 'அய்யோ நான் ஏன் என்னை நானே கோதைனு சொல்லிக்கிறேன்' என்று இவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே,

"ஏன் என்னை இன்னிக்குக் கண்ணா கண்ணானு கூப்பிட்டுட்டு இருக்கத் தாமரை? அது நீ எனக்கு வச்சிருக்கச் செல்லப் பேரா?" சீண்டலாய் சிரிப்புடன் கேட்டிருந்தான்.

'ஆமா கனவுல தானே இவர் பேரை கண்ணானு கூப்பிட்டோம். இவரோட ஒரிஜினல் பேரு என்ன? எப்படி அதை மறந்தேன்' எத்தனை யோசித்தும் அந்தப் பெயர் அவளுக்கு நினைவில் வராது இருக்க,

நெற்றியைச் சுருக்கி யோசித்தவளின் முகப்பாவனையைக் கண்டு குழம்பிப் போனவனாய், 'என்னாச்சு கோதை?' எனக் கேட்க வந்தவன் பின் தனது நாக்கைக் கடித்தவனாய், "என்னாச்சு தாமரை?" எனக் கேட்டான்.

"உங்க பேரு என்ன? சாரி நான் மறந்துட்டேன்" என்றவள் பாவமாய்க் கூறவும்,

'இவளுக்கு என்ன அம்னீசியாவா?' என்று தான் தோன்றியது அவனுக்கு.

ஆயினும் அவள் கண்ணா என்று அழைக்கும் போதெல்லாம் உள்ளம் பரவசத்தில் துள்ளுவதைத் தொடர்ந்திட விரும்பியவனாய், "பரவாயில்ல தாமரை. மறந்தது மறந்ததாகவே இருக்கட்டும். உன்னோட கண்ணனாவே நான் இருந்துட்டு போறேனே" கன்னக்குழி நிறைந்த குறும்புச் சிரிப்புடன் அவன் கூறவும், அவனது சிரிப்பை ரசித்துப் பார்த்தவளாய் இருக்கையில் அமர்ந்தவளின் முகம் நாணத்தில் சிவந்திருந்தது.

அவளது முகப்பாவனைகளைக் கண்டவனுக்கு, 'என்னாச்சு தாமரைக்கு' என்று தான் தோன்றியது. 'என்னைப் பார்க்கும் போதெல்லாம் கோபத்துல கடிச்சி துப்புறவ இங்கே வந்ததுலருந்து ஆளே ஒரு மாதிரி இருக்காளே' என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்டவனாய் ஆராயும் பார்வையுடன் அவளைப் பார்த்திருந்தான்.

எதையும் ஆராயும் மனமற்றவளாய் இந்த நிமிட உணர்வுகளை அப்படியே உள்வாங்க உந்திய மனத்தின் ஆசையினை அப்படியே ஏற்று அவனைப் பார்த்திருந்தாள் தாமரை.

அவனுடனான நேரம் நீடிக்காதா என்று ஏங்கிய ஆன்மாவின் ஆசையை நிறைவேற்றிடத் துடித்தவளாய், "இன்னிக்கு நாள் முழுக்க என்கூட இருக்கீங்களா கண்ணா?" எனக் கேட்டாள்.

மூளையோ நீ அவனிடம் இவ்வாறு பேசுவது தவறு, அவனை விட்டு விலகிவிடு என்று எடுத்துரைக்க, ஆன்மாவோ, 'என் கண்ணனுடன் ஒரு நாள் நான் வாழ்ந்த இப்பகுதியைச் சுற்றி வர வேண்டுமென' ஏங்கித் தவித்தது.

சோலைவனத்தின் எல்லைக்குள் பேருந்து வந்த பொழுதே, அவளுள் முன் ஜென்ம நினைவுகள் முகிழ்த்து கனவாய் வந்திருக்க, தன்னை உணர முடியாதவளாய், தனக்குள் நிகழும் மாற்றத்தை ஏற்க முடியாதவளாய் போராடிக் கொண்டிருந்தாள் தாமரை.

மனத்திற்கும் மூளைக்குமிடையே தத்தளித்தவளாய் தடுமாறியவளின் மனம் வென்றுவிட, "தப்பா நினைக்காதீங்க! புது இடம்! தெரிஞ்சவங்க யாருமில்ல. இன்னிக்கு ஒரு நாள் நீங்க கூட இருந்தா மனசுக்கு தெம்பா இருக்கும்னு தோணுது" என்றாள்.

"இதுக்கு ஏன் இவ்வளோ தயக்கம் தாமரை. இன்னிக்கு மட்டும் என்ன? நீ இங்க இருக்கப் போற எல்லா நாளும் உன்கூட நான் இருக்கேன்னு தான் நான் சொல்றேன்" என்றான் அவன்.

"எல்லா நாளுமா! இல்லல்ல வேண்டாம். இன்னிக்கு ஒரு நாள் போதும்" பதறிக் கொண்டு உரைத்தாள்.

என்னமோ மனம் ஆசைப்படுகிறது. அதனால் இன்றொரு நாள் அவனுடன் நேரத்தைச் செலவழித்து விட்டு, நாளை அவனைச் சென்னைக்கு அனுப்பி விட வேண்டுமென மனத்தோடு நினைத்துக் கொண்டாள்.

"சரி வாங்க!" என்றவள் எழும்பவும்,

"எங்கே?" எனக் கேட்டான்.

"இன்னிக்கு நாள் முழுக்க என்கூட இருக்கிறதா சொல்லிருக்கீங்க! நான் எங்க கூப்பிட்டாலும் வரனும்" அதிகாரமாய் அவள் கூறவும்,

"தங்கள் கட்டளையே என் சாசனம்" என்றவனாய் இடைவரை குனிந்து சொல்ல வாய்விட்டுச் சிரித்திருந்தனர் இருவரும்.

அவளது அலுவலக வாகனத்தில் பின்னிருக்கையில் அவன் அமர்ந்திருக்க, ஓட்டுனர் இருக்கை அருகே அமர்ந்திருந்தாள் அவள்.

சோலைவனம் நோக்கி வண்டிச் சென்று கொண்டிருக்க, "எதுக்காக இந்தாளை நான் இப்ப கூடக் கூட்டிட்டுச் சுத்திட்டு இருக்கேன்" என்று ஒரு மனம் கடுப்பாக உரைக்க, மறுமனமோ சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டிருந்தது.

தாமரையும் கோதையுமாய்த் தனது மனம் இருவாறாய் மாறி மாறிப் பேசுவதை உணரவில்லை அவள்.

'சீக்கிரம் பையத்தியக்கார ஹாஸ்பிட்டலுக்குப் போக வச்சிடுவாரு போல இந்தக் கண்ணா! அய்யோ இவரோட பேரு வேற ஞாபகம் வர மாட்டேங்குதே! இவரோட போன் நம்பர் என்கிட்ட இருந்திருந்தா கூட என் போன்ல சேவ் செஞ்சதை பார்த்திருக்கலாம்' தனக்குத் தானே பேசிக் கொண்டவளாய்,

'ஐடியா! அம்மாகிட்ட கேட்கலாமே' என்று யோசித்த மறு நொடி, 'இந்தாளைப் பக்கத்துல வச்சிக்கிட்டு என்னனு அம்மாகிட்ட கேட்க' என்று அமைதியானாள்.

'ரொம்ப யோசிக்காத தாமரை! ஜஸ்ட் கோ வி த ஃப்லோ. லிவ் இன் த பிரசன்ட்' தனக்குத் தானே கூறி, தன்னைத் தானே தேற்றிக் கொண்ட பின்னே தான் மனம் சமன்பட்டது அவளுக்கு.

மனம் அமைதியடைந்ததும் கோதையாய் அவளுள்ளம் அவனை ரசிக்கத் தொடங்க, "எங்க தங்கியிருக்கீங்க கண்ணா?" எனக் கேட்டாள்.

காலையில் நடந்ததை உரைத்தான் அவன்.

"ஓ ஓகே! இன்னிக்கு நான் உங்களைச் சோலைவனத்துக்குள்ள கூட்டிட்டுப் போறேன். அங்கிருக்க டூரிஸ்ட் ஸ்பாட்லாம் பார்க்கலாம்" என்றவள் மகிழ்வுடன் சொல்லவும்,

இவன் மனத்திற்குள்ளும் இனம்புரியா இன்ப ஊற்றுப் பொங்கியது.

இன்றைய நாள் தங்களது வாழ்வில் மறக்கவியலா நாளாய் மாறப்போவதை அறியாதவர்களாய் இன்பமாய்ப் பயணித்திருந்தனர் இருவரும்.
 

Latest threads

Top Bottom