கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

Joined
Sep 25, 2025
Messages
104
Reaction score
101
Points
43
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 20

அறைக்குள் யாழினியும், நறுமுகையும், மித்ராவும் ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்க... அவர்களுக்குச் சற்று தள்ளி நின்றிருந்த சகாயனின் மனம் மட்டும் அங்கே இல்லை.

'நான் எப்படி இப்படி ஒரு பெரிய முட்டாள்தனத்தைச் செய்தேன்?' என்று இப்போது நினைத்தாலும் அவனுக்குள் குற்ற உணர்ச்சி தலைதூக்கியது.

உண்மையில், ரிதன்யாதான் அவனிடம் முதன்முதலில் தன் காதலைச் சொன்னாள். அப்போதெல்லாம் அவளைப் பற்றி எதுவும் தெரியாததாலும், அவளது காதலை மறுப்பதற்கு அவனிடம் சரியான காரணங்கள் எதுவும் இல்லாததாலும், அவன் யோசிக்காமல் 'சரி' என்று சொல்லிவிட்டான்.

இரண்டு வருடம் அவர்களுக்குள் பெரிதாக எந்தப்பிரச்சனையும் வரவில்லை. நல்ல காதலர்களாக நேரமிருக்கும் நேரத்தில் வெளியே சந்தித்துக் கொள்வதும், வேலையைப் பார்ப்பதும், என்று நாட்கள் கழிந்தது.

இரண்டு வருடத்துக்குப் பிறகு வீட்டில் அவனுடைய அப்பா நடராஜன், "சகாயா... உனக்குக் கல்யாணத்துக்குப் பெண் பார்க்கவாடா?" என்று கேட்டபொழுது, "நான் ஒரு பொண்ணைக் காதலிக்கிறேன்ப்பா" என்று அவன் ஒற்றை வார்த்தையில் சொல்லி முடித்தான். மகனின் விருப்பமே தன் விருப்பம் என்று வாழும் நடராஜனும் ஆனந்தியும், அதற்குப் பெரிதாக எந்த எதிர்ப்பும் காட்டாமல், அவனது காதலுக்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டார்கள்.

அவர்கள் இருவருக்கும் முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த பின்னரும் கூட ரிதன்யா அவனிடம், "இன்னும் நமக்குக் கல்யாணமே நடக்கல... அதுக்குள்ள உங்க வீட்டுக்கு நான் எப்படி அடிக்கடி வாறது? அது நல்லாயிருக்காது சகா" என்று சொல்ல, அவளின் பேச்சு அவனுக்கு அப்போதைக்குச் சரி என்பது போலத்தான் பட்டது. அவளுக்குத் தன் குடும்பத்துடன் பழகப் பிடிக்காமல் சொல்கிறாள் என்று சகாயன் எண்ணவில்லை.

அதுமட்டுமில்லாமல், தன் வீட்டில் தம்பியும் தங்கையும் வளர்ந்து நின்றதால், தேவையில்லாமல் அவர்களுக்குத் தப்பான முன்மாதிரியாக அமைந்துவிடக் கூடாது என்று நினைத்துத்தான் அவளை அவன் வீட்டிற்குள் அதிகம் அனுமதிக்கவில்லை. அதனால் அவர்களின் சந்திப்புகள் எல்லாமே வெளியே மட்டுமே நிகழ்ந்ததே ஒழிய, வீட்டுக்குள் முக்கியமான நாள் என்றால் மட்டும் வந்து, ஒரு அரை மணி நேரம் இருந்துவிட்டுப் போகும் ரிதன்யாவின் சுயரூபமும் அவளது உண்மையான குணமும் வீட்டில் இருந்த மற்றவர்களுக்கு அப்பொழுது தெரியாமல் போய்விட்டது.

அவளின் குணம் ஏற்கனவே மித்ரனிடமும், மித்ராவிடமும் பலமுறை வெளிப்பட்டிருந்தது. ஆனால், தன் அண்ணனின் வாழ்க்கை கெட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் இருவரும் அதைச் சகித்துக் கொண்டு பொறுத்துப் போனார்கள்.

அந்த விஷயத்தை யாருக்கும் வெளியே சொல்லாமல் இரகசியமாக வைத்திருந்தவர்கள், ஒரு கட்டத்தில் அவள் தன் பணத் திமிரால் எல்லோரையும் தன் இஷ்டப்படி ஆட்டவைக்கப் பார்ப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல் தான், கடைசியில் தன் தாயிடமும் தந்தையிடமும் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்கள்.

ஆனால், அதைக் கேட்ட நடராஜனும் ஆனந்தியும் கூட, இது காதலால் வரும் சாதாரணப் 'பொசசிவ்னஸ்' என்றுதான் நினைத்து விட்டார்கள். அதனால் தான், இந்த விஷயம் தன் மகன் சகாயன் வரை சென்று அவனது நிம்மதியைக் கெடுக்கக் கூடாது என்று நினைத்து, நடராஜனும் ஆனந்தியும் அதைத் தங்களுக்குள்ளேயே ரகசியமாக வைத்திருந்தார்கள்.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல சகாயனின் கல்யாணத் தேதி நெருங்க நெருங்க... மித்ராவும் மித்ரனும் எந்நேரமும் ஒருவித அமைதியின்மையோடும், முகத்தில் அத்தனை பதற்றத்தோடும் இருப்பதைக் கண்டு நடராஜனும் ஆனந்தியும், 'ஒருவேளை நாம நினைப்பது போல இது சாதாரணப் பிரச்சனை இல்லையோ?' என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார்கள். ஆனால், அவர்கள் அதை முழுமையாகப் புரிந்துகொண்டு யோசிப்பதற்குள்... இங்கே எல்லாமே நடந்து முடிந்துவிட்டது!

சகாயன் இப்படித் தன் கடந்த கால நினைவுகளில் மூழ்கியிருந்த அந்தச் சமயத்தில்தான், மித்ரன் தன் தந்தையைத் தேடி வெளியில் சென்றிருந்தான். அங்கே தந்தையோடு நெடுமாறனும் இருக்கக் கண்டு, இருவரிடமுமே விஷயங்களை மிகவும் நிதானமாகவும் மெதுவாகவும் எடுத்துச் சொல்லி, அவர்களைச் சகாயன் இருந்த அந்த அறைக்கு அழைத்து வந்தான்.

அவர்கள் அறைக்குள் நுழையும் பொழுது, யாழினி, நறுமுகை, மித்ரா என எல்லோருமே கையும் போனுமாக ஆளுக்கு ஒரு பக்கமாக நின்று தெரிந்தவர்களுக்குப் போன் செய்து காசு புரட்டும் முயற்சியில் தீவிரமாக இருந்தார்கள்.

சகாயன் தன் தந்தையைப் பார்த்ததும் குற்ற உணர்ச்சியில், "அப்பா... நான் என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லைப்பா..." என்று தன் தந்தையை ஒருவித பரிதவிப்போடு ஏறிட்டுப் பார்த்தான்.

"அதற்கென்னடா... அதுதான் நாங்க எல்லாரும் இருக்கிறோம் தானே? எல்லாவற்றையும் பார்த்துக்கலாம்டா, நீ கவலைப்படாதே" என்று சொன்ன நடராஜன், உண்மையில் ரிதன்யாவின் காதல் தெரிந்த பின்னும் நல்ல அப்பாவாக மகனின் காதலை ஆதரித்தவர்தான் அவர். ஆனால், அவளின் குணங்கள் வெளிப்படத் தொடங்கிய பிறகுதான் மகனுக்கும் அவருக்குமான இடைவெளி விழுந்துவிட்டது. இப்பொழுது நறுமுகையைக் கல்யாணம் செய்ததில் மகன் மேலிருந்த மொத்த அதிருப்தியும் அவருக்குக் காணாமல் போய்விட்டது.

'மகன் தன்னுடைய வேலையில் கொஞ்சம் உயரட்டும், அதற்குப் பிறகு கல்யாணம் வைத்துக் கொள்ளலாம்' என்றுதான் ரிதன்யாவின் காதல் தெரிந்தபின் அவர் சொல்லியிருந்தார். அதுதான் அவளின் பணத் திமிரையும் உண்மையான குணத்தையும் தோலுரிக்க உதவியது. இல்லையென்றால், மகனின் வாழ்க்கை அதல பாதாளத்தில் விழுந்து, மகனையும் தாங்கள் இழந்திருப்போம் என்று அவர் இன்று நறுமுகையோடு நடந்த திருமணத்திற்குப் பின் நினைத்துக் கொண்டார்.

அங்கிருந்த நறுமுகையின் தந்தை நெடுமாறனோ, "சம்பந்தி.. நான் யாழினிக்கும், நறுமுகைக்கும் என்று சில இடங்களில் நிலம் வாங்கிப் போட்டிருக்கிறேன். அதை இப்போதைக்கு விற்க முடியுமா என்று பார்க்கிறேன்" என்று உடனடியாகத் தன் பங்கிற்கு உதவ முன்வந்தார்.

யாழினியின் திருமணப் பேச்சின் போதே, "பெண்ணிடம் இருந்து ஒரு ரூபாய் கூட வரதட்சணையாகத் தரக்கூடாது" என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லியிருந்தவர் நடராஜன். அப்படிப்பட்டவர், இன்று தன் மகனின் பிரச்சனைக்காகச் சம்பந்தியே நிலத்தை விற்கிறேன் என்று சொல்லும் போது, அதற்கு 'வேண்டாம்' என்றும் சொல்ல முடியாமல், 'சரி' என்றும் சொல்ல முடியாமல் ஒரு பெரிய இக்கட்டான சூழ்நிலையில் தவித்தார்.

"மாமா... நிலம் எல்லாம் இப்போ அவசரத்துக்கு உடனே விக்கணும்னா, வர்றவங்க அடிமாட்டு விலைக்குத்தான் கேட்பாங்க. அது சரி வராது" என்று மித்ரன் நடுநிலையாகப் பேசினான். பிறகு தன் தந்தையிடம் திரும்பி, "அப்பா... நம்மகிட்ட இருக்கிற வீடு, கடை எல்லாவற்றையும் அடகு வைக்க முடியுமா என்று நம்முடைய ஆடிட்டர் அங்கிளைக் கேட்டுப் பாருங்கப்பா" என்றவன், தன் மனைவி யாழினியிடம், "யாழினி... அப்பாவோட சொத்து விபரங்கள் உனக்குத் தெரியுமில்லை? அந்தச் சொத்து மதிப்புகளுக்கு உடனடியாக பேங்க் லோன் கிடைக்குமா?" என்று கேட்டான்.

அவள் இப்பொழுது பயிற்சிப் காலத்தில் தானே இருக்கிறாள், அதனால் பஞ்சாட்சரம் தரும் வேலைகளை மட்டும் செய்பவளுக்கு நடராஜனின் சொத்தைப் பற்றி அவ்வளவாகத் தெரியாததால், "எனக்குச் சரியாகத் தெரியவில்லைங்க... ஆடிட்டர் அங்கிளைக் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றாள் யாழினி கவலையுடன்.

"எனக்குத் தெரிந்து அந்தப் பொண்ணு ரிதன்யா, காசை உடனே இப்பவே வச்சாகணும்னு வந்து ஒற்றைக்காலில் நிற்பாள்" என்று அவளது குணமறிந்த நடராஜனும் ஆதங்கப்பட்டார்.

"அப்பா... இப்போ நாம வரவேற்பு மேடைக்கு வேற போகணும். இந்த மனப்பதட்டத்தை வச்சுக்கிட்டு எங்களால் அங்கே போய் ஷோகேஸ் பொம்மைகள் மாதிரி சிரிக்க முடியுமான்னு தெரியலைப்பா" என்று மித்ரன் தன் ஆதங்கத்தைக் கொட்டினான்.

"வேற வழியில்லை மித்ரன்... எல்லா பிரச்சனையும் நல்லபடியா முடிஞ்சுதுன்னு உங்க அம்மா முகத்துல இப்பதான் கொஞ்சம் சந்தோஷம் தெரியுது. இப்போ போய் இந்த விஷயத்தைச் சொல்லி அவளோட நிம்மதியைக் கெடுக்க முடியாது" என்று சொன்ன நடராஜன், சகாயனின் பக்கம் திரும்பி, "நீயும்தான்டா சகாயா... முகத்தை ஒரு மாதிரி வச்சுக்காம வாறவங்களை நல்லபடியா சிரிச்சபடி எதிர்கொள்ளுங்க" என்றார் பக்குவமாக.

சகாயன் அந்தக் கிளினிக்கின் ஒவ்வொரு செங்கலையும் பார்த்துப் பார்த்து, தனக்குப் பிடித்தது போல அதன் ஒவ்வொரு பகுதியையும் வடிவமைத்திருந்தான். அவனின் உயிரே அங்கேதான் இருக்க... அது இப்போது தன்னைவிட்டு அடியோடு கைவிட்டுப் போய்விடுமோ என்ற பயம் அவனுள் எழுந்தது. தான் வளர்ந்து பெரியவன் ஆகிவிட்டோம் என்ற நினைவு சற்றும் இல்லாமல், ஒரு சிறு குழந்தையைப் போலத் தன் தந்தையின் தோளுக்குள் அடைக்கலமாகத் துடித்துக் கொண்டிருந்தான் சகாயன்.

மகனின் தவிப்பைக் கண்டு தாங்க முடியாத நடராஜன், "அப்பா இருக்கிறேண்டா சகாயா... நீ எதுக்கும் கலங்காதே" என்று அவனை அணைத்துக் கொண்டார். பிறகு நெடுமாறனின் பக்கம் திரும்பி, "சம்பந்தி... உங்க சொத்து விபரங்களையும் நம்ம ஆடிட்டர் பஞ்சுகிட்ட கொடுத்துடுங்க. எல்லாத்தையும் மொத்தமாக அடகு வச்சே காசைப் புரட்டிடலாம்" என்றார் உறுதியாக.

"சம்பந்தி... நீங்க கேட்காமலேயே நான் என் சொத்துக்களைக் கொடுக்கத் தயாராத்தான் இருக்கேன். ஆனா, நம்ம முழுச் சொத்தையும் அடகு வச்சுக் கொடுத்தாலும், அந்த ரிதன்யாவுக்குக் கொடுக்க வேண்டிய மொத்தக் காசையும் முழுசாப் பிரட்ட முடியும் போல இல்லையே..." என்று நெடுமாறன் தன் மனதில் இருந்த கவலையை வெளிப்படுத்தினார்.

அப்போது சகாயன் மெதுவாகத் தலையிட்டு, "மாமா... என் சேவிங்ஸ் கொஞ்சம் கைவசம் இருக்கு. அதுமட்டுமில்லாம, நான் எப்படியும் ஒருநாள் அவகிட்ட மொத்தமாகக் காசைக் கொடுத்திடனும் என்று கடந்த இரண்டு வருஷமா ஒவ்வொரு மாசமும் காசைச் சேர்த்துக்கிட்டே வந்தேன். அதனால் மீதிப் பணத்தை என் சேவிங்ஸ் வச்சுச் சமாளிச்சிடலாம்" என்றான் ஓரளவு நிம்மதியோடு.

மலை போலப் பெரிதாகத் தெரிந்த பிரச்சனை இப்போது ஒரு முடிவுக்கு வந்தது போல இருக்க... "சரி, நீயும் மருமகளும் தனியா பேசி ஒரு முடிவெடுத்துட்டு வாங்க. நாங்க வெளியே போறோம்" என்று கூறிய நடராஜன், நெடுமாறனோடு மித்ரனையும் யாழினியையும் கையோடு கூட்டிச் சென்றார். மித்ராவும் அவர்களுக்குப் பின்னால் நகர்ந்தாள்.
 
Previous thread
Next thread

Latest threads

Top Bottom