கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

Joined
Sep 25, 2025
Messages
104
Reaction score
101
Points
43
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 22

வரவேற்பு மேடையில், சற்றுமுன் அறைக்குள் தன் கணவன் தன்னைச் சிவக்க வைத்த அந்த அழகான தருணத்தை நினைத்தபடியே நின்றிருந்தாள் நறுமுகை.

காலையில் நடந்த திருமணத்திலே ஏன் இந்தத் திடீர் பெண் மாற்றம் என்று மண்டபத்திற்கு வந்தவர்களுக்கு ஓரளவிற்குப் புரிந்திருந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில சலசலப்புகள் எழாமல் இல்லை. சிலர் சகாயனுக்குச் சாதகமாகப் பேசினாலும், இன்னும் சிலரோ, "நான்கு வருடம் பழகியவளின் குணம் தெரியாமல் போய்விட்டதா? அந்தப் பெண்ணின் அழகிலும் பணத்திலும் அந்தளவிற்குக்கா இவன் மயங்கிக் கிடந்தான்?" என்று இருவேறாகப் பேசிக் கொண்டார்கள். ஆனால், நடராஜன் குடும்பத்தினர் அந்தப் புறணிகளைப் பற்றியெல்லாம் துளிரும் கவலைப்படாமல், எல்லா விதமான வீண் பேச்சுகளையும் தங்களின் புன்னகையால் துடைத்து எறிந்துவிட்டு, முகத்தில் மகிழ்ச்சி பொங்க வந்தவர்களை இன்முகத்தோடு உபசரித்துக் கொண்டிருந்தார்கள்.

நறுமுகை தன் பெற்றோரைத் திரும்பிப் பார்த்தாள். இரு பெண் பிள்ளைகளுக்கும் ஒரே மேடையில், ஒரே குடும்பத்தில் திருமணம் முடிந்துவிட்டதால், அவர்கள் இனி எப்போதும் ஒன்றாகவே இருக்கப் போகிறார்கள் எனும் நிம்மதியும், மகிழ்ச்சியும் அவர்களின் முகத்தில் அப்பட்டமாகத் துலங்கியது. அந்தச் சந்தோஷத்தோடு வந்தவர்களிடம் பேசுவதும், அங்கும் இங்குமாக ஓடி ஓடி வேலைகளைக் கவனிப்பதுமாக அவர்கள் பரபரப்புடன் காணப்பட்டார்கள்.

சகாயன் தன்னைத் திருமணம் செய்யப் பெண் கேட்ட விஷயத்தை, இரண்டு நாளாக எப்படி இத்தனை ரகசியமாக வைத்திருக்க முடிந்தது என்று நினைத்து நறுமுகைக்கு இன்னும் வியப்பு அடங்கவில்லை.

தன் திருமணத்திற்காக அவர்கள் எதிலும் குறை வைக்காமல், எல்லாவற்றையும் தனக்குத் தெரியாமல் பார்த்துப் பார்த்து வாங்கியிருக்கிறார்கள் என்பது அவள் உடுத்தியிருந்த அந்த அழகான லெஹெங்காவிலும், அவளணிந்திருந்த நகைகளின் நேர்த்தியிலும் அப்பட்டமாகத் தெரிந்தது.

அப்படியே தன் குடும்பத்தினரை நெகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தவளின் பார்வை, மெதுவாகத் தன் பக்கத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருந்த சகாயன் மீது நிலைத்தது.

அவனைப் பார்த்த மாத்திரத்தில், அவளது எண்ண ஓட்டம் முழுக்க அவனது நினைவாகவே மாறத் தொடங்கியது. 'அவனை இனிமேல் எப்படி அழைப்பது? ரிதன்யா கூப்பிட்டது போல 'சகா' என்று மட்டும் நிச்சயம் அழைக்கக் கூடாது. வேறு எப்படி உரிமையோடு அழைத்தால் நன்றாக இருக்கும்?' என்று அவளது மனதில் புதுமணப் பெண்ணுக்கே உரிய கேள்விகள் ஓடிக்கொண்டிருக்க, வந்தவர்களை இன்முகமாக வரவேற்றுப் பேசிக்கொண்டிருந்த சகாயனை ஓரக்கண்ணால் பார்த்தாள் நறுமுகை.

கம்பீரமான ஆண்மகன் தான், அதில் இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆனாலும், சற்றுமுன் அறைக்குள் தன்னால் காசைப் புரட்ட முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில், தன் தந்தையைத் தவிப்பாகப் பார்த்து அவரிடம் ஆறுதல் தேடப் போன அந்தச் சிறிய பாலகனின் முகத்தையும் அவளும் கவனித்திருந்தாள் அல்லவா?

'நாளைக்கு நமக்குப் பிறக்கும் குழந்தையும், தங்கள் மகனும் ஏதோ ஒரு பெரிய பிரச்சனையோடு வந்தால்... அவனும் இப்படி ஒரு குட்டிச் சகாயனாகத் தன் தந்தையைக் கட்டிக்கொண்டு அழுவானோ? அப்போது இந்தச் சகாயன் அவனை வாரி அணைத்து, சமாதானப்படுத்தித் தேற்றுவாரோ?' என நினைக்கும் போதே அவளது கண்ணுக்குள் ஒரு அழகான பிம்பம் தோன்றி மறைந்தது.

அவள் அந்த அழகான கற்பனைக் கனவில் மெய்மறந்திருக்கும் பொழுது, மண்டபத்தின் வாசலில் ஆடிட்டர் பஞ்சாட்சரம் உள்ளே நுழைவதைச் சகாயன் கவனித்துவிட்டான்.

சகாயன் மெதுவாக நறுமுகையின் பக்கம் குனிந்து, "நறுமுகை... ஆடிட்டர் அங்கிள் வந்திட்டார். நான் கொஞ்சம் மேடையை விட்டு கீழே இறங்கிப் போய் அவர்கிட்ட பேசிட்டு வரட்டா?" என்று மெல்லிய குரலில் கேட்டான்.

அவனது குரல் கேட்டுச் சட்டென்று தன் கனவிலிருந்து கலைந்து விழித்தவள், "ஆங்... சரிங்க, நீங்க போய்ப் பேசிட்டு வாங்க" என்று அவசர அவசரமாகத் தலையசைத்தாள்.

சகாயன் மேடையிலிருந்து கீழே இறங்கிப் போவதைக் கண்ட மித்ரனும், "அண்ணா இரு நானும் வாறேன்" என்று அவனுக்குப் பின்னாலேயே அவசரமாகச் சென்றான்.

இப்பொழுது அந்தப் பெரிய வரவேற்பு மேடையில் அக்காவும் தங்கையுமாக யாழினியும் நறுமுகையும் மட்டும்தான் தனித்து நின்றிருந்தார்கள். கூட்டம் கூட்டமாக ஆட்கள் வந்து கொண்டிருக்க, நறுமுகைக்கு அங்கே தனியாக நிற்க ஒரு மாதிரி சங்கடமாக இருந்தது.

அவள் மெதுவாக யாழினியின் பக்கம் பார்த்து, "அக்கா... அவங்க ரெண்டு பேரும் போயிட்டாங்க. நாமும் மேடையை விட்டு இறங்கிப் போவோமா?" என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

"ஆட்கள் நிறையப் பேர் வந்திருக்காங்கடி... இந்த நேரத்துல நாமளும் இப்படி இறங்கிப் போனால் நல்லாயிருக்காது. கொஞ்ச நேரம் பொறுமையா இரு. மாமா அங்கே என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு, எப்படியும் அந்த இரண்டு பிள்ளைகளையும் கொஞ்ச நேரத்துலேயே இங்கே மேடைக்குத் துரத்தி விட்டுடுவார்" என்றாள் யாழினி.

அதே சமயம், கீழே மண்டபத்தில் நறுமுகையின் தந்தை நெடுமாறன், ரிதன்யாவால் வந்திருக்கும் அந்தப் பெரிய காசுப் பிரச்சனையைப் பற்றித் தன் மனைவி பூங்குழலியிடம் யாருக்கும் தெரியாமல் சுருக்கமாகக் கூறி, லேசாகக் கோடு போட்டுக்காட்டிவிட்டார்.

கணவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தாலும், பூங்குழலி சட்டென்று தன்னைச் சமாளித்துக் கொண்டார். சரியாக அந்த நேரத்தில், ஆடிட்டர் பஞ்சாட்சரம் மண்டபத்திற்குள் நுழைவதை அவர்கள் கவனித்தார்கள்.

இனி அங்கே ஆண்கள் அனைவரும் பண விஷயத்தைப் பேசப் போகிறார்கள், இந்தச் சமயத்தில் ஆனந்தி அங்கே இருந்தால் தேவையில்லாமல் பதற்றப்படுவாள் என்பதைப் பூங்குழலி உணர்ந்து, உடனே சமயோசிதமாகச் செயல்பட்டவர், நேராக ஆனந்தியிடம் சென்று ஏதேதோ பேச்சுக் கொடுத்து, "சம்பந்தி... உள்ளே அறையில வச்சிருக்கிற பலகாரம் போதுமா, இல்லை வீட்டிலிருந்து இன்னும் கொஞ்சம் எடுத்துட்டு வரணுமான்னு பார்க்கணும், வாங்களேன்..." என்று சாக்கு சொல்லி, அவரை அங்கிருந்து கனிவோடு அறைக்குள் கூட்டிச் சென்றுவிட்டார்.

மித்ரா எங்கே?' என்று தேடிய நறுமுகையின் பார்வை ஒரு இடத்தில் போய் நிலைத்து நின்றது.

அங்கே மித்ரா யாரோ ஒரு தெரியாத ஆணுடன் தனியாக நின்று கொண்டு, மிகத் தீவிரமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். அவளது முகபாவனையே அங்கே ஏதோ ஒரு முக்கியமான விஷயம் நடக்கிறது என்பதைப் பறைசாற்றியது. நறுமுகை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்த ஆண்மகனையும் கூட்டிக்கொண்டு மித்ரா நேராகத் தன் தந்தை நடராஜனிடமே சென்றாள்.

அங்கே சகாயன், மித்ரன் மற்றும் ஆடிட்டர் பஞ்சாட்சரமும் நின்றிருக்க... மித்ரா அழைத்து வந்த அந்தப் புதிய நபருடன் அவர்கள் அனைவரும் ஏதோ தீவிரமாக விவாதிக்கத் தொடங்கினார்கள்.

தூரத்திலிருந்து பார்ப்பதால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று நறுமுகைக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், அங்கே ஏதோ ஒரு பெரிய விவாதம் நடப்பது போல இருக்க... மேடையில் நின்றிருந்த நறுமுகைக்கு அதற்கு மேல் அங்கே அமைதியாக நிற்க இருப்புக் கொள்ளவில்லை.
 
Last edited:
Previous thread

Latest threads

Top Bottom