Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

எனக்கெனவே வந்தாய் - 1

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 4
  • Views Views 2K
Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
738
Reaction score
4,423
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
எனக்கெனவே வந்தாய்

ஆர்த்தி ரவி
அத்தியாயம் - 01

அக்காலை வேளையிலேயே சித்திரம் வரையும் ஓவியன் வண்ணக் கலவையுடன் புறப்பட்டது போல் சூரியனும் கிளம்பியிருந்தான்.

ஒளிக்கீற்றுகளை மிகத் தாராளமாக வாரியிறைத்துப் பூமிக்கு வண்ணம் பூசும் நினைப்போ என்னவோ, அந்நேரமே வெப்ப ஒத்தடம் தரும் வேலையில் மிகவும் தீவிரமாக இறங்கியிருந்தான்.

மக்களுக்கு உதவ முன் வந்த வாயுவுக்குமே முடியாது போய்விட சூரியனிடம் படு மோசமாகத் தோற்றுப் போனான்.

வார நாளாக வேறு இருக்க மக்கள் பலருக்குமே அந்நாள் பரபரப்பாகத் தொடங்கியிருந்தது.

அதில் வீரியமற்ற காற்றும் வெற்றிப் புன்னகை சிந்திய சூரியனும் உதாசீனப்பட்டுப் போயின!

என்றைக்கும் போல் இதுவும் ஒரு நாள். உழைக்கும் வர்க்கத்தினருக்கு ஆசுவாசமாகச் சுற்றுப்புறத்தை இரசிக்கக் கொள்ள ஏது நேரம்?

சாலைகளில் இரண்டு சக்கர வாகனங்களுடன் மூன்று சக்கர வாகனங்களும் போட்டி போட்டுப் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தன.

அவற்றிற்கு இடைஞ்சலாக நான்கு சக்கர வாகனங்கள் வேறு தங்களது எனச் சாலைகளைப் பட்டா போட முயன்றுகொண்டிருந்தன.

அந்த வாகனங்களின் மத்தியில் சுரேனின் டூ வீலரும் பயணப்பட்டுக் கொண்டிருந்தது.

அவனுக்கு இந்தப் பர பரப்புப் பழக்கம் தான். அலட்டிக் கொள்ளாமல் வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தான்.

ஒரு குறிப்பிட்ட சிக்னலில் மஞ்சள் நிறம் மாறி சிவப்பு விளக்கு ஒளிர்ந்தது. சரியாக அதே நேரத்தில் சுரேனின் வாகனமும் அங்கு வந்து நின்றது.

அந்தக் குறுக்குச்சாலையில் சிக்னல் விழவும் சந்தோஷம் அவனைத் தழுவிக்கொண்டது. உல்லாசமாக அவன் உதடுகள் சீழ்க்கை ஒலியை எழுப்பின. கண்கள் தன்னைப் போல் பக்கவாட்டுத் தெருவை அலசின.

சுரேன் வீடு இருக்கும் ஏரியாவிலிருந்து வேலைக்குச் செல்ல எப்போதும் வேறு சாலை வழியாகப் பயணிப்பான். அவனுக்கு இந்தப்பக்கம் வர வேண்டியதில்லை.

மிகவும் அரிதாகத்தான் இப்படி வர நேரிடும். அப்படி வந்துவிட்டால் குளு குளு என்று அகமும் முகமும் மலர்ந்து போகும்.

முன்பு ஒரு முறை சுரேனின் நண்பன் ஒருவன் அவன் அக்காவின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்திருக்க, அந்தத் திருமண மண்டபம் இப்பகுதியில் தான் அமைந்திருந்தது.

அந்தத் திருமணத்திற்குச் சென்றவன் நேரமாகிவிட்டதென்று அவசர அவசரமாக இவ்வழியாக வந்துகொண்டிருக்க, அவன் அவசரம் புரியாது சிக்னல் மாறிவிட்டது.

அது பிஸியான சிக்னல் வேறு. எப்படியும் பச்சை விளக்கு ஒளிர்வதற்கு ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகலாம்.

அது வரைக்கும் அங்கே காத்திருக்கப் பொறுமையற்றவனாக, குறுக்குப்பாதையில் புகுந்து போய்விடலாமா என்று கண்களைச் சுழற்றியபோது தான் முதல் முறையாக அப்பெண்ணை பார்த்தான்.

ரோஜா வர்ணமும் வெண்மையுமாய் ஒரு குர்தி டாப்பும் டெனிம் நிற லெக்கிங்க்ஸும் அணிந்திருந்தாள்.

அவளை ஒரு முறை பார்த்ததும் மீண்டும் பார்க்கச் சொன்ன கண்களை அடக்கி வைக்கவெல்லாம் சுரேன் மெனக்கெடவில்லை.

‘அழகா இருக்காள்’ என்று நினைத்துக்கொண்டான். அந்தச் சில வினாடிகளில் அவன் கண்கள் அவளையே வட்டமிட்டன.

அன்று, அதுவரை அவனுக்கிருந்த அவசரம் அக்கணம் மறைந்து போனது.

அவளைப் பார்த்த அந்நாளை மறக்கவில்லை அவன். இப்பொழுது கூட சுரேனுக்கு நினைவிருக்கிறது.

அவளுடன் நின்றிருந்த பெண்ணிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். அந்தப் பேச்சுக் காரசாரமாக இருந்திருக்க வேண்டும்.

அவள் அணிந்திருந்த உடையின் ரோஜா வண்ணத்தின் தீண்டல் அவள் கன்னத்திலும்!

உதட்டோரம் சிறு துடிப்பும் மேலுதட்டில் வேர்வைத்துளிகளின் பொருமல்களும்!

அவளின் தோற்றம் சுரேனுக்கு ஒரு சுவராசியத்தைத் தர, அவளையே கண் சிமிட்டாமல் பார்த்திருந்தான். தனக்கு நேரமாகிவிட்டதை மறந்தே போனான்.

ஒருவன் தன் மேல் பார்வையை வைத்திருக்கிறான் என்பதை அவள் அன்று அறிந்திருக்கவில்லை.

அந்த முதல் நாளுக்குப் பின்னர் அவள் யாரென்று தெரிந்துகொள்ள சுரேன் எதுவும் செய்யத் தேவையிருக்கவில்லை.

இரண்டாம் முறை அப்பெண் அவன் வேலையிடத்திற்கு வந்திருந்தாள். புருவம் மேலேற ஆச்சரியமாக சுரேன் அவளைப் பார்க்க, கண்கள் விரிய நின்றுகொண்டிருந்தவன் காதில்,

“புதுசா வேலைக்கு வந்திருக்காங்க. பர்னிச்சர் பிரிவுல வேகென்சி இருந்திச்சாம்.” யாரோ யாரிடமோ சொல்லிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது.

அவளும் தான் வேலையிலிருக்கும் இடத்தில் தான் வேலை செய்ய வந்திருந்தாள் என்பதில் சந்தோஷம் அடைந்தான்.

அதன் பின்னர் சுரேன் சில முறை அவளை அதே சிக்னலில் பார்க்க நேர்ந்தது. அதை வைத்து அவள் அந்த ஏரியாவில் தான் எங்கோ வசிக்கிறாள் என்று கண்டுகொண்டான்.

கடந்து போன காலத்தில் சுரேன் அவளுக்கு வெணிலா ஐஸ் கிரீம் என்று பெயர் வைத்துவிட்டான். அவள் வெணிலா ஐஸ் கிரீம் போல் நிறம் கொண்டவளில்லை. அவள் பெயரே வெண்ணிலா.

பழைய ஞாபகத்தில் சுரேனின் பார்வை வெண்ணிலாவை அந்த சிக்னலில் தேடியது. அவளை அங்குக் காணவில்லை.

அதில் அவன் மனத்தில் ஏமாற்றம் சூழ்ந்தது. முகத்திலும் அந்த ஏமாற்றம் தன்னைப் போல் சூழ்ந்துகொண்டது.

‘எப்படியும் கடைக்கு வருவாள். அப்ப பார்த்துக்கறேன்.’

தன் மனத்தைச் சமாதானப்படுத்த சொல்லிக்கொண்டான். அவளைப் பற்றிய யோசனையால் அவள் முகம் தானாக அவன் கண்களுக்கு முன் உலா வந்தது.

உடனே சற்று முன் சுணக்கம் கண்ட மனதும் உற்சாகமானது.

சுள்ளென அடித்துக்கொண்டிருந்த வெயிலில் வேர்த்துக் கொட்டிக்கொண்டிருந்தது. அதைச் சட்டைசெய்யாமல் ஹெல்மெட்டுக்குள் அவனின் உதடுகள் அந்த நேரத்திலும் சிரிப்பில் விரிந்தன.

சிவப்பு மாறிப் பச்சை விளக்கு ஒளிர, சுரேனின் வாகனமும் அங்கிருந்த மற்ற வாகனங்களுடன் ஓட்டத்தில் ஒன்றியது!

தன் வீடிருக்கும் நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தினர் கலந்து வசிக்கும் குடியிருப்புப் பகுதியைக் கடந்து அரக்கப்பரக்க நடந்து வந்தாள் செல்வி.

அவள் முகத்தில் வேர்வை பூத்துக்குலுங்கி வடிய ஆரம்பித்தது. நெற்றி வேர்வையைக் கைக்குட்டையால் ஒற்றியெடுத்தபடி அந்த சமந்தா நகருக்குள் நுழைந்தாள்.

“சமந்தா நகரா”? அப்பகுதியில் வசிக்கும் ஓர் அரசியல்வாதி செய்த வேலை தான் அந்த நகர் இப்பெயர் பெருவதற்குக் காரணம்.

ஊருக்குள் பல புதிய நகர்கள் உருவாகிக்கொண்டிருந்த நேரம். பல நவீனமான பெயர்கள் கொண்ட குடியிருப்புப் பகுதிகள் முளைத்தன.

அவற்றின் மத்தியில் “தீனா நகர்” ஈர்ப்புடையதாக இல்லை என்ற அவன் முடிவால் அந்தப் பகுதி, “சமந்தா” என்று பெயர் வாங்கியது!

‘அவன் இளைய தளபதி இரசிகனாக இருக்க வேண்டும். அதான் “தீனா”வைத் தூக்கிட்டான்’ என்று அஜித் இரசிகர்கள் கொந்தளித்தது வரலாறு!

செல்வி தேடி வந்தது வெண்ணிலாவை. வெண்ணிலா தான் தங்கள் “சமந்தா” நகர் பெருமையை செல்வியிடம் அவிழ்த்துவிட்டிருந்தாள்.

எப்பவும் போல் இன்றும் சமந்தா நகர் பெயர் பலகையைக் கண்டு செல்வி நொடித்துக்கொண்டாள். காசி நகரிலிருந்து வருபவளுக்கு ‘சமந்தா’ நாகரீகமாக இருந்தது பொறாமை போல்.

வெண்ணிலாவின் வீடு அந்த நகரின் உள்ளே நுழையவும் இரண்டாவது தெருவில் இருந்தது.

தெருவின் இரு பக்கமும் வரிசையாகத் திமிரைக் காட்டியபடி தனி வீடுகள். அதிலும் செல்வி நுழைந்த அவ்வீடு ஆக்டோபஸ் போன்று சுற்றியிருந்த இடத்தை வளைத்துப் பிடித்திருந்தது.

வெண்ணிலாவும் செல்வியும் ஒரே இடத்தில் தான் பணி புரிகின்றனர். கடை வீதியிலிருக்கும் ஞானமணி ஸ்டோர்ஸில்.

வேலைக்குப் போகும் வழி தான் என்பதால் பெரும்பாலும் காலை வேளையில் செல்வி வெண்ணிலா வீட்டிற்கு வந்துவிடுவாள்.

இருவரும் இணைந்து வெண்ணிலாவின் ஸ்கூட்டியில் வேலைக்குச் செல்வது வழக்கம். மாலையில் வேலை முடிவதைப் பொருத்து அவரவர் வழியில் திரும்புவர்.

வெண்ணிலாவின் ஒன்றுவிட்ட அண்ணனுடைய மனைவி இந்தச் செல்வி. வெண்ணிலா வீடு போல் இவளுக்கு வசதியில்லை என்றாலும் காசு பணத்திற்குத் தட்டுப்பாடு கிடையாது.

தான் வயதில் மூத்தவள், அண்ணி முறை என்றாலும் வெண்ணிலாவின் சிடு சிடுப்பைப் பொருட்படுத்தாமல் அவளுடனேயே செல்வி தொற்றிக்கொள்வாள்.

இருவருக்குள்ளும் நிறைய வித்தியாசங்கள்; கருத்து வேறுபாடுகள்; சின்ன சின்ன மனஸ்தாபங்கள் எழுந்தாலும் பெரும்பாலும் செல்வி அவளைப் பொறுத்துப் போய்விடுவாள்.

அவசரமாக வீட்டு காம்பவுண்டுக்குள்ளே நுழைந்த செல்விக்கு, அங்கு சிவப்பும் கருப்புமாய்க் கம்பீரத் தெனாவெட்டுடன் நின்றிருந்த வெண்ணிலாவின் ஸ்கூட்டியை கண்டதும் ஆசுவாசமானது!

அன்று பத்து நிமிடம் தாமதமாக வந்திருந்தவள், “நல்லவேளை... வெண்ணிலா இன்னும் போகலை. வண்டி இங்க தான் நிக்குது.” என்று வேறு சந்தோஷமாகச் சொல்லிக்கொண்டாள்.

அந்தச் சந்தோஷத்திற்கு ஆயுள் நொடிகள் என்பதை அறியாமல்.

“வெண்ணிலா!” என்றபடி செல்வி வீட்டின் அழைப்புமணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தாள்.

என்றும் இல்லாதபடி மிகவும் அமைதியாக இருந்தது வீடு. வந்தவள் அப்பொழுது தான் அதைக் கவனிக்கச் செய்தாள்.

“டீ வெண்ணிலா!” மீண்டும் இரண்டு முறை அழைப்புமணியை அழுத்திப் பார்த்தவள் எந்தவிதமான பதிலில்லை என்றதும் டென்ஷனாக ஆரம்பித்தாள்.

“கேட் திறக்குற சத்தத்துக்கே யாராவது எட்டிப் பாப்பீங்க. இன்னைக்கி என்ன இத்தனை தடவை கூப்பிட்டும் சத்தமே இல்லை. ஏய் என்னடி பண்ணிட்டிருக்க… வீட்ல இருக்கியா இல்லையா?”

சத்தமாக செல்வி கூப்பிட செய்ய… வெண்ணிலா வீட்டில் இருந்தால் தானே பதில் வரும்?

“...”

எதிர்மறையாக நிலவிய அமைதியில் செல்வி மண்டை காய்ந்து போனாள்.

ஒரு முயற்சியாக, “பாட்டீ…” என எப்போதும் வீட்டை அடைகாப்பது போல் அங்கேயே கிடக்கும் காந்தம்மாளை அவள் கூப்பிட்டுப் பார்க்கச் செய்ய, அவரும் வெளியே எட்டிப் பார்க்கவில்லை.

வெண்ணிலாவின் அம்மா நீலவேணி. அப்பா மனோகர். அம்மா வழிப்பாட்டி காந்தம்மாள். இவர்கள் வீட்டின் இளவரசி வெண்ணிலா.

நான்கைந்து பேருக்குப் போதுமான அளவான வீடு. சுற்றியும் நல்ல இடமிருந்தது. அந்த வீட்டின் உள்ளமைப்பின் அளவிற்கு சுற்றியிருந்த இடம் அதிகமே.

அந்தக்காலத்தில் சல்லிசாக வாங்கிப் போட்டிருந்தார் காந்தம்மாளின் கணவர்.

வீட்டைச் சுற்றியும் தாராளமாக இடமிருந்ததால் மரங்கள் செடிகொடிகள் எனச் சூழ்ந்திருக்க, அக்கம்பக்கத்து வீடுகள் தூரமாகியிருந்தன.

ஏற்கெனவே காந்தம்மாள் சற்றுக் கடுசு வேறு. அதனால், பக்கத்து வீடுகளில் அவ்வளவாக யாரும் இவர்களுடன் உறவாடுவதில்லை. நேரெதிரே பார்த்துக்கொண்டால், ‘நலமா’ என்கிற சுருக்கமான பேச்சு வார்த்தை மட்டுமே நிலவும்.

இதனை அறிந்திருந்தாலும், செல்வி யாரிடமாவது விசாரிக்க நினைத்தாள் தான். ஆனால், அவளிருக்கும் அவதிக்கு என்ன ஏதென்று பக்கத்தில் போய் விசாரிக்கவும் நேரமில்லை.

“விசாரிச்சாலும் பதில் வரப் போகுதா… எங்க போறாங்கன்னு சொல்லிட்டா போயிருக்கப் போறாங்க!” நொடித்துக்கொண்டாள்.

எதற்கும் கடைசியாக வீட்டின் கொல்லைப்பக்கமும் போய்ப் பார்த்தாள். அங்கு ஜின்னி செல்வியின் குரல் கேட்டு மெதுவாகத் தலையைத் தூக்கிப் பார்த்துத் தீனமாகக் குரைத்தது.

அதன் தீனமான குரைப்பு செல்விக்கு எரிச்சலூட்டியது.

“வயசானாலும் காந்தம் எவ்வளவு வெடுப்பா இருக்குது. உனக்கென்ன கேடு… நல்லா தின்னு போட்டு, குலைச்சிட்டு வெடுப்பா வீட்ட காவல் காப்பியா… கெழடு கெழடு!

தண்டத்துக்குச் சோத்த தின்னுட்டு இப்படிச் சோம்பிப் போயிக் கெடக்கியே. ஜின்னியாம் ஜின்னி… பேரைக் கேட்டா அழகு. ஆள பாத்தா எழவு!”

கோபமோ ஆத்திரமோ வார்த்தைகள் மனிதனின் வாயிலிருந்து தாராளமாகத் தப்பிவிடுகின்றன. நாய் தான் எழவு என்று திட்டு வாங்கியது. வீட்டில் ஆளில்லாத கடுப்பில் செல்வி நாயை வைதாள்.

செல்விக்கு எப்படித் தெரியும்… உண்மையிலேயே அவர்களுக்கு மிகப் பெரிய எழவை விதியோ சதியோ இழுத்து வரப் போவதைப் பற்றி?

ஒருவேளை நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்திருந்தால், பாவம் அந்த வாயில்லா ஜீவனை வைதிருக்க மாட்டாளா இருக்கும்.

ஜின்னி அவளை பாவமாகப் பார்த்தது. செல்விக்குச் சில சமயம் பெற்ற பிள்ளையைப் பார்த்துக் கொஞ்சவே நேரம் இருக்காது. நாயை எங்கே இருந்து அவள் சட்டை செய்யப் போகிறாள்.

“வெளிய போறதா இருந்தா ஒரு கால் பண்ணிச் சொல்றதுக்கென்ன? நான் வீட்ட விட்டுக் கிளம்புனதே லேட்டு. இங்க வந்து வேற இன்னும் நேரத்தை விரயமாக்கிட்டேன்.”

அன்று அவசரத்தில் தன் கைபேசியை வீட்டில் மறந்துவிட்டு வந்த மடமை வேறு அவளை நொந்து போகச் செய்தது. இப்பொழுது தானும் வெண்ணிலாவைக் கூப்பிட்டுப் பேச வழியில்லை.

செம கடுப்பிலிருந்தாள் செல்வி. ஸ்கூட்டியில் என்றால் விரைவாகப் போய்விடலாம். இனி பஸ்ஸோ ஆட்டோவோ பிடித்துப் போக நேரமாகிவிடும்.

அதுக்கு வேறு காசைத் தண்டமாகச் செலவு செய்ய வேண்டும். கஞ்சூஸ் செல்வி வெண்ணிலாவுக்கு வசவு மொழிப் பாடிவிட்டு, வெளிக்கதவை மூடித் தாள்பாளை சரி பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

மணி ஒன்பது அடிக்கும் முன்னர் அவள் கடைவீதியில் இருக்க வேண்டும். செல்வி பத்தாம் வகுப்பு பெயில். அவளுக்கு இந்த வேலையே குதிரைக்கொம்பு என்பதை கவனமாக நெஞ்சில் பதிய வைத்திருந்தாள்.

அவள் பதினேழு வயதில் துரையப்பனுக்கு வாக்கப்பட்டிருந்தாள். பத்தொன்பதாவது வயதில் ஒரு பிள்ளையைப் பெறுவதற்குள் குடும்பமும் உறவும் அவளைப் படுத்திய பாட்டைத் தாளாமல், துரையப்பனே இந்த வேலையைப் பொண்டாட்டிக்கு வாங்கித் தந்திருந்தான்.

பணத்துக்காக அவள் வேலை செய்து தான் ஆக வேண்டும் என்றில்லை. ஆனால், பொண்டாட்டியின் மன நிம்மதி முக்கியம் என்கிற சூட்சுமத்தை அறிந்து வைத்திருந்தான் துரையப்பன்.

“வேலைய வாங்கித் தந்திட்டேன். இதைத் தக்க வச்சிக்கிறது உன் சாமர்த்தியம் செல்வி!” என்றிருந்தான்.

செல்விக்கு வேலைக்குப் போய் நன்றாகப் பழகிவிட்டது.

வீட்டில் புகுந்த வீட்டினரின் நச்சரிப்பு. எந்த நேரமும் யாராவது வருவதும் போவதும் என்று கூடுதல் வீட்டு வேலை வேறு. அவள் அவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள இந்த வேலை உதவியது.

அதே சமயம் கணவனுடன் செலவளிக்கக் கிடைக்கும் தனிமையான நேரமும் எந்தவிதமான சண்டை சச்சரவில்லாமல் செல்ல, மனநிம்மதியுடன் வருவானமும் வரவு தானே என்பது அவளது எண்ணம்.

தரமான பொருட்களை விற்கும் கடை ஞானமணி ஸ்டோர்ஸ். பொருட்களின் தரத்தைப் போல அங்குள்ள மனிதர்களும் பண்பானவர்கள்.

அவரவருக்குரிய மதிப்பும் மரியாதையுமாக வேலை பார்க்க நல்ல இடம். அதனால் எக்காரணத்துக்காகவும் இவ்வேலையை இழக்கத் தயாராக இல்லை செல்வி.

“அவளுக்கென்ன… இந்த மடம் இல்லாட்டி சந்த மடம். அவள் வேலை பார்க்காட்டியும் ஒன்னுமில்ல. என் வீட்ல இருக்க பிக்கல் பிடுங்கலுக்கு நான் வீட்ல சும்மா இருக்க முடியுமா!”

தன்னுடைய வீடும்; அதன் மனிதர்களும்; அங்குள்ள அரசியலும்‍ செல்விக்கு நினைக்கையிலேயே பெருமூச்சு ஒன்று கிளம்பியது.

அதனை வெளியேற்றிவிட்டு பஸ் விட்டு இறங்கியவள் தன் நடையை எட்டிப் போட்டாள்.

அடுத்து வெண்ணிலாவைப் பற்றி யோசிக்க நேரமில்லாமல் கடைவீதியை அடைந்தாள்.

“செல்விக்கா என்ன நீ மட்டும் தனியா வர்ற… வெண்ணிலா எங்க காணோம்?”

நடையின் ஊடே செல்வியுடன் சேர்ந்துகொண்டாள் இன்னொரு பெண்.

“தெரியலப்பா. வெண்ணிலா வீட்ல யாரையும் காணோம். நான் எங்க வீட்டைவிட்டுக் கிளம்புனதே லேட்டு. போனை வேற மறந்து வச்சிட்டு வந்திட்டேன்.”

பேசிக்கொண்டே ஐ. டி. கார்டை ஸ்கேனரில் விட்டு அந்தப் பெண்ணும் செல்வியும் கடைக்குள்ளே நுழைந்தார்கள்.
 
வெல்கம் ஆர்த்தி💐💐💐💐
எப்படி இருக்கீங்க?
நல்ல ஆரம்பம்👌👌👌👌
 
வெல்கம் ஆர்த்தி💐💐💐💐
எப்படி இருக்கீங்க?
நல்ல ஆரம்பம்👌👌👌👌
நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? நன்றி 🙏🏻
 
சூப்பர்
 

Latest threads

Top Bottom