11 – காதலின் ரீங்காரம்

👁️ 1621 Views

அத்தியாயம் – 11

வெகு அமைதியாகக் கழிந்திருந்தன அடுத்த இரண்டு நாள்கள். அன்று கத்தி, அழுது, புலம்பி ஆர்ப்பாட்டம் செய்த மதுமதி, தானே ஓய்ந்து அமைதியாகிப் போனாள்.

அவளது அந்த அமைதி கூட மயூரனைக் கலவரப்படுத்தியது. அவள் மனதிற்குள் இப்போது என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என அவனுக்குப் புரியவில்லை. கோபத்தில் கிளம்பிப் பிறந்த வீட்டிற்கே சென்றுவிடுவாளோ என்று கூட நினைத்தான். ஆனால், அவள் அப்படி எந்த முயற்சியும் செய்யவில்லை. ‘அவள் இங்கேயே இருந்தால் போதும்’ என்று மட்டும் மயூரன் நினைத்துக் கொண்டான்.

மூன்றாவது நாள் அன்று காலை அவன் எழுந்தபோது, அவனுக்கு முன்பே எழுந்து சோஃபாவில் அமர்ந்திருந்தாள் மதுமதி. சோஃபாதான் அவளது தற்காலிகப் படுக்கையும் கூட. மயூரன் அவளைக் கட்டிலில் படுக்கச் சொல்ல, அவனை முறைத்துவிட்டு சோஃபாவிலேயே தஞ்சம் புகுந்திருந்தாள். அதற்கு மேலும் எதுவும் சொன்னால், தனி அறையில் இருக்கும் கட்டிலில் படுத்துக் கொள்வதாகச் சொல்லி அவள் கிளம்ப, அதற்கு வாய்ப்புக் கொடுக்காமல், அவனின் அறையில் இருந்த சோஃபாவிலேயே படுக்கச் சொல்லியிருந்தான்.

“எவ்வளவு நாளைக்கு நீ என்னை இப்படிப் பிடிச்சு வைக்க முடியும்? உன் கூட ஒரே ரூமில் இருந்தால் என் மனசு மாறிடும்னு கனவு காணாதே!” என்றும் பொறுக்க முடியாமல் சீறியிருந்தாள்.

‘உன் மனசு மாறணும்னு ஒரே ரூமில் இருக்கச் சொல்லலைடி தங்கப்பொண்ணே. என் மன அமைதிக்குத்தான் இங்கேயே இருன்னு சொல்றேன்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டானே தவிர, அவளிடம் சொல்லவில்லை.

‘உனக்கு அந்த மன அமைதியைத் தரமாட்டேன்’ என அவள் கிளம்பிவிட்டால்? அவளைச் சீண்டி, அந்த முடிவுக்குத் தள்ள விருப்பமில்லாமல் தன் எண்ணத்தைத் தன்னோடு வைத்துக் கொண்டான்.

இப்போது எழுந்து சோஃபாவில் அமர்ந்திருந்தவளை பார்த்து, “குட்மார்னிங் தங்கப்பொண்ணு!” என்றான்.

அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தாளே தவிர, பதில் வணக்கம் சொல்லவில்லை.

இரண்டு நாள்களாக அவளின் அமைதி தானே அவனுக்குப் பதிலாகக் கிடைத்துக் கொண்டிருந்தது. அதனால், அவளின் பதிலுக்காகக் காத்திருக்காமல் குளியலறைக்குள் சென்று மறைந்தான்.

அவன் வெளியே வந்த பின்னும், அப்படியே அமர்ந்திருந்தாள்.

“ஏன் இப்படி உட்கார்ந்திருக்க மது? என் கூட வர்றியா, வீட்டை சுத்தி கொஞ்ச நேரம் நடந்துட்டு வரலாம்? நான் இந்த நேரம் வழக்கமா ஜாக்கிங் போவேன். பெப்பியும் என் கூட வரும். உனக்கு நான் இன்னும் பெப்பியை அறிமுகப்படுத்தி வைக்கலைல? மை ஸ்வீட் பேப் அது. என் முகம் கொஞ்சம் வாடினா கூட அவனும் சுணங்கிப் போவான். உனக்கு அவனைக் காட்டணும்னு ஆசையா இருக்கு. அவனைப் பார்க்கலாம் வர்றியா?” என்று கையை நீட்டி அழைத்தான்.

“உன் பெப்பி, பேப் எல்லாத்தையும் நீயே கொஞ்சு. எனக்கு அதை எல்லாம் பார்க்க வேண்டாம். எனக்கு நாய் பிடிக்காது. சும்மா நொச்சு பண்ணாம போ…” என்று எரிச்சலுடன் தலையைச் சிலுப்பினாள்.

“நம்ம பெப்பியைப் பார்த்தால், உனக்குக் கண்டிப்பா பிடிக்கும் மது. பாசக்காரன் அவன். உனக்கு இந்த வீட்டில் பொழுது போக அவன் ஹெல்ப் பண்ணுவான். வாயேன்…” என்று சற்று கெஞ்சலாகவே அழைத்தான்.

என்னவோ அவளை அடைத்து வைத்தது போலத்தான் ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருந்தாள். அதிலும் இரண்டு நாள்களும் எதிலும் அவளின் கவனம் பதியவில்லை. இப்போது சற்று தெளிவாகத் தெரிந்தாள். அப்படியே வெளியே அழைத்துச் சென்று அவளின் மனநிலையை மாற்ற முயற்சி செய்தான்.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

“என்னோட பொழுதை எப்படிப் போக்கிக்கணும்னு நானே முடிவு பண்ணிக்கிறேன். நீ போய் உன் கடமையை ஆத்து. சும்மா, இன்னர்ஸோட என் முன்னாடி சுத்தி, பெரிய ஆணழகன்னு காட்டாதே! கண்ட்ராவியா இருக்கு…” என்று கை இல்லாத பனியனும், குட்டி ஷார்சுடனும் நின்றிருந்தவனைப் பார்த்து முகத்தைச் சுளித்தாள்.

“அடிப்பாவி! இது உனக்கு இன்னர்ஸா? என் நைட் ட்ரெஸ் இதுன்னு உனக்கு எத்தனை முறை சொல்வது?” என்று கடுப்பானான்.

“அதான் விடிஞ்சிருச்சே… இன்னும் என்ன நைட் ட்ரெஸ்?”

“ஜாக்கிங் போக, முழுக்கை சட்டை, ஜீன்ஸ் பேன்டுமா போட்டுட்டு போக முடியும்? ஜாக்கிங் போய்ட்டு வந்து குளிச்சுட்டுத்தான் இதை மாத்துவேன். அவனவன் குட்டி ஷார்ட்ஸை போட்டு ரோட்டில் சுத்துறான். நான் வீட்டுக்குள் போடுவது கூட உனக்குப் பொறுக்கலையா?” எனச் சலித்துக் கொண்டான்.

“நீ தனியா இருக்கும் போது இது கூட இல்லாம சுத்து. உன்னை யார் கேள்வி கேட்க போறா? நான் இங்கே இருக்கும் போது என் முன்னாடி இப்படி அரையும் குறையுமா சுத்த கூடாது!” என்றாள் கண்டிப்புடன்.

“நீ இருக்கும் போதே நான் இது கூட இல்லாம சுத்த எனக்கு ரைட்ஸ் இருக்குடி பொண்டாட்டி…” என்றான் சட்டென்று சீண்டலாக.

“ச்சை… கருமம்! கருமம்! பொண்டாட்டி அது இதுன்னு சொல்லிட்டு இப்படி ஏதாவது அசிங்கமா பேசினன்னு வை… இரும்புக் கம்பியை பழுக்கக் காய்ச்சு, உன் வாய்லேயே சூடு போட்டு விட்டுருவேன்…” என்று மிரட்டினாள்.

“அம்மாடியோ! இரக்கமில்லாத ராட்சசி!” என்று போலியாக அதிர்ந்து தன் கையால் வாயை மூடி பாவனைக் காட்டியவன் கண்களோ, அவளைக் கேலியாகப் பார்த்துச் சிரித்தன.

அவள் உஷ்ணத்துடன் அவனைப் பார்க்க, “இரும்புக் கம்பியே வேணாம். உன் கண்ணே போதும், என்னைச் சுட்டு பொசுக்க…” என்று அவன் அதற்கும் விளையாட்டாக அலுத்துக் கொள்ள, “ம்ப்ச்” என எரிச்சலுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் மதுமதி.

“சரி, சரி‌… உன் ஆசை தீர என்னை அப்புறம் சுட்டு சுட்டு விளையாடுவியாம். இப்ப வர்றியா இல்லையா? பெப்பிப் பையனை பார்த்துட்டு வரலாம். இந்த நேரம் எனக்காக வாசலில் காத்துட்டு இருப்பான்‌…” என நயமாக அழைத்தான்.

“நான்தான் வரலைன்னு சொல்றேன்ல? சும்மா நச்சு நச்சுன்னு தொந்தரவு பண்ணிட்டு…” என்று‌ சிடுசிடுத்துவிட்டு எழுந்து குளியலறைக்குள் சென்றாள்.‌

மூடிய கதவை பார்த்து பெருமூச்சு விட்டுவிட்டு, அறையை விட்டு வெளியேறினான் மயூரன்.

அவன் அன்றைய ஓட்டப் பயிற்சியை முடித்துக் கொண்டு வந்துபோது குளித்து வேறு உடைக்கு மாறியிருந்தாள் மதுமதி.

தானும் சென்று குளித்து உடையை மாற்றிவிட்டு வந்தான்.‌

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com