👁️ 1621 Views
சலனமே இல்லாமல் அவனைப் பார்த்துவிட்டு விறுவிறுவென நடந்தாள். அப்போதும் அவளைத் தனியே விட முடியாமல், அவளின் பின் சென்றான் மயூரன். அவள் கேட்டை நெருங்கும் போதே, அந்தப் பக்கம் ஒரு சவாரியை இறக்கிவிட்டு ஒரு ஆட்டோ வர, அதைக் கையைக் காட்டி நிறுத்த சொல்லி அதில் ஏறி அமர்ந்து சென்றாள் மதுமதி.
இடுப்பில் கையை வைத்துக் கொண்டு சென்ற ஆட்டோவை பார்த்தபடி நின்றிருந்தான் மயூரன்.

மனத்தில் ஒரு வித சோர்வு எழுந்தது.
அதிலும், விக்ரமும், அவளும் சேர்ந்து வேலை பார்த்த அலுவலகத்திற்கே செல்பவள், திரும்பி வரும்போது என்ன மனநிலையில் இருப்பாளோ… என்று கலக்கமாக இருந்தது.
அவளுடன் பேசிக்கொண்டிருந்ததில் அவன் சாப்பிடவே இல்லை. இப்போது சாப்பிட தோன்றவும் இல்லை. சோஃபாவில் சென்று அமர்ந்தவன், தனது மாமனாருக்குக் கைப்பேசியில் அழைத்தான்.
“ஹலோ, மாப்பிள்ளை எப்படி இருக்கீங்க? மது எப்படி இருக்கா? மது அதுக்குப் பிறகு எதுவும் ஆர்ப்பாட்டம் செய்தாளா?” என்று விசாரித்தார் ஜெயராமன்.
“நல்லாருக்கோம் மாமா. மது அதெல்லாம் எதுவும் செய்யலை. இன்னைக்குத் திரும்ப வேலையில் ஜாயின் பண்ண போறதா சொல்லி கிளம்பி போயிருக்கா…” என்றான்.
“என்ன, வேலைக்குப் போயிருக்காளா? ஏன் மாப்பிள்ளை விட்டீங்க? சும்மாவே எந்த நேரம் என்ன செய்து வைப்பாள்னு தெரியலை. இதில் அந்தப் பைய வேலை பார்த்த இடத்துக்குப் போனால்…”
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் மாமா. நான் விக்ரமோட லேப்டாப்பை கேட்டிருந்தேனே? செல்வா மாமா ஊரிலிருந்து வந்துட்டாரா?” என்று கேட்டான்.
மதுமதி விக்ரம் பற்றி நல்லவிதமாகச் சொல்லியதால், தானே உண்மையை அறிந்துகொள்ள முயற்சி எடுத்திருந்தான் மயூரன். முதலில் விக்ரமின் மடிக்கணினியை வாங்கிச் சோதிப்பதோடு, அதில் ஒருவேளை தவறான காணொளி இருந்தால், அது உண்மையானதா அல்லது போலியாக உருவாக்கப்பட்டதா எனக் கண்டறிய நினைத்தான். அதனால், முதல் நாளே தன் மாமனாருக்கு அழைத்து, விக்ரமின் மடிக்கணினியை கேட்டிருந்தான். அவரோ செல்வராஜ் இப்போது ஊரில் இல்லை, இன்றுதான் திரும்பி வருவார் என்று சொல்லியிருந்தார்.
“அது… தெரியலை மாப்பிள்ளை. நான் இன்னும் செல்வாக்கு போன் பண்ணி பேசலை…” என்றார் ஜெயராமன்.
“போன் போட்டு கேட்டு சொல்லுங்க மாமா. இல்லைனா, அவர் போனுக்கு நானே போன் பண்ணி பேசட்டுமா?” என்று கேட்டான்.
“அதெல்லாம் வேணாம் மாப்பிள்ளை. நானே போன் போட்டு கேட்கிறேன்…”
“சரி மாமா. சீக்கிரம் கேளுங்க…”
“சரிங்க மாப்பிள்ளை… ஆனா… அது அப்படிக் கட்டாயம் வேணுமா மாப்பிள்ளை? அதில் இருப்பதை எல்லாம் கண்கொண்டு பார்க்க முடியாது மாப்பிள்ளை. பொம்பளை பிள்ளைங்க விஷயம்…” என்ற ஜெயராமனிடம் பெரும் தயக்கம்.
“எனக்கு நடந்த உண்மை என்னன்னு முழுசா தெரிஞ்சாகணும் மாமா. நாசுக்கு… நாகரீகம் பார்க்கிற நிலையில் எல்லாம் நான் இல்லை…”
“அதுதான் அந்தப் பையனே இப்ப இல்லைன்னு ஆகிருச்சே மாப்பிள்ளை. அவனைப் பற்றி எதுக்கு இனி தோண்டி துருவிக்கிட்டு?” என்று அப்போதும் தன் பிடித்தமின்மையைப் பதிவு செய்தார்.
“ஏன் மாமா… நான் தோண்டி துருவினா… எனக்குத் தெரிய கூடாத உண்மை ஏதாவது தெரிஞ்சிடுமோன்னு பயமா?” என்று தூண்டில் போட்டு கேட்டான்.
“என்ன மாப்பிள்ளை? என்ன உண்மை? அதான் நானே எல்லாம் சொல்லிட்டேனே… நான்… உங்ககிட்ட வேற எதையும் மறைக்கலை மாப்பிள்ளை…” என்று அவர் படபடவென்று சொல்லிய போது அவரையும் மீறி வெளிப்பட்ட நடுக்கமே மயூரனின் சிந்தனையைத் தூண்டியது.

“சரிங்க மாமா. நீங்க எதையும் மறைக்கலைனே இருக்கட்டும். அதை நானும் ஒரு முறை கன்பார்ம் பண்ணிக்கிறேன்…” என்றான் உறுதியாக.
“ஏன் மாப்பிள்ளை இவ்வளவு பிடிவாதம்? ஒருவேளை… மது… மது எதுவும் சொன்னாளா?” என்று சந்தேகமாகக் கேட்டார்.
“அவ என்ன சொல்ல போறா? அவளுக்கு நான் உங்ககிட்ட கேட்டது கூடத் தெரியாது. ஏன் அப்படிக் கேட்டீங்க மாமா? அவ என்கிட்ட என்ன சொல்வாள்னு எதிர்பார்க்கிறீங்க?” என்று நயமாகக் கேட்டான்.
“அதெல்லாம் ஒன்னுமில்லை மாப்பிள்ளை. அவன் நல்லவன்… வல்லவன்னு ஏதாவது உளறிட்டே இருப்பாளே… அதுதான் கேட்டேன்…” என்றார் சமாளிப்பாக.
“அவளுக்கு அவன் நல்லவனா தெரிய போய்த் தானே மாமா காதலிச்சிருக்கா?”
“என்ன காதல் கருமமோ போங்க. அவன் போட்டதெல்லாம் வெளி வேஷம் மாப்பிள்ளை. அது அவளுக்குப் புரியாமல் கிறுக்கு பிடிச்சது போல் பினாத்திட்டு இருக்கா…”
“அவன் வேஷத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் வரை அவன் அவளுக்கு நல்லவன்தான் மாமா. சரிங்க மாமா, சீக்கிரம் எனக்கு அந்த லேப்டாப் கிடைக்க ஏற்பாடு செய்ங்க. நான் வைக்கிறேன்…” என்று அழைப்பை துண்டித்துவிட்டான்.
ஜெயராமனிடம் விக்ரம் பற்றி விசாரிக்கும் போதெல்லாம் மனத்திற்கு ஏதோ நெருடலாகவே இருந்தது. அதைப் பற்றியே சில நொடிகள் யோசித்துக் கொண்டிருந்தான் மயூரன்.
பின் மீண்டும், அலைபேசியை எடுத்து ஒருவருக்கு அழைத்தவன், “ஹலோ… டிடெக்டிவ் கவியுகனா? நான் மயூரன், கரூரிலிருந்து பேசுறேன். உங்களோட நம்பர் என் பிரண்ட் கொடுத்தான். நீங்க ஏதோ ஒரு கேஸ் விஷயமாக இங்கே கரூர் வந்திருப்பதா கேள்விப்பட்டேன். உங்களை உடனே பார்க்கணுமே?” என்றான்.
“ஓ… யெஸ் மிஸ்டர் மயூரன்! நான் இப்போ இங்கே ஒரு ஹோட்டலில் தான் தங்கியிருக்கேன். தாராளமா வாங்க… மீட் பண்ணலாம்!” ஆர்ப்பாட்டமில்லாத நிதானமும், அழுத்தமும் நிறைந்த குரலில் அழைப்பு விடுத்தான் துப்பறிவாளன் கவியுகன்.
“தேங்க்ஸ்… இதோ கிளம்பி வந்துட்டே இருக்கேன்!” என்று அழைப்பைத் துண்டித்த மயூரன் உடனே கவியுகனை சந்திக்கக் கிளம்பினான்.
டிடெக்டிவ் கவியுகன் – எனது யுகன்யா கதையின் நாயகன்! பனியில் உறைந்த சூரியனே கதை படிச்சவங்களுக்கும் இவனை நினைவு இருக்கும்னு நினைக்கிறேன்
©nandhavanamnovels.com