👁️ 1621 Views
“நம்ம வீட்டில் சமைக்கக் கவிதான்னு ஒரு அக்கா தினமும் வருவாங்க மது. காலைக்கும், மதியத்துக்கும் செய்து வச்சுட்டு போவாங்க. நைட்டுக்கு நான் ஷோரூமிலிருந்து வரும்போதே வெளியே சாப்பிட்டு வந்திடுவேன். இனி நைட்டுக்கும் கவிதாக்காவை சமைக்க வரச் சொல்லியிருக்கேன். சாப்பிட உனக்கு என்ன தேவையோ அந்தக்காகிட்ட சொன்னா செய்து கொடுத்துடுவாங்க.
வீட்டை சுத்தம் பண்ண ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரத்தினசாமி, மஞ்சுளான்னு ஒரு ஹஸ்பெண்ட், ஒய்ப் வருவாங்க. ரத்தினம் நம்ம வீட்டுத் தோட்டத்தைக் கவனிச்சுப்பார். மஞ்சுளா வீட்டை துடைச்சுச் சுத்தம் பண்ணி, மத்த சில வீட்டு வேலைகளும் பார்த்து கொடுத்துட்டு போவாங்க. அவங்க வீடு கொஞ்சம் பக்கம் தான். ரத்தினம் பக்கத்தில் சில வீடுகளிலும் தோட்டத்தைப் பார்த்துப்பார். அப்படி வரும்போது, நான் வீட்டில் இல்லாத நேரத்தில் இங்கேயும் வந்து பெப்பிக்கு சாப்பாடு கொடுத்துட்டு போவார்…” காலை நேர உணவுண்ண சாப்பாட்டு மேஜையின் முன் அமர்ந்திருந்த போது மயூரன் அந்த வீட்டின் நடைமுறையைச் சொல்ல,
“இப்ப எதுக்கு என்கிட்ட இதெல்லாம் சொல்றீங்க?” என்று எரிச்சலுடன் கேட்டாள் மதுமதி.
“உனக்கும் இதெல்லாம் தெரியணும்னு தான் மது…”
“எனக்கு எதுவும் தெரிய வேணாம். உங்க வீட்டு ரொட்டீனை தெரிந்து வைத்து எனக்கு ஒன்னும் ஆகப் போறதில்லை…” என்றாள் அலட்சியமாக.
“இது உன்னோட வீடும்தான் மது!” கண்டிப்புடன் சொன்னான்.
“ச்சு… இது ஒன்னும் என் வீடு இல்லை. சொல்ல போனா இப்ப எனக்கு எந்த வீடுமே சொந்தமில்லை. இத்தனை நாள் என்னைப் பெத்தவங்க வீட்டில் ஒட்டிட்டு இருந்தேன். அவங்க கல்யாணம் என்ற பெயரில் அங்கிருந்து என்னைத் துரத்திட்டாங்க. அதனால் வேற வழி இல்லாம இங்கே இருக்கேன். ஆனால், இதுவும் எனக்கு நிரந்தரமில்லை…”
“ஏன்டி தங்கப்பொண்ணே இப்படி எல்லாம் பேசுற? இந்த வீடுதான் உனக்கு நிரந்தரம். இந்த வீட்டில் எனக்கு இருக்கும் உரிமையை விட, உனக்கு அதிகமாகவே இருக்கு…”
“சும்மா சென்டி சீன் ஓட்டாதே! என்னைப் பெத்தவர் கட்டிய வீடே எனக்குச் சொந்தம் இல்லையாம். நீ யாரோ ஒருத்தன்…”
“உன் புருஷன்!”
“நீயே திரும்பத் திரும்ப அழுத்தமா சொல்லிக்கோ. இல்லைனா, மறந்துட போகுது…” என்றாள் கிண்டலாக.
“நீயும்தான் நான் உன் புருஷன் என்பதை மறக்கலை. அதனால்தான் உன் கழுத்தில் நான் கட்டிய தாலி…” என்று சொல்லிக் கொண்டே வந்தவனின் பார்வை, மனைவியின் கழுத்தை ஆராய்ந்தது. காலையில் கூடத் தழைய தழைய அவளின் கழுத்தில் தவழ்ந்து கொண்டிருந்த தாலி இப்போது அவளின் கழுத்தில் இல்லை. ஒரு மெல்லிய செயின் மட்டும் கழுத்தில் தெரிந்தது.
அதிலும் அவள் காலர் குர்தி போட்டிருக்க, அதனுள் தாலி இருக்கிறதா இல்லையா என்றே அவனுக்குத் தெரியவில்லை.
அவன் தன் கழுத்தையே கூர்ந்து நோக்கவும், “என்ன? என்ன பார்வை இது?” என்று கடுப்புடன் கேட்டாள்.
“தாலி எங்கே? ட்ரெஸுக்குள் மறைச்சு வச்சிருக்கியா?”
“இல்லை, கழட்டி பரண் மேலே போட்டுட்டேன்…”
“மது…”
“என்ன? என்ன மிரட்டுவது போல அதட்டுற? உன்னையே நான் புருஷனா நினைக்கலையாம்? நீ கட்டிய தாலிக்கு மட்டும் நான் ஏன் மதிப்பு கொடுக்கணும்? கழுத்தில் தாலியோட வாழாவெட்டியா என் பெத்தவர் முன்னாடி இருக்கணும்னு என்பதற்காகத்தான் அதைப் போட்டுட்டு திரிஞ்சேன். அதுக்குத்தான் வழி இல்லாம பண்ணிட்டயே. அப்புறம் அதை எதுக்கு என் கழுத்தில் சுமக்கணும்? அதான் கழட்டி வச்சிட்டேன்…” என்றாள் அலட்சியமாக.
“கழட்டி எங்கே வச்சிருக்க?” என்று குரல் இறுக கேட்டான்.

“ஏன்? சொன்னா திரும்ப எடுத்துட்டு வந்து என் கழுத்தில் போடவா? அவசியம் இல்லை…” என்றவள், இரண்டு இட்லியை தட்டில் எடுத்து வைத்து உண்ண ஆரம்பித்தாள்.
“நான் இன்னைக்குத் திரும்ப வேலைக்குப் போகலாம்னு இருக்கேன். ஆபிஸுக்கு போன் பண்ணி கேட்டேன். வரச் சொல்லிட்டாங்க…” என்று அவள் உண்டுகொண்டே சொல்ல,
“இப்ப அதுக்கு என்ன அவசியம் வந்தது மது?”
“கண்டிப்பா அவசியம் இருக்கு. இதுக்கு எல்லாம் நான் பணம் கொடுக்கணுமே? திரும்ப வேலைக்குப் போனதும் சம்பளம் வரும். அதில் இருந்து கொடுத்துடுறேன்…” என்று இட்லியைச் சுட்டிக்காட்டி சொன்னாள்.
“நீ என்னை ரொம்ப அவமானப்படுத்துற மதுமதி. இதெல்லாம் சரியில்லை. நான் ரொம்பப் பொறுமையா போறேன்ங்கிறதுக்காக ரொம்பச் சீண்டி பார்க்கிற…” பொறுக்க முடியாமல் சீறினான் மயூரன்.
சாப்பாட்டிற்காகக் கூடப் பணம் கொடுப்பாளா என்ற ஆதங்கம் அவனை ஆட்டிப் படைத்தது.
“ஒரு கொலைகாரன் வீட்டில் தங்கி, தூங்கி, திங்கிறதே நான் செய்து கொண்டிருக்கும் பெரிய தப்பு. இதில் அதுக்கு எல்லாம் பணம் கொடுக்காம இருந்தால் என்னையே என்னால் மன்னிக்க முடியாது…” என்று தீவிரமாக மதுமதி சொல்ல,
என்னடா இதை இன்னும் சொல்லாமல் இருந்தாளே என்ற மயூரனின் நிம்மதியை குலைக்கவே அவ்வார்த்தைகளை உதிர்த்திருந்தாள்.
“நான் கொலைகாரன் இல்லைடி!” என்று குரலை உயர்த்தி அதட்டினான்.
“நீ என்னதான் அதை ரிப்பீட்டா சொன்னாலும், உன் மேலேயோ, என் அப்பன் மேலேயோ, உங்களுக்கு உடந்தையா இருந்த அந்தச் செல்வராஜ் மேலேயோ எனக்கு நம்பிக்கையே வர மாட்டேங்குது. எனக்கு வரும் ஆத்திரத்துக்கு உங்களை எல்லாம் என்னோட விக்ரம் போன இடத்துக்கே அனுப்பிடணும் போலத்தான் இருக்கு. ஆனால், அந்தளவுக்கு எனக்கு ஏன் கல்நெஞ்சம் இல்லாம போச்சுன்னு இப்ப வருத்தப்படுறேன்…” என்றாள் இயலாமையுடன்.
“உன் கையால் மட்டும்தான் நீ என்னைக் கொல்லலை. அதான் வார்த்தையால் குத்தி கிழிச்சு கொல்றயேடி…” என்றான் வேதனையுடன்.
“அப்ப என் வார்த்தை உன்னைக் குத்திக் கொல்லுதா? குட்! வெரி குட்! அதுதான் எனக்கு வேணும்!” என்றவளின் முகம் திருப்தியுடன் மின்னியது.
“நீ இவ்வளவு கொடூரமானவ இல்லைடி தங்கப் பொண்ணே… நீயே உன் மனதில் ஏன் நஞ்சை கலந்துக்கிற?”
“நானா கலந்துக்கலை. எல்லாரும் சேர்ந்துதான் என் மனசில் நஞ்சை கலந்தீங்க…”
“மது…”
“போதும் நிறுத்துறீயா? நீ உன் ஷோரூமுக்கு மதியம் கூடப் போவ. ஆனா, நான் நேரத்துக்கு ஆபிஸ் போகணும். இத்தனை நாள் வேலைக்கு வராம இருந்ததுக்கு ஒரு மெடிக்கல் சர்டிபிகேட் கொடுக்கச் சொல்லியிருக்காங்க. அதை வாங்க வேற நான் ஹாஸ்பிட்டல் போகணும். எனக்கு வேலை நிறைய இருக்கு…” என்றவள், எழுந்து கையைக் கழுவிவிட்டு தான் சாப்பிட்ட தட்டையும் கழுவி வைத்துவிட்டு வந்தாள்.
“எனக்குப் பணம் கொடுக்கணும் என்பதற்தாகத்தான் நீ வேலைக்குப் போக நினைக்கிறனா, அதுக்கு அவசியம் இல்லை மது. நீ பணம் கொண்டு வந்து கொடுத்தாலும் நான் வாங்க மாட்டேன்…” என்று மயூரன் தீர்மானமாகச் சொல்ல, அவனின் பேச்சு காதிலேயே விழுந்தது போலக் காட்டிக் கொள்ளாமல், தனது கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் மதுமதி.
இனி என்ன சொன்னாலும் கேட்க மாட்டாள் எனப் புரிய, நெஞ்சை கவ்விய இயலாமையைப் புறம்தள்ளிவிட்டு தானும் எழுந்தவன், “சரி, வா… நான் உன்னை டிராப் பண்றேன்…” என்றான்.
“எனக்கே போக வழி தெரியும்!” என்றவள், வெளியே நடந்தாள்.
“ஆட்டோ, பஸ் பிடிக்கணும்னா இங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்து போகணும் மது…”
“போய்க்கிறேன்…”
அவன் பேச்சு எதையுமே பொருட்படுத்தாமல் முன்னேறிக் கொண்டே இருந்தாள்.
வீட்டுக் கேட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தவளின் கையைப் பிடித்துச் சட்டென்று நிறுத்தினான் மயூரன்.

“ஏய்… விடு!” என்று அதட்டினாள்.
“எதுக்குடி, இவ்வளவு துள்ற? நான் கொண்டு போய் விடுறேன்னு சொல்றேன் தானே?”
“அதுக்கு அவசியம் இல்லைன்னு நானும் சொல்லிட்டேன். இதோ பாருங்க… நான் இனி இப்படித்தான் இங்கே இருப்பேன். ஏதாவது சொன்னா, அப்பன் வீட்டுக்கு எல்லாம் போக மாட்டேன். ஒரு ஹாஸ்டலை பார்த்து போயிடுவேன். அப்படிப் போகணும்னு தான் உங்களுக்கு ஆசைனா…” என்றவள் தன்னைப் பிடித்திருந்த அவனின் கையைப் பார்த்தாள்.
தன்னிச்சையாக அவனின் பிடி விலகியது.
©nandhavanamnovels.com