19 – காதலின் ரீங்காரம்

👁️ 1556 Views

அத்தியாயம் – 19

“விக்ரம் பற்றியும், அவன் இறப்பு எப்படி நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ளவும் நீங்க எனக்குக் கொடுத்த கேஸை ஓரளவுக்கு முடிச்சுட்டேன் மயூரன்…” என்ற கவியுகன் தான் சேகரித்த தகவல்கள் அடங்கிய கோப்பினை மயூரனிடம் கொடுத்தான்.

“ஓரளவுக்குத் தானா?” என்று அவன் கொடுத்த கோப்பினை வாங்கிக் கொண்டே மயூரன் கேட்க,

“நான் ஏன் அப்படிச் சொன்னேன்னு சொல்றேன் மயூரன். அதுக்கு முன்ன… அந்த ஃபைலை பாருங்க…”

மயூரனும் திறந்து பார்க்க, முதல் பக்கத்தில் விக்ரமின் படம் இருக்க, அதில் சிவப்பு நிறத்தில் ஒரு முத்திரையைக் குத்தியிருந்தான் கவியுகன். அதைப் பார்த்துவிட்டு மயூரன் கவியுகனை நிமிர்ந்து பார்த்தான்.

“ஹீ இஸ் எ வெரி டேஞ்சரஸ் மேன்…” என்ற கவியுகனின் வார்த்தைகள் மயூரனை திடுக்கிட வைத்தன.

“அப்போ என் மாமனார் சொன்னதெல்லாம்?”

“நிஜம்தான் மயூரன்!”

“ஆனால், மது அவனைப் பற்றி நல்ல மாதிரியாகச் சொன்னாளே? அப்போ அதெல்லாம்?”

“உங்க மனைவி மதுமதி சொன்னதும் உண்மைதான்!”

“என்ன சொல்றீங்க கவியுகன்?”

“இப்போ நமக்குத் தெரிந்த ஒரு மனுஷன் இருக்கான். அவன் அதிர்ந்து கூடப் பேசாதவன்! அடாவடித்தனம்னா என்னன்னே அவனுக்குத் தெரியாது. தான் காயப்பட்டாலும் பரவாயில்லை… ஆனால், நம்மால் வேற யாரும் காயப்பட்டுட கூடாதுன்னு நினைக்கிறவன், அடுத்தவங்களுக்கு ஒரு கஷ்டம்னா அதை எப்படியாவது தீர்க்க முயற்சி செய்றவன், இப்ப யாரும் அவன்கிட்ட உதவி கேட்டால் இல்லைன்னு சொல்லாமல் அவனால் முடிந்ததைச் செய்து கொடுப்பவன்… இப்படி ஒருத்தனை நீங்க பார்த்தால் என்ன சொல்வீங்க மயூரன்?”

“ஹி ஈஸ் அ பியூர் சோல்னு சொல்வேன்…”

“எஸ், உங்க மனைவி பார்த்ததும், பழகியதும் அப்படி ஒருத்தன் கூடத்தான். ஆனால், எல்லா மனிதனாலும் எப்போதும் ‘பியூர் சோலா’ இருக்க முடியுமா? எப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதனுக்குள்ளும் ஏதோ ஒரு இருண்ட பக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால், அந்த இருட்டு பிறர் கண்ணுக்குத் தெரியாதபடி அவன் செய்யும் நன்மைகள் ஒரு திரையாக மறைக்கும் போது, அந்தக் குறைகள் எல்லாம் வெறும் தூசியாகத்தான் தெரியும்.

ஆனால், அந்தக் குறைகளே அவனின் உண்மையான அடையாளமாக மாறி, அந்தத் தூசியே பிறர் கண்ணில் விழுந்து உறுத்த ஆரம்பித்தால்… அந்தப் ‘பியூர் சோல்’ எவ்வளவு பயங்கரமான கிரிமினலாக மாறுவான் என்பதற்கு விக்ரம் ஒரு உதாரணம் மயூரன்!”

மயூரன் அதிர்ச்சியுடன் கவியுகனைப் பார்க்க, அவனோ ஃபைலின் அடுத்தப் பக்கத்தைத் திருப்ப சொன்னான். மயூரனும் அந்தப் பக்கத்தைத் திருப்பிப் பார்க்க, அதில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட ஆண்களின் புகைப்படங்கள் இருந்தன. ஒவ்வொரு புகைப்படத்திற்குக் கீழும் அந்த நபரின் பெயர், வேலை, ஊர் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.

சில நொடிகள் அந்தப் புகைப்படங்களை எல்லாம் உற்றுப் பார்த்ததிலேயே ஓரளவு உருவ ஒற்றுமை இருப்பதை மயூரனால் உணர முடிந்தது.

“விக்ரம்?” என்று மயூரன் கேட்க,

“யெஸ் மயூரன். விக்ரம் கூட அவனோட உண்மையான பெயர் கிடையாது. சொல்ல போனால், அவனோட உண்மையான பெயர் என்னன்னு தெரியவே இல்லை. ஒவ்வொரு இடத்திலும் ஒரு பெயர், ஒரு வேடம் போட்டிருக்கான். ஆனால், வேலைன்னு வரும்போது கம்ப்யூட்டர் சார்ந்த வேலையாதான் எல்லா இடங்களிலும் பார்த்திருக்கான்.

ஆனால், அவனோட மெயின் வேலையே அவன் போகும் இடத்தில் எல்லாம் ஒரு பெண்ணைத் தன் பக்கம் இழுப்பதுதான். அதுவும் அவன் நடந்து கொள்ளும் பியூர் சோலுக்குப் பொருத்தமா… நிறைய நல்லதும் செய்திருக்கான். உங்க ஒய்ப் கூட வேலை பார்த்த போது விக்ரம் இரண்டு ஏழை பசங்களைப் படிக்க வச்சிருக்கான். அதே போல… வேற இடங்களில் இருந்த போது, வசதி இல்லாதவங்களுக்கு உதவி செய்வது… படிக்க முடியாத பசங்களைப் படிக்க வைப்பதுன்னு நல்லது செய்திருக்கான். அதை எல்லாம் பார்க்கும் பெண்களுக்கு அவன் ஒரு பியூர் சோலா தெரிவதில் ஆச்சரியம் இல்லையே?” என்று கவியுகன் கேட்க, வேதனையுடன் தலையை அசைத்தான் மயூரன்.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

அதனால்தான் தன் மனைவி அவனை இன்னும் முழு மனதாக நம்புகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது.

அப்படி ஒரு நல்லவனாக அவளின் முன் வாழ்ந்தவனைப் பற்றி யார் வந்து அவனின் உண்மை முகத்தைப் பற்றிச் சொன்னாலும் நம்பத் தோன்றாது தான் என்று மனைவியின் மனத்தைப் புரிந்து கொண்டவனுக்கு வேதனை நெஞ்சை அடைத்தது.

“நாம அன்னைக்கு விக்ரம் லேப்டாப்பில் பார்த்த எல்லாமே ஒரிஜினல் வீடியோ தான் மயூரன்…” என்று தொடர்ந்து கவியுகன் சொல்ல, மயூரனின் கவனம் அவனின் பேச்சை கவனிப்பதில் சென்றது.

“அந்த வீடியோக்கள் எதுவுமே மார்பிங் செய்யப்பட்டது இல்லை. அதோட… அந்தப் பொண்ணுங்க எல்லாம் பேசிய விதத்தை நாம முதல் முதலில் அந்த வீடியோவை எல்லாம் பார்க்கும் போதே கவனிச்சேன். ஒருவித மயக்க உணர்வில் பேசுவது போலப் பேசினாங்க. அப்பவே எனக்கு அது டவுட் தந்தாலும், அது எதனால்னு உறுதியா தெரியாம உங்ககிட்ட சொல்ல வேண்டாம்னு தான் சொல்லலை.

அதன்பின் திரும்ப அதை எல்லாம் கவனித்ததில் அவங்க ஏதோ ஒரு வசியத்துக்குக் கட்டுப்பட்டது போல நடந்துகிட்டுதான், அவன் சொல்ல சொல்ல, ட்ரெஸை ரிமூவ் செய்திருக்காங்க. அது ஹிப்னாடிசம் போல ஏதோ ஒன்னா இருக்கலாம்னு முதலில் நினைச்சேன். அதைப் பற்றித் தேடுதலும் நடத்தினேன். ஆனால், அது ஹிப்னாடிசம் இல்லைன்னு உறுதியா தெரிந்தது. அதோட, அந்த எல்லா வீடியோவிலும் பேசியது விக்ரம்தான். அந்தக் குரலை ஆராய்ச்சி செய்ததில் எல்லாம் ஒரே ஆள் பேசிய குரல்தான்னு ரிப்போர்ட் வந்திருக்கு. அவன்தான் வேஷம் போடுவதோட குரலை மாத்தி மாத்தி பேசியிருக்கான்.

அவனின் நல்ல மனதை பார்த்து காதலிக்க ஆரம்பிக்கும் பொண்ணுங்க கூட சாட்ல பேசும் போது தன்னோட வக்கிர எண்ணத்தைக் காட்டியிருக்கான். அதுதான் அவனுக்குள் ஒளிந்திருந்த மோசமான மறுபக்கம். அவனின் உண்மை முகம் தெரியாமல் பொண்ணுங்க அவன் கூடப் பேசியிருக்காங்க‌.

ஆனால் அவன் பேச பேச அந்த நேரத்தில் அந்தப் பொண்ணுங்க எப்படி மயங்கினாங்கன்னு ஒரு தெளிவான ரிப்போர்ட் மட்டும் என்னால் எடுக்க முடியாமல் போனது இந்தக் கேஸில் எனக்குக் கிடைச்ச தோல்வி மயூரன். இதனால்தான் நான் ஓரளவு உண்மையைத்தான் கண்டுபிடிச்சிருக்கேன்னு உங்ககிட்ட ஆரம்பத்திலேயே சொன்னேன்…”

“ஏதாவது ட்ரக்ஸ் மாதிரி கொடுத்திருப்பானா?” மயூரன் கேட்க,

“நானும் அப்படித்தான் கெஸ் செய்தேன் மயூரன். ஆனால், அது எந்த மாதிரியான ட்ரக்ஸா இருக்கும்னு என்னால் கண்டுபிடிக்க முடியலை. அதைக் கண்டுபிடிக்க அந்த விக்ரம் கூடப் பழகிய பொண்ணுங்களை விசாரிக்க முடிவு செய்தேன். ஆனால், அந்தப் பொண்ணுங்க எல்லாமே இப்ப அவங்கவங்க வாழ்க்கையில் செட்டில் ஆகியிருக்காங்க. அப்படியும் இந்த உண்மையைக் கண்டுபிடிக்க என் வொய்ப் அனன்யா மூலமா ஒரு பொண்ணுகிட்ட பேச வைச்சேன்.

ஆனால், அந்தப் பொண்ணு அவனைப் பற்றிச் சொன்னது எல்லாமே நல்லவிதமாக மட்டும்தான். அப்படியும் அனன்யா அந்த சாட் பேசுற விஷயத்தைப் பற்றி விசாரிச்சு பார்த்தாள். ஆனால், அந்தப் பொண்ணு நாங்க நல்லவிதமாத்தான் பேசிப்போம். தப்பா எதுவும் பேசியதில்லைன்னு சொன்னாங்க. அதற்கு மேலும் விசாரிச்சா… அந்தப் பொண்ணு தன்னோட ஸ்டேட்மெண்ட்ல உறுதியா இருந்தாங்க. சொல்லப்போனால் அந்தப் பொண்ணோட வீடியோவும் அந்த லேப்டாப்பில் இருந்தது மயூரன். ஆனால், அப்படி ஒரு விஷயம் நடந்ததா அந்தப் பொண்ணுக்கு நினைவே இல்லை. கடைசியா அந்தப் பொண்ணு அனன்யாகிட்ட ‘அவன் ஒரு நாள் திடீர்னு வேலையை விட்டு போயிட்டான். அதுக்குப் பிறகு அவனைக் காண்டாக்ட் பண்ணவே முடியலை. எங்க போனான் என்ன ஆனான்னு உங்களுக்குத் தெரியுமா? அவன் இப்ப நல்லா இருக்கானா’ன்னு விசாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க…” என்று கவியுகன் சொல்ல,

“அப்ப அவனை அவங்க இன்னும் நம்புறாங்களா?” என்று கேட்டான் மயூரன்.

“யெஸ், அவனுக்கு வேற ஏதோ பிரச்சினை போலிருக்கு அதான் வேற வேலை மாறி போட்டான் போலன்னு தான் அவங்க எண்ணம்…” என்றான் கவியுகன்.

ஒருவேளை விக்ரம் உயிரோடு இருந்து, ஒரு நாள் திடீரெனத் தலைமறைவாகியிருந்தால் மதுமதியும் கூட அந்தப் பெண் போல்தான் நினைத்திருப்பாளோ என்றுதான் மயூரனுக்கு எண்ணம் போனது. அப்படித்தான் நினைத்திருப்பாள் என்று விரக்தியுடன் நினைத்துக் கொண்டான்.

உண்மை முகத்தை வெளிப்படையாகக் காட்டுபவர்களை விட, போலித்தனமான முகமூடி அணிந்தவர்கள் நல்லவர்களாகி விடுகின்றனர் என ஆதங்கத்துடன் நினைத்துக் கொண்டான்.

கூடவே இன்னொன்றும் அவனுக்கு நினைவில் வந்தது. ‘சாட்டில் நாங்க தப்பா பேசிக்கிட்டதே இல்லை. தப்பா நடந்து கொண்டதும் இல்லை’ என்று அந்தப் பெண் சொல்லியது போல்தான் மதுமதியும் சொன்னாள்.

‘ஒருவேளை அந்தப் பெண்ணிற்கு என்ன நடந்தது என்றே தெரியாதது போல, மதுமதிக்கும்…’ என்று நினைத்தவனுக்கு அதற்கு மேல் யோசிக்கக் கூட முடியவில்லை.

மூச்சடைத்தது போல உறைந்து அமர்ந்திருந்த மயூரனை கண்டு, கவியுகன் என்னவென்று கேட்க, தயக்கத்துடன் மெல்லிய குரலில் மயூரன் தன் சந்தேகத்தைச் சொன்னான்.

“ஸாரி டூ சே மிஸ்டர் மயூரன். அப்படி இருக்க நிறையச் சான்ஸ் இருக்கு. ஏன்னா…” என்ற கவியுகன் நிறுத்த,

வெறுமையான பாவனையுடன் தலையை அசைத்து அவனைச் சொல்ல சொன்னான் மயூரன்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com