👁️ 1556 Views
“மாமா, போதும் நிறுத்துங்க!” என்று கண்கள் சிவக்க, குரல் தடிக்க அதட்டினான் மயூரன்.
“மாப்பிள்ளை?”
“அது மதுவோட சுயநினைவில் நடந்ததா இருக்காது. ஏன்னா அவன் எல்லாப் பொண்ணுங்களுக்குமே ஏதோ மருந்து கொடுத்துதான் அதைச் செய்ய வச்சிருக்கான்…”
“அப்படியா? ஆனா… ஆனா… அவ நம்ம வீட்டில், அவ ரூமுக்குள்ள தானே மாப்பிள்ளை?”
“அவன் முன்னாடியே அந்த மருந்தை கொடுத்து அவளைப் போட வச்சிருக்கணும்…”
“ஐயோ… என்ன கொடுமை இது? அப்ப அவளுக்கே அவ அப்படி நடந்துகிட்டது தெரியாதா?”
“தெரியாது மாமா. அதனால்தான் அவ்வளவு திடமா நம்ம கூடச் சண்டை போடுறா. அது தப்பு செய்யாதவளின் கோபம்!”
“இப்படியும் இந்த ஊர் உலகத்துல நடக்குதா மாப்பிள்ளை? என்ன ஒரு அநியாயம் இது? அவனை எல்லாம் நான் கொன்னது தப்பே இல்லை மாப்பிள்ளை. அவன்… அவன் அந்த வீடியோவை எல்லாம் ஏதோ டார்க் வெப்சைட்டில் வித்துட்டானாம் மாப்பிள்ளை. அதை என் முன்னாடியே சொல்றான். என் பொண்ணோட மானத்தை ஒருத்தன் விலை போட்டு வித்திருக்கான். அவனைச் சும்மா விடலாமா மாப்பிள்ளை? என்னால் அவனை விட முடியலை மாப்பிள்ளை… அதனால்தான் நான் அவனைக் கொன்னேன். என் கையாலேயே கொன்னேன். சாகட்டும்… அந்த நாய் சாகட்டும்னு தான் கொன்னேன். என் பொண்ணு போல எத்தனை பொண்ணுங்க மானத்தை விலை போட்டு வித்திருக்கான் அந்த நாய்… அவனை… ஒரு பெத்தவனா என் வயிறு இன்னும் எரியுது மாப்பிள்ளை…” என்று தலையில் அடித்துக் கொண்டே கதறினார் அந்தத் தகப்பன்.

மயூரனுக்கும் கண்கள் கசிந்தன. கூடவே அந்த அயோக்கியனை தன் கையால் கொல்ல முடியாமல் போனதே என்ற கோபமும் வந்தது.
மது… அவனின் மதுமதி… அவனின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள். அவளின் நம்பிக்கையை உடைக்க அந்த அயோக்கியனால் எப்படி முடிந்தது? என்ற ஆத்திரமும் வந்தது. அவனைத் தன்னால் எதுவும் செய்ய முடியாமல் போனதே என்ற இயலாமையுடன் தன் தொடையில் ஆத்திரத்துடன் கையால் குத்திக் கொண்டான்.
“அவன் செய்த அநியாயத்தை எல்லாம் நாம மதுகிட்ட சொல்லணும் மாப்பிள்ளை. அதுவும்… அவன் அவளை அவளுக்கே தெரியாம் வீடியோ எடுத்து வித்ததை அவள்கிட்ட சொல்லணும் மாப்பிள்ளை. அப்பதான் அவளுக்குப் புரியும். எப்படி ஒரு தப்பானவனுக்குச் சப்போர்ட் பண்ணி உங்களைக் கஷ்டப்படுத்துறா… இதை எல்லாம் சொல்லணும் மாப்பிள்ளை…” என்று ஜெயராமன் சொல்ல,
“இல்லை மாமா… அவளுக்கு இந்த விஷயம் தெரிய கூடாது…” என்று இறுகிய குரலில் சொன்னான் மயூரன்.
“என்ன மாப்பிள்ளை சொல்றீங்க? இதெல்லாம் தெரியாமல் தானே அவள் ஆடுறாள். அவளுக்குத் தெரிந்தால்தான் அவளோட தப்பும் என்னன்னு அவளுக்குப் புரியும். அவள் ஒருத்தனை நம்பி ஏமாந்ததும் தெரியட்டும்…”
“வேண்டாம் மாமா! வேண்டவே வேண்டாம்!” என்று உறுதியாக மறுத்தான் மயூரன்.
“ஏன் மாப்பிள்ளை? இதைச் சொன்னால்தானே அவளுக்குத் தன் தப்பு புரியும்?” ஜெயராமன் ஆதங்கமாகக் கேட்டார்.
“தப்பு அவளோடது இல்லை மாமா… அந்த அயோக்கியனோடது! இதை அவகிட்ட சொன்னா, நிலைமை இன்னும் விபரீதமாகும் மாமா. அவள் தன்னையே வெறுத்துடுவா. தன் மானம் தனக்கே தெரியாம விற்கப்பட்டிருக்குன்னு தெரிஞ்சா, அவ உயிரோட இருக்க மாட்டா மாமா. கண்டிப்பா உயிரோட இருக்க மாட்டா. எனக்கு அவள் என் கூட வாழ்வதை விட, என் மேல் கோபப்பட்டுட்டேயாவது அவள் உயிரோட இருக்கணும் மாமா. அதனால் அவளுக்கு இந்த உண்மை எப்பவும் தெரிய வரக் கூடாது. மதுவை நான் மொத்தமா இழக்க தயாரா இல்லை மாமா…” என்று மயூரன் சொல்லும்போது அவனது குரல் கம்மியது.
“அப்படியே எத்தனை நாள் மறைச்சு வைக்க முடியும் மாப்பிள்ளை? என்றைக்காவது ஒரு நாள் தெரிஞ்சா?”
“அப்படி ஒரு நாள் வராம நான் பார்த்துக்கிறேன் மாமா…” என்ற மயூரனின் கண்களில் தெரிந்த அந்தத் தீவிரம் ஜெயராமனையும் அவனின் முடிவுக்குச் சம்மதிக்க வைத்தது.
மதுமதிக்கு அந்தக் காணொளி பற்றி எப்போதும் தாங்கள் சொல்ல கூடாது என்று மயூரன் மாமனாருடன் சேர்ந்து முடிவு செய்திருந்தான்.
அதைக் கடந்த ஒரு வருடங்களாகக் காப்பாற்றியும் விட்டான்.
இந்த நிலையில் தங்களுக்குள் நடந்த தாம்பத்தியமும், அதற்குக் காரணமாக இருந்த இந்தத் தைலமும்… மீண்டும் அனைத்தையும் கிளறிவிட்டது போலாகிவிட்டதே… என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தபோது, அவனின் அலைபேசி அழைத்தது.
கவியுகன் அவனுக்கு அழைத்துக் கொண்டிருந்தான்.
“ஹலோ மயூரன், கொஞ்ச நேரத்துக்கு முன் கால் செய்தீங்க போல? நான் கொஞ்சம் பிஸியா இருந்தேன். அதான் போனை எடுக்க முடியலை. சொல்லுங்க மயூரன், என்ன விஷயமா கால் செய்தீங்க?” என்று விசாரித்தான் கவியுகன்.
அவனிடம் அந்தத் தைலத்தைப் பற்றிச் சொன்ன மயூரன், “அந்தப் போதை மருந்து இந்தத் தைலமாத்தான் இருக்குமோன்னு சந்தேகப்படுறேன் கவியுகன். இதை மது தலைவலி தைலம்னு நினைச்சு யூஸ் பண்ணிட்டு இருக்காள். இதை அவளுக்கு அந்த விக்ரம் தான் கொடுத்திருக்கான். காலையில் தூக்க கலக்கத்தில் இருந்த மதுவிடம் கேட்டபோது விக்ரம் கொடுத்ததாகத்தான் சொன்னா. அதுவும் ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு. இப்பவும் இந்தத் தைலத்தை யூஸ் செய்திருக்காள். அதுவேற அவளுக்குப் பாதிப்பை தருமோன்னு பயமா இருக்கு கவியுகன்…” என்றான்.
“அது ஒரு ஆயில் மாதிரியும், பெர்ஃப்யூம் மாதிரி மணமும் வந்தது தானே சொன்னீங்க மயூரன்? சொல்ல போனால் அந்த வகை போதை வஸ்துக்கு மணமோ சுவையோ கிடையாது. ஆனால், மற்றவர்கள் சந்தேகப்படாமல் இருக்க ஒரு நறுமண எண்ணெயாகவோ (Essential Oil) அல்லது மூலிகை தைலமாகவோ அதை மாற்றியிருப்பான். ஒரு வகைச் செடியில் இருந்து எடுக்கப்படும் அப்படி ஒரு போதை வகை இருக்கு மயூரன். அதைப் பற்றி நான் படிச்சிருக்கேன். அதை ஆயில் முறையில் செய்தால் அது எளிதில் ஆவியாகாது. ஆயில் மருந்தின் மூலக்கூறுகளை (Molecules) நீண்ட காலத்திற்குச் சிதையாமல் அப்படியே பாதுகாத்து வைக்கும். வெளிச்சம் படாத, குளிர்ந்த இடத்தில் வைத்தால் அதன் வீரியம் பல வருடங்களுக்கு அப்படியே இருக்கும். ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ ஆனாலும் தன் குணத்தையும் அவ்வளவு சீக்கிரம் மாற்றிக் கொள்ளாது.
அந்தப் போதை மருந்தை தைலம் போல நெற்றியில் அல்லது கழுத்தில் தேய்க்கும் போது, அது தோலில் இருக்கும் நுண்துளைகள் வழியாக இரத்தத்தில் கலந்து கொஞ்ச கொஞ்சமா உணர்வுகள் தூண்டப்படும். ஒரு கட்டத்துல மூளையின் கட்டுப்பாட்டை இழந்து, தன்னைத் தானே மறக்கும் நிலையும் உருவாகி அது ஒரு வசிய மருந்து போலச் செயல்பட ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் அவங்க என்ன செய்றாங்கனு அவங்களுக்கே தெரியாது. ‘உன் பீரோ சாவியைக் கொடு அல்லது உன் வங்கி ரகசிய எண்ணைச் சொல்லு’ன்னு கேட்டால் சொல்லிடுவாங்க. அந்தப் போதை தெளிந்த பிறகு அவங்ககிட்ட போய் நாம நடந்ததைப் பற்றிக் கேட்டால் கூட அது அவங்க நினைவில் இருக்காது…” என்று கவியுகன் சொல்லச் சொல்ல மயூரனுக்குத் தன் மேனியே சிலிர்த்தது.
“இது அந்த வகைப் போதை மருந்தாகத்தான் இருக்கும்னு சந்தேகப்படுறேன். நான் இப்ப வேலை விஷயமா ஹைதராபாத் வந்திருக்கேன் மயூரன். என்னோட ஒரு ஆளை அனுப்பி வைக்கிறேன். அந்தத் தைலத்தைக் கொடுத்துவிடுங்க. அது தானான்னு டெஸ்ட் பண்ணி பார்த்துடுவோம். அப்படியே உங்க வொய்ப்கிட்ட அந்தத் தைலம் இன்னும் இருக்கான்னு பார்த்து, இருந்தால் எடுத்துடுங்க. அவங்ககிட்ட அது இல்லாமல் இருப்பதே நல்லது!” என்று சொல்லிவிட்டு வைத்தான் கவியுகன்.
அவனிடம் பேசி முடித்த சிறிது நேரத்திலேயே… அவனின் வீட்டில் சமையல் வேலை செய்யும் கவிதா அவனுக்கு அழைத்தார்.
“தம்பி, உங்க வீட்டுக்காரம்மா ரூமை பூட்டிட்டு திறக்க மாட்டிங்கிறாங்க. ரூமுக்குள்ள இருந்து ஏதோ சத்தமா வருது. நீங்க கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வந்து என்னன்னு பாருங்க…” என்று தகவல் சொன்னார்.
உடனே வீட்டிற்குக் கிளம்பிச் சென்றான் மயூரன்.
[red]கதையில் சொல்லப்பட்ட போதை வகை உண்மையிலேயே இருக்கு மக்களே! பாதுகாப்பு காரணங்கள் கருதி அதன் பெயர் நான் கதையில் சொல்லவில்லை. அதைப் பற்றி தேடிப்பார்த்து, அது எப்படி வேலை செய்யும் என்பதை படித்து தெரிந்து கொண்டு உண்மை தகவலை மட்டும் கதையில் ஆட் பண்ணியிருக்கேன்.[/red]
©nandhavanamnovels.com