👁️ 1556 Views
“ஏன்னா… விக்ரமை கொன்னதே உங்க மாமனார்தான்…” கவியுகனின் வார்த்தைகள் நிதானத்துடன் வந்து விழ,
“வாட்?” என்று அதிர்ந்த மயூரனின் நிதானம் தப்பியது. ஜாதிவெறியால் அப்படிச் செய்திருப்பாரோ என்ற சந்தேகம் அவனுக்கு இருந்தது தான். ஆனால், அது உறுதியாகும் போது மயூரனால் ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை.
“யெஸ் மயூரன். ஆனா நீங்க நினைச்ச மாதிரி அவர் அவனைக் கொன்னதுக்குக் காரணம் ஜாதிவெறி இல்லை…” என்றும் கவியுகன் உறுதிப்படுத்த, அனைத்தையும் முடிச்சுப் போட்டு பார்த்த மயூரன் அதுதானா என்பது போல இயலாமையுடன் கவியுகனை பார்த்தான்.
“விக்ரமோட இறப்பை பற்றிக் கன்பார்ம் பண்ண செல்வராஜோட ஒரு ஆளை பிடிச்சு ரகசியமா ஒரு விசாரணை நடத்தியதில், அன்னைக்கு விக்ரமை கட்டிப் போட்டு விசாரிச்சுட்டு இருந்த போது… ஜெயராமன் தான் அவனைக் கொன்னார். அதைச் செல்வராஜ்தான் விபத்தா மாத்த சொன்னார், நாங்க மாத்தினோம்னு சொன்னான். அதோட செல்வராஜும், ஜெயராமனும் சேர்ந்து விக்ரம் லேப்டாப்பை பார்த்த பிறகுதான் ஆவேசத்தில் ஜெயராமன் விக்ரமை கொன்னுட்டதாகத் தகவல் சொன்னான். அப்படி அதில் என்ன பார்த்தார்னு எனக்குத் தெரியாதுன்னு சொன்னான். இதுக்கான பதில் உங்க மாமனார்தான் சொல்லணும் மயூரன். நீங்க அவர்கிட்டயே விசாரிங்க. அதுக்கு முன்னாடி எதுக்கும் உங்க மனசை தயார்படுத்திக்கோங்க. உங்க வொய்போட வீடியோ ஏதோ டெலிட் செய்யப்பட்டிருக்கும்னு நான் சந்தேகப்படுறேன். அதையும் டேட்டா ரெக்கவரி செய்து உங்களுக்கு ப்ஃரூப் காட்ட நான் தயார் தான். பட்… உங்க முடிவு?” என்று கவியுகன் கேட்ட போது மறுப்பாகத் தலையை அசைத்தான் மயூரன்.
“அப்படி ஒருவேளை இருந்தால், அதைப் பார்க்கிற தைரியம் எனக்கு இல்லை கவியுகன். இப்பவும் என் மதுவை நான் நம்புறேன். அப்படி ஏதாவது இருந்திருந்தாலும், அது அவளுக்கே தெரியாமல் எடுக்கப்பட்டதாகத்தான் இருந்திருக்கும். அப்படி அவளுக்குத் தெரிந்து ஒன்னு நடக்கச் சான்ஸே இல்லை. ஏன்னா என் மதுகிட்ட நேர்மையை மட்டும்தான் பார்த்திருக்கேன். அவளோட கோபத்தின் பிரதிபலிப்பு கூட, அவள் உண்மையாகக் காதலித்ததால் மட்டுமே உண்டானது. ஆனால், அந்த உண்மை அவள் காதலிச்சவன்கிட்ட இல்லைன்னு தெரிந்தால், என் மது தாங்க மாட்டாளேன்னு தான் தவிப்பா இருக்கு கவியுகன். அதுவும் அவளோட வீடியோ பற்றித் தெரிந்தால்… ம்ப்ச்!” என்றவனால் அதற்குப் பேச முடியவில்லை.
அவனை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தான் கவியுகன்.
“நாம ஒருத்தர் மேல் வைக்கும் நம்பிக்கை உடையும் போது, நிச்சயமா தாங்க முடியாது கவியுகன். அதையும் விட, தன்னை ஒருத்தன் தனக்கே தெரியாமல் தவறா யூஸ் பண்ணியிருக்கான்னு தெரிந்தால்… உடைஞ்சிடுவாளே… என் மது உருகுலைந்து போவாளே… ஐயோ! என்னால் கற்பனையில் கூட அவள் உடைஞ்சு போறதை நினைச்சுப் பார்க்க முடியலை கவியுகன்…” என்று வேதனையுடன் புலம்பிய மயூரன் இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு உடைந்து போனான்.

“ப்ளீஸ் மயூரன், காம்டவுன்! உங்க மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடியுது. இந்த விஷயம் இன்னும் உறுதியாகலை. நாம ஒரு ஊகத்தின் பெயரில்தான் கெஸ் பண்ணியிருக்கோம். அதோட உங்க மனைவிக்கு இப்படி ஒரு விஷயம் தெரியவும் செய்யாது. அவங்களுக்குத் தெரியாத விஷயத்தைப் பற்றி நீங்க இவ்வளவு கவலைப்படத் தேவையில்லை…” என்று கவியுகன் ஆறுதல் சொல்ல, அவன் சமாதானம் சொன்ன வார்த்தைகளைத் தனக்குள் உருப்போட்டுக் கொண்ட மயூரன் அதைத் தன் மனத்தில் பதிய வைத்துக் கொண்டான்.
சற்று நேரத்தில் தன்னைத் தேற்றிக் கொண்ட மயூரன், “அந்த மருந்து என்னன்னு கண்டே பிடிக்க முடியலையா கவியுகன்?” என்று மயூரன் விசாரிக்க,
“கடைசி முயற்சியா விக்ரம் மேல் ஒரு பொண்ணு போலீஸ் கம்பளைண்ட் கொடுத்திருந்தாங்களே… அந்தப் பொண்ணைத் தேடி கண்டுபிடிச்சு போனேன் மயூரன். ஆனால், அந்தப் பொண்ணு ஒருத்தனை கல்யாணம் பண்ணிட்டு போன மாசம் தான் குவைத் போயிட்டாங்க. அந்தப் பொண்ணைக் காண்டாக்ட் செய்ய முயற்சி செய்தேன். என் முயற்சிக்கு பலன் கிடைச்சது. பட், நான் அவனைப் பற்றி விசாரிக்க ஆரம்பிச்சதும், என்கிட்ட பேச தயாரில்லைன்னு சொல்லி கட் பண்ணிட்டாங்க. அதன்பின்னும் முயன்றதில் அவங்க இந்த விஷயத்தைப் பற்றிப் பேச தயாரா இல்லை. இப்ப எனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. என்னை டிஸ்டெர்ப் செய்யாதீங்கனு சொல்லிட்டாங்க. அதனால், அந்த மயக்க பொருள் விஷயத்தில் என்னால் முன்னேற முடியலை. அது ஒரு போதை வஸ்துவா இருக்கலாம் என்பது மட்டும் என் ஊகம்…” என்று கவியுகன் சொன்னதை யோசித்துக் கொண்டே ஷோரூமில் அமர்ந்திருந்த மயூரன் தன் கையில் இருந்த அந்தத் தைல பாட்டிலை பார்த்தான்.

‘அந்தப் போதை வஸ்து இது தானோ? இது தன்மேல் பட்ட பிறகுதான் கொஞ்ச கொஞ்சமாக நடந்தது எல்லாம் தனக்கு மறந்து போனது. அதிலும், மது தன் நெற்றியோடு நெற்றி வைத்து உரசிய பின்தான் தனது நினைவுகள் மங்க ஆரம்பித்தன. அந்தத் தைலம் அவ்வாறு தன் மீது பட்டதற்கே தன் நினைவில் எதுவும் இல்லையென்ற போது, அத்-தைலத்தை இரண்டு முறை அவளின் மீது தடவி கொண்ட மதுவின் நிலை? என்று நினைத்தவனின் மேனி நடுங்கியது.
அதிலும் அந்தத் தைலம் நினைவுகளை மட்டும் மழுங்க செய்யவில்லை, அந்தரங்க உணர்வுகளையும் அதீதமாகத் தூண்டிவிட்டதை உணர்ந்து கொண்டவனுக்கு மதுமதி ஏன் தானாகத் தன்னை நெருங்கினாள் என்று நன்றாகவே புரிந்து போனது. அவனின் மீது லேசாக மட்டுமே தைலம் பட்டதால் அவனுக்கு அதை எல்லாம் ஓரளவு கிரகிக்க முடிந்தது. ஆனால் நன்றாகத் தைலத்தைத் தடவி கொண்ட மதுமதியால் அதை உணர முடிந்திருக்குமா? என்ற கேள்வி எழுந்தது.
சற்றுமுன் அலைபேசியில் அவனிடம் கோபத்துடன் பேசியவள் கூட, அவன் தன்னை என்ன செய்தான் என்றுதான் கேட்டாள். அப்படியெனில் அவள்தான் அவனை நெருங்கினாள் என்பது அவளுக்கு நினைவில் இல்லை என்று புரிந்தது. அப்புரிதல் அவனைப் பெருமூச்சு விட வைத்தது.
இவ்விஷயத்தை அவளிடம் எப்படிச் சொல்லி புரிய வைப்பது என அவனுக்குப் புரியவில்லை. இந்தத் தைலம் தான் அனைத்திற்கும் காரணம் என்று அவன் சொன்னால், அதற்கு முன் நடந்த சில விஷயங்களையும் அவளிடம் சொல்ல வேண்டுமே? அதைச் சொன்னால் அவள் தாங்க மாட்டாள் என்று தானே அதை அவளிடம் சொல்லாமல் மறைத்து வைத்திருக்கிறான். இப்போது அதெல்லாம் தெரிய வந்தால் அவள் என்ன ஆவாள் என்று நினைத்துப் பார்க்கவே அவனுக்குப் பயமாக இருந்தது.
அவனுக்குத் தன் மாமனாரிடம் பேசிய நாள் நினைவில் வந்தது.
கவியுகன் கொடுத்த ரிப்போர்ட்டை வாங்கிக்கொண்டு நேராக மாமனாரை பார்க்க தான் சென்றான் மயூரன்.
விக்ரமை என்ன காரணத்திற்காகக் கொன்றார் என்பதை அறிந்துகொள்ளவே அவன் விசாரித்துக் கொண்டிருந்த போதுதான் மதுமதி அவர்கள் பேசியதை கேட்டுவிட்டிருந்தாள்.
அதனால் அந்தக் காரணத்தை மாமனாரிடம் அவனால் முழுதாகக் கேட்டு அறிந்து கொள்ள முடியவில்லை.
அதனால் மற்றொரு நாள் மாமனாரை தனியாகச் சந்தித்துப் பேசினான்.
முதலில் அவர் காரணத்தைச் சொல்ல மறுத்தார். அவரிடம் கவியுகன் மூலமாக அனைத்து உண்மைகளையும் அறிந்துகொண்ட தகவல்களை எல்லாம் சொன்னவன், “நீங்க டெலிட் பண்ண வீடியோவை மட்டும்தான் ரெக்கவரி பண்ணி நான் பார்க்கலை மாமா. தேவைப்பட்டா அதையும் செய்வேன்…” என்றான் மயூரன்.
அவர் டெலிட் செய்திருக்கலாம் என்ற அனுமானத்தில்தான் போட்டு வாங்கினான்.
அதற்கே அதிர்ந்து பதறிப் போனார் மனிதர்.
“வேணாம் மாப்பிள்ளை… வேணாம். அதைத் திரும்ப எடுக்காதீங்க. அழிஞ்சு போனது அழிஞ்சு போனதாகவே இருக்கட்டும்…” என்று ஜெயராமன் பதறியபடி சொன்னதுமே மதுமதியின் காணொளி இருந்தது உறுதியாகிப் போனது.
நெஞ்சத்தில் பாறாங்கலை தூக்கி வைத்தது போல மயூரனுக்குக் கனத்தது.
ஏற்கெனவே அனுமானித்தது தான் என்பதால் சில நொடிகளில் தன்னைச் சமாளித்துக் கொண்டவன், “அப்போ மதுவோட வீடியோவை டெலிட் செய்திருக்கீங்க? அப்படித்தானே?” என்று கூர்மையுடன் கேட்டான்.
“மாப்பிள்ளை…”
“சொல்லுங்க…”
“அதை என் வாயால் எப்படிச் சொல்வேன் மாப்பிள்ளை?” என்று கலங்கிய மனிதர் கையால் முகத்தை மூடிக்கொண்டார்.
“பெத்த தகப்பன் தன் வளர்ந்த பொண்ணைப் பார்க்க கூடாத கோலத்தில்… அதுவும் அவ ரூமுக்குள்ள… எவனோ ஒரு ராஸ்கல் முன்னாடி வீடியோ காலில்… செத்துட்டேன் மாப்பிள்ளை. என் மகளா அப்படி? ஐயோ… எப்படி எப்படி அவளால் கொஞ்சம் கூடக் கூச்சம் இல்லாம… அவளை… அவளை… என் கையாலேயே வெட்டிப் போட்டிருக்கணும் மாப்பிள்ளை… தப்பு பண்ணிட்டேன்… தப்புப் பண்ணிட்டேன். அசிங்கத்தையும் செய்துட்டு… இப்ப என்னமோ என்னையும் உங்களையும் கேவலமா பேசுறா… அதுவும் தாலியை கழட்டி உங்க முகத்திலே விட்டெறியுறா… அவளுக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்? நான் என் மகளையும் கொன்னு புதைச்சிருக்கணும் மாப்பிள்ளை. அதைச் செய்யாம உங்களுக்குக் கட்டி வச்சுத் தப்புப் பண்ணிட்டேன். நான் பாவி மாப்பிள்ளை பாவி. பெத்த பொண்ணை சரியா வளர்க்கத் தெரியாத பாவி!” தலையில் அடித்துக் கொண்டே அழுதார் அந்தத் தகப்பன்.
©nandhavanamnovels.com