👁️ 1120 Views
அத்தியாயம் – 24
“மிஸ்டர் மயூரன், பேஷன்ட்டின் ஹார்ட் பீட் ரொம்ப அதிகமா இருக்கு. அதே சமயம் பிளட் பிரஷர் கண்ட்ரோலில் இல்லை. அவங்க நார்மல் நிலைக்கு வந்தாதான் குழந்தைக்கு ஆக்சிஜன் சப்ளை சீரா இருக்கும். அடுத்தச் சில மணி நேரம் கொஞ்சம் ‘கிரிட்டிகல்’ தான். நாங்க குழந்தையையும் தாயையும் சேர்த்து காப்பாத்தப் போராடிட்டு இருக்கோம்!” என்று மருத்துவர் சொல்ல, நிலைகுலைந்து போனான் மயூரன்.
அதிர்ச்சியில் மயக்கமடைந்திருந்த மதுமதியின் முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்தும், எழுந்து கொள்ளவே இல்லை என்றதும், அவளை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்திருந்தான் மயூரன்.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டிருந்த மதுமதியின் தற்போதைய நிலையைத்தான் அவனிடம் சொல்லிச் சென்றிருந்தார் மருத்துவர்.
கர்ப்பமானதில் இருந்து ஏற்கெனவே ஹார்மோன் மாற்றத்தால், மதுமதியின் மனநிலை சமநிலை இல்லாமல் இருந்தது. ஒரு நாள் அமைதியாக இருப்பவள், இன்னொரு நாள் பழையதை எல்லாம் நினைத்து சீறிக்கொண்டிருந்தாள். இந்த நிலையில் அவளின் வளைகாப்பு இன்னும் அவளுக்கு மனவுளைச்சலை தந்திருந்தது.
ஆனால், தற்போது அறிந்து கொண்டிருந்த உண்மை, அவள் இத்தனை நாள்கள் கொண்டிருந்த கோபத்திற்கே அர்த்தமில்லாமல் ஆக்கியிருந்தது. அது மட்டுமில்லாமல், இத்தனை நாள்கள் யாரை எல்லாம் குற்றவாளி கூண்டில் நிறுத்தி, அவர்களைச் சாடிக் கொண்டிருந்தாளோ… அவர்கள் எல்லாருமே அவளுக்கு நல்லது மட்டுமே நினைத்தவர்கள். யாரை நல்லவன் என நம்பிக் கொண்டிருந்தாளோ… அவன்தான் முழுக் குற்றவாளி. அதோடு தானும்தான் அனைத்திற்கும் காரணம். அதிலும் தனக்கே தெரியாமல் தன் மானம் வெளியே கடைவிரிக்கப்பட்டிருக்கிறது. அது விலைக்கும் போயிருக்கிறது… என்ற அந்தத் திடுக்கிடும் உண்மைகள் அவளுள் பெரும் போர்க்களத்தை உருவாக்கியிருந்தன. அது அவளின் மனநிலையோடு, உடல் நிலையையும் வெகுவாகப் பாதித்திருந்தது.
“நான் அசிங்கமா நின்னேனா? விக்ரம் என்னைப் பயன்படுத்தினானா?” என்று அவளின் ஆழ்மனத்திலும் எழுந்த கேள்விகள் அவளது நரம்பு மண்டலத்தை வறுத்துக் கொண்டிருந்தன. அதன் விளைவாகவே அவளது இரத்த அழுத்தம் கட்டுக்கடங்காமல் ஏறிக்கொண்டிருந்தது.
மருத்துவர் சொன்னதைக் கேட்டு, அவசரச் சிகிச்சை பிரிவிற்கு வெளியே இருந்த இருக்கையில் தளர்ந்து அமர்ந்தான் மயூரன்.
அவனின் கைகள் கிடுகிடுவென்று நடுங்க ஆரம்பித்தன. மனைவியை உணர்வில்லாமல் தூக்கி வந்திருந்த நிலை அவனுக்குள் பெரும் நடுக்கத்தைத் தந்திருந்தது.
இப்போது மருத்துவர் சொன்ன அவளின் நிலை அவனை உயிரோடு கொன்றது.
அவளுக்கு இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று தானே அத்தனையும் பொறுத்துக் கொண்டான். இப்போது அனைத்திற்கும் அர்த்தமில்லாமல் போனதே. இப்போது ஒன்றுக்கு இரண்டு உயிர். அது அவன் உயிரல்லவா! அந்த உயிர்கள் இல்லா தன் உலகு! ஹோ… என்று மனத்தின் எதிர்மறை எண்ணம் அவனின் உயிரையே உருவி எடுத்தது போல் வலித்தது.
‘இல்லை, என் மதுவுக்கும், எங்க பிள்ளைக்கும் ஒன்னும் ஆகாது. இரண்டு பேரும் நல்லாருப்பாங்க’ தனக்குத் தானே சொல்லிக் கொண்டு நேர்மறை எண்ணத்தைத் தனக்குள் விதைத்துக் கொள்ள முயன்றான்.
அவன் நேர்மறையாக நினைக்கலாம். ஆனால், அவனின் மனைவி… நேர்மறையாக நினைப்பாளா? இல்லை தன்னையே வதைத்துக் கொள்ள நினைத்து விபரீதமாக நினைப்பாளா? அவள் நேர்மறையாக நினைத்திருந்தால் இப்படி வந்து படுத்துக்கொண்டிருக்க மாட்டாளே…
‘மது… மது… தப்பா எதுவும் நினைச்சுடாதேடி! தாங்க மாட்டேன் நான்!’ என்று மானசீகமாகத் தன்னவளிடம் கதறினான் அந்த ஆடவன்.
அவனின் தோளில் ஒரு கரம் படிய, கண்களில் துளிர்த்து நின்றிருந்த கண்ணீருடன் திரும்பி பார்த்தான் மயூரன்.
“என்னை மன்னிச்சுடுங்க மாப்பிள்ளை. இப்படி எதுவும் நடக்கக் கூடாதுன்னுதான் நீங்க போராடினீங்க. உங்க போராட்டத்தை ஒரே நிமிசத்தில் சுக்கு நூறா உடைச்சுட்டேன். எல்லாம் என் தப்புதான்… நான் கொஞ்சம் நிதானமா இருந்திருக்கணும்…” என்று பரிதவிப்புடன் மன்னிப்பு கேட்டார் ஜெயராமன்.
மகள் இரண்டு உயிராக இருக்கும் போது தான் அவசரப்பட்டிருக்கக் கூடாதோ எனக் காலம் கடந்து யோசித்தார் அந்தத் தகப்பன்.
அவரை விரக்தியுடன் பார்த்தான் மயூரன். அவரைச் சொல்லி மட்டும் என்னவாகிவிடப் போகிறது? அவர் வருவதற்கு முன்பே எல்லாம் அவனின் கை மீறி சென்றிருந்ததே என்று இயலாமையுடன் நினைத்துக் கொண்டான்.
இனி நடந்து முடிந்ததை யோசித்து ஒரு பிரயோஜனமும் இல்லை. இப்போது மனைவியின் உடல்நிலைதான் அவனைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது.
உள்ளே மதுமதிக்குச் சிகிச்சை நடந்து கொண்டிருக்க, மருத்துவர்கள் காத்திருக்கச் சொன்னார்கள்.
இப்போது காத்திருப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. மனைவியும், தன் மகவும் தன்னிடம் நல்லபடியாக வந்துவிட வேண்டும் என்பதை மட்டும் தனக்குள் உருப்போட்டுக் கொண்டிருந்தான்.
அப்போது ஜெயராமனின் அலைபேசி அழைத்தது.
திலகாதான் அழைத்துக் கொண்டிருந்தார்.
தயக்கத்துடன் தான் அழைப்பை ஏற்றுப் பேசினார் ஜெயராமன்.
“ஏங்க அவ வீட்டுக்கு போய்ட்டாளான்னு பார்த்துட்டு வர இவ்வளவு நேரமா? அவளைப் பார்க்கப் போனீங்களா? இல்லை, வெளியே வேற வேலையா போய்ட்டீங்களா?” என்று கேட்டார் திலகா.
“திலகா…” என்று திணறலுடன் அழைத்தவருக்கு இப்போது மனைவியிடம் மகளின் நிலையைச் சொல்வதா வேண்டாமா என்ற தயக்கம் எழுந்தது. மருமகனை திரும்பி பார்த்தார். அவன் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை.
மனைவி வந்தால், மகளுக்கு ஏன் திடீரென இப்படி ஆனது என்று சொல்ல வேண்டுமே… என நினைத்தவர், “நா… நான் இங்கே ஒரு வேலையா வந்தேன். நான் அப்புறம் பேசுறேன்…” என்று சொல்லி வைத்துவிட்டார்.
நேரம் மெல்ல கடந்து சென்றது. மாலையாகி இரவும் வந்துவிட மீண்டும் மருத்துவர் மயூரனை அழைத்துப் பேசினார்.
“நாங்க உங்க வொய்ப்க்கு கொடுத்த ட்ரீட்மெண்டுக்கு இந்த நேரத்தில் கொஞ்சமாவது இம்ப்ரூவ்மென்ட் வந்திருக்கணும் மிஸ்டர் மயூரன். ஆனால், அவங்ககிட்ட எந்த இம்ப்ரூவ்மென்ட்டும் வரலை. அதைவிட, அவங்க உடம்பு நாங்க கொடுத்த ட்ரீட்மெண்ட்டை ஏத்துக்கலை. இதுக்கு முக்கியக் காரணம் அவங்களோட ஆழ்மனசுல இருக்கிற ஏதோ ஒரு பெரிய பாதிப்பா இருக்கலாம். அவங்க பிழைக்கணும்னு அவங்களுக்கே தோனலையோன்னு எங்களுக்குச் சந்தேகமா இருக்கு மிஸ்டர் மயூரன்!” என்று மருத்துவர் சொன்னபோது, மயூரனின் உடலே ஒரு கணம் நடுங்கியது.
இப்படி அவள் யோசித்துவிடக் கூடாது என்று தானே இவ்வளவு நேரமும் தனக்குள் வேண்டிக் கொண்டிருந்தான்.
“டாக்டர்…” எனக் குரலே எழும்பாமல் தீனமாக அழைத்தான்.
“அவங்க உடல் இப்படி ட்ரீட்மெண்ட்டை அவாய்ட் பண்ணுவது மேலும் சிக்கலை உண்டாக்கும் மிஸ்டர் மயூரன். அவங்க இரத்த அழுத்தம் இன்னும் குறையல. இன்னும் மயக்கத்தில் தான் இருக்காங்க. இப்படியே நீடிச்சா குழந்தைக்கு ஆக்சிஜன் குறைய ஆரம்பிச்சிடும். நாம இப்பவே ஒரு முடிவெடுத்தாகணும். தாயைக் காப்பாத்தப் போராடுவதா? இல்ல, குழந்தையையான்னு ஒரு நிலை வரலாம். அவங்க மனதில் என்ன நினைச்சிட்டு இப்படி ஒத்துழைக்க மாட்டிங்கிறாங்கன்னு தெரியலை. நீங்க அவங்ககிட்ட பேசிப் பாருங்க…” என்றார் மருத்துவர்.
“க… கண்டிப்பா பேசுறேன் டாக்டர்…” என்றான் குரல் நடுங்க.
சற்று நேரத்திலேயே செவிலியர் கொடுத்த பாதுகாப்பு உடை அணிந்து உள்ளே சென்றான் மயூரன்.
மருத்துவ உபகரணங்களின் நடுவே முகம் வெளுத்து, உணர்வில்லாமல் படுத்திருந்த மனைவியைப் பார்த்தவனின் அகமும் அங்கமும் ஆடிப்போயின.
அவளின் அருகில் சென்று “மது…” என்று அழைத்தவனின் சத்தம் அவனின் குரல்வளையைத் தாண்டி கூட வெளியேறவில்லை.
தொண்டை இறுக்கி அடைத்தது. அவனையும் மீறி கண்களில் கண்ணீர் தழும்பியது.
“உன்னை இப்படி மரக்கட்டையா கிடக்குறதை பார்க்குறதுக்காடி நான் காத்திருக்கேன்? ஏன்டி… ஏன்டி… இப்படிப் பண்ற? என்கிட்ட வந்துடி தங்கப்பொண்ணே!” என்று மனம் சத்தம் போட்டு கதறினாலும், அது வார்த்தையாக ஒலிக்கவில்லை.
அவளின் ஒரு கையில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்க, இன்னொரு கையில் ஏதோ மருத்துவ உபகரணங்கள் மாட்டப்பட்டிருந்தன.
குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்த கையை மென்மையாகப் பற்றினான்.

“மது…” என்று முணுமுணுப்பாய் அழைத்தவன் தொண்டையைச் செருமி, குரலை சற்றுச் சரிசெய்து கொண்டு, “மது… மது… நான் பேசுறது கேட்குதாடி? ஏன்டி ட்ரீட்மெண்டுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டிங்கிற? என்ன நினைச்சுட்டு நீ இப்படி எல்லாம் பண்ற? இப்படிப் பண்ணாதேடி. நீ… நீ… எந்தத் தப்புமே பண்ணலைடி மது. யாரோ ஒரு அயோக்கிய ராஸ்கல் செய்த தப்புக்கு உனக்கு நீயே தண்டனை கொடுத்துக்காதேடி மது. இங்கே பார்… எனக்கு உன்னை விட்டா யாருமே இல்லை. என்னை அநாதையா விட்டுடாதே மது. நீ அப்படி விட்டா அநாதையா எல்லாம் நிக்க மாட்டேன். உன் பின்னாடியே நானும் வந்துடுவேன். சொல்லு… நானும் வரவாடி உன் கூட? அதுதான் உனக்கு வேணுமா?” என்று கேட்டவன், அவளின் மூடிய இமைகளையே பார்த்தான்.
சிறு அசைவும் இல்லை.
©nandhavanamnovels.com