👁️ 1124 Views
ஏமாற்றத்தில் அவன் மனம் வெதும்பியது.
ஆனாலும் மனத்தைத் தளர விடாமல் அவளை மீட்டுக் கொண்டுவர போராடினான்.
“மது… மதுமா… நீ ரொம்ப நல்லவடி. உன்னால் யாருக்கும் எந்தக் கெடுதலும் நடந்துட கூடாதுன்னு நினைக்கிறவ. இப்ப நீ உன்னை நீயே மட்டும் வதைச்சுக்கலை. என்னையும் சேர்த்து தான் வதைக்கிற. அதைவிட… நம்ம பிள்ளைடி… உன் வயிற்றில் இப்ப ஒரு உயிர் இருக்கு. நீ பிழைச்சு வந்தால் தான் அந்த உயிரும் பிழைக்கும்னு டாக்டர் சொல்றாங்கடி. புரியுதா உனக்கு? உனக்கு ஏதாவது ஆனால் நம்ம பிள்ளைக்கும் ஏதாவது ஆகிடும் மது. இப்பவே அது உனக்குள்ள இருந்து உயிருக்கு போராடிட்டு இருக்கு. இன்னும் இந்த உலகத்தைப் பார்க்காத அந்தப் பிஞ்சை நீயே கொல்லப் போறீயா? சொல்லடி கொல்லப் போறீயா? உன் பிள்ளைடி அது? உன் பிள்ளையை நீயே கொல்லணும்னு தான் உனக்கு ஆசையா?” என்று கடுமையாகவே கேட்டான்.
மூடியிருந்த இமைகளையும் மீறி அவளின் விழி நுனியில் கண்ணீர் கசிந்து வர ஆரம்பிக்க, அதைப் பார்த்தவன் சற்றுப் பரபரப்பனான்.
“மது… மது… நம்ம பிள்ளையைக் காப்பாத்துவது இப்ப உன் கையில் தான்டி இருக்கு. நீ மீண்டு வந்தால்தான் நம்ம பிள்ளையும் மீண்டு வரும். மது… உனக்குப் புரியுதா? நீ பிழைச்சு வந்தால் மட்டும்தான் நம்ம பிள்ளையும் பிழைக்கும். அதை நல்லா ஞாபகம் வச்சுக்கோடி. தேவையில்லாத எதையாவது யோசிச்சு… நம்ம பிள்ளையைக் கொன்னுடாதே மது. ஒரு உயிரை கொல்ல மாட்டேன்னு நினைக்கிறேன். மாட்ட தானேடி. மாட்ட… எனக்குத் தெரியும். வந்துடுடி மது. நீயும் நம்ம பிள்ளையும் எனக்கு வேணும் மது. நம்ம பிள்ளை பத்திரமா கூட்டிட்டு வந்துடு. நம்ம பிள்ளையை விட்டுட மாட்டேன்னு நினைக்கிறேன். விட்டுடாதேடி மது…” என்று தொண்டையடைக்கச் சொன்னவன், அவளின் உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்தான்.
அவளின் கையில் நடுக்கம் தெரிவது போல உணர்ந்தவன், “மது…” என்று ஆவலாக அவள் முகம் பார்த்தான்.
அவளின் மூடிய இமைகளின் ஓரத்திலிருந்து கண்ணீர்தான் வடிந்து கொண்டிருந்ததே தவிர, அவள் கண்விழிக்கவில்லை.
ஆனால் அவளின் கையில் இன்னும் நடுக்கத்தை உணர்ந்தவன், சற்று தள்ளி இருந்த செவிலியரை அழைத்துச் சொன்னான்.
அருகில் வந்து அவளைச் சோதித்துப் பார்த்த செவிலியர், மானிட்டரையும் பார்த்துவிட்டு, “நீங்க வெளியே வெயிட் பண்ணுங்க சார்…” என்றவர், அங்கிருந்த தொலைப்பேசியை எடுத்து, மருத்துவருக்குத் தகவல் சொல்ல ஆரம்பித்தார்.
மனைவியின் கையை மீண்டும் அழுத்திக் கொடுத்து, “பிள்ளையைக் கூட்டிட்டு வந்துடுடி மது…” என்று அவளிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தான்.
“மாப்பிள்ளை… மது எப்படி இருக்கா? என்னாச்சு அவளுக்கு? அவளை நான் பார்க்கணுமே…” என்று வெளியே நின்றிருந்த திலகா அவனைக் கண்டதும் தவிப்புடன் கேட்டார்.
இவர் எப்போது வந்தார் என்பது போலக் கண்ணைச் சுருக்கி மயூரன் மாமனாரை பார்க்க, “நான் இன்னும் வீட்டுக்கு வரலைன்னு போன் போட்டாள் மாப்பிள்ளை. இதுக்கு மேல சமாளிக்க முடியாமல் மது நிலையைச் சொன்னேன். உடனே கிளம்பி வந்துட்டா…” என்றார் ஜெயராமன்.
“பொண்ணு உள்ளே கண்ணு திறக்காம இருக்கா. அதைப் பெத்தவ என்கிட்ட கூடச் சொல்லாம மறைப்பீங்களா?” என்று கணவரை கடிந்து கொண்ட திலகா, “மது எப்படி இருக்கா மாப்பிள்ளை? நான் அவளைப் பார்க்கலாமா?” என மயூரனிடம் கேட்டார்.
“ட்ரீட்மெண்ட் போய்ட்டு இருக்கு அத்தை. பார்க்கலாமான்னு டாக்டர்கிட்டதான் கேட்கணும்…” என்றவன், வேறு எதுவும் பேசாமல் நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டான்.
அவனின் சிந்தை முழுவதும் மதுமதியே நிறைந்திருந்தாள். தன் பேச்சிற்குப் பலன் இருக்குமா? என்று யோசித்தபடி அமைதியாக அமர்ந்துவிட்டான்.
“அவளுக்கு எப்படிங்க திடீர்னு இப்படி ஆச்சு? காலையில் கூட நல்லாத்தானே இருந்தாள்? அப்புறம் எப்படி இப்படிக் கண் திறக்காம இருக்கா?” என்று கணவரிடம் கேள்வி கேட்டு குடைந்து கொண்டிருந்தார் திலகா.
“அது… நான் வீட்டுக்குப் போனப்ப திடீர்னு மயக்கம் வந்து மயங்கிட்டா. வேற காரணம் தெரியலை. டாக்டர் தான் பார்த்துட்டு இருக்காங்களே. சரியாகிடுவா…” என்று சமாளித்துக் கொண்டிருந்தார் ஜெயராமன்.
“வயித்துப் பிள்ளைக்காரிங்க. இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க?” என்று திலகா புலம்ப, எதுவும் மயூரனின் காதில் ஏறவில்லை.
மதுமதிக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த மருத்துவர்கள், அதன்பின்னும் உடனே எதுவும் சொல்லவில்லை.
மயூரனுக்கு ஒவ்வொரு கணமும் நரகமாக நகர்ந்தது.
மறுநாள் காலையில் தான் மீண்டும் மருத்துவர் அழைத்துப் பேசினார்.
“பேஷன்டின் ஹார்ட்பீட் நார்மலுக்கு வந்திருக்கு மிஸ்டர் மயூரன். ப்ரஷரும் குறைஞ்சிருக்கு. அதனால், இப்போதைக்குக் குழந்தை ஓகே தான். ஆனால், டெலிவரி டேட் வரை இனி பேஷன்ட் பெட் ரெஸ்டில் இருப்பது போல இருக்கும். அதைவிட முக்கியம் அவங்க மனதளவில் எதனாலோ பாதிக்கப்பட்டதால்தான் இந்தக் கிரிடிக்கல் சுச்சுவேஷன் வந்திருக்கு. அதனால் திரும்ப அவங்க மனம் பாதிக்காத மாதிரி கவனமா பார்த்துக்கணும். இல்லைனா… இன்னொரு முறை இப்படி நடந்தால், தாய், சேய் இரண்டு உயிருக்குமே பாதிப்பு வரலாம்…” என்று எச்சரித்தார் மருத்துவர்.
“அப்படி வராமல் கண்டிப்பா பார்த்துக்கிறேன் டாக்டர். தேங்க்ஸ் டாக்டர்…” என்றான் மனதார.
மனைவி எப்படியோ மீண்டு வந்துவிட்டாள் என்று அவனுக்கு அத்துணை ஆசுவாசமாக இருந்தது.
“நீங்க பேஷன்ட்கிட்ட பேசிய பிறகுதான் அவங்க உடம்பு நாங்க கொடுத்த மருந்தை ஏற்க ஆரம்பிச்சது மிஸ்டர் மயூரன். அவங்களுக்கு உயிர் பிழைச்சு வரணும்னு உங்க பேச்சு தான் உணர்த்தியிருக்கு…” என்று மருத்துவர் கூடுதலாகச் சொல்ல,
‘அவள் வாழணும்னு ஆசைப்பட்டுத் திரும்பி வந்திருக்க மாட்டாள் டாக்டர். அவளுக்கு எதுவும் ஆனால், குழந்தைக்கும் எதுவும் ஆகிடும்னு நான் சொன்னதால், இப்ப குழந்தைக்காக மீண்டு வந்திருக்கா. இனி குழந்தைக்காக மட்டும்தான் உயிரை காப்பாத்தி வச்சுக்கணும்னு நினைப்பாளே தவிர, அவளுக்காக இல்லை டாக்டர்’ என்று தனக்குள் மட்டும் விரக்தியாகச் சொல்லிக் கொண்டான் மயூரன்.
அவனின் எண்ணம் சரிதான் என்பது போலத்தான் கண்விழித்து வந்த மதுமதியின் செயல்களும் இருந்தன.
அவள் கண் விழித்ததும், மயூரன் பார்க்க செல்ல, அவனின் முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை அவள். அவளின் விழிகள் தாழ்ந்தே இருந்தன.
“எப்படி இருக்க மது?” என்று அவள் முகத்தை விட்டு இம்மியும் பார்வையை நகர்த்தாமல் கேட்டான்.
லேசான தலையசைவு மட்டுமே அவளிடமிருந்து வந்தது.
“என்னைப் பார்க்க மாட்டியா மது?” என்று கேட்டபடி, அவளின் உள்ளங்கையை மெல்ல பற்றினான்.
அவனுக்கு எந்தப் பதிலும் சொல்லாதவள், தன் கையை அவனின் பிடியிலிருந்து உருவி கொள்ள முயன்றாள்.
அவனுக்குச் சுருக்கென்று வலித்தது. முன்பாவது அவன் அவள் கையைப் பிடித்தால், இப்படி எல்லாம் உருவ மாட்டாள். கோபமாக இருக்கும் போது தொட்டால் மட்டும் சீறுவாள். இப்போதோ அவளின் முகத்திலோ செயலிலோ துளி கோபம் கூட இல்லை. ஆனால், அப்பட்டமான ஒதுக்கத்தைக் காட்டினாள்.
அவள் மீண்டும் கையை உருவி கொள்ளப் பார்க்க, அவளை இந்த நிலையில் இனி சீண்ட கூடாது என்று நினைத்தவன், தானே அவளின் கையை விடுவித்தான்.
அதன்பின் மயூரன் அவளிடம் எதுவும் பேசவில்லை. அவளிடம் பேச அவனுக்கு எத்தனையோ இருந்தன. எதையும் நினைத்து மனத்தைக் குழப்பிக் கொள்ளாதே என்று சொல்ல கூட நினைத்தான். ஆனால், தானே அதைப் பற்றிப் பேசி அவளின் உடல்நிலையுடன் அவன் விளையாட தயாராக இல்லை. அதனால் எதுவும் சொல்லாமல் அமைதி காத்தான்.
©nandhavanamnovels.com