👁️ 1124 Views
மதுமதி அவனிடம் மட்டும் ஒதுக்கத்தைக் காட்டவில்லை. அவளின் தந்தை வந்த போதும் அவரை நிமிர்ந்து பார்க்கவில்லை அவள். தாயிடம் அவர் கேட்டதற்கு மட்டும் பதில் சொன்னாள், அவ்வளவுதான்.
அவள் இரண்டு வருடங்களாகவே அவர்களிடம் ஒதுக்கம்தான் காட்டுகிறாள் என்பதால், திலகாவிற்கு அது வித்தியாசமாகத் தெரியவில்லை. ஆனால், ஜெயராமன் மகள் காட்டிய அந்த ஒதுக்கத்திலும் தெரிந்த வித்தியாசத்தைக் கண்டுகொண்டார். அவர் கண்ணில் பட்டுவிட்டாலே அவளின் பார்வை உஷ்ணமாய் அவரின் மீது படியும். ஆனால், மயூரனின் கண்களைச் சந்திக்க மறுத்தது போலவே, தந்தையையும் தலை நிமிர்ந்து பார்ப்பதை தவிர்த்தாள் மதுமதி.
அவளின் உடல்நிலை இன்னும் முன்னேற்றமடைய மேலும் இரண்டு நாள்கள் மருத்துவமனையில் இருக்க வைத்துவிட்டே வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்றார் மருத்துவர்.
மருத்துவமனையில் இருந்த இரண்டு நாள்களுமே யாரிடமும் அதிகம் பேசவோ… பார்க்கவோ இல்லை அவள்.
மயூரனும், ஜெயராமனும் இந்த நேரம் அவளிடம் எதுவும் பேச வேண்டாம் என அவள் போக்கில் விட்டுவிட்டனர். இரண்டு நாள்களுக்குப் பிறகு வீட்டிற்குக் கிளம்பும் போது, “என் கூட நம்ம வீட்டுக்கு வர்றீயா மது?” என்று கேட்டுப் பார்த்தான் மயூரன்.
அவளின் அன்னையின் வீட்டில் இருக்கப் பிடிக்காமல்தானே தங்கள் வீட்டிற்கே கிளம்பி வந்தாள். அதனால், இப்போதும் அப்படி வருவாளோ என்று நினைத்து மயூரன் கேட்க, “அம்மா வீட்டுக்கு போறேன்…” என்று அவன் முகம் பார்க்காமலே பதில் சொன்னாள்.
அவளின் பதில் அவனுக்கு ஏமாற்றத்தை தந்தாலும், அவள் படுக்கையில் இருந்தே ஓய்வு எடுக்க வேண்டிய சூழ்நிலையில், அவளின் அன்னையின் வீடு செல்வதே நல்லது என்று நினைத்தான். ஆனாலும், அவளின் அந்த முடிவு அப்போது மட்டும்தானா? என்ற கேள்வி அவனுள் தொக்கி நின்றது.
நினைத்ததைக் கேட்டுவிடக் கூட இப்போது அவனுக்குப் பயமாக இருந்தது. குழந்தை பிறக்கும் வரை அவளைக் கண்ணாடி பாத்திரம் போல் கையாள வேண்டிய சூழ்நிலை அவனைக் கட்டிப் போட்டது. அதனால் விளையாட்டாகக் கூட அவன் பேச முயலவில்லை.
தற்போதைக்கு அவள் போக்கிலேயே விட்டு பிடிக்க நினைத்தான்.
அன்னையின் வீடு சென்ற மனைவியைத் தினமும் இரவு பார்க்க வருவான். அவன் வரும் போது அவள் உறங்கியிருப்பாள். அவன் அப்படி நினைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைத்தாள். ஆனால், அவளின் அந்த நாடகத்தைக் கண்டுகொண்டான் மயூரன்.
அன்று இரவு அவளைப் பார்க்க சென்றவன், உறங்கும் பாவனையில் படுத்திருந்த மனைவியின் முகத்தையே விடாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
சில நொடிகளுக்குப் பிறகு அவன் இருப்பை உணர்ந்த அவளின் கண்ணின் மணிகள் மூடிய இமைகளுக்குள் உருண்டன. ஆனால் அவள் தன் இமை கதவுகளைத் திறக்க முயற்சிக்கவில்லை.
அவளின் முகத்தைப் பார்த்து லேசாகப் புன்முறுவல் பூத்தவன், அவளின் உப்பிய வயிற்றைப் பார்த்து, “உங்கம்மா இன்னும் எவ்வளவு நேரம் தூங்குற மாதிரி நடிப்பாளாம் பேபி? இன்னைக்கு அவள் எவ்வளவு நேரம் அப்படி நடிக்கிறாள்னு நானும் நீயும் பார்க்க போறோம். ரெடியாடா குட்டி?” என்று பிள்ளையிடம் கேட்டான்.
அவனுக்குச் சம்மதம் சொல்வது போல, அவளின் வயிற்றில் இருந்த பிள்ளை உதைக்க, அவளின் வயிற்றில் பிள்ளை உதைத்த இடத்தில் சின்ன உருண்டை போல உப்பி அமிழ்ந்தது. பிள்ளையின் அசைவை கண்களால் ஆர்வமாகப் பார்த்தவனுக்குத் தொட்டு பார்க்கும் ஆசை வர, தன் ஒற்றை விரலை நீட்டி பிள்ளை உதைத்த இடத்தை லேசாகத் தொட்டான்.
தந்தையின் தொடுகையை உணர்ந்தது போலப் பிள்ளை உற்சாகத்தில் மீண்டும் உதைக்க, இப்போது வேறு இடத்தில் அசைவை கண்டு தன் விரலை நகர்த்தி அந்த இடத்தில் தொட்டான்.
அடுத்தடுத்து பிள்ளை தொடர்ந்து உதைக்க ஆரம்பிக்க, மயூரனின் விரல்கள் அவளின் வயிற்றில் பிள்ளை அசையும் இடமெல்லாம் ஊற ஆரம்பித்தன.

அவன் ஒற்றை விரலை வைத்து தீண்ட ஆரம்பித்த போதே, மதுமதிக்கு தாள முடியவில்லை. அவனின் கையையும் எடுக்கச் சொல்ல முடியாமல், அவனின் தீண்டலையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறியவள், அவன் தன் உள்ளங்கையை வயிற்றில் ஊற விடவும், கப்பென்று அவனின் கையைப் பற்றித் தடுத்தாள் மதுமதி.
மயூரன் வேகமாகத் திரும்பி அவளின் முகத்தைப் பார்க்க, அவளும் இமைகளைப் பிரித்து அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனின் பார்வை தன்னைத் தீண்டியதும், முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டவள், தன் பிடியில் இருந்த அவனின் கையை விடுவித்தாள்.
“உன் அம்மா கண் முழிச்சு நம்மைப் பார்த்துட்டா பேபி. நாம தான் வின் பண்ணினோம்…” என்று மயூரன் உற்சாகத்துடன் தன் பிள்ளையிடம் சொல்ல, பிள்ளையோ உள்ளே குதித்தது. அதைக் கண்டு அவனின் முகம் மலர்ந்து போயிற்று.
அதே மலர்ச்சியுடன் மனைவியின் முகம் பார்த்தவன், “எப்படி இருக்க மது?” என்று விசாரித்தான்.
அவளிடமிருந்து ஒரு மெல்லிய தலையசைப்பு மட்டுமே வந்தது.
“உடம்புக்கு எதுவும் தொந்தரவு இல்லையே? பெட் ரெஸ்ட் எடுப்பது கஷ்டமா இருக்கா?” என்று கேட்டவனுக்கு லேசாக மறுப்பாகத் தலையை அசைத்தாளே தவிர அவளின் வாயிலிருந்து வார்த்தை முத்துக்கள் உதிரவே இல்லை.
தன் முகம் பார்க்க வெட்கி, பேச கூடத் தயங்கும் அவளின் மனநிலை அவனுக்குப் புரிய, அதுவே அவனுக்கு வலித்தது.
படபடப் பட்டாசாகப் பொரிபவள், இப்போது இப்படித் தனக்குள்ளாகச் சுருண்டு கொள்கிறாளே என்று வேதனைபட்டான்.
‘இப்படி இருக்காதே தங்கப் பொண்ணே! நல்லா பேசு!’ என்ற சொல்ல அவனின் வாய்த் துறுதுறுத்தாலும் முயன்று தன்னை அடக்கிக் கொண்டான்.
சிறிது நேரம் மனைவியின் அறையிலேயே இருந்தவன், “நான் கிளம்புறேன் மது. நாளைக்கு வர்றேன்…” என்று சொல்லிவிட்டு எழுந்து நடந்தான்.
“இல்லை, வேண்டாம்!” என்ற மதுமதியின் வார்த்தைகள் அவனை நிறுத்தின.
சென்றவன் திரும்பி வந்து, “என்ன வேண்டாம் மது?” என்று வினவ,
“என்னைப் பார்க்க வர வேண்டாம். நான்… நான்… அசிங்கம்… என்னை நீங்க… பார்க்க வேண்டாம். நான்… நான்தான் தப்பு. ஆனா… உங்களைத் தேவையில்லாம தப்பா பேசிட்டேன். முடிஞ்சா… முடிஞ்சா என்னை மன்னிச்சுடுங்க. இந்தத் தப்பானவ முகத்தை நீங்க பார்க்க வேண்டாம். குழ… குழந்தை பிறந்ததும் உங்ககிட்ட கொடுக்க ஏற்பாடு பண்றேன். நான்… நான்… உங்களுக்கு வேண்டாம். குழந்தை… குழந்தையை மட்டும் நல்லா பார்த்துக்கோங்க. கு… குழந்தைக்கு நான்தான் அம்மான்னு சொல்ல வேண்டாம்…” என்று அவன் முகம் பார்க்காமலே சொல்லிக் கொண்டே போனாள் மதுமதி.
பொறுமையாக காத்திருந்த அனைவர்க்கும் நன்றி மக்களே! ஹெஸ்ட் எல்லாம் வந்துட்டு கிளம்பிட்டாங்க. வெக்கேஷனும் முடிச்சுட்டு வந்தாச்சு. இனி வழக்கம் போல வந்திடுவேன். நீங்களும் மறக்காம வந்துடுங்க….
©nandhavanamnovels.com