25 – காதலின் ரீங்காரம்

👁️ 1617 Views

அவன் உள்ளே சென்ற போது மதுமதியை முழுவதுமாக மருத்துவப் பரிசோதனையில் வைத்திருந்தனர்.

அவள் வலியில் முனகிக் கொண்டே இருந்தாள்.

அவளின் அருகில் சென்றவன், “மது…” என்றழைக்க, அவனைப் பார்த்தாள்.

அத்துணையாய் சோர்ந்து போயிருந்தாள். அரை மயக்கத்தில் அவளின் கண்கள் சொருகிக் கொண்டும் இருந்தன.

“போன தடவை டாக்டரை பார்க்கும்போதே உனக்கு லேசா வலி ஆரம்பிச்சதுமே ஹாஸ்பிடலில் வந்து அட்மிட் ஆகச் சொன்னாங்க. ஆனால் நீ ஏன் மது என்கிட்ட உனக்கு வலி வந்ததைச் சொல்லலை?” என்று குரல் இறுக கேட்டான்.

அவள் பதில் சொல்லாமல் கண்கள் சொருக அவனைப் பார்க்க, “அப்போ வேணும்னே தான் நீ சொல்லலை? பிள்ளையைப் பெத்து என்கிட்ட கொடுத்துட்டு என்னை விட்டு போக முடிவு பண்ணிட்ட, அப்படித்தானே?” என்று கேட்டான்.

“நா…ன் நான் அசிங்கம். நான் வாழ்ந்து என்ன பண்ண போறேன்? இந்த அசிங்கம் உங்களுக்கு வேணாம். நீங்க… வேற… நல்ல பொண்ணா… பார்…”

“போதும் நிறுத்துடி!” வலியை பொறுத்துக் கொண்டு பேசியவளை சற்றும் இரக்கம் இல்லாமல் அதட்டினான்.

அவள் திடுக்கிட்டு அதிர, “உன் முட்டாள்தனம் உன்னை விட்டு போகவே செய்யாதாடி? லூசாடி நீ? உனக்குக் கொஞ்சம் கூட யோசிக்கிற புத்தியில்லை?” என்று கடும் கோபத்துடன் கேட்டான்.

“சார், என்ன இது? பேஷன்ட்கிட்ட போய் இப்படிச் சத்தம் போட்டுட்டு இருக்கீங்க? வெளியே போங்க சார்…” என்று செவிலியர் ஓடி வந்து அவனை விரட்ட,

“நான் இங்கிருந்து போயிட்டா இவள் மொத்தமா என்னை விட்டுப் போயிடுவா சிஸ்டர். என்னைப் பேச விடுங்க, ப்ளீஸ்…” என்பதையும் சற்று கோபமாகவே சொன்னான். அவனை வினோதமாகப் பார்த்துவிட்டு தள்ளி சென்றார் செவிலியர்.

மீண்டும் மனைவியின் புறம் திரும்பியவன், “உன் காதல்! உன் வலி! உன் இழப்பு! உன் கோபம்! உன் ஆதங்கம்! உன் பிடிவாதம்! உன் ஏமாற்றம்! உன் வேதனை! எல்லாம்… எல்லாமே உன்னோடதை மட்டுமே யோசிப்பியாடி நீ? என்னை எந்த இடத்திலாவது யோசிச்சியா நீ? நானும் உன் மேல் வச்ச என் காதலும் அவ்வளவு இளப்பமா போச்சுல உனக்கு? உன்னைப் பொய்யா காதலிச்சு ஏமாத்தியவனுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு துளி கூட உன்னை உண்மையா உயிரா காதலிச்சுட்டு இருக்கும் எனக்குக் கொடுக்க மாட்ட இல்லை நீ? அப்படி நான் என்னடி பாவம் பண்ணினேன்?உன்னை லவ் பண்ணது என்ன அவ்வளவு பெரிய தவறா? எனக்கு வலியையும் வேதனையையும் தவிர, நீ எனக்கு எதுவுமே கொடுத்ததில்லைடி. இப்ப ஒட்டு மொத்தமா என்னை நரக வேதனையில் தள்ள முடிவு பண்ணிட்ட இல்ல? எவ்வளவு கொடூரமானவடி நீ?” என்று ஈவு இரக்கம் காட்டாமல் அவளைச் சாடினான்.

மதுமதியின் கண்களிலிருந்து பொலபொலவெனக் கண்ணீர் வெளியேறியது.

“நா…ன் உங்க நல்லதுக்காக…” திணறியபடி அவள் சொல்ல,

“எதுடி நல்லது? இப்ப நீ செத்து என்னை உயிரோட கொல்ல முடிவு பண்ணியிருக்கயே… அந்த நல்லதா?” என்று கடுமையாகக் கேட்டான்.

வலியோடு அவன் வார்த்தைக்காகவும் முகத்தைச் சுருக்கினாள்.

“என்னை… என்னை எவன் எவனோ பார்த்து… அது… அது… உங்களுக்குத்தான் அவமானம்!” என்றாள் கதறலாக.

“அதைச் சொல்லாதே! அது உனக்கே தெரியாம நடந்த ஒரு விஷயம். நீ மனசறிஞ்சு தப்புச் செய்தால்தான் அந்தத் தப்புக்காக வருந்தணும். அதுக்காக உனக்குத் தண்டனை கிடைக்கணும்னு நினைக்கணும். தப்பு செய்தவனை விட்டுட்டு உனக்கும் எனக்கும் நீ தண்டனை கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தா இப்பதான் நீ உண்மையான முட்டாள்…” என்றான்.

அவள் விழிகள் சொருக அவனையே பார்க்க, “கடைசியா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். ஒரு பொய்யானவன் காதலை நம்பி இப்ப வாழ்வா சாவா போராட்ட நுனியில் நிக்கிற நீ செத்து, அந்தப் போலியான காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போறீயா? இல்லை… இங்கே மது… மதுன்னு உன் பெயரையே ரீங்காரமிட்டுட்டு இருக்கும் என் காதலுக்கு ஒரு பதில் சொல்ல போறீயா? அதை நீயே முடிவு பண்ணிக்கோ…” என்று தன் நெஞ்சத்தைச் சுட்டிக்காட்டி சொன்னவன், அடுத்த நொடி அவளைத் திரும்பியும் பார்க்காமல் வெளியே சென்றுவிட்டான்.

“மாப்பிள்ளை, மது எப்படி இருக்கா? ரொம்ப வலியில் துடிக்கிறாளா?” என்று கேட்ட மாமியார் மாமனாருக்கு கூடப் பதில் சொல்லாமல் அமைதியாக அந்த வராண்டாவில் போட்டிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தவன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

ஜெயராமனும் திலகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

அதன்பின் மயூரன் இடத்தை விட்டு அசையவும் இல்லை. கண்களைத் திறக்கவும் இல்லை.

மணித்துளிகள் கடந்த நிலையில் குழந்தையின் மென்மையான அழுகுரல் கேட்க, அப்போதும் அவன் விழிகளைத் திறக்கவில்லை.

“மாப்பிள்ளை, உங்களுக்குப் பொண்ணு பிறந்திருக்கா…” என்ற ஜெயராமனின் குரல் ஆர்பாட்டத்துடன் கேட்க, மெல்ல விழிகளை மலர்த்தினான்.

திலகா கையில் குழந்தையுடன் நின்றிருந்தார். அப்போதும் அமைதியாக இருந்த மயூரன், மாமியார் அருகில் நின்றிருந்த செவிலியரை பார்த்து, “என் வொய்ப் எப்படி இருக்கா சிஸ்டர்?” என்று கேட்டான்.

“இப்ப நார்மல் டெலிவரி ஆன மயக்கத்தில் இருக்காங்க சார். மீதி எல்லாம் டாக்டர் சொல்வாங்க. நீங்க குழந்தையைப் பார்த்துட்டு கொடுங்க…” என்றார்.

மாமியாரின் கையில் இருந்த குழந்தையைக் கவனித்தாலும் தூக்க ஆர்வம் காட்டவில்லை அவன்.

“இல்லை சிஸ்டர், என் வொய்போட நான் குழந்தையைப் பார்த்துக்கிறேன்…” என்று சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடி அமர்ந்துவிட்டான்.

“மாப்பிள்ளை…” என்று ஜெயராமன் அழைக்க,

“உங்க பொண்ணு என்கிட்ட பத்திரமா வரட்டும் மாமா. அப்புறம் என் பொண்ணையும் சேர்த்தே நான் பார்த்துக்கிறேன்…” என்று கண்களைத் திறக்காமலேயே பதில் சொன்னான்.

“என்னங்க இது?” என்று திலகா கூட ஆட்சேபனையாகக் கணவரிடம் கேட்க, மாப்பிள்ளையின் மனம் புரிந்த மாமனாரோ அவனை அதன்பின் தொந்தரவு செய்யவில்லை.

“அம்மாவையும், பொண்ணையும் மாப்பிள்ளை சேர்த்து பார்க்க ஆசைப்படுறார். அவர் விருப்பப்படி பார்க்கட்டுமே…” என்று மனைவியைத்தான் சமாதானம் செய்தார் ஜெயராமன்.

சிறிது நேரத்தில் மருத்துவர் அழைக்க, அவரைக் காணச் சென்றான் மயூரன்.

“சிசேரியன் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் நார்மல் டெலிவரியே ஆகிருச்சு மிஸ்டர் மயூரன். ஆனால், பேஷன்டோட பிளட் பிரஷர் மட்டும் கொஞ்சம் ஸ்டேபிளா இல்லை. அதுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணியிருக்கோம். பட், பயப்படுறளவுக்கு எதுவும் இல்லை. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு நீங்க உங்க வொய்பை பார்க்கலாம்…” என்று சிறு புன்னகையுடனே சொன்னார் மருத்துவர்.

அதன்பிறகே அடைத்து வைத்திருந்த மூச்சை வெளியேற்றுவது போல, பெருமூச்சு விட்டு, இறுக்கமான தன் உடலை தளர்த்தினான் மயூரன்.

சிறிது நேரத்திற்குப் பின் மதுமதியை பார்க்க அவனுக்கு அனுமதி கிடைக்க, மெல்ல அறைக்குள் அடியெடுத்து வைத்தான்.

இன்னும் அவளுக்குக் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது. முற்றிலும் தளர்ந்து போனவளாகப் படுக்கையில் கண்களை மூடி படுத்திருந்தாள் மதுமதி.

கட்டில் அருகில் இருந்த தொட்டிலில் குழந்தை படுத்திருந்தாள்.

அமைதியாகக் கட்டிலுக்கும் தொட்டிலுக்கும் நடுவில் சென்று நின்றானே தவிர, மனைவியை அழைக்கவே இல்லை.

சில நொடிகளில் அவளாகவே கண்களைத் திறந்து அங்கே நின்றிருந்த கணவனைப் பார்த்த மதுமதி, “உங்க காதலோட ரீங்கார சத்தத்தைத் தொடர்ந்து கேட்க, உங்க பொண்ணையும் கூட்டிட்டு, உங்ககிட்டயே பத்திரமா வந்து சேர்ந்துட்டேன்ங்க…” என்று அவன் கண்களைப் பார்த்து மெல்ல முனகினாள் அவள்.

இறுகிய உதடுகளைத் தளர்த்தி மெல்ல விரித்துச் சிரித்தான் மயூரன்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com