4 – காதலின் ரீங்காரம்

👁️ 2084 Views

அத்தியாயம் – 4

அக்னி குண்டத்தின் முன் அமர்ந்திருந்த மதுமதியின் முகம் அனலின் வெட்பத்தாலோ, மனத்தின் தகிப்பினாலோ சிவந்திருக்க, அவளின் கண்களிலோ நீர் தளும்பி நின்றிருந்தது.

அந்தத் தீக்கொழுந்து மேலெழும்பி அவளது பிம்பத்தை ஆட்டிப்படைக்க, அந்நொடியில் முழங்கிய மங்கல சத்தம் அவளுக்கு மரண ஓலமாய்ச் செவிகளில் ஒலித்தது. விழியோரம் முட்டி நின்ற அந்த நீர்த்துளி, அக்னியில் விழுந்து ஆவியாகப் போகிறதா? அல்லது அவளது வாழ்வையே நனைக்கப் போகிறதா? என்பதை அவளே அறியவில்லை.

அவளின் உடல் ஜடமாய்ச் சமைந்திருக்க, கழுத்தில் விழுந்தது மங்கல நாண்!

அதுவரை அவளின் கண்களின் தேங்கியிருந்த கண்ணீர் துளிகள் அந்தப் புத்தம் புதிய தங்கத் தாலியின் மீது விழ, “நல்ல சகுனம்!” என்று அவளது கணவன் என்ற உரிமையைப் பெற்றுவிட்ட மயூரனின் குரல் காதோரம் கள்ளச் சிரிப்புடன் ஒலிக்க, அவனின் புறம் திரும்பி கேள்வியுடன் பார்த்தாள் மதுமதி.

“இப்ப எல்லாம் தாலி கட்டும் போது பொண்ணோ மாப்பிள்ளையோ அழுவது தான் ட்ரெண்ட். அவங்க கண்ணீரை பார்த்து அந்தப் பொண்ணு ஆர் பையன் எவ்வளவு ஆசையா கல்யாணம் பண்ணியிருந்தால் இப்படி எமோஷனல் ஆகியிருப்பாள்(ன்) பாரேன்னு பெருமையா பேசுவாங்க. வருங்காலத்தில் நம்ம பிள்ளைங்ககிட்ட காலரை தூக்கிவிட்டு நம்ம வெட்டிங் ஆல்பத்தைக் காட்டி பெருமையா சொல்வேன்.‌ உங்கம்மா என் மேல் இருந்த லவ்வில் நான் தாலி கட்டியதும் ஃபீல் பண்ணி அழுதாள்னு…” என்று கண்களைச் சிமிட்டி சொன்னவனை இப்போது அவளின் விழிகள் சூடாய்ச் சுட்டெரித்தன.

அந்தச் சூட்டில் வெந்துவிடாமல் குளிர்ச்சியாய் புன்னகைத்தவன், அவளின் கழுத்தை சுற்றி கையைப் போட்டு தன் பக்கம் இழுத்து அவளைக் குனிய வைத்தவன், அவளின் நெற்றியில் தன் குளிர்ந்த அதரங்களைப் பதித்தான் மயூரன்.

அவனின் செயலை எதிர்பாராமல் விலக முயன்றவளால் முடியாமல் போக, அவனின் இடையில் கை முட்டியால் முட்டித் தள்ளினாள்.

“நினைச்சதை சாதிச்சிட்டோம்னு திமிரா? தாலி கட்டிட்டால் போதுமா?” என்று கடுகடுவெனக் கேட்டாள்.

“போதாது தான். அதுக்கு மேல எவ்வளவோ இருக்கு. அந்த அவ்வளவையும் அள்ளிக்கத்தான் இந்தத் தாலி!” என்று அவளின் கழுத்தில் இருந்த ஈரம் காயாத மஞ்சள் கயிறை கண்களால் சுட்டிக் காட்டினான்.

“பகல் கனவு காணாதீங்க!” எனப் பற்களைக் கடித்தாள் மதுமதி.

“சரி, விடு! இரவு கனவு கண்டுட்டு போறேன். அதுவும் இன்னைக்கு நமக்கு ஸ்பெஷல் நைட் வேற!” என்றவன் கண்களைச் சிமிட்டினான்.

“ச்சீ!” என்று முகத்தைச் சுளித்தாள் அவள்.

“மாப்பிள்ளையும் பொண்ணும் மேடையிலேயே ரொமான்ஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்கடாவ்! அடேய், மச்சான்… நைட்டுக்குக் கொஞ்சம் மிச்சம் வைடா…” என்று அத்தை மகன் ஒருவன் அவர்களைக் கேலி செய்ய,

“அதைத்தான்டா மாப்பிள்ளை நானும் என் வொய்ப்கிட்ட சொல்லிட்டு இருந்தேன்…” சளைக்காமல் பதில் சொன்னான் மயூரன்.

அனைவரும் சிரிக்க, பெரியவர்கள் அடுத்துச் செய்ய வேண்டிய சடங்குகளை மாப்பிள்ளை, பெண்ணைச் செய்ய வைத்தனர்.

அக்னியைச் சுற்றி வலம் வரும் போதும், அம்மி மிதித்து மெட்டியை அணிவிக்கும் போதும் மதுமதி தன் எதிர்ப்பை காட்டவே செய்தாள்.‌

அவளின் எதிர்ப்பை பிறர் அறியாவண்ணம் சமாளித்து, பெரியவர்கள் சொல்ல சொல்ல அனைத்து சடங்குகளையும் செய்ய வைத்தான் மயூரன்.

அனைத்தும் முடிந்து விருந்தினரின் வாழ்த்துக்காக மணமக்களை மேடையில் நிறுத்தி வைத்தனர்.

அப்போதும் இயல்பாக இருக்காமல் தன் எரிச்சலை அப்பட்டமாக முகத்தில் காட்டினாள் மதுமதி.

சில உறவினர்கள் கேள்வி கேட்க ஆரம்பிக்க, விறுவிறுவென மேடைக்கு வந்தார் திலகா.

“ஏய் மது, முகத்தைக் கொஞ்சம் சிரிச்ச மாதிரி வைடி. நீ இப்படி இருப்பதைப் பார்த்துட்டு உன் மகள் ஏன் இப்படி இருக்கானு எல்லாரும் கேள்வி கேட்கிறாங்க.‌..” என்று மகளைக் கடிந்து கொண்டார்.

“உங்க மகள் சம்மதத்தோட அவளுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிட்டோம்னு உங்களுக்கு நினைப்போ?” என்று அவள் சூடாகக் கேட்க, மகளைத் தவிப்புடன் பார்த்தார் திலகா.

“என்னால் இப்படித்தான் இருக்க முடியும். உங்களைக் கேள்வி கேட்டால், நீங்க ஏதாவது சொல்லி சமாளிங்க. இல்லையா, எங்க மகளோட லவ்வரை நாங்க கொன்னுட்டு தான், அவளைக் கட்டாயப்படுத்தி இந்தக் கல்யாணத்தை நடத்தியிருக்கோம். அதான் அவள் அந்தத் துக்கத்தில் இப்படி இருக்காள்னு உண்மையைச் சொல்லுங்களேன்?” என்று கடுப்புடனும் நக்கலுடனும் சொன்னாள்.

“ஏய், வாயை மூடுடி! எங்க வச்சு என்ன பேசிட்டு இருக்க?” என்று மகளைக் கடிந்து கொண்டவர், அவளின் அருகில் நின்றிருந்த மருமகனை சங்கடத்துடன் பார்த்தார்.

அவரின் நிலையைப் பார்த்தவன், “அத்தை,‌ நீங்க போங்க. நான் பார்த்துக்கிறேன்…” என்று சன்னப் புன்னகையுடன் சொன்னான் மயூரன்.

அவனை நன்றியுடன் பார்த்துவிட்டு கீழே இறங்கிச் சென்றார்.

“என்ன? என்ன பார்ப்பீங்க நீங்க?” என்று வேகமாகக் கேட்ட மதுமதியின் வாய் அடுத்த நொடி கப்பென்று மூடிக்கொண்டது.

அவளின் இடுப்பை சுற்றி கையைப் போட்டுத் தன்னை ஒட்டி நெருக்கமாய் நிற்க வைத்திருந்தான் அவன்.

“என்ன பண்றீங்க?” என்று அவனின் கையை எடுத்துவிட அவள் முயல, அதற்குள் வரிசையாகப் புகைப்படம் எடுக்க விருந்தினர்கள் வந்துவிட, அவனின் பிடியில் நிற்கவும் முடியாமல், விலகவும் முடியாமல் திண்டாடிப் போனாள் அவள்.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

புகைப்படம் எடுக்க வந்தவர்கள் கேலி செய்து சிரித்துச் சென்றனர்.

அவர்கள் சென்ற அடுத்த நொடி மீண்டும் சீறலாக அவள் ஏதோ சொல்ல வர, “நாம வீட்டுக்கு போற வரை நீ சிரிச்ச மாதிரி இருந்தால் என் கையை எடுப்பேன். இல்லைனா வீட்டுக்கு போற வரை நாம இப்படியே தான் இருப்போம்…” என்று அவன் சிரித்துக் கொண்டே சொல்ல, அவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

உடனே அவளின் இடையில் இருந்த தன் கையால் இறுக்கத்தைக் கூட்டினான் மயூரன்.

“ஹக்!” என்று அவள் விக்கித்துப் போக, “சிரிடி தங்கப்பொண்ணு…” என்றவனின் குரல் மயிலிறகால் வருடுவது போல மென்மையுடன் வர, அவனின் விழிகளையே அலங்க மலங்க பார்த்தாள் மதுமதி.‌

“என்ன மாப்பிள்ளை, ஒரே அஜால் குஜால்தான் போல…” இளைஞர் உறவினர் படை மேடையேறி வந்து கலாய்க்க,

“கல்யாணம் பண்ணிட்டு அஜால் குஜால் இல்லைனா எப்படிடா மச்சான்?” என்று தன் அடர் புருவங்களை உயர்த்திப் போலி வியப்புடன் கேட்டான் மயூரன்.

“அதானே மாப்பு…” என்று அவனுடன் வந்தவர்களே மயூரன் பக்கம் பேச, இளைஞர்களின் கலாட்டா கலகலப்பாகத் தொடர்ந்தது.

மதுமதிதான் அவஸ்தைப்பட்டுப் போனாள்.

அவனின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவே போலியாகச் சிரிக்கும் பாவனைக் காட்டினாள்.

மண்டபத்திலிருந்து கிளம்பும் வரை அவளின் உதட்டில் போலி புன்னகை இயந்திரத்தனமாய் ஒட்டிக்கொண்டது.

திருமணம் முடிந்து, மாப்பிள்ளை வீட்டிற்கு வந்து, அங்கே செய்ய வேண்டிய சடங்குகளையும் அதே இயந்திரத்தனத்துடன் செய்து முடித்தாள் மதுமதி.

அவளின் கண்கள் அடிக்கடி கலங்கிக் கொண்டே இருந்தன. யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டாள். சிலர் காண நேர்ந்தாலும், திருமணம் முடிந்து பெற்றோரை விட்டு பிரியப் போவதால்… என்று வழக்கமான ஒன்றையே நினைத்துக் கொண்டனர்.

அவளை மயூரனும் கவனிக்கவே செய்தான். அவளின் மனநிலை அவனுக்கு நன்றாகவே புரிந்தது‌. ஆனால், புரிந்தது போல அவன் காட்டிக் கொள்ளவில்லை.

ஆனால், உறவினர்களோ, “ஒரே ஊரில் தானே இருக்கப் போற. எப்ப நினைச்சாலும் உன்னைப் பெத்தவங்களை நீ போய்ப் பார்க்க போற. அப்புறம் எதுக்குக் கலங்கிக்கிட்டு…” என்று அவளுக்கு ஆறுதல் உரைத்தனர்.

அவர்களை எல்லாம், ‘உங்ககிட்ட நான் இப்ப ஆறுதல் கேட்டேனா?’ என்பதுபோல் பார்த்து வைத்தாள்.

அவளின் பார்வையின் பொருள் புரியாமல் அவர்கள் கேள்வி கேட்க, அவர்களிடம் எல்லாம் வேறு பேசி மடைமாற்றிவிட்டான் அவளின் அருகிலேயே இருந்த மயூரன்.

அவனை ஏற இறங்க இளக்காரமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள் மதுமதி.

அவனின் பார்வையோ அவளைச் சாந்தமாகத் தழுவி மீண்டதை அவள் அறியவில்லை.

அடுத்து வந்த மணித்துளிகளும் அவளுக்கும் சேர்த்து உறவினர்களிடையே இருவரும் சாதாரணமாக இருப்பது போலச் சூழ்நிலையை அவனே சமாளிக்க வேண்டியதிருந்தது.

அவனின் பெரியம்மா, அத்தை குடும்பத்தினர் மட்டுமின்றி, இன்னும் சில உறவினர்களும், மதுமதியின் பக்க சொந்தங்களும் அங்கே இருந்தனர்.‌

சிறிது நேரம் மாப்பிள்ளையின் வீட்டில் இருந்துவிட்டு, பெண் வீட்டிற்கும் மணமக்கள் சென்று திரும்பினர்.

பெண் வீட்டினர் சார்பில் ராதாவும், இன்னும் இரண்டு பெண்களும் மட்டும் மதுமதியுடன் வந்திருந்தனர்.

அவர்களுக்கு ஓய்வெடுக்க ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்த மயூரனின் அத்தை, அடுத்ததாக அவனின் அறைக்குச் சென்றார்.

மதுமதி அவளின் உறவினர்களுடன் அறைக்குச் சென்றதை கவனித்துவிட்டு அப்போதுதான் அறைக்கு வந்து உடையை மாற்றிவிட்டுப் பால்கனியில் சென்று நின்று கொண்டிருந்தான் மயூரன்.

“மயூரா…” அவனின் அத்தை பிரேமா அழைக்க,

“இங்க பால்கனியில் இருக்கேன், வாங்கத்தை…” எனக் குரல் கொடுத்தான்.

அருகே வந்தவரிடம், “என்ன அத்தை, நீங்களும் ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே?” என்று கேட்டான்.

“நான் ரெஸ்ட் எடுப்பது இருக்கட்டும். நீ ஒரு உண்மையைச் சொல்லு. எல்லாம் சரியாத்தானே நடக்குது?” என்று கேட்டார்.

“என்ன அத்தை? அதான் கல்யாணம் எந்தக் குறையும் இல்லாம நடந்து முடிஞ்சிருச்சே. அப்புறம் ஏன் இப்படி ஒரு கேள்வி?” என்று சிறுமுறுவலுடன் வியப்பாகக் கேட்டான்.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com