👁️ 1845 Views
அத்தியாயம் – 6
நான்கு நாள்கள் சென்றிருந்த நிலையில், அன்று மாலையளவில் தனது பைக் ஷோரூமின் அலுவலக அறையில் இருந்தான் மயூரன்.
அவனுக்கான சில முக்கியமான வேலைகள் காத்திருந்தன. அடுத்த மாதத் தேவைக்காகக் கம்பெனிக்கு அனுப்ப வேண்டிய புதிய வண்டிகளின் ஆர்டர் பட்டியல் ஒருபுறம் விரிந்து கிடக்க, மறுபுறம் இந்த வார விற்பனை இலக்கை (Sales Target) எட்ட இன்னும் எத்தனை வண்டிகள் டெலிவரி கொடுக்கப்பட வேண்டும் என்ற கணக்கு வழக்குகள் மடிக்கணினி திரையில் மின்னிக் கொண்டிருந்தன.
கணக்குத் தணிக்கையாளர் (Auditor) கேட்டிருந்த சில ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டிய கட்டாயமும் அவனுக்கு இருந்தது.
முடிக்க வேண்டிய வேலைகள் ஏராளம் இருந்தாலும், அவனின் கவனம் எதிலும் நிலைக்கவில்லை.
தனது சொகுசு நாற்காலியில் அமர்ந்தபடி, அவனது விரல்கள் தன்னிச்சையாக அந்தக் கோப்புகளைப் புரட்டினாலும், அவனின் கண்களோ அந்த அறையின் கண்ணாடி சுவர் வழியாக ஷோரூமை பார்த்துக் கொண்டிருந்தன.
அங்கே, வரிசை வரிசையாக நின்றிருந்த புதிய பைக்குகள், தங்களின் எஜமானர்களுக்காகக் காத்திருக்கும் கம்பீரமான வேட்டை விலங்குகளைப் போல அணிவகுத்து நின்றன. அந்தப் பெரிய கண்ணாடிக் கதவுகளை ஊடுருவி உள்ளே பாய்ந்து வந்த மாலைச் சூரிய ஒளி, அந்த இரும்பு மேனிகளின் மீது பட்டுத் தெறித்து ஜொலித்தது.
பைக் பிரியனான அவன் எப்போதும் ரசித்துப் பார்க்கும் காட்சி அது. ஆனால், இன்று அதுவும் கூட அவனின் கவனத்தில் பதியவில்லை.

அவனின் சிந்தனை எல்லாம் மதுமதி பற்றி அறிந்த உண்மையையும், அவள் தற்போது இருக்கும் நிலையைக் குறித்தே இருந்தது. அதோடு, மறுநாளே வந்து, நின்ற திருமணத்தை மீண்டும் நடத்த கேட்ட ஜெயராமனின் பேச்சும் அவனைச் சுற்றி சுற்றியே வந்தது.
மதுமதியின் காதல் விஷயத்தைவிட, அவள் காதலித்தவனின் இன்னொரு முகம் அவனைப் போட்டுப் புரட்டியிருந்தது.
அவர்கள் சொன்னதெல்லாம் உண்மை தானா? விக்ரம் அப்படிப்பட்டவன் தானா? இல்லை, மகளை ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்து வைக்கக் கூடாது என்ற எண்ணத்தில் செல்வராஜுடன் சேர்ந்து ஏதேனும் பொய்க்கதையைப் புனைந்தாரா ஜெயராமன் என்ற சந்தேகம் எல்லாம் அவனுக்கு எழுந்தது.
அரசியல் பின்புலத்தை வைத்துக் கொண்டு எதையும் சாத்தியப்படுத்தலாமே? என்று சந்தேகம் வந்தாலும் கூட, அதற்குள் முழுதாக இறங்கி ஆராய்ச்சி செய்ய அவனின் மனநிலை ஒத்துழைக்கவில்லை.
அவர்கள் சொன்னது என்னவாக இருந்தாலும் இப்போது விக்ரம் இல்லை… அவனை நினைத்து கலங்கிப் போய்க் கல்லாய் சமைந்திருந்தாளே ஒருத்தி! அவளை நினைத்துதான் அவனின் மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது.
மதுமதியின் அந்தரங்க காணொளி விக்ரமிடம் இருந்தா? அவள் எப்படி அப்படி? என்று எல்லாம் கூட அவன் சிந்திக்கவில்லை.
அதற்குள் நுழைந்து அவளைப் பற்றி ஆழ்ந்து ஆராய அவன் மனம் விரும்பவில்லை.
விக்ரம் உண்மையிலேயே கெட்டவனாக இருந்தால், அவனின் போலியான முகமூடித்தனமான காதலை உண்மை என நம்பி ஏமாந்து நிற்கும் பேதையாகத்தான் மதுமதியை அவனால் நினைக்க முடிந்தது.
ஜெயராமன் இங்கே விக்ரமை பற்றி விசாரித்த போது அவன் நல்லவனாகத்தான் அவருக்குமே தெரிய வந்திருக்கிறான் என்றால், அந்த ‘நல்லவன்’ என்ற போர்வையில் இருந்த விக்ரம் மீது மதுமதி வைத்திருந்த காதல் முற்றிலும் ஆத்மார்த்தமானது தானே!
அவன் பொய்யானவன், நயவஞ்சகம் நிறைந்தவன் என அவளே அறியவில்லை எனும் போது, அவளின் நேசத்தில் ஒரு சதவீதம் கூடப் பொய்யில்லை என்பதை மயூரனால் உணர முடிந்தது.
விக்ரம் மீதான மதுமதியின் காதல் நிஜம்! காதலித்தவன் பொய்த்துப் போயிருக்கலாம். ஆனால், அவளின் காதலில் பொய்யில்லை என்பதை அவனால் நன்றாகவே உணர முடிந்தது.
மதுமதியின் அந்த உயிர்ப்புள்ள காதல் தான் அவளைச் சாவை நோக்கி தள்ளியது. அந்தக் காதலை தந்தவன் இப்போது இல்லை என்பதை ஜீரணிக்க முடியாமல், ஜடமாய் அவளை உறைய வைத்திருக்கிறது.
அவளிடம் சரியாகப் பேசாமல், பழகாமல் பார்த்த கணத்திலிருந்து அவளை விரும்ப ஆரம்பித்த தனக்கே அவள் இனி தனக்கு இல்லை என்று தெரிய வந்தபோது அவனின் நெஞ்சம் இரணமாக வலித்ததே!
அவளோ… அவனுடன் பேசிப் பழகி, அவன் மீது உண்மையான நேசத்தை வைத்துவிட்டு, அவனை மணமுடிக்கப் பெற்றோரிடம் போராடி, அவனைக் காணவில்லை என்றதும், அவனுக்காகத் தன் உயிரையே துச்சமாக மதித்து மாய்த்துக்கொள்ளத் துணிந்து, இப்போது அவன் மொத்தமாக இல்லை என்ற நிலையாகிப் போன இத்தருணத்தில் அவளின் இதயம் துண்டு துண்டாக வெட்டப்பட்டது போலல்லவா துடித்துக் கொண்டிருக்கும்?
தன் காதல் வலியைவிட, இப்போது அவளின் காதல் வலி பல மடங்கு அதிகம் என்ற உண்மை முகத்தில் அறைய, அந்தத் தீராத வலியை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொண்ணை நோக்கி, ‘நீ காதலித்தவன் ஏமாற்றுக்காரன்டி பெண்ணே… அவனுக்காக நீ துடிப்பதே அர்த்தமற்றது!’ என்று அவளைத் தூற்ற தோன்றவில்லை.
மாறாக, ‘உன் வலி தீர நான் என்ன செய்வேனடி பேதையே?’ என்று அவளுக்காக அவனது இதயம் மௌனமாகக் கதற மட்டுமே செய்தது.
அப்படி அவள் காதலனை இழந்து உயிர்ப்பற்றுப் போயிருக்க, நெஞ்சில் கொஞ்சம் கூட ஈரமில்லாமல், மறுநாளே தன்னிடம் வந்து நின்ற திருமணத்தை நடத்த வேண்டும் என்று கேட்ட ஜெயராமனின் செயல் அவனுக்கு இப்போதும் தீராத ஆத்திரத்தை தந்தது.
அவரின் அந்த அவசரமே, அவர் வேண்டுமென்றே விக்ரமை குற்றவாளியாக்கி கொன்று விட்டாரோ என்ற சந்தேகத்தை அவனுக்கு வலுக்க வைத்தது.
அதை நேரடியாக அன்று அவரிடமே கேட்டும் இருந்தான்.
“எனக்கு என்னவோ சந்தேகமாகவே இருக்கு? நீங்கதான் விக்ரமை பொய்யானவனா காட்டி, அவனைப் போட்டுத் தள்ளிட்டீங்களோன்னு?” என்று தன் எதிரே அமர்ந்திருந்த ஜெயராமனை நோக்கி கேட்டான்.
அவருடன் வந்திருந்த செல்வராஜ் ஏதோ பதில் சொல்ல வர, “நீங்க இருங்க சார். அவரே சொல்லட்டும்…” கையமர்த்தினான் மயூரன்.
“மாப்பிள்ளைகிட்ட நானே பேசுறேன் செல்வா…” முதல் நாளை விடச் சற்றுத் தெளிந்திருந்த ஜெயராமன் தானே மயூரனிடம் பேச ஆரம்பித்தார்.
“நேத்துச் செல்வா சொன்னது அத்தனையும் உண்மைதான் மாப்பிள்ளை. அவனை என்னோட ஜாதி வெறிக்கு போட்டு தள்ளுவது தான் நோக்கம்னா அதை நான் அவன் இங்கயே இருக்கும் போதே செய்திருக்க மாட்டேனா? அவனை அடிச்சுத் துரத்தணும்னு தான் நினைச்சேன்… செய்யவும் செய்தேன். அதை உங்ககிட்ட மறைக்காம சொல்லவும் செய்திருக்கேன். இப்பவும் நாங்க எதையும் மறைக்கலை. இதுக்கும் மேல நீங்க நம்பலைனா நீங்களே கூட அவனைப் பற்றி விசாரிச்சுப் பாருங்க. அதைவிட, அவன் லேப்டாப் இன்னும் செல்வாகிட்டதான் இருக்கு. அதைக் கூடக் கொண்டு வந்து காட்டுறோம்… அப்பவாவது நம்புவீங்க தானே?” என்று ஜெயராமன் கேட்க,
“நான் விசாரிக்க மாட்டேன்னு நினைக்கிறீங்களா? தேவைப்பட்டா அதையும் செய்வேன்…” என்ற மயூரன், “லேப்டாப் பார்ப்பது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இப்ப உங்க பொண்ணு என்ன மனநிலையில் இருக்காங்கன்னு உங்களுக்கே தெரியும் தானே? அப்படி இருக்கும் போது உங்களால் எப்படி அவங்க கல்யாணத்தைப் பற்றிப் பேச முடியுது? அவங்களுக்கு இன்னும் எவ்வளவு இரணத்தைத் தான் கொடுப்பீங்க?” என்று கோபமாகக் கேட்டான்.
“அவளுக்கு இரணத்தைக் கொடுக்க நினைக்கலை மாப்பிள்ளை. அவளோட இரணத்தைக் குறைக்க நினைச்சுத்தான் பேசிய படி கல்யாணம் நடக்கட்டும்னு சொல்றேன்…” என்றார் ஜெயராமன்.
“என்ன கதையிது? கல்யாணம் முடிச்சு வச்சா அவங்க இரணம் குறையுமா? இன்னும் தானே கூடும். காதலிச்சவனோட இழப்பிலிருந்து அவங்க இன்னும் மீளவே இல்ல. அப்படி இருக்கும் போது கல்யாணம் அவங்க மனநிலையை இன்னும் மோசமாக்கிடும் சார். அது புரியாம என்ன பேசுறீங்க நீங்க?” என்று ஆதங்கப்பட்டான்.
“நீங்க சொல்வதெல்லாம் புரியுது மாப்பிள்ளை. ஆனா, மதுவை இப்படியே விட்டா செத்தவனையே நினைச்சுக்கிட்டு ஒரு ரூமுக்குள்ளயே முடங்கிப் போயிருவாளோன்னு பயமா இருக்கு. அவ அப்படி உட்கார்ந்திருப்பதை, திலகா பார்த்து பார்த்துக் கண்ணீர் விட்டே கரையுறா. மகளைப் பார்த்து அவளுக்கும் எதுவும் ஆகிடுமோன்னு இருக்கு. எங்க பொண்ணோட இந்த நிலையை மாத்த, அவளோட மனசை மாத்த கல்யாணம் தான் சரியா தோனுச்சு. அதான் உங்களைப் பார்த்து அதைப் பற்றிப் பேசிட்டு போகலாம்னு வந்தோம். மதுவை விரும்பி கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டவர் நீங்க. இப்ப நாங்க அவளுக்காகத்தான் கேட்கிறோம் மாப்பிள்ளை. நீங்க பெரிய மனசு வச்சு…” என்று ஜெயராமன் தயக்கத்துடன் இழுக்க,
“முடியாது சார்… நீங்க அவங்களை மீட்கணும்னு நினைச்சு இன்னும் தீரா இரணத்துக்குள்ள தள்ள பார்க்கிறீங்க. இப்ப இருக்கும் நிலைக்கு இந்தக் கல்யாணம் நடக்காமல் இருப்பது தான் அவங்களுக்கு நல்லது. சோ, ப்ளீஸ் அந்தப் பேச்சே வேணாம்…” என்று மறுத்தான்.
ஜெயராமன் மீண்டும் அவனிடம் வலியுறுத்த, செல்வராஜும் அவனிடம் பேசிப் பார்த்தார். மயூரன் சம்மதிக்கவே இல்லை.
மதுமதியின் மனநிலை இப்படி இருக்கும் போது அவனால் மேற்கொண்டு திருமணம் பற்றி எல்லாம் யோசிக்கவே முடியவில்லை. இப்போதும் அவளுக்காகத்தான் பார்த்தான். அவளின் மனநிலை தேறி வரக் கால அவகாசம் கொடுப்பதே அவளுக்கு எல்லாரும் செய்யும் நல்லது என்று நினைத்தவன், நிறுத்திய திருமணம் நிறுத்தியதாகவே இருக்கட்டும் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்துவிட்டான்.
“இப்ப என்ன செய்றது செல்வா?” என்று புலம்பிக் கொண்டே தான் சென்றார் ஜெயராமன்.
“பொறுமையா இருங்கண்ணே, யோசிக்கலாம். இவ்வளவு அவசரப்பட வேணாம்னு தான் நானும் சொன்னேன். நீங்க கேட்கலை. நேத்து மயூரன்கிட்ட உண்மையை எல்லாம் சொன்னது கூடத் தப்புங்கண்ணே. தான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு வேற ஒருத்தனை விரும்பினாள்னு சொன்னாலே ஆம்பளைங்களால் ஏத்துக்க முடியாது. அப்படியிருக்கும் போது, அவனைக் காதலிச்சு அவள் ஏமாந்துட்டாள்னு சொன்னால் எப்படி ஏத்துப்பான்? ஆனா, நீங்க தான் உண்மையைச் சொல்லியே கல்யாணத்தைப் பண்ணுவோம்னு சொன்னீங்க. இப்ப என்னாச்சுன்னு பாருங்க…” என்று கடிந்து கொண்டார் செல்வராஜ்.
“மாப்பிள்ளைக்கு அவளோட காதல் விஷயம் தெரியலைனா பரவாயில்லை செல்வா. உண்மையை மறைச்சிருக்கலாம். ஆனா அந்தப் பயலுக்காக அவள் சாவுற அளவுக்குப் போயிட்டு வந்துட்டாள்னு மாப்பிள்ளைக்குத் தெரியும். அப்படி இருக்கும்போது, இப்போ உண்மையை மறைச்சு எப்படிக் கல்யாணம் பண்ண முடியும்? அதான் உண்மையைச் சொல்லியே கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு நினைச்சேன். அதுவும் பொண்ணு காதலிச்சவன்தான் தப்பானவன், நம்ம பொண்ணு மேல தப்பு இல்லைன்னு மாப்பிள்ளைக்குத் தெரிஞ்சால் தானே, கல்யாணத்துக்குப் பின்னாடி நம்ம பொண்ணைக் குறை சொல்ல மாட்டார்னு தோனுச்சு. ஆனா இப்படிக் கல்யாணமே வேணாம்னு சொல்வார்னு நினைக்கலை செல்வா…” எனப் புலம்பித் தீர்த்த ஜெயராமனை செல்வராஜ்தான் சமாதானம் செய்து அழைத்துச் சென்றார்.
©nandhavanamnovels.com