9 – காதலின் ரீங்காரம்

👁️ 1471 Views

அத்தியாயம் – 9

“உன் பொண்டாட்டி சொன்ன காரணத்தை இன்னும் எங்களால் நம்ப முடியலை மயூரா. நீயும் சேர்ந்து எங்ககிட்ட எதையோ மறைக்கிறன்னு மட்டும் தெரியுது. உனக்கு நாங்க அவ்வளவு ஆகாதவங்களா போயிட்டோமா தெரியலை. உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் நாங்க நினைப்போம்னு கூட உனக்கு மறந்து போச்சா? என்னவோ போ! நீ நல்லபடியா வாழ்ந்தா போதும்! பார்த்து இருந்துக்க…” ஊருக்குக் கிளம்பும் முன் அவனது பெரியம்மா அனிதா வருத்தத்துடன் உதிர்த்த வார்த்தைகள் இவை.

“பெத்தவங்க இல்லாம பையன் தனியா இருக்கான். தன் அடங்காத மகளுக்குக் கட்டி வச்சா அவன் அவளைச் சமாளிச்சு எப்படியாவது வாழ்ந்துப்பான்னு உன் மாமனாரும், மாமியாரும் நினைச்சு இந்தக் கல்யாணத்தை முடிச்சு வச்சாங்களா தெரியலை. பொண்ணு ஒரு ஆட்டம் போட்டா, அவளைப் பெத்தவங்க பெயருக்கு மன்னிப்பு கேட்டு விஷயத்தைச் சமாளிச்ச மாதிரி இருக்கு. எதுவும் மனசுக்கு சரியா படலைடா மயூரா. புத்தியோட பொழைச்சுக்கப் பாரு…” என்று சொன்னது அவனின் அத்தை பிரேமா.

அவர்களிடம் மயூரனால் சமாளிப்பாகக் கூட எதுவும் சொல்ல முடியவில்லை.

அதற்கு முன் அவன் சொன்ன சமாதானங்கள் எதுவும் அவர்களிடம் எடுபடவில்லை என்ற காரணமும் அதில் அடங்கும்.

மதுமதி என்னதான் வேறு ஒரு காரணத்தைச் சொல்லி சமாளித்தாலும், அதை யாராலும் நம்ப முடியவில்லை. நம்பாமல் கேள்வி எழுப்பியவர்களுக்கும் மயூரன் பக்கமிருந்தோ, மதுமதியின் பக்கமிருந்தோ சரியான பதிலும் கிடைக்கவில்லை.

அதனாலேயே அவர்கள் அப்படிப் பேசிவிட்டு, அவனுக்குச் சில அறிவுரைகளையும் சொல்லிவிட்டு குடும்பத்துடன் கிளம்பிச் சென்றிருந்தனர்.

அவர்கள் கிளம்பி அரை மணி நேரம் ஆகியிருந்தது. வாசலில் நின்று வழியனுப்பிவிட்டு வந்த மயூரன், மீண்டும் வீட்டிற்குள் செல்லப் பிடிக்காமல் தோட்டப் பகுதியில் இருந்த கல் இருக்கையில் அமர்ந்துவிட்டான்.

இரண்டு நாள்களாக மயூரன் கல்யாண மும்முரத்தில் சுற்றிக் கொண்டிருந்ததால், பெப்பிக்கு அவனுடன் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது அவன் தனிமையில் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும், தன் வாலை ஆட்டிக்கொண்டு அவனைச் சுற்றிச் சுற்றி வந்து குழைந்தது.

மயூரன் பெப்பியின் தலையைத் தடவிக்கொடுத்துக் கொண்டே, மதுமதியைப் பற்றிய சிந்தனையில் இருந்தான்.

அவளின் வீட்டில் வைத்தே தன்னை அவமானப்படுத்தியவள், இங்கேயும் அதேதான் செய்வாள் என நினைத்தான். அதிலும் அவளைத் தான் வம்படியாக வேறு அழைத்து வந்திருக்க, அந்தக் கோபத்தை அத்தனை பேரின் முன்னாலும் காட்டி, தன்னை மேலும் தலை குனிய வைக்கப் போகிறாள் என அவன் நினைக்க, அவளோ அப்படி இல்லாமல் பிறந்த வீட்டை விட்டு வர முடியாத பிரிவாற்றாமை என்று சாதாரண மணப்பெண் போலக் காரணம் சொன்னதை இன்னும் அவனால் நம்ப முடியவில்லை.

அவனைக் காப்பாற்றுவது போல் ஏன் அந்தக் காரணம் சொன்னாள் என இப்போது வரை அவனுக்குப் புரியவில்லை. ஆனால், அதை அவளிடம் கேட்கவும் அவனுக்குச் சந்தர்ப்பம் வரவில்லை. உறவினர்கள் சூழ்ந்திருந்த நிலையில் அவளிடம் பேச முடியவில்லை.

இப்போது அவளும் அவனும் மட்டுமே அந்த வீட்டில். ஆனாலும் அவளிடம் சென்று பேசத் தோன்றாமல், அன்றைய நிகழ்வுகளை அசைபோட்டபடி அமர்ந்திருந்தான்.

இன்றைக்கு அவன் பட்ட அவமானம் சொற்களால் விவரிக்க முடியாததே! ஆனாலும், அதற்கு மனைவியை மட்டும் காரணமாக்கி குற்றவாளி கூண்டில் ஏற்ற அவனுக்கு விருப்பமில்லை. அவளை இப்படி மாற்றியது, அவளின் தந்தையிலிருந்து அவன் வரையுமே காரணமாக இருக்கும் போது அவளை மட்டும் குறை சொல்லி என்ன ஆகப்போகிறது?

அவளை விட்டுவிடக் கூடாது என்று அவளின் பெற்றவர்கள் பேச்சுக்கு இசைந்து போனது இவனின் தவறும் தான் அல்லவா!

அவளிடம் பேசி எதையும் தெளிவுபடுத்தாமலேயே அவளை இக்கட்டுக்குள் தள்ளினால், அவளும் தான் என்ன செய்வாள்? என்று அவளின் இடத்திலிருந்து யோசித்தவன், பெருமூச்சு விட்டுக் கொண்டான்.

பெப்பியின் தலையை மிருதுவாக அன்புடன் வருடிவிட்டு, கல் இருக்கையை விட்டு எழுந்தான் மயூரன்.

“குட் நைட் ரா பேப்…” என்று அவன் சொன்னதும், பதிலுக்குக் குரைத்து தன் இரவு வணக்கத்தைச் சொன்னது பெப்பி.

வீட்டிற்குள் சென்று வீட்டின் கதவை மூடிவிட்டு திரும்பிய மயூரன், மாடிப்படியில் தன் சூட்கேஸுடன் கீழே இறங்கி வந்து கொண்டிருந்த மனைவியைக் கண்டதும், அவளை நோக்கி விரைந்தான்.

⚠️ Do not steal story ideas, plot, or scenes. PDF or audio use without permission is prohibited and will lead to legal action.

“எங்கே போற மது?” என்று கேட்டபடி மூச்சு வாங்க அவளின் முன் வந்து நின்றவன், அவளின் கையில் இருந்த சூட்கேஸை பறித்தான்.

“ம்ப்ச், இப்ப எதுக்கு அதைப் புடுங்குற? இங்கே கொடு…” என எரிச்சலுடன் சிடுசிடுத்தாள்.

“இப்ப எங்கே கிளம்பிட்ட நீ? நான்தான் எதுவா இருந்தாலும் இங்கே இருந்தே செய்னு சொன்னேன் தானே?” என்று அழுத்தமாகக் கேட்டபடி அவளின் முழங்கையைப் பற்றியவன், அவளை இழுத்துக்கொண்டு மாடியேறினான்.

“ஏய்… விடு! விடுன்னு சொல்றேன்ல… என்ன எதுக்கு எடுத்தாலும் தர தரன்னு இழுத்துட்டு போற. என்னை என்னன்னு நினைச்ச?” என்று அவள் கத்தியது எல்லாம் அவனின் காதிலேயே ஏறவில்லை.

தன்னை விட்டு சென்றுவிடவே குறியாக இருப்பவளை அப்படியே விட்டுவிட அவனால் முடியவில்லை. அவளுக்குச் சின்ன வாய்ப்புக் கொடுத்தால் கூட எங்கே அவள் தனக்கில்லை என்று ஆகிவிடுவாளோ என்ற அவனின் பயம் அவளை இழுத்துப் பிடிக்கவே அவனைத் தூண்டியது.

“நான் சொல்றதை கேளு… இங்கேயே இருக்கணும்னா உன் கூட உன் ரூமில் மட்டும் தான் இருக்கணுமா என்ன? எனக்கு அது பிடிக்கலை… நான் கீழே இருக்கும் ரூமில் இருந்துக்கிறேன். விடு…” என்று துள்ளி அவனிடமிருந்து விடுபட முயன்றாள்.

அவளின் முயற்சிக்கு சிறிதும் பலனில்லாமல் முறியடித்தவன், அவளுடன் தன் அறைக்குள் சென்ற பிறகே தானாக அவள் கையை விட்டான்.

“இங்கேயே இருக்கணும்னு சொன்னால் அது நம்ம அறையில் என்பதையும் சேர்த்துதான். தனியா இருக்கிறதுக்கு இல்லை…”

“நீ ரொம்ப அராஜகம் செய்ற…”

“இல்லைனா நீ எனக்கே ஆட்டம் காட்டிடுறியே…” என்றவன், அவளின் சூட்கேஸை படுக்கையில் வைத்து, அதைத் திறந்து அதிலிருந்த அவளின் உடைகளை எல்லாம் எடுத்து, அலமாரியில் அடுக்க ஆரம்பித்தான்.

“ஏய், அது என்னோட ட்ரெஸ். அதை நீ தொடுவியா? இங்கே கொடு…” அவனின் கையில் இருந்த தன் உடைகளை வெடுக்கென்று பறித்தாள்.

“உன்னைத் தொடவே எனக்கு உரிமை இருக்காம். அப்படி இருக்கும் போது, உன் ட்ரெஸை தொட்டதுக்கே சிலிர்த்துக்கிற?” என்று பழையபடி அவளைச் சீண்டினான்.

“இன்னைக்கு எல்லார் முன்னாடியும் அவமானப்பட்டு, மூஞ்சி சுருங்கிப் போய் உட்கார்ந்திருந்தயே… அப்படியும் புத்தி வரலையா உனக்கு?” என்று இளக்காரமாகக் கேட்டாள்.

அந்த அவமானம் இன்னும் அவனுக்குள் இருந்தது தான். ஆனால்… அதை அவளிடம் மீண்டும் காட்டிவிட்டால், இன்னும் தானே கொண்டாட்டமாக ஆடுவாள் என்று நினைத்தவன், தன்னை இயல்பாகவே காட்டிக் கொண்டான்.

“எனக்குப் புத்தி வரவைக்கத்தான் பொண்டாட்டி இப்ப நீ வந்துட்டியே…” என்று சாதாரணமாகச் சொன்னவன், “ஆமாம், நானே கேட்கணும்னு நினைச்சேன். என்னை அப்படி அவமானப்படுத்தியவ… திரும்ப ஏதாவது சொல்லி என் முகத்தில் கரியைப் பூசப் போறன்னு நினைச்சேன். ஆனால், நீ அதைச் செய்ய மறந்துட்ட போல?” என்று இலகுவாகக் கேட்டான்.

“நான் பூசியதை விட, சொந்தக்காரங்க உன் முகத்தில் பூசிய கரியே இன்னைக்குப் போதும்னு தோனுச்சு. அதான் போனால் போகுதுன்னு விட்டேன்…” என்று அலட்சியமாகத் தோளை குலுக்கினாள்.

அவள் சொன்ன காரணத்தைக் கேட்டதும் அவனின் முகம் கன்றிப் போனது.

‘உன்னை ஆம்பளையா? என்றே கேட்டுவிட்டார்கள். இதைவிட உனக்கு வேறு தண்டனை பெரிதில்லை…’ என்று சொல்லாமல் சொல்கிறாள். அதிலும் தன் மனம் விரும்பியவள் அப்படிச் சொல்லும் போது உயிரையே உலுக்குவது போல வலித்தது.

©nandhavanamnovels.com
⚠️ Content protected – Do not copy. ©nandhavanamnovels.com