• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

Joined
Sep 25, 2025
Messages
114
Reaction score
138
Points
43
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 25

பூங்குழலி எல்லோரையும் தனித்தனியே கிழக்குப் பார்த்து நிற்கவைத்துத் திருஷ்டி சுத்திப்போட, இறுதியாக அவருக்கு ஆனந்தி திருஷ்டி சுத்திப்போட்டார்.

முதலில் ஆனந்தி, பூங்குழலி, மித்ரா மூவரும் காரில் கிளம்பினர். அவர்கள் போன பிற்பாடு, "அப்பா... அம்மாதான் போயிட்டாங்களே, இனி நீங்க என்ன செய்யிறதா பிளான் பண்ணியிருக்கிங்க என்று எங்களுக்குச் சொல்லுங்க?" என்று சகாயன் தீவிரமாகக் கேட்டான்.

"அதையெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்டா... நேரமாகுது, நீங்க முதல்ல வெளிக்கிடுங்க" என்று நடராஜன் மழுப்பலாகச் சொல்ல, அந்த இடத்திலேயே சோபாவில் சட்டமாக அமர்ந்துகொண்ட சகாயன், "என்ன பண்ணப்போறீங்கன்னு தெளிவா சொல்லுங்க, அப்புறம்தான் நாங்க இங்கிருந்து கிளம்புவோம்" என்று பிடிவாதமாகக் கூறினான்.

"பேங்குக்கு போனால் லோன் சாங்க்ஷன் ஆகி வர ரொம்ப லேட்டாகும். அதனால, பஞ்சுக்குத் தெரிந்த ஒரு பைனான்சியரிடம் அவசரத்துக்குப் பணம் வாங்குவோம்னு முடிவு எடுத்திருக்கோம்" என்று சொன்னார் நடராஜன்.

"பைனான்ஸ்னா வட்டி எக்கச்சக்கமா வருமேப்பா..." என்று சகாயன் கவலைப்பட,

"இல்லை... அவர் ரொம்ப நியாயமான வட்டிக்குத்தான் எல்லாருக்கும் காசு கொடுப்பாராம், பஞ்சு கேரண்டி தாறான்" என்று நெடுமாறன் சமாதானம் சொன்னார்.

"சரி, யார் அந்த பைனான்சியர்? பேர் சொல்லுங்க" என்று சகாயன் கேட்க,

"நிதர்சன் காசிப்பிள்ளை" என்று நெடுமாறன் சொன்னார்.

அந்தப் பேரைக் கேட்டதும் சகாயனுக்கு வேறு எங்கேயோ கேள்விப்பட்டு இருப்பது போலத் தோன்ற, லேசான யோசனையுடன் தன் தம்பி மித்ரனைப் பார்த்தான்.

அண்ணனின் பார்வையைப் புரிந்து கொண்ட மித்ரன், "ஆமாண்ணே... என் ரேடியோ ஆபீஸுக்கு ஒருக்கா அவர் பேட்டிக்கு வந்திருந்தார்! அன்னைக்குன்னு பார்த்து நீதானே என் வண்டி பழுதுன்னு சொல்லி என்னைக் கூட்டிட்டு போக வந்தாய்? அப்போதான் நான் அவரை உனக்கு அறிமுகப்படுத்தி விட்டேன்" என்று பழைய நிகழ்வை ஞாபகப்படுத்தினான்.

"அவர் ஏதோ ஸ்கூல் நடத்திற மாதிரித் தானே நீ அன்னைக்குச் சொன்னாய்?" என்று சகாயன் கேட்க,

"அவர் ஸ்கூலும் நடத்துறார்... கூடவே பைனான்ஸ் கம்பெனியும் வச்சு ஏழைகளுக்கு நியாயமான வட்டியில காசும் கொடுக்கிறார்" என்று விளக்கினான் மித்ரன்.

'பைனான்ஸ் கம்பெனி' என்று சொன்னாலே, கந்துவட்டி கேட்டு மிரட்டும் ரவுடிகள்தான் பொதுவாக மனக்கண்ணில் தோன்றுவார்கள். அதனால், "அவர் வில்லங்கம் இல்லாத ஆளா?" என்று அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த நறுமுகை அஞ்சியபடியே கேட்டாள்.

"அவர் நல்லவங்களுக்குப் பாவம் பார்ப்பாராம் அண்ணி... ஆனா, தன்னை யாராவது ஏய்க்கப் பார்த்தாலோ அல்லது ஏமாத்தினாலோ உண்டு இல்லைன்னு பண்ணிடுவார்னு கேள்விப்பட்டிருக்கேன்" என்று மித்ரன் சொல்லிக் கொண்டே போனவன், "அப்புறம் முக்கியமா... அவரோட எக்ஸ் வைஃப் கூட உங்க காலேஜ்தான் போல! ரெண்டு பேரும் இப்போ டைவர்ஸ் ஆகி பிரிஞ்சிருக்காங்க" என்றான்.

"அவங்க பேர் என்ன?" என்று சட்டென்று கேட்டாள் நறுமுகை.

"அது ஏதோ ஒரு நல்ல தமிழ்ப் பெயர்... இருங்க" என்றவன், தன் மொபைலை எடுத்து நிதர்சனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை நோட்டம் விட்டான். அவனது சுயவிவரப் பக்கத்தில் இன்னுமே அவனது மனைவி என்ற இடத்தில் நீக்கப்படாமல் இருந்த அந்தப் பெயரைக் கண்டு, "மகிழ்வினி!" என்றான் மித்ரன்.

"மகிழ்வினி அக்காவா?!" என்று வியந்து போனாள் நறுமுகை.

மகிழ்வினிக்கு என்ன நடந்தது என்பது நறுமுகைக்கு நன்றாகவே தெரியுமே! ஒரு நாள் காலேஜுக்குள் புகுந்து பெரிய கலாட்டா செய்து, அவளுக்குக் கட்டாயத் தாலி கட்டிய அந்தச் சண்டைக் காரனை அவளால் அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது.

அவன் பார்ப்பதற்கு அமைதியான சாந்த சொரூபமாக இருந்தாலும், அவனது கண்கள் எப்போதும் நெருப்பைக் கக்கிக் கொண்டிருப்பது போலத்தான் இருக்கும். அவனது அந்த உக்கிரமான தோற்றத்தை நினைத்த மாத்திரத்திலேயே நறுமுகையின் உடல் பயத்தில் லேசாக உதறியது.

"அவர்கிட்ட மட்டும் காசு வாங்க வேண்டாம்ப்பா... அங்கே போகவே வேண்டாம்!" என்றாள் பட்டென்று பதற்றத்துடன்.

"ஏன்மா... என்னாச்சு?" என்று பெரியவர்கள் பதறிக் கேட்க,

"அவர் எங்க காலேஜுக்கே நேர்ல வந்து, அந்த மகிழ்வினி அக்காவை மிரட்டி கட்டாயத்தாலி கட்டினார். அது ஏதோ அவங்க குடும்பத்துக்குள் இருந்த முன்பகைன்னு அப்போ காலேஜ்ல பேசினாங்க... அதுக்கப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து வாழாமலேயே டைவர்ஸ் பண்ணிட்டுப் பிரிஞ்சுட்டாங்க" என்று படபடப்புடன் விவரித்தாள் நறுமுகை.

"பெண்ணுக்கு விருப்பமில்லாமல் தாலி கட்டினானா?" என்று நெடுமாறனும் கேட்க,

"ம்..." என்று ஆமோதித்தாள் நறுமுகை.

"இதெல்லாம் இந்தப் பஞ்சு நம்மகிட்ட சொல்லவே இல்லையே..." என்று நெடுமாறன் முணுமுணுத்தபடியே, உடனே ஆடிட்டர் பஞ்சாட்சரத்திற்குப் போனைப் போட்டார்.

அந்தப் போனுக்காகவே காத்திருந்ததைப் போல, "என்னடா... எல்லாரும் கிளம்பிட்டாங்களா?" என்று போனை எடுத்தவுடனேயே கேட்டார் பஞ்சாட்சரம்.

"அதெல்லாம் கிளம்பிட்டாங்க பஞ்சு. ஆனா, நீ அந்த நிதர்சன் தம்பியைப் பத்திச் சொல்லும்போது, அவர் தன் பொண்டாட்டிக்குக் காலேஜுக்குள்ள புகுந்து கட்டாயத் தாலி கட்டின கதையைச் சொல்லவே இல்லையே?" என்று நெடுமாறன் லேசான அதிருப்தியுடன் கேட்டார்.

"யார் சொன்னா உன்கிட்ட?" என்று கேட்டவர், அவரே தொடர்ந்து, "விஷயம் உனக்கு முழுசாத் தெரியாதுடா... அந்தத் தம்பியும் அந்தப் பொண்ணும் சின்ன வயசுல இருந்தே ஒரே ஏரியா தான். பள்ளிக்கூடத்துல இருந்தே ரெண்டு பேரும் நல்ல பிரண்ட்ஸ் போல பழகினவங்க, சில வருசத்துக்கு பிறகு அது காதலாக மாறியிருக்கு. ஆனா, அப்புறம் பார்த்தா... அவளோட அண்ணனுக்கு இந்தத் தம்பியைப் பிடிக்கலைங்கிற ஒரே காரணத்துக்காக, அந்தப் பொண்ணு காதலை வேண்டாம்னு சொல்லிட்டுப் போயிட்டா!" என்றவர், சற்று மூச்சு விட்டுக்கொண்டு, "அதுதான் அந்தத் தம்பிக்குக் கோபம் போல... நேரா காலேஜுக்கே போய் அவசரத்துல கட்டாயமாகத் தாலியைக் கட்டிட்டார். தாலி கட்டினா எல்லாப் பிரச்சினையும் முடிஞ்சு, அவ தன்னோடு வாழ வந்துடுவான்னு அந்தத் தம்பி நினைச்சார். ஆனா, அந்தப் பொண்ணு வீண் பிடிவாதம் பிடிச்சு, கோர்ட் வரைக்கும் போய் இப்போ டைவர்ஸ் வாங்கிட்டுப் பிரிஞ்சு நிக்குது" என்று அந்தப் பழைய கதையின் பின்னணியை விளக்கினார் பஞ்சாட்சரம்.

"ஓ..." என்ற நெடுமாறனுக்கு, இதில் யாரை குற்றம் சொல்வது, யார் மீது பழி போடுவது என்று புரியவில்லை. அவர் தன் போனை ஸ்பீக்கரில் போட்டுப் பேசிக் கொண்டிருந்ததால், பஞ்சாட்சரம் சொன்ன விஷயங்கள் அத்தனையும் அங்கே சுற்றியிருந்த அனைவரின் காதுகளிலும் விழுந்திருந்தது.

'இப்ப என்ன செய்யிறது?' என்று தன் கண்பார்வையாலேயே சகாயனிடம் கேள்வியாகக் கேட்டார்.

தன் காதலுக்காகப் போராடித் தோற்று நிற்கும் ஒருவனிடம் உதவி கேட்பதில் பிழையில்லை என சகாயன் யோசித்து "மாமா... நீங்க எதுவும் யோசிக்காதீங்க, அந்த நிதர்சன் கிட்டயே காசு வாங்கப் போங்க" என்று முடிவாகச் சொல்லிவிட்டான்.
 
Previous thread
Next thread

Latest threads

Top Bottom