கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

10. என்னாளும் உன் பொன்வானம் நான்.

  • Thread starter Thread starter balatharsha
  • Start date Start date
  • Replies Replies 0
  • Views Views 618
Writer✍️
Joined
Oct 17, 2025
Messages
13
Reaction score
1
Points
3
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 10


ஆற்றோடு அடிபட்டுச் சென்று இரண்டு நாட்கள் நன்றாக இருந்த துளசியின் நடவடிக்கைகளில் நிறையவே மாற்றம் தெரிய ஆரம்பித்தது.

கல்லூரி வருபவள் முன்னையது போல் ஆர்ப்பாட்டமில்லாது அமைதியாகவே இருந்துகொள்வாள். நண்பர்கள் நடுவே இருந்தாலும் அவர்கள் கேலி, கிண்டல் பேச்சுகளில் கலந்துகொள்வதில்லை.

சில நேரங்களில் தனக்குத்தானே பேசிச் சிரித்துக்கொள்வாள். பல பாடவேளைகளில் வகுப்பிலும் இருப்பதில்லை.

காரணம் கேட்டால் எப்போதும் போல் மழுப்பலான பதில். இப்படியே இரண்டு மாத காலம் கடந்திருந்தது. இவளது மாற்றங்களைக் கவனித்திருந்தாலும் என்ன ஏதென்று நோண்டவில்லை பாமா.

ஆனால் இன்று என்றுமில்லாது அனைவருடமிருந்தும் ஒதுங்கியிருந்தவள் தலைவலியெனக் கூறிவிட்டு ஓரமாக இருந்த பெஞ்சில் தலைசாய்த்து தூங்கிவிட்டாள்.

இடையிடை அவள் விசும்புவது உடலின் குலுக்கமதில் தெரியாமல் இல்லை. அவளையே கவனித்திருந்த பாமாவால் பாடத்தின் இடையில் எதையும் கேட்க முடியவில்லை.

பாடவேளை எப்போது நிறைவடையும் எனக் காத்திருந்தவள், அவர் வெளியேறியதும் அவளிடம் வந்து, "துளசி!" என அழைத்தாள்.

அவளோ பாமாவை கண்டுகொள்ளாது வேகமாக எழுந்து, "வாந்தி வரமாதிரி இருக்கு, நான் வாஷ் ரூம் போயிட்டு வரேன்." என முகத்தைக் காட்டாது ஓடியவளை வினோதமாகப் பார்த்தவாறே அமர்ந்து விட்டாள்.

பதினைந்து நிமிடங்கள் கடந்து வந்தவள் பாமா அருகில் அமர,
அவளையே கூர்ந்து கவனித்தவள்,

"உன்கூட கொஞ்சம் பேசணும்." என்றாள் அழுத்தமாக.

"தலை வெடிச்சிடும் போல வலிக்குதுடி! அப்புறமா பேசிக்கலாம்." என நழுவியவள் கையினைப் பற்றியவள்,

"அது வெடிச்சாலும் பரவாயில்லை. உன்கூட நான் பேசியே ஆகணும் முதல்ல வா!" என இழுத்துக்கொண்டு லைப்ரரி சென்றாள்.

பாடவேளை என்பதால் ஒரு சில மாணவர்கள் மாத்திரமே அமர்ந்திருந்தனர். இவளை இழுத்து வந்து ஒரு இருக்கையில் அமர்ந்தவள்,

"சொல்லு துளசி, என்ன ஆச்சு? எதுக்கு கொஞ்ச நாளாவே ஒரு மாதிரியா இருக்க?" என்க,

"எனக்கென்ன ஆச்சு? நான் எப்பவும் போல நல்லாத்தானே இருக்கேன். இன்னைக்கு கொஞ்சம் தலைவலி!" என்றவளை முறைத்தவள்,

"என்ன புத்திசாலித்தனமா பேசுறதா நினைப்பா? ஒழுங்கு மரியாதையா உண்மையை சொல்லிடு!" எனப் பாமா மிரட்டினாள்.

"இங்க பாருடி! இந்த மாதிரி மிரட்டினா இல்லாதது இருக்குன்னு ஆகாது. எனக்கு எதுவுமில்லை." என மறுத்துப் பேசியவள் கையினை தட்டிவிட்டவள், அவள் மார்பினை மூடியிருந்த ஷால்லினை கையோடு இழுத்து எடுத்து, அவள் நெஞ்சுப்பகுதியை சுட்டிக்காட்டியவள்,

"இதுக்கு என்னடி அர்த்தம்?" என்றாள்.

இதைத் துளசி சற்றும் எதிர்பார்க்கவில்லை.

எப்படி இவளுக்குத் தெரிந்தது என்ற கேள்வியைவிட,அவள் சட்டெனக் கேட்டதில் என்ன சொல்வதெனத் தெரியாது தலை கவிழ்ந்தவள் தாடையை நிமிர்த்தியவள்,

"சொல்லுடி! இதுக்கு என்ன அர்த்தம்? எதுக்காக இந்த இடத்தில சுட்டுக்கிட்ட?" எனக் கோபம் குறையாமல் வினவ.

"அது..." எனத் தடுமாறி மீண்டும் தலைகவிழ்ந்தவளை என்ன செய்தால் தகுமென இருந்தது பாமாவிற்கு.

கையிலிருந்த ஷால்லினை அவள்மேல போத்தியவள், "இங்க பாரு துளசி! நான் வேற யாரோ கிடையாது, என்கிட்ட மறைக்கிறத்துக்கு!
என்னாச்சு? எதுக்கு இந்தமாதிரி இருக்கன்னு சொல்லு?" என இம்முறை அவள் தோள்களை ஆதரவாகப் பற்றி வினவினாள்.

அவளின் ஆதரவான பேச்சில் நிமிர்ந்தவள் விழிகளோ கண்ணீரால் குளம் கட்டியிருந்தது. அதில் பதற்றம் கொண்டவள்,

"துளசி, என்னடி ஆச்சு? சொல்லித்தொலை நாயே! எனக்குப் பயமா இருக்கு!" எனப் பதற்றமாக,

"வீட்டில எனக்கு மாப்பிள்ளை பாத்திருக்காங்கடி! இன்னைக்கு சாயந்தரம் என்னைப் பொண்ணு பாக்க வராங்க." எனக் குரல் தளுதளுக்க கூறியவள் பதிலில் அவ்வளவு தானா என்றிருந்தது பாமாவிற்கு.

"மாப்பிள்ளை தானேடி பாத்திருக்காங்க. நல்ல விஷயம் தானே! அதுக்கு நீ ஏன் அழற? படிப்பு கெட்டுப்போயிடும்ன்னு அழறியா? என்னத்த படிச்சு வேலை வாங்கினாலும் அடுப்புக்கு நெருப்பாகப் போறது நம்ம தான்.
பேசாமல் படிச்சவரை போதும்னு வீட்டில காட்டுறவங்களுக்கு கழுத்த நீட்டிடுடி!" எனச் சமாதானம் சொல்ல,

மாட்டேன் என்பதாய் தலையசைத்தவள், "எனக்குக் கல்யாணத்தில விருப்பமில்லடி!"

"ஏன் விருப்பமில்ல? நீ விருப்பமில்லன்னா விட்டிடுவாங்களாே? இங்க பாரு! எப்பவோ ஒரு நாள் நம்ம எல்லாரும் இதைச் சந்திக்கத்தான் போறோம்.

என்ன? உனக்குக் கொஞ்சம் ஏர்லியாவே செய்து வைக்கப் போறாங்க. கண்டதை மனசில போட்டுக் குழப்பிக்காம வீட்டுக்குப் போ!" என எடுத்துக் கூறினாள்.

"எனக்கு இந்த வாழ்க்கையே வேண்டாம்டி! நான் அவங்க பாத்திருக்கிற மாப்பிள்ளையைக் கட்டிக்க மாட்டேன்." எனப் பிடிவாதமாகச் சொன்னவள் கண்களோ எதிராகக் கலங்கியிருந்தது.

அவள் கூற்றின் பொருள் புரியாது இமைகளை முடிச்சிட அவளைச் சந்தேகமாக நோக்கியவள்,

"அவங்க பாத்திருக்கிற மாப்பிள்ளைய கட்டிக்க மாட்டேன்னா என்ன அர்த்தம்? மாப்பிள்ளை தப்பானவன் என்கிறியா?" என்க,

"இல்லைடி! அவன் எப்பிடி இருப்பான்னே தெரியாது." என்றாள்.

"அப்போ என்ன மண்ணுக்கு அவங்க காட்டுற மாப்பிள்ளைய கட்டிக்க மாட்டேன்குற? ஒழுங்கு மரியாதையா உண்மைய சொல்லு." என உண்மையைச் சொல்லாதவள் மேல் வந்த கோபத்தில் எரிச்சலுற்று பாமா சற்று குரலை உயர்த்தினாள்.

அவள் கோபமதில் தலைகவிழ்ந்தவள்,
"நான் ஒருத்தன விரும்புறேன்." என உள்ளே சென்ற குரலில் துளசி கூற,

"என்னது...?" என அதிர்ந்தவளை தயக்கத்தோட நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் பொய் இல்லை என்பதை உணர்ந்து,

"அதனால தான் இந்த இரண்டு மாசமா ஒரு மாதிரியா, யாரு கூடவும் ஒட்டாம இருந்தியா?

நெஞ்சில போட்ட சூட்டுக்கு காரணமும் அதுதானா? ஆனா உங்க வீட்டுக்காரங்களுக்கு இது தெரிஞ்சா என்னாகும்னு யாேசிச்சியா? உன் அம்மா கத்தியே ஊருக்குத் தண்டோரா போட்டிடுவாங்களே!" எனப் பயந்துபோய் பாமா வினவ,

"போட்டாங்கடி! ஆனா நானும் அமைதியா இருக்கேல்ல." என்றவள்,

“வாழப்போறவ நான் தானே! அவங்க இல்லையே! இது என்னோட வாழ்க்கை. எனக்கான வாழ்க்கை துணைய தேர்ந்தெடுக்கிற உரிமை எனக்கில்லையா!" என நீதி கேட்டவளையே குழப்பமாகப் பார்த்திருந்தவள்,

"துளசி..." என உள்ளேபோன குரலில் அழைத்து,

"நீ சொல்லுறது எல்லாமே நிஜமா?" எனச் சந்தேகமாகக் கேட்டாள்.

ஆமெனத் தலையசைத்தவளிடம்,
"உன்கூடவே இருக்கேன். எனக்கு எதுவுமே தெரியேல்ல. இத்தனைக்கும் நான் தான் உன்னோட பெஸ்ட் ப்ரெண்ட்ன்னு நினைச்சிட்டிருந்திருக்கேன்." எனக் குரலில் ஏமாற்றத்தை வெளிக்காட்டி கூறியவள்,

"சரிடி! அதான் வீட்டில உன் லவ் மேட்டர் தெரிஞ்சிடிச்சே, அப்புறம் எதுக்கு பொண்ணு பாக்க வரவைச்சாங்க?" எனப் புரியாது கேட்டவள், துளசி பதில் கூறாது தலை கவிழ்ந்திருப்பதில் ஏதாே தவறென உணர்த்த,

"ஆமா எப்போவுமே என்கூடவே ஒட்டிட்டு திரிவியே, நீ எப்பிடி இந்த லவ்ல விழுந்த? பையன் எந்த ஊரு? முதல் முதல்லா எங்க சந்திச்ச? அவன் பேரு என்ன?" என அடுக்கடுக்காய் கேட்டுக்கொண்டே போனாள்.

"அவரு பேரு முரளிடி! " என்றவளை அதிர்ந்து விழிவிரித்து பார்த்தவள்,
பின் இருக்காது எனத் தனக்குத்தானே தேற்றியவளாய்,

"முரளின்னு மொட்டையா சொன்னா எனக்கெப்பிடி தெரியும்? அவன் என்ன அமெரிக்க ஜனாதிபதியா?"

"அ... அவரும் நம்ம காலேஜ்ல தான் மெடிஸின் படிக்கிறாரு."

"யாரு உன்னோட உயிர காப்பாத்தினானே அவனா?" என இம்முறை வெளிப்படையாகவே கேட்டவள்,

"நிஜத்த சொல்லு துளசி! அவனே தானா? இல்ல வேற யாராே முரளியா? ஏன் கேக்கிறேன்னா, அவன் யாரு கூடவும் பேசமாட்டான்டி! அவன் ப்ரென்ட்ஸ் கூடவே லிமிட்ட தாண்டிப் பேசினதில்லை! வந்தோமா, படிச்சோமா! வீட்டுக்குப் போனோமான்னு தான் இருப்பான்.
அப்பிடியானவன் எப்பிடி உன்னை விரும்புவான்? முதல்ல நீ அவனை விரும்புற மேட்டர் அவனுக்குத் தெரியுமா? தெரியாதா? அத சொல்லு."
எனக் கேட்டாள்.

"தெரியும்! அவரும் என்மேல உயிரையே வைச்சிருக்காரு. என்னை விட்டு ஒரு நிமிஷம் கூட இருக்கமாட்டாரு." எனக் கலங்கியவாறு அவள் கூற,

"எப்பிடி உங்களுக்குள்ள காதல் வந்திச்சு?"

"அது... அன்னைக்கு என்னைக் காப்பாத்தினப்போ என்னை அந்தக் கோலத்தில பாத்திட்டாருன்னு நீங்கச் சொன்னதில இருந்து எனக்கு உள்ளுக்குள்ள ஒரு மாதிரியாவே இருந்திச்சு. ஒரு ஆண் ஒரு பொண்ண அந்தக் கோலத்தில பாக்குறான்னா அவளைத் தொட்டுத் தாலி கட்டினவனாத்தான் இருக்கணும். இதை அம்மா அடிக்கடி சொல்லுவாங்க.

என்னதான் எனக்குச் சுயநினைவே இல்லன்னாலும் என்னை அந்தக் கோலத்தில பாத்ததினால என்னால நிம்மதியா இருக்க முடியல. அதுவுமில்லாம என்னோட உயிரைக் காப்பாத்தினவருக்கு ஒரு நன்றி கூடச் சொல்ல முடியேல்லன்கிற குற்றவுணர்வு என்னைக் குடைஞ்சிட்டே இருந்திச்சு.

எங்க இதை உன்கிட்ட சாென்னா, நீ அதுக்கு ஒத்துக்க மாட்டேன்னு நினைச்சி அவரோட வகுப்ப தேடிப் போனேன்.

முதல்ல என்னைக் கண்டதும் அடையாளம் தெரியாம குழம்பினவரு, அப்புறம் நீ... அன்னைக்கு எங்க ஊரு ஆத்தில விழுந்தவ தானே! நல்லா இருக்கியா? எங்க உன்னோட வாயாடி ப்ரென்ட் என்று கேட்டாரு. அவரு பேச்சிலேயோ, நடத்தையிலேயோ என்னைத் தப்பான கோலத்தில பாத்திட்டேன் என்கிற நினைப்பே இல்லாம இயல்பா கேட்டார்.

முதல்ல எப்பிடி பேசுறதுன்னு தயங்கின நானே, அப்புறம் அந்த நினைப்பை மறந்து நல்லா பேச ஆரம்பிச்சிட்டேன்.

அப்புறம் அப்பப்போ அவர் வகுப்புப் பக்கம் எதேட்சையா போறது போல நானே தேடிப் போவேன். தற்செயலா சந்திச்சது போலப் பேச ஆரம்பிச்சேன்.

ஒரு நாள் உங்க கூடப் பேசணும் என்று தனியா கூப்பிட்டேன். முதல்ல தயங்கினவரு அப்புறம் காலேஜ் முடிய சந்திக்கலாம். மத்தவங்க பாத்தா தப்பா பேசுவாங்க எண்டாரு. சரின்னு உங்கள கழட்டிவிட்டுட்டு அவருகூட பேசுறத்துக்காக ஒரு காஃபிஷாப் போனோம்.

அப்போ தான் நானே அவர்மேல இருக்கிற என் காதலை சொன்னேன். அவரு மறுத்துட்டாரு.

"நீ என்னைத் தப்பா புரிஞ்சுக்கிட்ட, நான் அந்தமாதிரி ஒரு எண்ணத்தோட உன்கூட பழகல. கண்டதையும் போட்டு மனச குழப்பி, படிப்பைக் கெடுத்துக்காத போய்ப் படிக்கிற வழியைப் பாரு." என்று என் காதலை மறுத்துட்டாரு.

முதல்ல அவரு மறுத்ததும் கஷ்டமாத்தான் இருந்திச்சு. என்னாடா ஒரு பொண்ணு நானே வெக்கத்த விட்டுச் சொல்லியும் சாதகமான பதில் வரலையேன்னு. அப்புறம் என்னை நானே தேத்திக்கிட்டேன்.

"அன்னைக்கு நீ காலேஜ் வரல. காலேஜ் முடிச்சு வீட்டுக்குப் போயிட்டிருந்தேன். திடீர்ன்னு என் முன்னாடி ஒரு பைக் குறுக்க வந்து நின்னிச்சு. நிமிந்து பாத்தா முரளி தான்.

உன்கூட பேசணும், கொஞ்சம் வா பேசுவோம் எண்டாரு. எல்லாம் தான் முடிஞ்சுதே இன்னும் என்ன? எனக்குத் தனிமையில பேச எதுவுமில்லன்னு மறுத்திட்டு வீட்டுக்குப் போயிட்டேன்.

எங்க திரும்ப அறிவுரை படலத்தை ஆரம்பிச்சுடுவாரோ, எனக்கு அட்வைஸ் பண்ண இவரு யாருன்னு அப்போ கோபம் தான் வந்திச்சு. மறுநாள்ல இருந்து அவரு என் பின்னாடி சுத்த ஆரம்பிச்சாரு. நான் கண்டுக்கவே இல்ல.

அன்னைக்கு ஒரு நாள் கிளாஸ்ல சத்தமா இருக்குன்னு லைப்ரரி வந்து கெமிஸ்ரி நோட்ஸ் எழுதிட்டிருந்தேன். அப்போ என் எதிர் இருக்கையில ஒரு பையன் வந்திருந்தான்.

"ஹாய் துளசி..." அப்பிடின்னான். எனக்கு யாருன்னே தெரியேல்ல. நானும் மரியாதைக்கு ஒரு ஹாய் சொல்லிட்டு என் வேலைய பாக்க ஆரம்பிச்சேன்.

"அப்புறம்! என்ன எழுதிட்டிருக்கீங்க?" என்க,

தனக்குள் எழுந்த சினத்தை மறைத்தவளாய் எழுதிய நோட்டை மூடி வைத்தவள்,

"இங்க பாருங்க. எனக்கு உங்களை யாருன்னு தெரியேல்ல. என் பெயர் சொன்னதனால தான் நானும் பதிலுக்கு விஷ் பண்ணேன். அதையே அட்வான்டேஜா எடுத்திட்டு பின்னாடி சுத்துற வேலை எல்லாம் வைச்சுக்காதீங்க. எனக்கு அதெல்லாம் புடிக்காது." என வார்த்தையில் கடினத்தை கொண்டுவந்து கூறியவளை சிறு புன்னகையுடனே ஏறிட்டவன்,

"அதெப்பிடிங்க பொண்ணுங்களால மட்டும் எல்லாத்தையுமே அவ்ளோ ஈஸியா எடுத்துக்க முடியுதாே?" என ஆரம்பித்தவன்,

"காலேஜுக்கு வந்தோமா, இருந்தோமா, படிச்சோமா, வீண் வம்பெல்லாம் தனக்கு வேண்டாம்ன்னு ஃப்ரெண்ட்ஸ் எங்க கூடவே அவ்வளவா பேசாத ஒரு நல்லவன உன் பின்னாடி சுத்த வைச்சது போதாதா? நான் வேற உங்க பின்னாடி சுத்தணுமா?" என்றவனை, யாரைப் பற்றிக் கூறுகிறான் என்று புரியாது அவனைக் குழப்பமாகப் பார்த்தாள்.

"என்ன சொல்லுறீங்க, யாரை சொல்லுறீங்கன்னு சுத்தமா எனக்குப் புரியல்ல?"

"புரியாது தாம்மா! ஏன்னா நீ தான் அம்னீஷியா பேஷன்ட் ஆச்சே!
எனக்குத் தெரிஞ்சு அந்தக் கிறுக்கன் பேசின முதல் பொண்ணும் நீ தான், கடைசி பொண்ணும் நீதான். யாராச்சும் பொண்ணுங்க பேசினாலே கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுறதோட நிறுத்திடுவான்.

உன்னைக் கண்டா மட்டும் அவனா தேடிவந்து பேசுறதுமில்லாம, உன்னைக் கண்ட அடுத்த நொடியே அவன் முகத்தில பல்ப் எரியும் போதே நினைச்சேன். இந்த மாதிரி லோ லோன்னு உன் பின்னாடி ஒரு நாளைக்கு திரியத்தான் போறான்னு.

என்னமா இருந்தான் தெரியுமா?
நீ பாட்டுக்குக் காதலை சொல்லிட்டு போயிட்ட, அவனும் உன் மனசில தேவையில்லாத ஆசையை வளர்த்து உன் படிப்புக் கெட தானே காரணமாகக் கூடாதுன்னு உன் காதலை மறுத்துட்டான்.

நீயும் அதோட உன் வேல முடிஞ்சது போல, அவனைத் திரும்பிக்கூட பாக்கிறது கிடையாது.

பாவம் அவன் உன்னை வேணாம்ன்னு சொன்னதுக்கப்புறம் தான் தன்னோட காதலையே உணர்ந்திருக்கான். நீ எப்பவும் எங்க கிளாஸ க்ராஸ் பண்ணி போற நேரத்துக்கு வாசலையே பாத்திட்டிருப்பான். அடிக்கடி உன்னைப் பாக்குறத்துக்காகவே உன் கிளாஸ் ரூம் பக்கம் வந்திடுவான். படிப்பே கதின்னு இருக்கிறவன், அதைக் கூட மறந்திட்டு உன் பின்னாடி சுத்திட்டிருக்கான்.

நீ என்னடான்னா அவன் வேண்டாம் எண்டதும் உன் வேலைய பாக்க ஆரம்பிச்சிட்ட!

இது தான் உன் லவ்வோட ஆழமா? அவன் வேண்டாம்னா அவன் காதல் கிடைக்கிறவரை போராட மாட்டியா?" என்றவன்,

இன்னமும் அவள் அவனையே கூர்ந்து கவனிப்பதில் கடுப்பாகிப் போக,

"என்ன அப்பிடி பாக்குற? இன்னும் நான் யாரை சொல்லுறேன்னு புரிஞ்சிருக்காதே! ஊருல ஒரு நல்லவன் இருந்தா நல்லவனாவே இருக்க விட்டுடாதீங்க. பைத்தியக்காரனாட்டம் உங்க பின்னாடி அலைய வைச்சாத்தான் நிம்மதியான தூக்கம் வரும்ல!" என்றவன்,

"இத பாரு! நீ காதலிப்பியோ, இல்ல கழட்டி விடுவியோ எனக்குத் தெரியாது. உன்னையே நினைச்சிட்டிருக்க அவனைச் சரி பண்ணி பழையபடி எங்ககிட்ட ஒப்படைக்கிற." எனக் கோபமாகப் பேசினாலும் லைப்ரரி என்றதனால் குரலைத் தணித்துப்பேசியவன்,

"ப்ளீஸ் துளசி!அவனோட லட்சியமே பெரிய டாக்டர் ஆகணும் என்கிறது தான். அதுக்காகத் தான் நாங்களும் அவன் படிப்புக்கு இடைஞ்சலா இருந்ததில்ல. இன்னும் ஒரே வருஷம் தான். அப்புறம் அவன் படிப்பு முடிஞ்சிடும். அதுக்கிடையில இந்த மாதிரி இருந்தான்னா அவன் கஷ்டப்பட்டு படிச்சதெல்லாம் வீணாகிடும்.

நீ என்ன செய்வியோ அவனைச் சரி பண்ணிடும்மா!" என இம்முறை நண்பன் எதிர்காலத்துக்காகக் கெஞ்சியவனை பார்க்கும்போது பெருமையாக உணர்ந்தவள்,

"சாரிண்ணா! அவரு மனசில நான் இருக்கேன்னு நிஜமா எனக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா அவரை கஷ்டபடுத்தியிருக்க மாட்டேன். நான் அவரைப் பாக்கணுமே! அவரு இப்போ எங்க இருப்பாருன்னு தெரியுமா?" என வினவ,

அவள் கேட்ட விதத்தில் இனி எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை தோன்றியது அவனுக்கு.

"நீ தான் இங்க இருக்கியே! அவனும் இங்க எங்கயாச்சும் தான் இருப்பான்." என்றவாறு சுற்றிப் பார்வையை வீசியவன்,

"நான் சொல்லல்ல. ராமன் இருக்கிற இடம் சீதைக்கு அயோத்தின்னா, நீ இருக்கிற இடம்தான் இந்தக் கிறுக்கனுக்கு அயோத்தி." என்றவன்,

"சட்டுன்னு திரும்பிப் பாக்காத. உன் பின்னாடியிருக்கிற லாஸ்ட் பெஞ்சில தான் உன்னைப் பாத்திட்டிருக்கிறான். அப்புறம் நான் உன்கிட்ட பேசினது அவனைப் பத்தின்னும் அவனுக்குத் தெரிய வேண்டாம்.

அப்போ நான் வரேன்மா! அவனோட வாழ்க்கையே இப்போ உன் கையில என்கிறதும் நினைவில வைச்சுக்கிட்டு அவன்கிட்ட பேசு" என அவன் எழுந்து சென்றுவிட்டான்.

தன் நோட்டுக்களை எடுத்தவள் முரளி இருந்த மேசையை நாடிச்சென்று எதிர்ருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை அங்கிருந்தே கவனித்துக்கொண்டிருந்தவன், தன் நண்பன் எழுந்து சென்றதும் தன்னை நோக்கி வருபவளைக் கண்டு சட்டென அவளைப் பார்ப்பதை விடுத்து புத்தகத்தில் கவனத்தை வைத்திருப்பவன் போல் நடித்தான்.

தன்னைக் கண்டு கொள்ளாதவனாட்டம் புத்தகத்தில் கவனத்தை வைத்திருந்தவன் செயல் இதழ்கடையில் புன்னகையினை வரவைத்தது என்றால், மறுபுறம் எப்படி அவனிடம் பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் திணறியவள்,

"க்ஹூம்..." என்ற செருமைலை தொடர்ந்து, "என்ன செய்திட்டிருக்கிறீங்க முரளி?" எனக் கேட்டதும் நிமிர்ந்தவன்,

"லைப்ரரியில என்ன செய்வாங்களாம்? எல்லாரையும் போலப் புக் தான் படிச்சிட்டிருக்கேன்." என அலட்டிக்கொள்ளாது அளித்தவன் பதிலில் பீரீட்டு வந்த புன்னகையினை வெளிக்காட்டாது உதட்டினுள்ளே அடக்கிக்கொண்டவள்,

"அது ஏதாச்சும் மாஜிக் புக்கா முரளி? ஏன் கேக்குறேன்னா தலைகீழா வைச்சு படிச்சாலும் உங்களுக்குச் சரியா தெரியுதே அதனால கேட்டேன்." என அவளும் அதே தோரணையில் கேட்டாள்.

அவள் கூறியதும் தான் அதைக் கவனித்தவன், தன்னை கண்டுகொண்டாளேயெனத் தலையினை சொரிந்தவாறு வெட்கி புன்னகைத்தவனை காண துளசிக்கும் சிரிப்பு வந்துவிட்டது. அவனுடன் தானும் சேர்ந்து சிரித்தவள், சட்டெனச் சிரிப்பினை நிறுத்தி,

"ஏன் முரளி அப்பிடி பண்ணிங்க? உங்களுக்கு என்மேல விருப்பம் இருக்குன்னா நேரே என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல. என்னையே நினைச்சிட்டு எதுக்கு படிப்ப கெடுத்துக்கிறீங்க?" என உரிமையோடு கேட்டவள் கேள்வியினை ரசித்தவனாய்,

"சொல்லலாம்னு தான் தனிமையில கூப்பிட்டேன். நீ தான் நமக்குள்ள தனிமையில பேச எதுவுமில்லன்னு கோபமா சொல்லிட்ட. எங்க நான் வேண்டாம்ன்னு சொன்னதும் நிஜமாவே மறந்திட்டியோன்னு நினைச்சிட்டேன்." என்க,

"பின்னே என்ன செய்யச் சொல்றீங்க? ஒரு பொண்ணா இருந்திட்டு லவ்வ சொல்லவே கேவலமா பாக்குற உலகம், உங்க பின்னாடியே சுத்தினா என்னல்லாம் பேசும்? கண்ணில படாதது கருத்திலயிருந்தும் மறைஞ்சிடும். அதான் உங்கள அவாய்ட் பண்ணேன். ஆனா நீங்கப் பையன் தானே! நான் உதாசின படுத்தினாலும் சட்டுன்னு சொல்லியிருக்கலாம்ல்ல.

இன்னொருத்தர் சொல்லித்தான் உங்க காதலை நான் தெரிஞ்சுக்கணுமா.?" எனக் கவலையாகக் கேட்க.

"ஓ…! இப்போ இதைப்பத்தி தான் உன்கிட்ட பேசிட்டு போனானா அந்த வெங்காயம்?" எனத் தன் காதலை அவள் ஏற்றுக்கொண்டாள் என்ற நிறைவுடன் அவளது கைகளைப் பற்றித் தன் கைகளுக்குள் புறாக்குஞ்சினைப் போல் வலிக்காது சிறைபிடித்தவனை நிமிர்ந்து பார்தவள் கண்களை ஊடுருவியவன்,

"லவ் யூ துளசி! லவ் யூச்சோ மச்!
எந்த ஒரு நிலையிலயும் நாம பிரியக் கூடாது துளசி. யார் வந்து உன்னைக் கேட்டாலும் தரவும் மாட்டேன். அப்பிடி உன்னைப் பிரிஞ்சு போற தருணம் வந்திச்சுன்னா சத்தியமா அடுத்த நிமிஷமே நான் உயிரோட இருக்க மாட்டேன்." என உணர்ச்சிபொங்க முரளி பேசிக்கொண்டு போக, அவள் கைகளுக்குள் இருந்த தன் கையினை சட்டென விலக்கி அவன் வாயினை மூடியவள்,

"என்ன பேச்சு பேசுறீங்க முரளி? நம்ம காதலை சொல்லுற முதல் நாளே இந்தமாதிரி அபசகுணமா பேசணுமா?" எனக் கண்டித்தாள்.

"உனக்குப் புரியாது துளசி. நீ் என்னை அவாய்ட் பண்ண இந்த ஒரு வராமும் நீ எனக்கு எவ்வளவு முக்கியமானவன்னு நல்லாவே உணர்ந்துட்டேன் துளசி!

சரியா சாப்பிடமுடியல, தூங்க முடியல. எதிலயும் என் கவனமே போகல. உன்னை மட்டும் தான் மனசு தேடிட்டிருந்திச்சு.

நீ நம்புறியான்னு தெரியாது. இதுவரை எந்தப் பொண்ணுக்கிட்டேயும் இந்தமாதிரி நான் உணர்ந்ததில்ல. ஆனா உன்கிட்ட மட்டும் தான் துளசி இப்பிடியானேன். முதல் தடவையா நீ தாங்க்ஸ் சொல்ல வந்தப்போ எப்பிடி ரொம்ப நாள் பழகினவபோலச் சங்கடமே இல்லாம பேசினேன் என்கிறது இப்போ கூடச் சந்தேகமா இருக்கு.

சொல்லப்போனா நம்ம உறவு ஜென்ம ஜென்மமா தொடரும் உறவுபோல. அதனால தான் உன்கிட்ட அவ்வளவு உரிமை எடுத்துக்குறேன்." என உருகி தன் காதலை கூறுபவனையே புன்னகை முகம் மாறாமல் இமைகள் விலகாது பாத்திருந்தாள் துளசி.



தொடரும்…
 

Latest threads

Top Bottom