- Joined
- Sep 16, 2024
- Messages
- 740
- Reaction score
- 4,437
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
காந்த விழியழகே!
எழிலன்பு
எழிலன்பு
"வாவ்! என்னவொரு அழகு! அவள் கண்ணு இரண்டும் லைட் போட்ட மாதிரி பளிச்சுன்னு மின்னுதே!" என்று அந்தப் பெண்ணின் கண்களைப் பார்த்து வாயைப் பிளந்தான் நரேன்.
"யாரைப் பார்த்துடா இப்படி வாயைப் பிளக்கிற?" ஆர்வமாகக் கேட்டான் அவனின் அருகில் அமர்ந்திருந்த நண்பன் திலீபன்.
"அதோ, பஸ் ஸ்டாப்பில் நிக்குதே... அந்தப் பொண்ணுதான்டா..." என்று நரேன் சுட்டிக்காட்டி கொண்டிருந்தபோதே அவர்கள் அமர்ந்திருந்த பேருந்து நகர ஆரம்பித்திருக்க, திலீபனால் அந்தப் பெண்ணின் பக்கவாட்டுத் தோற்றத்தை மட்டுமே காண முடிந்தது.
“ச்சே, மிஸ் பண்ணிட்டேன்டா. ஆனா, ஆளு டக்கராத்தான் இருப்பாள் போல…” என்றான் திலீபன்.
“சைட் அடிக்காதேடா எருமை!” பேருந்தின் ஜன்னல் அருகே அமர்ந்திருந்த நரேன் நண்பனின் பக்கம் திரும்பி அமர்ந்து அவனின் பிடரியில் தட்டினான்.
“நீயும் தானேடா சைட் அடிச்ச? என்னை மட்டும் சொல்ற?” சுரீரென விழுந்த அடியில் எரிச்சலுடன் நண்பனிடம் கத்தினான் திலீபன்.
“நான் பார்த்த பொண்ணை நீயும் பார்த்தால் என்ன அர்த்தம்டா வெண்று…” பல்லைக் கடித்தான் நரேன்.
“நீதானே பார்க்கச் சொன்னடா பட்டர்?” என்று எகிறினான் திலீபன்.
“அந்தப் பொண்ணை நான் பார்த்தேன்தான் சொன்னேன். நீயும் பார்னு சொல்லலை…” என்ற நண்பனைத் திலீபன் முறைக்க, அவனைவிட உஷ்ணமாக இருந்தான் நரேன்.
ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டிருக்கும்போதே அவர்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வர, இறங்கிச் சென்றனர்.
அதன்பின் இருவரும் பேச முயலவில்லை. அவரவர் வீடு இருக்கும் தெருவில் பிரிந்து நடக்க ஆரம்பித்தனர்.
நரேனும், திலீபனும் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக நண்பர்கள். அவர்களின் வீடும் ஒரே பகுதியில் இருக்க, ஒரே பேருந்துப் பயணம் அவர்களை மிக நெருங்கிய நண்பர்களாக்கியிருந்தது.
மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய நேரத்தில் அந்தக் காந்தக் கண்ணழகியைப் பார்ப்போம் என நரேன் எதிர்பார்க்கவே இல்லை.
அவளின் கண்களில் தெரிந்த சுடரொளி அவனை அவளுள் கயிறு கட்டி இழுத்துக்கொண்டிருந்தது.
‘அவள் கண்ணு மட்டும் எப்படி புரௌவுன் நிறத்தில் அப்படி மின்னுது?’ என்ற கேள்வி அவனுள் முணுமுணுத்தாலும், அதில் தெரிந்த கவர்ச்சியில் கட்டுண்டு இருந்தான் அவன்.
கனவில் மிதந்தவன் போல் வீட்டிற்குள் நுழைந்த மகனுக்குச் சூடாகக் காபியைப் போட்டுக் கையில் கொடுத்தார் அவனின் அன்னை கல்யாணி.
“நீ வேலைக்குப் போன பிறகு ஒரு வரன் வந்ததுன்னு அப்பா விவரம் கொண்டு வந்து கொடுத்தார், நரேன். இந்த கவரில் பெண்ணின் விவரமும், பொண்ணு போட்டோவும் இருக்கு பார். பொண்ணை உனக்குப் பிடிச்சதுனா மேற்கொண்டு பேசலாம்…” என்று அன்னை சொன்னது காதில் ஏறினாலும், அவனின் கருத்தில் பதியவில்லை.
“சரிம்மா…” என்று ஒப்புக்குத் தலையை அசைத்துவிட்டு, அன்னை கொடுத்த கவரை எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றான்.
இரண்டு வருடங்களாக நரேனுக்கு வீட்டினர் வரன் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், இதுவரை எதுவும் அமையவில்லை. ஆனாலும், பெண்ணைப் பற்றிய விவரம் அவனின் கைக்கு வந்து சேரும்போது, சற்று ஆர்வமாகவே பார்ப்பான்.
ஆனால், இப்பொழுது கையில் ஒரு பெண்ணின் விவரம் இருந்தும், அதனைப் பார்க்கும் ஆர்வத்தை ஒரு காந்த விழியழகி விழுங்கிவிட்டிருந்தாள்.
அவளைத் தவிர வேறு பெண்ணைப் பார்க்கும் ஆர்வம் மங்கியிருக்க, கையில் இருந்த கவரை ஓர் ஓரமாகப் போட்டுவிட்டு, படுக்கையில் விழுந்து, இமைகளை மூடி விழியழகியைக் கற்பனையில் கண்டுகொண்டிருந்தான்.
இரவு உணவிற்கு அன்னை அழைக்க, அதன் பின்னரே கற்பனைக் குதிரைக்குக் கடிவாளமிட்டுவிட்டு எழுந்து சென்றான்.
“பொண்ணு போட்டோவை பார்த்தியாடா? பொண்ணை உனக்குப் பிடிச்சிருக்கா? நான் மேற்கொண்டு அவங்க வீட்டில் பேசட்டுமா?” என்று உணவை உண்டுகொண்டே அவனின் தந்தை சாரங்கபாணி கேட்டார்.
“நான் இன்னும் பார்க்கலைப்பா. அப்புறமா பார்த்துட்டு சொல்றேன். நீங்க அவசரப்பட்டுப் பொண்ணு வீட்டில் எதுவும் பேச வேணாம்…” என்ற மகனை அன்னையும், தந்தையும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.
“எனக்கு ஓகேன்னு தான் தோனுது. பொண்ணு வீட்டில் பேசுங்கப்பா…” என்பதுதான் எப்போதும் அவன் சொல்வது. இன்று இன்னும் பெண்ணின் புகைப்படத்தைப் பார்க்கவே இல்லை என்ற மகனை வித்தியாசமாகத்தான் பார்த்தனர் அவனின் பெற்றோர்.
அவர்களின் பார்வையைக் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை. விரைந்து சாப்பிட்டு முடித்து அறைக்குள் சென்றுவிட்டான்.
அன்றைய இரவு நரேனின் நித்திரையில் வண்ண வண்ண நிறங்களின் பின்னணியில் அவனின் கனவில் வந்து சென்றாள் அந்தக் காந்த விழிக்காரி!
மறுநாள் அலுவலகத்திற்குச் செல்ல, கிளம்பி வந்த மகனிடம் மீண்டும் அந்தப் பெண்ணின் புகைப்படத்தைப் பற்றி அவனின் அன்னை கேட்க, “இப்ப வேலைக்கு நேரமாச்சுமா. நான் அப்புறமா பார்த்து சொல்றேன்…” என்று சொல்லிவிட்டு வேலைக்குக் கிளம்பிச் சென்ற மகனை குழப்பத்துடன் பார்த்து நின்றார் கல்யாணி.
“என்னாச்சு இந்தப் பையனுக்கு? நேத்து சாயங்காலத்திலிருந்து மந்திரித்துவிட்டது போலச் சுத்திட்டு இருக்கான்?” என்று தனியாக நின்று புலம்பினார்.
“என்ன கல்யாணி தனியா நின்னு பேசுற?” அங்கே வந்த சாரங்கபாணி கேட்க, கல்யாணி மகனை பற்றிக் கவலையுடன் கணவரிடம் சொன்னார்.
“நாம பார்த்த பொண்ணை அவனுக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு போல. அதான் அப்படி இருக்கான்…” என்றார் சாரங்கபாணி.
“பொண்ணு போட்டோவை அவன் இன்னும் பார்க்கவே இல்லைன்னு சொல்றானே…” என்றார் கல்யாணி.
“அப்படியா? அப்புறம் என்னாச்சு அவனுக்கு?”
“அதானே எனக்கும் தெரியலை…” என்ற மனைவியின் கவலையில் தானும் பங்கெடுத்துக்கொண்டார் சாரங்கபாணி.
அலுவலகப் பேருந்தில் ஏறிய நரேன், வழக்கம்போல நண்பனின் அருகில் சென்று அமர்ந்துகொண்டான்.
திலீபன் அவனிடம் பேசாமல் முகத்தைத் திருப்பிக்கொள்ள, “அட, என்னடா கோபமா?” என்று நரேன் சமாதானமாகப் பேச முயன்றான்.
திலீபன் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, “நமக்குள்ள என்னடா? விடுடா நண்பா!” அவனின் தோளில் கையைப் போட்டுச் சகஜமாகப் பேசியவனிடம் திலீபனுக்கு அதற்கு மேல் முகத்தைத் திருப்ப முடியவில்லை.
“அப்புறம் என்ன மச்சான் முகம் எல்லாம் பல்பு போட்ட மாதிரி எரியுது?” திலீபன் கேட்க,
“மச்சி, அந்தக் காந்தக் கண்ணழகி என்னை நைட் எல்லாம் தூங்க விடலைடா. கலர் கலர் கனவா வந்து என் உறக்கத்தைத் திருடிட்டுப் போய்ட்டாடா…” என்று பற்களைக் காட்டிப் பளிச்சென்று சிரித்த நண்பனுக்கு ‘முற்றிவிட்டது!’ எனப் புரிந்து போனது திலீபனுக்கு.
“ஒரு தடவை பார்த்ததுக்கேவாடா? இதெல்லாம் உனக்கே ஓவரா இல்லை?” கேலியாகக் கேட்டான் திலீபன்.
“இருக்குத்தான்! ஆனால், உள்ளுக்குள் உட்கார்ந்து ஏதோ பண்றாள்டா…” என்று நெஞ்சை நீவிவிட்டான் நரேன்.
‘பயலுக்குக் கிறுக்கு முத்திடுச்சு. கண்ணழகியைப் பிடிச்சு கட்டி வச்சால்தான் கிறுக்கு தெளியும் போல’ தனக்குள் முனகிக்கொண்டான் திலீபன்.
முதல்நாள் மாலை அந்தக் கண்ணழகி நின்றிருந்த இடத்தை ஜன்னல் வழியாக ஆவலுடன் பார்த்தான் நரேன். ஆனால், அவ்விடத்தில் அவள் இல்லாமல் போக, அவனை ஏமாற்றம் சூழ்ந்துகொண்டது.
அதேபோல், மாலை திரும்பி வரும்போது அவளைத் தேட, அவனின் விழிகளில் விழுந்தாள் விழியழகி. அவளைப் பார்த்ததும் அவனின் முகம் பிரகாசமாக மாறியது.
அன்று மட்டுமில்லாமல் அடுத்து வந்த நாட்களிலும் அவளை மாலை வேளையில் அங்கே கண்டான் நரேன்.
“தினமும் இப்படிப் பார்த்துட்டே இருந்தால் எப்படிடா? இறங்கி போய் அந்தப் பொண்ணிடம் பேசிப் பார்…” என்றான் திலீபன்.
“பயமாயிருக்குடா மச்சி…” என்ற நரேனைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொண்ட திலீபன், “இதுக்குத்தான்டா சோஷியல் மீடியாவில் நைன்டிஸ் கிட்ஸை மானாவாரியா கிண்டல் பண்றானுங்க. பொண்ணைப் பார்த்து சைட் அடித்தால் மட்டும் போதாது. துணிந்து போய் உன் காதலையும் சொல்லணும்…” என்றான்.
“புரியுது மச்சி. ஆனால், அவள் கத்தி ஊரைக் கூட்டிட்டால்? ஒருவேளை பளார்னு ஒன்னு விட்டுட்டாள்னா?” என்று கையால் கன்னத்தைப் பொத்திக்கொண்டு பயந்து நடுங்கினான்.
“நீ கனவில் குடித்தனம் நடத்தத்தான் லாயிக்கு மச்சான்…” என்று நக்கலடித்தான் திலீபன்.
நரேனின் வீட்டிலோ அவர்கள் பார்த்த பொண்ணைப் பற்றி அவனின் முடிவு என்ன என்று அறிய அவனிடம் விசாரித்துக்கொண்டே இருந்தனர்.
“உனக்கு எத்தனையோ இடத்தில் பொண்ணு பார்த்தும் அமைய மாட்டிங்கிதுன்னு நான் எனக்குத் தெரிந்தவரிடம் புலம்பிய புலம்பலில், அவருக்குத் தெரிந்த குடும்பத்தில் ஒரு பொண்ணு இருக்குன்னு அந்தப் பொண்ணைப் பற்றிய விவரத்தை கொடுத்தார். நீ என்னன்னா கேட்கும்போதெல்லாம் இன்னும் பொண்ணு போட்டோவை பார்க்கவே இல்லைன்னு சொல்லிட்டு இருக்க. என்னடா நினைச்சுட்டு இருக்க உன் மனசுல?” என்று அன்று இரவு மகனிடம் கத்தினார் சாரங்கபாணி.
“பொண்ணு போட்டோவைத்தானே பார்க்கணும்? பார்க்கிறேன் இருங்க…” என்று தந்தையிடம் சொல்லிவிட்டு வேண்டாவெறுப்பாக அன்று அந்த கவரை பிரித்துப் பார்த்த நரேன் விழிகள் தெறிக்க, அதிர்ச்சியுடன் அந்தப் பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தான்.
அது ஆனந்த அதிர்ச்சி!
புகைப்படத்தில் புன்னகை முகமாகக் காட்சியளித்தவள் அவனின் மனத்தைக் கொள்ளை கொண்ட காந்த விழியழகிக்காரி ஆயிற்றே!
நிச்சயமாக நரேன் இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவே இல்லை.
அவனின் இதயம் அதிவேகமாகத் துடித்தது. நெஞ்சுக்கூடு ஏறி இறங்க வேகமாக மூச்சு வாங்கினான். அவனின் அதரங்கள் அனிச்சையாக மலர்ந்தன.
“யாகூ..!” உற்சாகமாகக் கூச்சலிட்டான்.
“என்னாச்சுடி உன் பையனுக்கு? இந்தக் கத்து கத்துறான்?” என்று சுண்டுவிரலைக் காதுக்குள் விட்டுக் குடைந்துகொண்டே கேட்டார் சாரங்கபாணி.
“எனக்கு மட்டும் என்ன தெரியும்?” நொடித்துக்கொண்டார் கல்யாணி.
தன் மனம் கவர்ந்த காந்த விழியழகிதான் தனக்குப் பார்த்த பெண் என்பதை இன்னும் நரேனால் நம்பவே முடியவில்லை. இமைகளைச் சிமிட்டிச் சிமிட்டிப் பார்த்தான்.
தன் கையில் தானே கிள்ளியும் பார்த்துக்கொண்டான். வலித்தது! அவள்தான்! அவளேதான்! மனம் உற்சாகக் கூச்சலிட்டது. அதை உதடுகளைக் குவித்து மீண்டும் கூவிக் கூச்சலிட்டு தன் மனத்தின் ஆர்ப்பரிப்பைப் பிரதிபலித்தான்.
அவளின் பெயரைப் பார்த்தான்.
‘பிருந்தா! என் பிஞ்சு மனசைப் பஞ்சுபஞ்சா பிச்சிப் போட வந்த பிருந்தா!’ என்று லயித்துச் சொல்லிக்கொண்டான்.
இரண்டு பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு, ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தாள் பிருந்தா. அவளின் அலுவலக முகவரியாக, அவள் நின்றிருந்த பேருந்து நிறுத்தம் இருந்த பகுதியைத்தான் குறிப்பிட்டிருந்தனர். அவளின் தாய், தந்தைக்கு ஒற்றைப் பெண்!
அவளைப் பற்றிய விவரங்களை எல்லாம் படித்து மனத்தில் பத்திரப்படுத்திக்கொண்டவன், அறையை விட்டு வெளியே வந்து, “எனக்குப் பொண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு. உடனே பேசி முடிங்கப்பா. முடிந்தவரை சீக்கிரமே கல்யாணத்தை வைக்கச் சொல்லுங்கப்பா…” என்றான்.
சாரங்கபாணியும் கல்யாணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“பொண்ணு பார்க்க எப்ப போகலாம்பா?” அவனின் அடுத்தக் கேள்வி ஆர்வமுடன் வர, அவனை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு, தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் சாரங்கபாணி.
“அப்பா…” என்று கூவி அழைத்தான் மகன்.
“முதலில் பொண்ணு வீட்டில் பேசிக்கிறேன். பொறுடா!” என்று பற்களைக் கடித்துக் கூறிவிட்டுச் சென்றார் அவர்.
“ஓகேப்பா…” என்று வேகமாகத் தலையை அசைத்துவிட்டு, விழியழகியைப் புகைப்படத்தில் பார்த்து ரசிக்கச் சென்றான் அவன்.
மறுநாள் நண்பனைச் சந்தித்து விவரத்தைச் சொல்ல, “உனக்கு எங்கயோ மச்சம் இருக்குடா மச்சான்…” என்று சிறு பொறாமையுடன் சொன்னவனைப் பார்த்துப் பற்களைக் காட்டிச் சிரித்தான் நரேன்.
மகனின் ஆர்வத்தைப் பூர்த்திச் செய்ய உடனடியாக வேலையை ஆரம்பித்தார் சாரங்கபாணி.
மிக விரைவிலேயே பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்தது.
அன்று பெண்ணைப் பார்க்கச் சிரத்தையுடன் தயாராகிக் கிளம்பினான் நரேன்.
“இவன் போற போக்கைப் பார்த்தால், கல்யாணத்துக்குப் பின்னாடி நம்ம மகனை நாம மறந்துடணும் போலிருக்குங்க…” என்று கனவுலகிலேயே மிதந்த மகனை கண்டு கவலைப்பட்டார் கல்யாணி.
“இரண்டு வருஷ போராட்டத்துக்குப் பிறகு அவனுக்கு ஒரு பொண்ணு கூடி வந்ததே பெருசு. நீ வேற ஏதாவது சொல்லி கலவரத்தைக் கிளப்பி விடாம அமைதியா இருடி. நம்ம பிள்ளை சந்தோஷமா இருக்கான். அதை மட்டும் பாரு…” என்று மனைவியை அதட்டினார் சாரங்கபாணி.
“சரிதான்!” வேறு வழியின்றித் தலையசைத்துக்கொண்டார் கல்யாணி.
பெண் பார்க்கும் படலத்தில் தனக்குக் காபியைக் கொண்டு வந்து கொடுத்த பிருந்தாவை வாயைப் பிளந்து பார்த்தான் நரேன்.
தனக்கு மிக மிக அருகில் நின்றிருந்தவளின் பழுப்பு நிற விழிகளின் ஜொலிப்பு அவனைக் கட்டியிழுக்க, அவளைப் பார்த்து சில்லறையைச் சிதறவிடாமல் சிரித்து வைக்க, அவனுக்குப் பதிலாகத் தன் வசீகரப் புன்னகையைப் பரிசளித்தாள் பிருந்தா.
இரு பக்கமும் சம்மதம் கேட்கப்பட, நரேன் வேகமாகத் தனக்குப் பெண்ணைப் பிடித்திருப்பதாகச் சொன்னான்.
அதில் நாணப்புன்னகை முகிழ, “எனக்கும் மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கு…” என்ற பிருந்தாவின் கொஞ்சும் குரல் அவனின் காதில் தேனாகப் பாய்ந்தது.
“அப்புறம் என்ன, கல்யாணத் தேதியைக் குறித்துவிட வேண்டியதுதான்!” என்ற பெரியவர்கள், தடபுடலாக அதற்கான ஏற்பாட்டை ஆரம்பித்தனர்.
நரேனுக்குக் கல்யாண யோகம் வந்தது! நேரம் காலமும் கூடியது!
மேளதாளம் முழங்கத் தன் காந்த விழியழகியைக் கரம்பிடித்துத் தன் மணவாட்டியாக்கிக்கொண்டான் நரேன்.
தான் தூரத்திலிருந்து ரசித்த காந்த விழியழகை இனி தினம் தினம் அருகிலிருந்து ரசிக்கலாம் என்ற பூரிப்புடன் அன்றிரவு முதலிரவு அறைக்குள் நுழைந்தான் நரேன்.
சிறிது நேரத்தில் பதுமையென அறைக்குள் வந்த பிருந்தாவின் கரம் பற்றி அழைத்துச் சென்று படுக்கையில் அமர வைத்த நரேன், “உன்னைப் பார்த்த நாளிலிருந்து உன்னிடம் ஒரு விஷயத்தைச் சொல்லக் காத்திருக்கேன், பிருந்தா…” என்று உற்சாகத்துடன் பேச்சை ஆரம்பித்தான்.
“என்ன விஷயம்ங்க?” பிருந்தா ஆவலுடன் கேட்க,
“உன்னை நான் முதல் முதலில் எங்கே பார்த்தேன் தெரியுமா?” என்று கேட்டான்.
“பெண் பார்க்க வந்தபோது…"
“அதுதான் இல்லை. இந்த விஷயத்தை இன்னைக்குத்தான் சொல்லணும். அப்பதான் உனக்கு சர்ப்ரைஸா இருக்கும்னு இத்தனை நாளும் நாம போனில் பேசும்போதும் சொல்லாமல் இருந்தேன்…” என்று அவன் பீடிகை போட,
“அப்படி என்ன சர்ப்ரைஸ்ங்க?” ஆவலுடன் கேட்டாள் அவனின் மனைவி.
“நான் உன்னை முதல் முதலாக ஒரு பஸ் ஸ்டாப்பில்தான் பார்த்தேன். அப்போது அப்படியே பளபளன்னு ஜொலித்த உன் கண்ணில் மயங்கி…” என்றவன் சொல்லிக்கொண்டே, அவளின் கன்னத்தைக் கைகளில் தாங்கி, அவளின் கண்களின் மீது முத்தமிட முயன்றான்.
சட்டென்று தலையைப் பின்னால் இழுத்த பிருந்தா, “ஒரே ஒரு நிமிஷங்க, ப்ளீஸ்! இதோ வந்திடுறேன்…” என்றவள், அவனைவிட்டு விலகி, எழுந்து கண்ணாடியின் அருகில் சென்று, தலையை லேசாக அண்ணாந்து கண்ணில் கையை வைத்து ஏதோ செய்தாள்.
“என்ன செய்ற பிருந்தா?" குழப்பத்துடன் கேட்டபடி அருகில் வந்தான் நரேன்.
“வழக்கமாகப் படுப்பதற்கு முன்னாடி எடுத்து வெச்சிடுவேன்ங்க. இன்னைக்கு மறந்துட்டேன். அதான்…” என்று சொல்லிக்கொண்டே அவளின் வேலையில் கவனமாக இருந்தாள்.
“எதை?”
“இதைங்க…” என்றபடி தன் கையில் இருந்ததைக் காட்டினாள்.
“என்னது இது?” என்றவன் கண்கள், அவளின் கையில் இருந்ததையும், அவளது கருவிழியையும் மாறி மாறி ஆராய்ச்சியுடன் பார்த்துத் திகைத்தன.
அவளின் கண்கள் பழுப்பு நிறத்தில் பளபளவென்று ஜொலிக்காமல், சாதாரணமாக இருந்தன.
'தான் பார்த்து மயங்கிய அவளின் பழுப்பு நிறக் காந்த விழி என்ன ஆனது?' என்ற திகைப்பு அவனிடம்.
“இது லென்ஸுங்க…” என்று அவனுக்கான பதிலை மிக இயல்பாகச் சொல்லிய பிருந்தா, அவளின் கருவிழிகளில் பொருத்தியிருந்த லென்ஸைப் பத்திரப்படுத்தி வைத்தாள்.
“எதே?” என்று அதிர்ந்த நரேனின் மனக்குரல், ‘மச்சான்… சாச்சுப்புட்டா மச்சான்…’ என வடிவேல் மாடுலேஷனில் கூக்குரலிட்டது.
Next thread





























