Writer✍️
- Joined
- Sep 18, 2024
- Messages
- 375
- Reaction score
- 571
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் -17
“இப்ப உனக்கு ஹாப்பியா….”கேட்டபடி கணவனை இன்னும் இன்னும் இறுக்கமாக கட்டி கொண்டாள் அன்னம்.“ம்ம் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்….தேங்க்ஸ்டி….” என்று அவளை விட்டு விலகாதவனாக அவளுடன் ஒட்டிக்கொண்டான்.
“உனக்கு தெரியுமா நம்ம ரிசெப்ஷனில அத்தனை அழகா உன்னை பார்த்த பின்னாடி என் மனக்கட்டுப்பாடு எல்லாம் கைமீறிப் போச்சு. என்னை அறியாமல் உன்னை ஏதாவது பண்ணிடுவேனோ என்று தான் அவசரமா ரூமுக்குள்ள போய் கதவை பூட்டிக்கிட்டேன்.அன்னைக்கு என்னால் என்னையே கண்ட்ரோல் பண்ண முடியல. இப்போ நீ என்னை கட்டிகிட்டதும் ஏதோ ரொம்ப வருஷம் காத்திருந்த புதையல் கிடைச்ச சந்தோஷமும் நிம்மதியும் சேர்ந்த போல தூக்கம் சொக்குது…..”என்றான் கொட்டாவியை வெளியேறியபடி.
“சரி அப்ப போய் தூங்கு வரதா….”என்றாள் அவனை விட்டு விலகி நின்று கொண்டு.
மனைவியின் பேச்சில் சட்டென்று அவன் முகம் வாடிப் போனது.அதுவும் அவள் விலகலை சுத்தமாக பிடிக்கவில்லை என்று அப்பட்டமாக காட்டினான்.
“இப்ப என்ன…..?என்றாள் கணவன் முகவாட்டத்தை கண்டு கொண்டவளாக.
“இல்ல எனக்காக இவ்வளவு யோசிக்கிற தானே அப்பிடியே…..”என்று மீதியை சொல்லாமல், கண்களால் தன் அறையை காட்டி அவள் முகத்தை கெஞ்சலாக பார்த்தான்.
“அப்பிடியே…..என்ன உன் அறைக்கு வரணுமா ….?
“இல்ல….அது வந்து….இனி என் கூட வந்து தூங்குறியா…..சத்தியமா உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்…..”
“ஓஹ் உன் கூட உட்கார்ந்து பேசி, கடிக்கிட்டதும் குளிர் விட்டு போச்சில்ல சாருக்கு ….?எவ்வளவு ஈஸியா சொல்ற….”கணவனை உறுத்து விழித்தாள்.
“போடி நீ ஒன்னும் என் கூட வரவேணாம்….என்னமோ அக்கறை இருக்கிற போல கட்டிபிடிச்சு பேச வேண்டியது.அப்புறம் முறுக்கிக்கிறது.நான் தூங்கினா என்ன தூங்காட்டி உனக்கென்ன போடி….”அத்தனை கோபம் அவன் குரலில்.
அந்த நொடிக்குள் உடலில் அத்தனை பல மாற்றம் காட்டினான் அவன்.இத்தனை நேரம் பேசும் போது இருந்த மென்மை கொஞ்சமும் இப்போது அவனிடம் இல்லை. உடல் இறுக ,முகம் சிவக்க நின்றிருந்தவனை பார்த்ததும் திரும்பவும் உடம்புக்கு ஏதாவது வந்து விட போகிறதோ என்று பயந்து விட்டாள் அன்னம்.
“டென்ஷன் ஆகாத ப்ளீஸ்….. இப்ப என்ன உன் கூட வந்து தூங்கிறேன் போதுமா……”
“ஹேய் தங்கம் நீ ரொம்ப நல்லவடி…..நான் தான் உன்னை தொலைச்சுட்டு அல்லாடுறேன்….”என்று சட்டென்று இயல்புக்கு வந்தான்.
ஒவ்வொரு செக்கனும் எத்தனை வித்தியாசம் காட்டுகிறான் கணவன் என்று தான் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
“சரி சரி போதும் போ தூங்கலாம்…..”சொல்லியபடி அவன் அறைக்குள் நுழைந்தாள் மனைவி.
“அம்மாடி இந்த பெரிய பெட் தேவையா இந்த ரூமுக்கு ….”என்று கட்டிலில் அமர்ந்தபடியே அறையை சுற்றி நோட்டமிட்டாள்.
“உனக்கும் எனக்கும் சேர்த்து தான் இந்த பெட்டை ஆசையாய் வாங்கினேன்.எங்க நீ தான் தனிக்குடித்தனம் போயிட்டியே.அது தான் எனக்கு முடியாமல் போச்சு போல . விடு ஏதோ இன்னைக்காவது அறைக்குள்ள வந்தியே அதுவே போதும்….”
“நான் தனி ரூமுக்கு போனதும் பேசாம இருந்துட்டு இப்ப என்னால தான் உடம்பை கெடுத்து வச்சிருக்கிறதா சொல்றீங்களோ ஆபிசர்…?
“பின்ன இல்லையா…”
“அட பாவி…. அப்புறம் உங்க வீட்டுல, நான் உன்னோட வந்ததும் உன்னை ஹாஸ்பிட்டல்ல படுக்க வச்சுட்டதா சொல்லவா ?
“போடி இப்ப எதுக்கு இந்த பேச்சு….நம்மை பற்றி மட்டும் பேசு…இப்ப நம்ம தூங்கலாம்…”என்று சொல்லியபடி கட்டிலின் ஒரு கரையில் ஏறி படுத்து கொண்டான்.
“என்ன பாத்துட்டிருக்க வந்து படு….”
“இல்ல என் ரூமுக்கு போய் பெட்ஷீட் மட்டும் எடுத்துட்டு வரவா….?
சட்டென்று ஏதோ மூச்சு முட்டுவது போல் இருந்தது அவளுக்கு.இத்தனை நாள் தனி அறையில் தன் இஷ்டத்துக்கு படுத்து கிடந்தவள் இப்போது அப்படி செய்ய முடியாது என்ற தயக்கம் அவளுக்கு.
“அந்த கபேட்டில் புது பெட்ஷீட் இருக்கும் பாரு .நாளைக்கு உன் ரூமூக்கு போய் தேவையானதை பாத்து எடுத்துக்கோ….”
பதில் சொல்லாமல் அவன் சொன்ன கபேட்டை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“தங்கம் என்னடி பம்முற…..?
“அது….சொல்ல தெரியல ஆனா ஒரு மாதிரி….”என்று சொல்லமுடியாமல் கண் கலங்கினாள்.
“ஏய் என்னடி கண்ணெல்லாம் கலங்குது…..வேணாம் நீ உன் ரூமுக்கு போ…”என்றான் குரல் இறுக.
“இல்ல ஒண்ணுமில்ல …..நான் கண் கலங்கினா உனக்கு சமாதானம் பண்ண தோனலயா .என்னமோ போன்னு சொல்ற….”என்று இவள் முறுக்கிக் கொண்டாள்.
“ஓஹ்… சாரிடி முன்ன பின்ன உன்னோட தங்கி பழக்கமில்லையா அது தான் சொதப்பி வைக்கிறேன்….ப்ளீஸ் படுடி….”
எதுவும் பேசாமல் மறுபக்கம் வந்து படுத்து கொண்டாள் அவள் .
“நானும் நீயும் இந்த வாழ்க்கைக்கு புதுசு.இனி தான் ஒன்னொன்னா கத்து போறோம் .நீ ஒரு ரோஜா செடி மாதிரி. தனி தொட்டியில உங்க வீட்டுல இருந்த.நான் முல்லை செடி போல, ஒரு தனி தொட்டியில எங்க வீட்டுல இருந்தேன்.இப்ப அந்த ரெண்டு செடியையும் தூக்கி ஒரு தொட்டியில் போட்டா என்னாகும். ரெண்டும் சேர்ந்து ஒண்ணா வளர கொஞ்ச நாள் எடுத்துக்கும் தானே.அது போல தான் நம்ம மேரேஜ் லைஃப்பும். கொஞ்சம் கொஞ்சமா தான் சரியாகும். சண்டை போட்டாலும் தள்ளி போகாத ரொம்ப ஹார்ட் ஆகுது….”
“இப்படியே ராத்திரி முழுக்க மாறி மாறி பேசிக்கிட்டே இருந்தா விளங்கிடும்.அதென்ன நீ மட்டும் ஆளை சுண்டி இழுக்கிற வாசனை வர்ற முல்லை செடி.நான் மட்டும் முள்ளு இருக்கிற ரோஜாவா….? வந்துட்டான் பைத்தியம் மாதிரி ஏதாவது உளறிட்டு.பேசாம படுடா….”
“உனக்கு ரோஸ் பிடிக்கும் என்று ஒரு எக்ஸாம்பிள் சொன்னது குத்தமா. சரி இப்ப என்ன….? நீ மல்லி செடியா இருத்துக்க . நான் முள்ளிருக்கிற ரோஜாவா இருந்துக்கிறேன்….”என்று பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தான்.
“பரவாயில்லையே முள்ளுள்ள ரோஜா செடி தான் இந்த வரதராஜன் என்று ஒத்துக்கவும் ரொம்ப பெரிய மனசு வேணும் தெரியுமா….”என்று அவன் காளி வாரினாள்.
“அதுக்கென்ன…. உலகத்துல குறை இல்லாத மனுஷன் எங்க இருக்கான் சொல்லு…..”என்று அதையும் ஒத்துக்கொண்டான்.
“பார்றா….ஹாஸ்பிட்டல் போய் வந்ததும் தத்துவமா புழிஞ்சு தள்ளுற முடியல…. குட் நைட்….”என்று சொல்லி கொண்டு கண்ணை மூடினாள் அன்னம்.
அவள் தன் அருகில் படுத்திருக்கிறாள் என்ற நிம்மதியுடன் சீக்கிரம் தூங்கி விட்டான் ராஜன்.
ஆனால் அவனையே பார்த்தபடி நடு இரவு வரை விழித்துக் கிடந்த அன்னக்கொடி எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியாது.
மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கு தந்தையின் போன் அழைப்பில் தான் கண்விழித்தான் ராஜன்.
“என்னப்பா சொல்லுங்க….”தூக்க கலக்கத்திலும் மகன் குரலில் தெரிந்த பதட்டத்தை கண்டு கொண்டார் மோகனசுந்தரம்.
“என்னன்னு தெரியலப்பா…. உங்கம்மா ஏதோ கெட்ட கனவு கண்டாளாம்.உன்னை பார்க்க போகணும் என்று ஒரே அடம் .இப்ப தான் நம்ம காரில் அனுப்பிவிட்டிருக்கேன்.சீக்கிரம் அங்க வந்துடுவா .அது தான் சொல்ல கூப்பிட்டேன்….” என்றார் தந்தை.
“சரிப்பா ஆறுமுகம் அண்ணா சரியா கொண்டு வந்து சேர்த்துவிடுவார்.அம்மா வந்ததும் கூப்பிடுறேன் வைக்கிறேன்..….”
எதற்கு இத்தனை காலையில் கிளம்பி வருகிறார் அன்னை என்ற யோசனை அவனுக்கு. கணவனின் சத்தத்தில் கண் விழித்து விட்டாள் அன்னக்கொடி.
“உங்க மாமியார் கிளம்பி இங்க தான் வந்துட்டுது இருக்காங்களாம்.அது தான் அப்பா கூப்பிட்டார்….”
இத்தனை காலையில் எதுக்கு வருகிறார் என்று தான் கணவனை பார்த்தாள் அவள்.
“என்னவோ கனவு கண்டு தான் கிளப்பினாங்களாம்.இன்னைக்கு சண்டே தானே .அவங்க வந்தா சமாளிச்சுக்கலாம் விடு….”
“இல்ல…. வர்றவங்க எப்படியும் ஒரு வாரம் தங்கி தான் கிளம்புவாங்க.என்னோட ரூமை கிளீன் பண்ணி அத்தைக்கு கொடுக்கணும்….”சொல்லிக் கொண்டு வேகமாக எழுந்து போனாள். தன் அறையில் இருந்த பொருட்களை எல்லாம் அவசர அவசரமாக கணவன் ரூமுக்கு மாற்ற தொடங்கினாள் அவள் .
தொடரும்
Previous thread