• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
751
Reaction score
4,562
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 18

வண்டியில் இருந்து இறங்கி இருவரும் சேர்ந்து பிரகலாதப் பெருமாள் கோவிலினுள் காலடி எடுத்து வைத்ததும், தலை முதல் பாதங்கள் வரை உடலுக்குள் சிலிர்ப்பை உணர்ந்தனர்.

தானாய் அவனது கரம் அவளின் கரத்தோடு கோர்த்துக் கொண்டது. தாங்கள் பன்னெடுங்காலத்திற்கு முன் வணங்கிய எம்பெருமாளைக் காணப் போகிறோம் என்கின்ற நெகிழ்வான மனநிலையுடன் உள்ளே சென்றனர்.

கோவிலின் நடை திறக்கப்பட்டிருக்க, கருவறையில் பூசையைச் செய்து கொண்டிருந்தார் பூசாரி.

கருவறையில் இருந்த சாமிச்சிலையைப் பார்த்திருந்த இருவரின் கண்களையும் நிறைத்தது கண்ணீர்.

தனக்கு மிகவும் நெருக்கமான ஒருவரை நெடுநாட்கள் கழித்துச் சந்திக்கும் போது நெகிழும் மனத்தின் உணர்வில் சாமியைப் பார்த்திருந்தனர் இருவரும்.

"கண்ணா, இந்த நரசிம்மர் சிலையைச் சிங்க முகமாய் அல்லாது நாராயணரின் அழகு முகமாய் வடிவமைத்தால் எப்படி இருக்கும்?" என்று கோதையாய் அவளது கருப்பண்ணனிடம் கேட்பது போன்ற காட்சி இருவரின் கண்களுக்குள்ளும் தெரிந்தது.

"அப்படி ஒரு நரசிம்மர் நாட்டார் கதை இருக்கிறது கோதை! நரசிம்மரின் சிங்க முகம் பார்த்து சிறுவனான பிரகலாதன் பயந்ததாகவும், எவருக்காக அவர் இந்த அவதாரத்தை எடுத்தாரோ, அந்தப் பக்தனே தன்னைக் கண்டு அச்சமுறுவதைக் கண்டு நொடி நேரம் பிரகலாதனுக்குத் தன்னுடைய இயல்பான நாராயணர் உருவத்தில் காட்சி கொடுத்துப் பிரகலாதனை மடியில் அமர்த்திக் கொண்டதாகவும் செவி வழிக்‌கதை இருக்கிறது கோதை. அவ்வாறான நரசிம்மரையே இங்கே நாம் வடிவமைத்து வைக்கலாம் கோதை. அரசரிடம் நான் பேசுகிறேன்" என்றவன் கூறுவதும் இரண்டு பேருக்கும் காட்சியாய் விரிந்தது.

அழகிய வடிவில், சிரித்த முகத்துடன் தனது மடியில் சிறுவனை அமர்த்தியிருப்பது போன்ற ஐந்தடி உயர கற்சிலையை மெய் மறந்து பார்த்திருந்தனர் இருவரும்‌.

உங்கள் பாதமே தஞ்சமென அவரின் பாதத்தில் விழுந்து அழுது கதற துடிதுடித்தது இருவரின் நெஞ்சமும்.

'இது நாம் இணைந்து கட்டிய கோவிலா?' மனத்தோடு நினைத்தவர்களாய் தாமரையும் மாதவனும் பூரிப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

பூசை முடித்து உள்ளிருந்து வெளியே வந்தார் பூசாரி.

இருபத்தைந்து வயது மதிக்கத்தக்கவராய் இருந்தார் பூசாரி.

'இவர் தான் செந்தாமரை அம்மாவோட மகனா?' என்று சிந்தித்தவாறு அந்தப் பூசாரியிடம் சாமியின் பிரசாதத்தைப் பெற்று அமர்ந்தாள் தாமரை.

"இவரை முன்னாடியே பார்த்த மாதிரி தோணுதுல தாமரை?" என்றவாறு அவளருகில் அமர்ந்தான் மாதவன்.

ஆமெனத் தலையசைத்தவளாய் யோசனையுடன் அவனைப் பார்த்தவளுக்கு, ஏனோ அவன் மீது நன்மதிப்பு வரவில்லை.

"ஓம் நமோ நாராயணாய"

"இந்த மந்திரத்தை மனசுக்குள்ள உச்சரிச்சிக்கிட்டே கண்ணை மூடி தியானம் செய் தாமரை" என்றான் மாதவன்.

மாதவன் கூறியது போலவே அவள் அமர்ந்து கூறத் தொடங்கவும், தானும் அவ்வாறு தியானத்தில் அமர்ந்தான்.

இருவரும் தங்களது சுற்றத்தை மறந்து பால்வெளியைக் கடந்து எங்கோ சென்றிருந்தவர்களாய் இப்பிரபஞ்சத்துடன் தங்களது சிந்தையைக் கலந்திருந்த நேரம், மாதவனும் தாமரையும் கருப்பண்ணனும் கோதையுமாய் வாழ்ந்திருந்த அந்தக் காலத்தின் நிகழ்வுகளைக் காட்சிகளாய் மனக்கண்ணில் காணத் தொடங்கினர்.

********

முன்னொரு காலத்தில்!

சிவவைகுண்டபுரம்!

குறிஞ்சி தேசத்தினுள் மேற்கு மலைத்தொடரையொட்டி இருக்கும் வளமான நாடு.

அந்நாட்டில் தோரணகிரி மலையடிவாரத்தில் கோதை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அழகான சிற்றூர் ஆத்மநல்லூர்‌.

மன்னர்களின் ஆளுமைக்குள் இருந்த பெருநிலப்பரப்பை குறுநில ஆட்சிப்பரப்புகளாய் பிரிவினை செய்து, ஒவ்வொரு பிரிவுக்கும் குறுநில மன்னர்களை நியமித்திருந்தனர்.

குறிஞ்சி தேசத்தை ஐம்பத்து மூன்று குறும் நிலப்பரப்புகளாய் பிரித்த மன்னர் திருமலையரசன், ஆத்மநல்லூருக்கு குறுநில மன்னனாய் சிவவைந்தராசன் என்பவனை நியமித்திருந்தான்.

சிவவைந்தராசன் தனது மனையாள் சிவகாமசுந்தரியுடன் ஆத்மநல்லூரை ஆண்டுக் கொண்டிருக்கிறான்.

இறை பக்தனான அவனின் ஆட்சியில் மக்கள் அனைவரும் சீரும் சிறப்புமாய்ச் சுதந்திரமாக அவரவரின் விருப்பமான தொழிலைச் செய்தும் இறைவனை வணங்கியும் வாழ்ந்து வருகின்றனர்.

விடியற்காலை வேளையில் ஆத்மநல்லூர் ஊரின் மத்தியில் இருந்த அழகிய மாதவப்பெருமாள் கோவிலில் மணியடிக்க, மாடவீதியில் ஆங்காங்கே மக்கள் தலையில் பானைகளைச் சுமந்து கொண்டும், பசுவைக் கன்றுடன் இழுத்துச் சென்று கொண்டும், ஆற்றை நோக்கி நடந்து கொண்டும், இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும் தங்களது காலைப்பணிகளைச் செய்த வண்ணம் கடந்திருந்தனர்.

ராஜ கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளித்த அழகிய மாதவப் பெருமாள் கோவிலில்,

"ஓம் நமோ நாராயணாய"

கரங்களைக் கூப்பியவளாய் கண்களை மூடியவாறு ஆழ்ந்த பக்தியுடன் மூல ஸ்தானத்தில் இருந்த பெருமாளைத் துதி செய்து கொண்டிருந்தாள் அவள்.

அழகிய மாதவப் பெருமாள்!

பெயருக்கேற்றார் போன்று பேரழகனாய் காட்சியளித்த பெருமாளைக் கண்குளிர கண்டவளின் மனம் இன்புற்றிருந்தது.

அனுதினமும் நறுமண மலர்களால் தனது கையால் கோர்த்த மாலையினை மாதவனின் மார்பில் சாற்றிக் கண்ணாற கண்டு களிப்பவள் அவள்.

அவளின் பெயர் கோதை!

முத்தரசியின் குலவழித் தோன்றல் அவள்!

கருத்த நிறத்தில் அழகு முகம், நீண்டு பின்னலிடப்பட்ட கார்குழல், வில்லெனப் புருவம், நெற்றியில் நீண்ட நாமம், மையிட்ட கண்கள், தீட்சண்யமான பார்வை, செதுக்கி வைத்த நாசியில் பளபளக்கும் மூக்குத்தி, வரைந்தார் போன்ற செவ்விதழெனப் பேரழகியாய் இருந்தாள் அவள்.

தீபாராதனையைக் கண்டு களித்துக் கண்களில் ஒற்றி எடுத்தவள் பூக்கூடையைக் கையில் வாங்கியவளாய் நகர்ந்தாள்.

மாதவப்பெருமாள் கோவிலின் அருகே சில அடித்தூர நடையில் இருந்தது அவள் இல்லம்.

ஓலைக் கூரையுடன் மரச்சட்டங்களாலான அவ்வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த அவளின் தந்தை முருகையன், கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் சோதிடர்‌ ஆவார்‌. பரம்பரையாய் அரசாங்க சோதிடர்களாய் பணி செய்து வரும் பாரம்பரியக் குடும்பம் அவருடையது.

அவ்வூரின் இளைஞன் ஒருவன் அவர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தவனாய், தனது ஜாதகத்தைக் கொடுத்து தலையெழுத்தைக் கணித்துக் கூறுமாறு கேட்டு பேசிக் கொண்டிருந்தான்.

"மீண்டும் இப்பூமியில் பிறப்பெடுக்காமல் இருக்க வழி இருக்கிறதா ஐயா?" எனக் கேட்டான் அவ்விளைஞன்.

அவனின் கேள்வியில் சிரித்தவராய், "என்னப்பா புது மாப்பிள்ளை, மோகம் முப்பது நாள் கடந்து புத்தி தெளிந்து விட்டதோ?" என்று கேட்டார்.

"காதலியாய் இருக்கும் போது பேரழகியாய் தெரிந்தவள், மனைவியான பின் பிசாசாய் தெரிகிறாள்! முடியவில்லை ஐயா" என்று அவன் புலம்பவும்,

"பூமியில் பிறவாமல் இருப்பதற்கு முதலில் மனைவியை மதிக்க வேண்டும்! பேய் பிசாசாகவே இருந்தாலும் பெண்டாட்டி ஆகிவிட்டால், அவளை மற்றவர் முன் தாழ்த்திப் பேசக் கூடாது! பாவச்சுமை ஏறிவிடும். மனைவியை மதியாதவன் என்றும் வாழ்வில் உயர்வடைவதில்லையப்பா" என்றார்.

"மன்னிக்க வேண்டும் ஐயா" என்றவன் சொன்னதும்,

"செய்த தவற்றை ஒத்துக் கொண்டு மனம்‌ திருந்தி மன்னிப்பு கேட்டு விட்டால், அப்பாவங்கள் உடனே நிவர்த்தியாகிவிடுகின்றன. பாவம் குறைந்து புண்ணியக்கணக்குக் கூடிவிடுகிறது" என்றார்.

"அதென்ன பாவப் புண்ணியக் கணக்கு ஐயா?" என்றவன் கேட்டதற்கு விளக்கமளித்தார் முருகையன்.

"நாம் செய்யும் நன்மை தீமைகளின் பலன் தான் இப்பிறவி! நாம் பிறக்கும் போதே முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களின் கர்மக்கணக்களுடன் தான் பிறக்கிறோம். அதைத் தான் தலைவிதி என்கிறோம்.

நன்மை செய்யும் போது புண்ணியமும், தீமை செய்யும் போது பாவமும் நமது கர்மக்கணக்கில் சேர்க்கப்படுகிறது.

அவை தான் ஜோதிடத்தில் கட்டங்களாய் பிரதிபலித்து, இப்பிறவியில் துன்பத்தை அனுபவிக்கப் போகிறோமா இல்லை இன்பத்தை அனுபவிக்கப் போகிறோமா என்று நமக்கு உணர்த்துகிறது.

மீண்டும் பிறவாத நிலை அடைய, நமது கணக்கில் பாவம் அதிகமாய் இருந்தால் நிறையப் புண்ணியம் செய்ய வேண்டும். வாழும் நாளில் பாவங்களைச் செய்யாமல் நிறைய நன்மைகளும், தான தர்மங்களையும் செய்து வாழும் போது, பாவத்தை விடப் புண்ணியக் கணக்கு அதிகமாகி பிறவா நிலை கிட்டும்"

"மெய்ப்பொருளை உணர்த்தும் அருமையான விளக்கம்! நன்றி ஐயா! வருகிறேன்" என்றவனாய் அவன் விடைப்பெற்ற சமயம் வந்தாள் கோதை‌.

வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த தந்தையைப் பார்த்து புன்னகைத்தவளாய் உள்ளே சென்றாள்.

நேரே சாமியறைக்குள் சென்றவளாய், "அரசிமா! பார்த்தீர்களா.. உங்களுக்கு விருப்பமான தாமரை மலரைக் கொடுத்திருக்கிறான் மாதவன் இன்று"

இவள் அன்றாடம் கொடுக்கும் மாலையை மாதவப்பெருமாளுக்கு அணிவித்துவிட்டு பெருமாளுக்குச் சாற்றியிருக்கும் வேறொரு மாலையை எடுத்து இவளிடம் கொடுப்பார் அர்ச்சகர். இவள் அதை எடுத்து வைத்து, தான் வீட்டில் வைத்து வணங்கும் முத்தரசி சிலையின் கழுத்தில் சூடிடுவாள்.

இரு கைகளையும் வணங்கினார் போன்று இரண்டடி உயர உலோகத்தினாலான பெண் சிலையின் கழுத்தில் அந்தத் தாமரை மாலையை அணிவித்தவளாய், அருகே இருந்த ஆண் சிலையைப் பார்த்து விட்டு மீண்டுமாய்ப் பெண் சிலையைப் பார்த்து, "தங்களின் மணவாளரை தாங்கள் கண்டறிந்து மணம் புரிந்தது போல, என்னுடைய மணவாளரையும் எனக்குக் காண்பித்துக் கொடுக்க வேண்டும் அரசிமா" என்று வேண்டிக் கொண்டவளாய் வீட்டினுள் சென்றாள்.

"அம்மாஅஅஅஅ" என்று அழைத்தவளாய் முகப்பறையைக் கடந்து சமையலறைக்குள் சென்றவளிடம், "பூஜையெல்லாம் முடிந்ததா கோதை?" எனக் கேட்டார் அவளின் அன்னை நீலாம்பிகை‌.

"முடிந்தது அம்மா! உணவைத் தயார் செய்வோமா?" என்று கேட்டவளாய் சமையல் வேலையில் இறங்கிய நொடி, சொம்பு நீரை அளித்தவராய், "தந்தையிடம் இதைக் கொடுத்து விட்டு வா கோதை" என்று அனுப்பினார்.

முகப்பறைக்கு வந்தமர்ந்த தந்தையிடம் அதனைக் கொடுத்தாள்.

"முத்தரசிக்கு மாலை சூட்டியாகி விட்டதா?" எனக் கேட்டார் முருகையன்.

"ஆயிற்று தந்தையே" என்றவள்,

"நமது மூதாதையர்களில் சிறப்பானவள் நம் முத்தரசி" என்று தந்தை பேசத் தொடங்கவும், "ஆஹா.. ஆரம்பித்து விட்டாரா?" என்று மனத்தோடு நினைத்துக் கொண்டாள்.

"இதே மாதவன் முன்பு கடும் விரதமிருந்து ஈசனின் அருள் பெற்று ஈசனின் நேசனான சிவநேசனை மணம் புரிந்தவள். தனது பத்தினித் தர்மத்தால் கணவனின் ஆயுளை நீட்டிக்கச் செய்தவள்! சக்தியில்லையேல் சிவமில்லை என்னும் தத்துவத்திற்கிணங்க கணவனும் மனைவியும் சிவசக்தியாய் வாழ்ந்து சிவபதம் அடைந்த அவர்கள் வாழ்வின் நிகழ்வுகளை, அவர்களின் புகழ்மாலையாய் இம்மாதவக் கோவிலிலேயே கல்வெட்டாய் பொறித்து வைத்துள்ளனர் முன்னாள் அரசப் பரம்பரையினர். இங்கிருக்கும் சிவனைத் தம்பதியர் வழிபட்டால் மாங்கல்யம் பலம் பெறும் என்னும் வரத்தை முத்தரசியின் பொருட்டே அனைவருக்கும் கொடுத்தார் எம்பெருமானார் ஈசன்.

அந்த முத்தரசியின் ஜாதக அம்சத்தில் பிறந்தவளம்மா நீ! ஆகையினாலேயே சிறு வயது முதலே இவர்களை வணங்கும் பழக்கத்தை உனக்குள் உண்டாக்கினேன்.

நீயும் இவர்களைப் போன்று இறையாசி பெற்று தெய்வீகத்தன்மையுடன் வாழ வேண்டுமென்பதே உன் தந்தையின் விருப்பமம்மா. அதற்கு அவ்வாறான அமைப்புடன் வரும் மணாளனை தான் நீ மணம் புரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சம் இடரினாலும் தவறான வரன் அமையும் வாய்ப்பு உன் ஜாதகத்தில் இருக்கிறது. ஆகையால் நீயாக எவரையும் தேர்ந்தெடுத்து மனத்தில் ஆசையை வளர்த்துக் கொள்ளாதேயம்மா!"

அவர் பேசி முடித்ததும்,"சிறு வயதிலிருந்து அன்றாடம் ஒரு வரி மாறாமல் இக்கதையைக் கேட்டு வளர்ந்திருக்கிறேன் தந்தையே! எனக்கான மணவாளரை என்னிடம் கொண்டு வந்து சேர்பிப்பாள் அரசிமா என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது தந்தையே" என்றாள்.

"உன் நல்வாழ்விற்கு நாராயணன் ஆவன செய்ய வேண்டும்! ஓம் நமோ நாராயணாய" கோவில் கோபுரம் இருக்கும் திசை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டவராய்க் கூறினார் முருகையன்.

முருகையனின் வேண்டுதலுக்குச் செவி சாய்த்துச் சிரித்திருந்தார் மாதவப்பெருமாள்.
 

Latest threads

Top Bottom